என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • தாமிரபரணி ஆற்றில் 20 முதல் 25 இடங்களில் கழிவு நீர் கலக்கிறது.
    • ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாள் விழா இன்று நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கொண்டா டப்பட்டது. இதனை யொட்டி வண்ணார்ப் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் நேருவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் 20 முதல் 25 இடங்களில் கழிவு நீர் கலக்கிறது. தென் மாவட்ட மக்கள் குடிநீர் மற்றும் விவசாய தேவைக் காக பயன்படுத்தப்படும் இந்த தாமிர பரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி விரைவில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம். அதனை எப்போது நடத்துவது என்பது குறித்து நிர்வாகி களுடன் கலந்து ஆலோசித்து விரைவில் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.

    நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்ககுமார், கவி பாண்டியன், பரணி இசக்கி, துணைத்தலைவர்கள் வெள்ளை பாண்டியன், வண்ணை சுப்பிரமணியன், பேட்டை சுப்பிரமணியன், மாரியப்பன், மண்டல தலைவர்கள் ரசூல் மைதீன், ஜெய்னுல் ஆப்தீன், ராஜேந்திரன், முகமது அனஸ் ராஜா, மாவட்ட செயலாளர்கள் செய்யதலி, மணி, முருகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் அன்சாரி, மாவட்ட அமைப்பு சாரா தொழி லாளர் அணி தலைவர் ஜாகிர் உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னை மேக்மிலன் நிறுவன உறுப்பினர் செல்வகுமார் பயிற்சி அளித்தார்.
    • கூட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி. எஸ். ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை மேக்மிலன் நிறுவன உறுப்பினர் செல்வகுமார் பயிற்சி அளித்தார்.

    இதில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை பயிற்றுவிக்கும் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்றனர். பாலர் கல்வி, தொடக்க கல்வி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை கல்வி என்ற அடிப்படையில் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது.

    மேலும் வருகிற கல்வியாண்டில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக எந்தெந்த நூல்களை பயன்படுத்தலாம் என்றும், அவர்களின் கையெழுத்து சீர்பெற கையெழுத்து பயிற்சி ஏடுகளை தொடக்கக் கல்வி நிலையிலேயே அறிமுகப்படுத்தி இந்த பயிற்சிகள் தொடர்ந்து அளிப்பது குறித்தும் கலந்தாய்வு செய்தனர். இக்கூட்டம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக பள்ளியின் முதல்வரிடம் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 4 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
    • தோட்டக்கலை உதவி இயக்குநர் சுபா வாசுகி கலந்து கொண்டு திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2023-24-ம் ஆண்டிற்கு கபாலிபாறை, ரெங்கசமுத்திரம், அத்தாளநல்லூர், சங்கன்திரடு ஆகிய 4 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

    இதனையொட்டி இந்த பஞ்சாயத்துக்களில் அனைத்து துறையின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்திட கிராம திட்ட செயலாக்க குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தோட்டக்கலை உதவி இயக்குநர் சுபா வாசுகி கலந்து கொண்டு தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார். கூட்டத்தில் வேளாண்துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள், சங்கன் திரடு ஊராட்சி தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகளின் கருத்துக்கள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

    • பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று காலை தொடங்கிய தடகள போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
    • போட்டிகளில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் இன்றும், நாளையும் நடக்கிறது.

    பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று காலை தொடங்கிய தடகள போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த போட்டிகளை தமிழ்நாடு தடகள சங்கத்தின் தலைவர் தேவாரம் தொடக்கி வைத்தார். குறிப்பாக 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்ப ந்தயம், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என பல்வேறு வகையான தடகள போட்டிகள் நடை பெற்றது.

    18 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்வதற்கு அனுமதி க்கப்பட்டனர். இதில் பங்கேற்கும் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அடுத்தடுத்து தேசிய அளவிலான போட்டி களில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது என்று விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • செங்கோட்டையில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்துக்கு தாமிரபரணி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய 3 நாட்களிலும் சென்னை தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டைக்கு வந்தடையும்.

    நெல்லை:

    செங்கோட்டையில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்துக்கு தாமிரபரணி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு நேரடி ரெயில் இல்லை என்ற ரெயில் பயணிகளின் புகாரை நிவர்த்தி செய்யும் வகையில் இயக்கப்படும் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.

    இந்த ரெயிலை வாரத்திற்கு 3 முறை இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர், ரெயில் ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், வருகிற 1-ந்தேதி முதல் வாரத்திற்கு 3 முறை இந்த ரெயிலை இயக்க தென்னக ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய 3 நாட்களிலும் வண்டி எண். 20683 சென்னை தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டைக்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மறு மார்க்கமாக வண்டி எண். 20684 செங்கோட்டையில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் விரைவு ரெயில் வாரந்தோறும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை தாம்பரத்தை சென்றடையும்.

