என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • சங்கரம்மாள் தனது வீட்டு முன் ரோட்டில் மாடுகளை கட்டியிருந்ததாக கூறப்படுகிறது.
    • இதுதொடர்பாக அவருக்கும், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளத்தை சேர்ந்த லெட்சுமிகாந்தன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பட்டபிள்ளைபுதூரை சேர்ந்தவர் சுப்பையா மனைவி சங்கரம்மாள் (வயது 69). இவர் தனது வீட்டு முன் ரோட்டில் மாடுகளை கட்டியிருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவருக்கும், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளத்தை சேர்ந்த லெட்சுமிகாந்தன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லெட்சுமி காந்தன், சங்கரம்மாளை கீழே தள்ளி தாக்கினார். இதனால் காயமடைந்த சங்கரம்மாள் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மூதாட்டியை தாக்கிய லெட்சுமி காந்தன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று கோதைசேரியை சேர்ந்த அருண்குமார் , குமாரிடம் செலவுக்கு பணம் கேட்டார்.
    • அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி, மிரட்டி அவரிடமிருந்த ரூ.300-ஐ பறித்து சென்றார்.

    களக்காடு :

    திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 45). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கோதைசேரி விலக்கில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோதைசேரியை சேர்ந்த அருண்குமார் (23), குமாரிடம் செலவுக்கு பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி, மிரட்டி அவரிடமிருந்த ரூ.300-ஐ பறித்து சென்றார். இதுபற்றி குமார் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அருண்குமாரை கைது செய்தனர்.

    • 1857-ல் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்கியதாக கூறுகிறார்கள்.
    • சில நேரங்களில் தி.மு.க.விற்கு அவர்கள் பாணியிலேயே நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டி உள்ளது .

    நெல்லை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று நெல்லை மாவட்டத்தில் 2-வது நாளாக தனது நடைபயணத்தை வள்ளியூர் நம்பியான் விளையில் தொடங்கினார்.

    அங்குள்ள பத்திரகாளி அம்மன் கோவில் முன்பு இருந்து நடைபயணத்தை தொடங்கி அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், பூரண கும்ப மரியாதை கொடுத்தும் வரவேற்றனர்.

    ஏராளமான சிறுவர், சிறுமிகள் மோடி வேடமணிந்து அவரை வரவேற்றனர். தொடர்ந்து அப்பகுதியில் நடைபயணம் சென்ற அவருக்கு பொதுமக்களும், தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

    முன்னதாக, விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாளையில் உள்ள அவரது உருவ சிலைக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    1857-ல் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்கியதாக கூறுகிறார்கள். ஆனால் அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வீரம் விளைந்த இந்த நெல்லை மண்ணில் ஏராளமானோர் இந்திய சுதந்திரத்திற்காக போராடி இருக்கிறார்கள். அதை இளைய தலைமுறை இடையே கொண்டு சேர்ப்பது நம்முடைய கடமை என்றார்.

    அதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் தி.மு.க. குறித்தும், முதலமைச்சர் குறித்தும் அவதூறு பரப்பியதாக உங்கள் மீது முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் புகார் அளித்துள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டபோது அண்ணாமலை கூறியதாவது:-

    அரசியலைப் பொறுத்தவரை நாங்கள் தி.மு.க.வின் பொய்யை தோலுரித்துக் காட்டுவதை அவதூறு பரப்புவதாக தி.மு.க.வினர் கூறுகிறார்கள். என்ன அவதூறு பரப்பினேன்? யார் குறித்து அவதூறு பரப்பினேன் என்பதை அவர்கள் சொல்ல வேண்டும்.

    நான் பேசியது அவதூறு என்றால், ராமநாதபுரம் மாநாட்டில் பிரதமர் மோடி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது அவதூறு இல்லையா? பாராளுமன்ற திறப்பு விழாவிலே செங்கோலுக்கு பிரதமர் மோடி மரியாதை செய்தது குறித்து அவதூறு கருத்தை பதிவிட்ட அமைச்சர் மனோ தங்கராஜை முதலில் கைது செய்ய வேண்டும்.

