என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • சம்பவத்தன்று இவர் தனது மகள் நிவேதாவுடன் தனது மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக பொன்னாக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    களக்காடு:

    கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 61). இவர் தூத்துக்குடியில் உள்ள மீன் வளக் கல்லூரியில் ஊழியராக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மகள் நிவேதாவுடன் தனது மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தார். நாங்குநேரி அருகே பாணாங்குளம் நான்குவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முருகேசன், அவரது மகள் நிவேதா படுகாயமடைந்தனர். அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக பொன்னாக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுபற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த டிரைவரை தேடி வருகின்றனர்.

    • பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி ரத வீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
    • பேரணியின் போது மாணவ- மாணவிகள் சுற்று சூழல் குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.

    வள்ளியூர்:

    ராதாபுரம் நித்திய கல்யாணி வெள்ளையன் செட்டியார் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் சார்பில் சுற்று சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் பாக்கியவதி பிளாரன்ஸ் தொடங்கி வைத்தார். தேசிய மாணவர் படை அதிகாரி சகாய வியாகம்மாள் தலைமை தாங்கினார். பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி ரத வீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இந்திய தேசிய ராணுவத்தின் சுபேதார் தசரதன், உதவி தலைமை ஆசிரியர் சதீஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன், வேளாண்மை உதவி இயக்குநர் ஜாஸ்மின்லதா, வேளாண்மை உதவி தொழில் நுட்ப மேலாளர் சரிகா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விழாவின் முடிவில் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.

    • 230 கிலோ வாட் மின்சாரம் தனியார் சோலார் மின்உற்பத்தி நிறுவனத்திற்கு கொண்டு செல்ல வசதியாக தமிழ்நாடு மின்வாரியத்தின் இரட்டை சுற்று மின்பாதை மற்றும் 9 மின் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.
    • நிலத்தின் உரிமையாளர்கள் இதற்கு ஆட்சேபனை இருந்தால் எழுத்து பூர்வமாக வருகிற 28-ந்தேதி மதியம் 3 மணிக்குள் மாவட்ட கலெக்டர் முன்பு ஆஜராகி வழங்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் வட்டம் சித்தார் சத்திரம் கிராமம் மற்றும் நெல்லை வட்டம் கங்கைகொண்டான் பகுதி-1 கிராமங்களில் அபிஷேகபட்டி, சங்கநேரி மின்பாதையில் இருந்து 230 கிலோ வாட் மின்சாரம் தனியார் சோலார் மின்உற்பத்தி நிறுவனத்திற்கு கொண்டு செல்ல வசதியாக தமிழ்நாடு மின்வாரியத்தின் இரட்டை சுற்று மின்பாதை மற்றும் 9 மின் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக அந்த பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடக்க உள்ளது.

    எனவே நிலத்தின் உரிமையாளர்கள் இதற்கு ஆட்சேபனை இருந்தால் எழுத்து பூர்வமாக வருகிற 28-ந்தேதி மதியம் 3 மணிக்குள் மாவட்ட கலெக்டர் முன்பு ஆஜராகி வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

    • சக மாணவர்களால் தாக்கப் பட்ட பள்ளி மாணவன் சின்னத்துரை , அவரது சகோதரி சந்திரா செல்விக்கு நெல்லை பல்நோக்கு மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • ஒரே போலீஸ் நிலையங்களில் 5 முதல் 10 வருடங்கள் வரை பணிபுரியும் உளவு பிரிவு போலீசார் மற்றும் மற்ற போலீசார்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என ஜான் பாண்டியன் கூறினார்.

    நெல்லை:

    நாங்குநேரியில் சக மாணவர்களால் தாக்கப் பட்ட பள்ளி மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்விக்கு நெல்லை பல்நோக்கு மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் 2 பேரையும் இன்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    அப்போது மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன், மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், மாநகர் மாவட்ட செயலாளர் துரைப்பாண்டி யன், மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஜான்பாண்டியன் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    பள்ளி மாணவர் சின்னத் துரை மீது ஜாதி ரீதியில் தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழகத்தில் ஒரு சில குக்கிராமங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது.