    இந்த ரெயில்கள் விழுப்புரம், திருப்பாதிரி புலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், நெல்லை, சேரன்மகாதேவி, அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இதில் 2 இரண்டடுக்கு குளிர்சாதன பெட்டிகள், 5 மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள், 3 பொதுப் பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் உள்பட மொத்தம் 17 பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

    • பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர்களுக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    நெல்லை:

    நெல்லை போலீஸ் சரகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் 10 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதன்படி அம்பாசமுத்திரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர்களுக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதில் கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டராக இருந்த ராஜகுமாரி தென்காசி மாவட்டம் குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். வி.கே.புரம் இன்ஸ்பெக்டராக இருந்த பெருமாள் கன்னியாகுமரி மாவட்டம் மணவாளகுறிச்சி வட்ட இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அதேபோன்று மாவட்ட உளவு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்து பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கோமதி, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இதில் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • அக்னி நட்சத்திர வெயில் வருகிற 29-ந்தேதி வரை மொத்தம் 25 நாட்களுக்கு நீடிக்கிறது.
    • வெயிலின் காரணமாக பெரும்பாலானோர் பகல் பயணத்தை தவிர்த்து வருகின்றனர்.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் என்று அழைக்கக்கூடிய அக்னி நட்சத்திர வெயிலால் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இந்த வெயில் வருகிற 29-ந்தேதி வரை மொத்தம் 25 நாட்களுக்கு நீடிக்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் திடீரென கோடை மழை பெய்த நிலையில், தற்போது கடுமை யான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள அக்னி வெயிலால் மாநகரப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் பகலில் வெகுவாக குறைந்து ள்ளது. பெரும்பா லான வாகன ஓட்டிகள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் குடை பிடித்தபடியும், முகத்தை துணியால் மூடிக்கொண்டு செல்கின்றனர். ஒரு சில இடங்களில் அனல் காற்று வீசுகிறது.

    கடுமையான வெயிலின் காரணமாக பெரும்பாலா னோர் பகல் பயணத்தை தவிர்த்து வருகின்றனர். மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    பணிக்கு செல்லும் பெண்கள் குடைபிடித்தபடி சாலைகளில் செல்கின்றனர். பெரும்பாலா னோர் வெயிலின் தாக்கத்தால் குளிர்பானங்கள் இருக்கும் கடைகளை நாடி செல்கின்றனர்.

    இதனால் இளநீர், தர்பூசணி, பதநீர், நுங்கு, வெள்ளரிக்காய் கடைகளில் கூட்டமாக சென்று அவர்கள் அருந்துவதை காண முடிகிறது. ஒரு இளநீர் ரூ.30 முதல் ரூ.40 வரையிலும், ஒரு நுங்கு ரூ.20 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஒரு சிலர் நுங்கு சர்பத், இளநீரில் எலுமிச்சை சாறு பிழிந்து வழங்குவது உள்ளிட்ட வித்தியாசமான முறைகளில் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    அக்னி நட்சத்திரம் முடிவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் வெயிலின் தாக்கம் விரைவில் குறைந்து விடும் என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • ரூ.295 கோடி செலவில் முடிக்கப்பட்ட 50 மில்லியன் லிட்டர் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார்.
    • பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான அடிக்கல்லை சபாநாயகர் அப்பாவு தலைமையில் அமைச்சர் கே.என். நேரு நாட்டுகிறார்.

    நெல்லை:

    தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று மாலை 4 மணிக்கு நெல்லை மாநகருக்கு வருகிறார்.

    ரூ. 427.56 கோடி

    தொடர்ந்து அவர் பாளை நேருஜி கலையரங்கில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாநகர பகுதியில் ரூ.427.56 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    அதாவது ரூ.295 கோடி செலவில் முடிக்கப்பட்ட 50 மில்லியன் லிட்டர் குடிநீர் அபிவிருத்தி திட்டம், ரூ.56.71 கோடி செலவில் கட்டப்பட்ட பொருட்காட்சி மைதான வர்த்தக மையம், ரூ.23.14 கோடியில் நெல்லை எம்.ஜி.ஆர். புதிய பஸ் நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள பன்னடுக்கு இருசக்கர வாகன காப்பகம், ரூ.11.97 கோடி மதிப்பிலான நேருஜி கலையரங்கம், ரூ.4.20 கோடி மதிப்பீட்டில் கருப்பந்துறை, வண்ணார்பேட்டை பகுதியில் 3 இடங்களில் சலவைத்துறைகள், ரூ.12.31 கோடியில் 6 பசுமை பூங்கா, ரூ.8.40 கோடியில் 9 இடங்களில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்பாடு, ரூ.2.22 கோடியில் 9 இடங்களில் நகர்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன், கலெக்டர் கார்த்திகேயன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான், துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், விளை யாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர் பல்லி க்கோட்டை செல்லத்துரை, பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆரோக்கிய எட்வின், நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

    பேனா நினைவு சின்னம் பணி

    தொடர்ந்து மாநகராட்சி மைய அலுவலகம் எதிரே அமைந்துள்ள வர்த்தக மையத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை போற்றும் வகையில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான அடிக்கல்லை சபாநாயகர் அப்பாவு தலைமையில் அமைச்சர் கே.என். நேரு நாட்டுகிறார்.

