search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணாமலை நடைபயணத்திற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
    X

    அண்ணாமலை நடைபயணத்திற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

    • நெல்லை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
    • நடைபயணத்தின் போது அண்ணாமலையுடன் ஏராளமானோர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    நெல்லை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த மாதம் 28-ந் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த நடைபயணம் பல்வேறு மாவட்டங்கள் சென்ற நிலையில், கடந்த 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டார். பின்னர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்ற அண்ணாமலை நேற்று வரை அந்த மாவட்டத்தில் நடை பயணம் மேற்கொண்டார்.

    அங்கிருந்து, இன்று காலை நெல்லை மாவட்டத்திற்கு வந்த அண்ணாமலை பாளை-திருச்செந்தூர் சாலையில் எம்.கே.பி. நகரில் உள்ள பெல் மைதானம் அருகே தனது நடை பயணத்தை தொடங்கினார். அங்கு அவருக்கு நெல்லை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து அங்கிருந்து நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை பாளை மார்க்கெட் சாலை வழியாக சித்த மருத்துவ கல்லூரி பகுதிக்கு வந்தடைந்தார். வழிநெடுக அவரது நடை பயணத்திற்கு பொது மக்களும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அங்கிருந்து லூர்து நாதன் சிலை அருகே உள்ள வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    பின்னர் தெற்கு பஜார் வழியாக பாளை ராஜகோபாலசாமி கோவில் வந்தடைந்தார். அங்கு அவரது பிரசாரத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனத்தில் நின்று பொது மக்களிடையே பேசினார். அவரது பேச்சை கேட்க பா.ஜனதா நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் அதிக அளவில் திரண்டனர்.

    இதனை ஒட்டி ராஜகோபாலசாமி கோவில் பகுதியில் வரவேற்பு பேனர்கள், கட்சி கொடி உள்ளிட்டவை அதிகளவில் கட்டப்பட்டிருந்தன. மேலும் தாரை தப்பட்டை முழங்கப்பட்டது. கும்மி, கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்டவையும் நடைபெற்றது. நடைபயணத்தின் போது அண்ணாமலையுடன் ஏராளமானோர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    இந்த நடை பயணத்தின் போது முன்னாள் மத்திய மந்தரி பொன் ராதாகிருஷ்ணன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., நெல்லை மாவட்ட பா.ஜனதா தலைவர்கள் தயாசங்கர், தமிழ்ச்செல்வன், மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×