    இதனை காவல்துறை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தற்போது மாணவருக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பள்ளி, கல்லூரி கால கட்டங்களிலேயே மாணவர்கள் இடையே இது போன்ற ஜாதி மோதல், வன்மம் போன்றவை ஏற்படுகிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஒரு சில ஆசிரியர்களும் துணை போகிறார்கள். அவர்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பள்ளிகளில் ஜாதி கயிறு கட்டக்கூடாது என்பதை பள்ளி நிர்வாகம் உன்னிப் பாக கவனிக்க வேண்டும். பள்ளி மாணவர் தாக்கப் பட்டதற்கு காவல்துறை தான் காரணம்.

    ஒரே போலீஸ் நிலையங்களில் 5 முதல் 10 வருடங்கள் வரை பணிபுரியும் உளவு பிரிவு போலீசார் மற்றும் மற்ற போலீசார்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.

    மாணவர் விவகாரத்தில் ஒரு நபர் கமிஷன் என்பது கண்துடைப்பு. நீட் மசோதா குறித்து தி.மு.க. அரசு மாணவர்களை குழப்புகிறது. மாணவர்கள் தற்கொலை செய்யும் முடிவுக்கு வர வேண்டாம். நன்றாக படியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • மாணவர்கள் துணிப்பையை பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.

    நெல்லை:

    பாளையில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் 100 பேர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது.

    பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் பிளாஸ்டிக் நாட்டின் அழிவுக்கும், மக்களின் மரணத்துக்கும் காரணமாகும். பிளாஸ்டிக்கை வாங்காதீர்கள், துணிப்பையை பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.

    மேலும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் மற்றும் துணிப்பைகளை மாணவர்கள் கொடுத்தனர்.

    இந்த பேரணி தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி மாவட்ட நூலகம், தலைமை தபால் அலுவலகம், தெற்கு பஜார், ஜான்ஸ் கல்லூரி வழியாக சென்று மீண்டும் தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி வரை சென்றது. ஏற்பாடுகளை இந்திய ராணுவ சுபேதார்கள் ஜஹாங்கீர், சிவன், ஹவில்தார்கள் மணி, ஹரி, செந்தில்குமார், என்.சி.சி. அலுவலர் அருள்ராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • டவுன் குறுக்குத்துறை செல்லும் தென்வடல் சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் சூட்டும் விழா மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
    • பின்னர் அந்த சாலையில் மேயர், நெல்லை கண்ணன் குடும்பத்தினர் நடந்து சென்றனர்.

    நெல்லை:

    தமிழறிஞர் நெல்லை கண்ணன் நினைவாக நெல்லை டவுன் ஆர்ச் அருகில் உள்ள வளைவு முதல் குறுக்குத் துறை சாலையில் இணையும் தென் வடல் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என நெல்லை மாநகராட்சியில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு நிறை வேற்றப்பட்டது .

    இதனைத் தொடர்ந்து இன்று நெல்லை கண்ணன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டவுன் குறுக்குத்துறை செல்லும் தென்வடல் சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் சூட்டும் விழா மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    இதில் மேயர் சரவணன் கலந்து கொண்டு நெல்லை கண்ணன் மகனும், எழுத்தாளரும், திரைப்பட இயக்குனருமான சுகா முன்னிலையில் நெல்லை கண்ணன் சாலை பெயர் சூட்டி, பெயர் பலகையை திறந்து வைத்தார். பின்னர் அந்த சாலையில் மேயர், நெல்லை கண்ணன் குடும்பத்தினர் நடந்து சென்றனர். பொதுமக்கள் அந்த சாலையில் நடந்து சென்று 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர் மகேஸ்வரி, கவுன்சிலர் சந்திரசேகர், அருணா கார்டியா கேர் டாக்டர் அருணாசலம், தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய வாதிகள், பொது மக்கள் என ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர்.

    • சமீபகாலமாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இன்றி வெயிலின் தாக்கத்தால் தலையணை நீர்வீழ்ச்சி தண்ணீர் இன்றி வறண்டது.
    • தொடர் வறட்சியால் அப்பகுதியில் கடும் வெப்பம் நிலவுகிறது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தலையணைக்கு தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலையணைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இன்றி கடும் வெயில் கொளுத்துகிறது. வெயிலின் தாக்கத்தால் தலையணை நீர்வீழ்ச்சி தண்ணீர் இன்றி வறண்டது. மரம் செடி கொடிகளும் மழை இன்றி காய்ந்து வருகிறது. தொடர் வறட்சியால் அப்பகுதியில் கடும் வெப்பம் நிலவுகிறது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே வறட்சியின் காரணமாக களக்காடு தலையணை இன்று முதல் மூடப்படுவதாக களக்காடு வனத்துறையினர் அறிவித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தலையணை நுழைவு கேட் மற்றும் சோதனை சாவடி மூடப்பட்டது.

    • சிறப்பு அழைப்பாளராக நெல்லை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி நிதி குறித்து பேசினார்.
    • கூட்டத்தில் வி.ஆர்.புரம் கிழக்கு தெரு சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    களக்காடு:

    களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர செயற்குழு கூட்டம் தலைவர் கமாலுதீன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் கபீர் வரவேற்று பேசினார். இணைசெயலாளர்கள், ரபீக், ஆரிப் பைஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக நெல்லை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி நிதி குறித்து பேசினார். கூட்டத்தில் 27 வார்டு மக்களும் பயன்படுத்தும் சிவபுரம் பொது பாதையை அடைத்த வனத்துறைக்கு எதிராக சட்ட ரீதியான போராட்டங்களை மேற்கொள்வது, களக்காடு காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் விசாரணை துரித படுத்த வேண்டும், கட்சி வளர்ச்சி நிதி திரட்டல் சம்மந்தமாக கூடுதல் கவனம் செலுத்துவது, வி.ஆர்.புரம் கிழக்கு தெரு சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் செயற்குழு உறுப்பினர்கள் எம்.எம். நாசர், ராம்நாடு பீர்முகம்மது, முஹம்மதுஅலி ஆகியோர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் காஜா முகைதீன் நன்றி கூறினார்.

    • விபத்தில் தூக்கி வீசப்பட்ட திருமாறன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
    • வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் ஆசாத் ரோட்டை சேர்ந்தவர் லட்சுமண சுவாமி. இவரது மகன் திருமாறன்(வயது 24). இவர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சமீப காலமாக அவர் நெல்லையில் தனது வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆலங்குளத்தில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்ப்பதற்காக திருமாறன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். நள்ளிரவில் படம் முடிந்த பின்னர் நெல்லைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    ஆலங்குளத்தை அடுத்த மாறாந்தை அருகே தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட திருமாறன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்று திருமாறன் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    • பெற்றோர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லும்போது, அதன் நன்மை, தீமைகளை கவர்னர் ஆய்வு செய்து விளக்கி கூறலாம்.
    • எதிர்க்கட்சி தலைவரும் நீட் தேர்வு தேவையில்லை என்று ஆதரித்து பேசினார்.

    ராதாபுரம்:

    நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது ஆட்சி மாற்றம் ஏற்படலாம். அந்த நம்பிக்கையில்தான் ஆட்சி மாற்றமே நீட் தேர்வுக்கு விடிவு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். நாடு முழுவதுமே ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அது நிறைவேறும்.

    பெற்றோர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லும்போது, அதன் நன்மை, தீமைகளை கவர்னர் ஆய்வு செய்து விளக்கி கூறலாம். மாறாக ஆணவத்தில் நான் கையெழுத்திட மாட்டேன் என்று கூறுவது தேவையில்லாதது. தனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?, தன்னால் என்ன செய்ய முடியும்? என்பதைக்கூட கவர்னர் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்.

    தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு பா.ஜ.க. உறுப்பினர்கள் 4 பேரை தவிர மற்ற அனைவருமே ஆதரித்து பேசி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி தலைவரும் நீட் தேர்வு தேவையில்லை என்று ஆதரித்து பேசினார். தற்போது ஜனாதிபதியின் பரிசீலனையில் உள்ள நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு கவர்னர் கையெழுத்திட மாட்டேன் என்று ஆணவமாக கூறுவது நியாயமா? என்று எனக்கு தெரியவில்லை. மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் அடிப்படை வசதி தேவைகள் குறித்து குழுவினர் கேட்டறிந்தனர்.
    • இந்த மாத இறுதிக்குள் பாலத்தில் போக்குவரத்து செல்வதற்கான நடவடிக்கை தொடங்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் அரசு திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் இன்று உறுப்பினர்கள் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.

    உயர்மட்ட பாலம் கட்டும் பணி

    இதில் உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், ஜவா ஹிருல்லா , மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இன்று நெல்லையை அடுத்த பொன்னாக்குடியில் நதிநீர் இணைப்பு திட்டப்பணிகள், அதே சாலையில் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    அதனைத்தொடர்ந்து நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதுமான வகுப்பறைகள், கழிப்பறை உள்ளிட்ட மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டனர். மேலும் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் அடிப்படை வசதி தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.

    பின்னர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்டப்பணிகள் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. கடந்த ஆட்சி காலங்களில் பணிகள் தொய்வு ஏற்பட்டிருந்தது. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.

    இதுவரை 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. ஒரு பாலம் கட்டுமானப் பணி முடிவடைந்துள்ளது. அதில் இந்த மாத இறுதிக்குள் போக்குவரத்து செல்வதற்கான நடவடிக்கை தொடங்கப்படும். எஞ்சியுள்ள நதிநீர் இணைப்பு பணிகள் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்படும்.

    கல்லணை அரசுப்பள்ளி

    தொடர்ந்து, நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளியில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதால் இந்த ஆண்டு மாணவிகளின் சேர்க்கை குறைந்துள்ளது. இனிமேல் பள்ளியில் மாணவிகள் சேர்க்கை குறையாத அளவிற்கு பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதி களை மேம்படுமங மப்படும். மேலும், பள்ளி அருகில் உள்ள கால்வாயில் அசுத்தமாக இருக்கிறது. அதனையும் சரிசெய்து, பள்ளியில் அதிக கழிப்பறை வசதி, வகுப்பறை வசதி கட்டி கொடுத்து, அனைத்து மாணவிகளும் பயன்பெறும் வகையில் வசதி ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள குழுவின் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

    மாவட்ட கலெக்டர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு, தனித்தனியாக வெளியில் அமைந்துள்ள துறைகள் அனைத்தையும் பொதுமக்களின் நலன்கருதி ஒரே இடத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கூடுதல் கட்டிடம்

    அரசு விருந்தினர் மாளிகையில் கூடுதலாக 10 அறைகள் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது. ரூ.92 கோடியில் நெல்லை அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கல்லணை பள்ளி மாணவிகள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த தேவையை மனுவாக எழுதி மதிப்பீட்டு குழுவினரிடம் வழங்கினர்.

    • மேலவடகரை குளத்தில் போலீசார் ரோந்து சென்றனர்.
    • மண் திருடிக் கொண்டிருந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டது.

    களக்காடு:

    களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் மற்றும் போலீசார் மேலவடகரை குளத்தில் ரோந்து சென்றனர். அப்போது குளத்தில் ஒரு கும்பல் டிராக்டரில் மண் திருடிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் கும்பல் தப்பி ஓடி விட்டது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மண் திருட்டில் ஈடுபட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    ×