    தி.மு.க.வின் அவதூறு வழக்குகளை கண்டு பயப்பட போவதில்லை. சில நேரங்களில் தி.மு.க.விற்கு அவர்கள் பாணியிலேயே நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டி உள்ளது .

    நீட் தேர்வு விவகாரத்தில் ஒன்றுமே இல்லாத பிரச்சினையை பெரிதாக்கி அவர்களை தற்கொலைக்கு தூண்டியது தி.மு.க. தான். இந்தியாவில் வேறு எங்கும் நீட் தேர்வு தொடர்பாக தற்கொலைகள் இல்லை.

    தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த காலம் முதல் தற்போது வரை தமிழகத்தில் மட்டும் தான் நீட் தற்கொலைகள் நடைபெறுகின்றன. ஜார்க்கண்டிலேயே பழங்குடியின மாணவர் நீட் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள்.

    ஆந்திரத்தில் பின்தங்கிய மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். நீட் தேர்வில் முதல் 10 இடங்களை பெற்றவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். நீட் தேர்வு தொடர்பாக தமிழகத்தில் இனி தற்கொலை நடக்கக்கூடாது என கடவுளை வேண்டிக் கொள்கிறேன் .

    நாங்குநேரி சம்பவத்திற்கு போதிய வேலை வாய்ப்பு இல்லாததே காரணம். தென் தமிழகத்தில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பொறியியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை படித்து முடித்துவிட்டு தென் தமிழகத்தில் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.

    தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளித்து பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டும். அப்போதுதான் ஜாதி, கந்து வட்டி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரை, அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகியோரை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    • விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் இன்று.
    • ஒண்டிவீரன் சிலைக்கு அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நெல்லை:

    விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாளை நீதிமன்றம் எதிரில் உள்ள மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் கார்த்திகேயன், எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், ஞானதிரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் மாலைராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், பேச்சி பாண்டியன், மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக இளவரசனின் மனைவி பிரிந்து சென்று விட்டார்.
    • இளவரசனுக்கும், மாரியப்பன் குடும்பத்திற்கும் இடத்தகராறு தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டை அசோகர் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் இளவரசன் (வயது 35). இவர் பேட்டை-கருங்காடு ரோட்டில் டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். கடந்த 12-ந்தேதி இரவு அசோகர் தெரு பெருமாள் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் கத்தியால் குத்தியதோடு, கம்பியால் சரமாரியாக தாக்கியது.

    இதில் பலத்த காயம் அடைந்த இளவரசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்த புகாரின் பேரில் பேட்டை போலீசார் அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்ற டப்பா மாரியப்பன், அவரது மகன்கள் மாதவன், சந்துரு உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

    போலீசார் விசாரணையில் இளவரசனுக்கும், மாரியப்பன் குடும்பத்திற்கும் இடத்தகராறு தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக, எவ்வாறு புகார் தெரிவிக்கலாம் என கூறி தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தியதுடன், கம்பியால் தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளவரசன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து மாதவன் மற்றும் சந்துருவை கைது செய்தனர்.

    • கணேசனிடம், ராஜகோபால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜகோபால் வீரவநல்லூர் போலீசில் சரணடைந்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கொட்டாரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கனி என்ற கணேசன்(வயது 50). கூலித்தொழிலாளி.

    இவர் நேற்று இரவு அப்பகுதியில் நின்று கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கனி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்து வீரவநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று கனியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கொன்ற மர்ம நபர் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    அத்தாளநல்லூரை சேர்ந்தவர் சிவன் பாண்டி. இவரது மனைவி சிதம்பரத்தம்மாள். இவர் அத்தாளநல்லூர் பஞ்சாயத்து தலைவியாக இருந்து வருகிறார். இவர்களது மகன் ராஜகோபால்(40). கொலை செய்யப்பட்ட கணேசன், பஞ்சாயத்து நிர்வாகம் மீது அடிக்கடி புகார் தெரிவித்து அதிகாரிகளுக்கு மனு அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு கொட்டாரக்குறிச்சி ரோட்டில் நின்று கொண்டிருந்த கணேசனிடம், ராஜகோபால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ராஜகோபால் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கணேசனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதற்கிடையே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜகோபால் வீரவநல்லூர் போலீசில் சரணடைந்தார்.