    நிகழ்ச்சிக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலை வகிக்கிறார். அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, கலெக்டர் கார்த்திகேயன், மேயர் சரவணன், கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். சிறப்பு விருந்தினர்களாக அப்துல் வகாப் எம்.எல்.ஏ., துணை மேயர் ராஜூ கலந்து கொள்கின்றனர்.

    • வெண்ணிலா பாரதியும், வேலுவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
    • வேலு உள்பட 4 பேர் காந்திமதி வீட்டிற்கு வந்து குழந்தையை கேட்டனர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பை சேர்ந்தவர் மாடசாமி மனைவி காந்திமதி (வயது 45). இவரது மகள் வெண்ணிலா பாரதியும், அவரது கணவர் வேலுவும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். வெண்ணிலா பாரதியின் ஆண் குழந்தை காந்திமதியின் பராமரிப்பில் உள்ளது. வெண்ணிலா பாரதிக்கும், அவரது கணவர் வேலுக்கும் இடையே விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் நேற்று வேலு, பலவேசகண்ணன், சுரேஷ் உள்பட 4 பேர் காந்திமதி வீட்டிற்கு வந்து குழந்தையை கேட்டனர். அதற்கு அவர் மறுத்ததால் அவரை தாக்கினர். இதனை தடுக்க வந்த காந்திமதியின் மகன் கார்த்திக் மணிகண்டனையும் தாக்கினர். இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வேலு உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.

    • தொழுவத்தில் கட்டி வைத்திருந்த பசுமாடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    • வியாபாரி ஒருவரிடம் ரூ. 35 ஆயிரத்துக்கு மாடுகளை ஒருவர் விற்க முயன்றுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை பேட்டையை அடுத்த கண்டியப்பேரி அருகே இலந்தைகுளம் பிள்ளை யார்கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்(வயது 45). சம்பவத்தன்று இவர் தனது வீட்டுக்கு அருகே தொழுவத்தில் கட்டி வைத்திருந்த 2 பசுமாடுகள், ஒரு கன்றுகுட்டியை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

    இதுதொடர்பாக அவர் பேட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் மாட்டின் உரிமையாளரான செந்தில் பாவூர்சத்திரத்தில் இன்று நடைபெற்ற கால்நடை சந்தையில் சென்று அங்கு யாரேனும் தனது மாட்டை விற்பனைக்கு கொண்டு வருகிறார்களா? என்று தேடிப்பார்த்தார். அப்போது ஒரு நபர் வியாபாரி ஒருவரிடம் ரூ. 35 ஆயிரத்துக்கு மாடுகளை விற்க முயன்றதை கண்டார்.

    உடனடியாக செந்தில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அந்த நபர் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(30) என்பதும், அவரது மனைவி மகாலட்சுமிக்கு சொந்த ஊர் கண்டிய பேரி என்பதும் தெரியவந்தது.

    மேலும் மகாலட்சுமியின் தூண்டுதலின் பேரில் ரமேஷ் அந்த மாடுகளை திருடி வந்து ஆலங்குளத்தைச் சேர்ந்த மாட்டு வியாபாரியான மிக்கேல் ராஜிடம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பசு மாடுகளை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    • ஆம்னி பஸ்சை மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்தார்.
    • காரில் வந்த 2 வாலிபர்களுக்கும்,மகேந்திரனுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டு வந்தது.

    தாக்குதல்

    அந்த பஸ்சை புதுச்சேரி மாநிலம் பெரியார்நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்தார். பஸ் நெல்லை வண்ணார் பேட்டை பகுதியில் பயணி களை ஏற்றிக் கொண்டிருந்த போது அங்கு ஒரு காரில் சில பயணிகள் வந்தனர்.

    அவர்களை பஸ்சில் ஏற்றுவதில் அந்த காரில் வந்த 2 வாலிபர்களுக்கும், பஸ் டிரைவரான மகேந்திர னுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இந்த தகராறில் ஆத்திர மடைந்த 2 வாலிபர்களும் மகேந்திர னை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய தாகவும் கூறப்படுகிறது.

    போலீசார் வலைவீச்சு

    இது தொடர்பாக மகேந்தி ரன் அளித்த புகாரில் பாளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் அந்த நபர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையை சேர்ந்த சேகர், ஆறுமுகம் ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஆட்டோ டிரைவர் கணேசனின் மகள் பாளை, குழந்தை இயேசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.
    • கண்ணம்மாள் 10-ம் வகுப்பு தேர்வில் 500-க்கு 488 மதிப்பெண் வாங்கி உள்ளார்.

    நெல்லை:

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் பாளை யூனியன், கீழநத்தம் கீழூரை சேர்ந்த கணேசன் என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். அவரது மகள் கண்ணம்மாள் பாளை, குழந்தை இயேசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது வெளி யான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் கண்ணம்மாள் 500-க்கு 488 மதிப்பெண் வாங்கி உள்ளார்.

    குடும்ப த்தின் ஏழ்மை நிலையிலும் அவர் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்றதை பாராட்டி தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பாராட்டி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பாளை வடக்கு வட்டார தலைவர் கனகராஜ் உடன் இருந்தார்.

    ×