என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'ரோடு-ஷோ'- பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

    • வழி நெடுகிலும் மேளதாளங்கள் முழங்கப்பட்டது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்தே சென்று பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாட்கள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நெல்லை வந்தார்.

    நேற்று மாலை வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் இருந்து பாளை மார்க்கெட் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் ரோடு-ஷோ சென்று பொதுமக்களை சந்தித்தார்.

    இன்று 2-வது நாள் நிகழ்ச்சியாக நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் அரசு சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டார்.

    அப்போது சாலையோரம் செண்டை மேளமும், நாதஸ்வர இசை வாத்தியங்களும் இசைத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழி நெடுகிலும் மேளதாளங்கள் முழங்கப்பட்டது.

    தொடர்ந்து பாளை காந்தி மார்க்கெட்டில் தொடங்கி விழா மேடை வரையிலும் ஏராளமான பெண்கள், நிர்வாகிகள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பிரனரும் திரண்டு வந்து முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் திரண்டிருந்ததை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆர்வ மிகுதியில் வேனில் இருந்து இறங்கி சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களை சந்தித்து கைகுலுக்கினார். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அவருடன், செல்பி எடுத்து கொண்டனர்.

    அப்போது பச்சிளங்குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்தே சென்று பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின்போது குழந்தைகள் பாரதியார், திருவள்ளுவர் உள்ளிட்ட வேடங்கள் அணிந்து வந்திருந்ததை பார்த்து மகிழ்ந்தார்.

    அப்போது அந்த குழந்தைகள் திருக்குறளை வாசித்தனர். உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த குழந்தைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் குழந்தைகள் அவருக்கு அன்போடு ரோஜாப்பூக்களை வழங்கினர்.

    பின்னர் சிறிது தூரம் வேனில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதிமன்றம் அருகே இறங்கினார். அப்போது அவரை வக்கீல்கள் சந்தித்தனர். தொடர்ந்து அவரை பார்ப்பதற்காக ஆவலுடன் சாலையோரம் காத்திருந்த கல்லூரி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் விழா மேடைக்கு சென்றடைந்தார்.

    Next Story
    ×