    • நெல்லை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
    • நடைபயணத்தின் போது அண்ணாமலையுடன் ஏராளமானோர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    நெல்லை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த மாதம் 28-ந் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த நடைபயணம் பல்வேறு மாவட்டங்கள் சென்ற நிலையில், கடந்த 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டார். பின்னர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்ற அண்ணாமலை நேற்று வரை அந்த மாவட்டத்தில் நடை பயணம் மேற்கொண்டார்.

    அங்கிருந்து, இன்று காலை நெல்லை மாவட்டத்திற்கு வந்த அண்ணாமலை பாளை-திருச்செந்தூர் சாலையில் எம்.கே.பி. நகரில் உள்ள பெல் மைதானம் அருகே தனது நடை பயணத்தை தொடங்கினார். அங்கு அவருக்கு நெல்லை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து அங்கிருந்து நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை பாளை மார்க்கெட் சாலை வழியாக சித்த மருத்துவ கல்லூரி பகுதிக்கு வந்தடைந்தார். வழிநெடுக அவரது நடை பயணத்திற்கு பொது மக்களும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அங்கிருந்து லூர்து நாதன் சிலை அருகே உள்ள வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    பின்னர் தெற்கு பஜார் வழியாக பாளை ராஜகோபாலசாமி கோவில் வந்தடைந்தார். அங்கு அவரது பிரசாரத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனத்தில் நின்று பொது மக்களிடையே பேசினார். அவரது பேச்சை கேட்க பா.ஜனதா நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் அதிக அளவில் திரண்டனர்.

    இதனை ஒட்டி ராஜகோபாலசாமி கோவில் பகுதியில் வரவேற்பு பேனர்கள், கட்சி கொடி உள்ளிட்டவை அதிகளவில் கட்டப்பட்டிருந்தன. மேலும் தாரை தப்பட்டை முழங்கப்பட்டது. கும்மி, கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்டவையும் நடைபெற்றது. நடைபயணத்தின் போது அண்ணாமலையுடன் ஏராளமானோர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    இந்த நடை பயணத்தின் போது முன்னாள் மத்திய மந்தரி பொன் ராதாகிருஷ்ணன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., நெல்லை மாவட்ட பா.ஜனதா தலைவர்கள் தயாசங்கர், தமிழ்ச்செல்வன், மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • பழமையான ஆன்மீக நதியாக விளங்கும் தாமிரபரணி நதியை ஒட்டி ஒரு காலத்தில் 108 திவ்ய தேசங்கள் இருந்தது.
    • சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சுத்தத்தை விட 6 மடங்கு மோசமான நீராக தாமிரபரணி நதி நீர் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்திற்கு வந்த பாரதீய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று பாளையில் தனது நடை பயணத்தை தொடங்கினார். நடை பயணத்தின் போது அண்ணாமலையுடன் ஏராளமானோர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    பின்னர் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

    வற்றாத ஜீவ நதியாக விளங்கும் தாமிரபரணி குறித்து மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ளது. அவ்வளவு பழமையான ஆன்மீக நதியாக விளங்கும் தாமிரபரணி நதியை ஒட்டி ஒரு காலத்தில் 108 திவ்ய தேசங்கள் இருந்தது. தற்போது அந்த நதி மிகவும் மாசடைந்து காணப்படுகிறது.

    சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சுத்தத்தை விட 6 மடங்கு மோசமான நீராக தாமிரபரணி நதி நீர் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தற்போதைய தி.மு.க ஆட்சியில் தாமிர பரணி ஆற்றை அசுத்தமாக்கி விட்டார்கள். பசுமை தீர்ப்பாயத்திற்கு சமீபத்தில் நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் உடனடியாக தாமிரபரணி நதியை செய்ய அறிவுறுத்தியுள்ளது. கங்கை நதியை போல தாமிரபரணி நதியை மாற்றுவதற்கு தனி பட்ஜெட்போட வேண்டும்.

    வ.உ.சி.மைதான மேற்கூரை

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகரின் மத்தியில் உள்ள பாளை வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்ட மேற்கூரை கட்டி முடித்து 8 மாதத்தில் அரை மணி நேரம் பெய்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்து விட்டது.

