என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேட்டையில் பசு மாடுகளை திருடிய தம்பதி; வியாபாரி கைது - சந்தையில் விற்ற போது சிக்கினர்
    X

    பேட்டையில் பசு மாடுகளை திருடிய தம்பதி; வியாபாரி கைது - சந்தையில் விற்ற போது சிக்கினர்

    • தொழுவத்தில் கட்டி வைத்திருந்த பசுமாடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    • வியாபாரி ஒருவரிடம் ரூ. 35 ஆயிரத்துக்கு மாடுகளை ஒருவர் விற்க முயன்றுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை பேட்டையை அடுத்த கண்டியப்பேரி அருகே இலந்தைகுளம் பிள்ளை யார்கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்(வயது 45). சம்பவத்தன்று இவர் தனது வீட்டுக்கு அருகே தொழுவத்தில் கட்டி வைத்திருந்த 2 பசுமாடுகள், ஒரு கன்றுகுட்டியை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

    இதுதொடர்பாக அவர் பேட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் மாட்டின் உரிமையாளரான செந்தில் பாவூர்சத்திரத்தில் இன்று நடைபெற்ற கால்நடை சந்தையில் சென்று அங்கு யாரேனும் தனது மாட்டை விற்பனைக்கு கொண்டு வருகிறார்களா? என்று தேடிப்பார்த்தார். அப்போது ஒரு நபர் வியாபாரி ஒருவரிடம் ரூ. 35 ஆயிரத்துக்கு மாடுகளை விற்க முயன்றதை கண்டார்.

    உடனடியாக செந்தில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அந்த நபர் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(30) என்பதும், அவரது மனைவி மகாலட்சுமிக்கு சொந்த ஊர் கண்டிய பேரி என்பதும் தெரியவந்தது.

    மேலும் மகாலட்சுமியின் தூண்டுதலின் பேரில் ரமேஷ் அந்த மாடுகளை திருடி வந்து ஆலங்குளத்தைச் சேர்ந்த மாட்டு வியாபாரியான மிக்கேல் ராஜிடம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பசு மாடுகளை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×