    மத்திய அரசு கொடுத்த நிதியை எந்த திட்டத்திற்கு பயன்படுத்தலாம் என்பதை யோசிக்காமல் ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வளவு கமிஷன் எடுக்கலாம் என்பதையே தி.மு.க. அரசு நோக்கமாக கொண்டிருக்கிறது. அதையே தனது முதல் கடமையாக இந்த அரசு கொண்டுள்ளது.

    கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திற்கு இதுவரை வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக ரூ.10 லட்சத்து 26 ஆயிரம் கோடி திட்ட பணிகளுக்காக வழங்கப் பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு தமிழகத்தில் ஒவ்வொரு இணைப்புக்கும் தி.மு.க.வினர் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை கமிஷன் கேட்கிறார்கள்.

    நெல்லை மாநகராட்சி யில் ஆளுங்கட்சியை சேர்ந்த 40 கவுன்சிலர்கள் மாநகராட்சி மேயர் சரவணனை மாற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேயர் சரவணன் எந்த பணி என்றாலும் 30 சதவீதம் கமிஷன் கேட்கிறார்.

    அப்பொழுதுதான் கையெழுத்து விடுவேன் என்று கூறுகிறார் என தி.மு.க. கவுன்சிலர்களே முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அதில் உண்மை இல்லை என்று கூறினால் இங்கு உள்ள தி.மு.க. கவுன்சிலர்கள் யாரேனும் ஒருவராவது இன்று மாலைக்குள் என்னிடம் வந்து கேள்வி கேட்கலாம். ஆதாரத்தோடு நிரூபிக்க தயாராக உள்ளேன்.

    மதுவால் தமிழகம் சீரழிகிறது. தி.மு.க தேர்தல் அறிக்கையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளித்தார். அவை எல்லாம் ஊசி போன வடை ஆகிவிட்டது.

    தமிழகத்தின் நிதி அமைச்சராக இருந்த தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோவில் 27 மாதத்தில் 30 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக தெரிவித்தார். அதன் பின்னர் அவரை அமைச்சரவையில் இருந்து மாற்றம் செய்தனர். கடந்த 4 மாதங்களாக அவரை எங்கேயும் பார்க்க முடிய வில்லை. இவற்றை எல்லாம் ஆதாரமாக கொண்டே தி.மு.க. ஆட்சி ஊழலானது என்று நிரூபித்து விடலாம்.

    2014-ம் ஆண்டு வரை விவசாயிகள் வட மாநிலங்களில் தற்கொலை செய்து கொண்ட நிலை இருந்தது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சி வந்த பின்னர் விவசாயத்தில் புரட்சி ஏற்பட்டுள்ளது. 4 பொருட்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலை இருந்த நிலையில், மோடி ஆட்சிக்குப் பின்னர் 24 பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொண்டு வரப்பட்டுள்ளது.

    குறிப்பாக காங்கிரஸ் ஆட்சியில் நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1310 மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு குண்டாலுக்கு ரூ.2183 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் 47 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கி வருகிறது.

    கடந்த ஆட்சியில் அதிக கடன் வாங்கிய இந்திய மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் தமிழகம் இருந்தது. ஆனால் தற்போது முதல் இடத்துக்கு கொண்டு வந்த பெருமை தி.மு.க. அரசை சேரும். தற்போது தமிழகத்தின் மொத்த கடனாக ரூ.7 லட்சத்து 53 ஆயிரம் கோடி உள்ளது. அதில் நாம் ஒவ்வொருவர் குடும்பத்தின் மீதும் ரூ.3 லட்சத்து 52 ஆயிரம் கடன் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நடை பயணத்தின் போது முன்னாள் மத்திய மந்தரி பொன் ராதாகிருஷ்ணன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., நெல்லை மாவட்ட பா.ஜனதா தலைவர்கள் தயாசங்கர், தமிழ்ச்செல்வன், முன்னாள் மாவட்ட தலைவர் மகாராஜன், மாவட்ட பொதுச்செய லாளர்கள் சுரேஷ், வேல் ஆறுமுகம், மாவட்ட செயலாளர்கள் வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி, நாகராஜன், மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அண்ணாமலையின் இந்த நடை பயணத்தை ஒட்டி கலந்து கொள்வதற்காக வந்திருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி மற்றும் மண்டல தலைவர் குரு கண்ணன் ஆகியோர் ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது. சுமார் 2 ஆயிரம் பேருக்கு காலை மற்றும் மதிய உணவு அவர்கள் வழங்கினர். மேலும் அங்கு தாகத்தை தணிப்பதற்காக குளிர்பானங்களும் வழங்கப்பட்டது.

    • சிந்துபூந்துறையில் தி.மு.க. மகளிர் தொண்டர் அணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
    • மாநில மகளிர் தொண்டர் அணி துணைச்செயலாளர் விஜிலா சத்தியானந்த் முன்னிலை வகித்தார்.

    நெல்லை:

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. மாவட்ட மகளிர் தொண்டர் அணி சார்பில் தச்சநல்லூர் பகுதிக்கு உட்பட்ட சிந்துபூந்துறையில் மகளிர் அணி புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாநில மகளிர் தொண்டர் அணி துணைச்செயலாளர் விஜிலா சத்தியானந்த் முன்னிலை வகித்தார்.

    இந்த முகாமில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட துணைச்செயலாளர்கள் எஸ்.வி.சுரேஷ், கிரிஜா குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டி யன், தச்சை பகுதி செயலாளர் சுப்பிரமணி யன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் நவநீதன், மாவட்ட பிரதிநிதி இசக்கி பாண்டியன், மாநகரத் துணைச் செயலாளர் அப்துல் கையூம், தொண்டரணி அமைப்பாளர் தொப்பி மைதீன், மாவட்ட இளைஞ ரணி துணை அமைப்பாளர் மீரான் மைதீன், மகளிர் தொண்டரணி தலைவி பத்மா, மகளிர் தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் தேவிகா, விமலா, மகளிரணி துணை அமைப்பாளர்கள் வள்ளியம்மாள், சாகிரா, மாமன்ற உறுப்பினர்கள் கோகிலவாணி, ராஜகுமாரி, சகாய ஜூலியட் மேரி, வசந்தா, அமீர் பாத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் அனிதா செய்திருந்தார்.

    • எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்கள் நலச்சங்கத்தின் நெல்லை மாவட்ட கிளை சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோபாலன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    நெல்லை:

    மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலை கண்டித்து மத்திய- மாநில அரசின் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்கள் நலச்சங்கம் நெல்லை மாவட்ட கிளை சார்பில் இன்று சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் இசக்கிமுத்து முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோபாலன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர்கள் மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்க வேண்டும், கலவரத்துக்கு துணை போகும் மாநில அரசை உடனடியாக கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிராம், மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், பகுஜன் சமாஜ் தேவேந்திரன், முன்னாள் கவுன்சிலர் சுடலைக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேகர், தென்காசி மாவட்ட தலைவர் முருகையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • களக்காடு அருகே உள்ள மேலவடகரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சிவசாமிக்கும், சுரேஷ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
    • சுரேஷ், இசக்கி, தாயம்மாள் ஆகியோர் சிவசாமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மேலவடகரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி சிவசாமி (வயது 20). இவருக்கும், அதே தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

    சம்பவத்தன்று சிவசாமி தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ், இசக்கி, தாயம்மாள் ஆகியோர் சிவசாமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேஷ் உள்பட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    • முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் மூப்பனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியில் நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜி.கே. மூப்பனார் பிறந்த நாளை யொட்டி இன்று காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் அவரது வீட்டில் மூப்பனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மண்டல தலை வர்கள் ராஜேந்திரன், ரசூல் மைதீன், முகமது அனஸ் ராஜா, மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் சொக்கலிங்க குமார், பரணி இசக்கி, மாநில வர்த்தக காங்கிரஸ் பொதுச் செயலாளர் சேவியர், மாவட்ட துணைத் தலைவர்கள் மாரியப்பன், வெள்ளபாண்டியன், ஆட்டோ அருள் ராஜ், மாநில சேவா தள செயலாளர் அனீஸ், மாவட்ட பொதுச் செயலாளர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் ஜோதி புரம் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×