என் மலர்
திருச்சிராப்பள்ளி
- தீபாவளியின் போது காலாவதி இனிப்பு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
- உணவு பாதுகாப்பு துறை அலுவலர் எச்சரிக்கை
திருச்சி,
தமிழ்நாடு அரசு திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் தீபாவளி பண்டிகைக்காக இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யும் நிரந்தர மற்றும் தற்காலிகத் தயாரிப்பு வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் திருச்சியில் நடந்தது.
இதில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆர். ரமேஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
இந்த தீபாவளி பண்டிகையின் போது பழைய இனிப்பு வகைகளை விற்பனை செய்ய கூடாது. குறிப்பாக காலாவதி தேதியை சரியாக பார்த்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யுங்கள். மேலும் தயாரிப்பாளர்கள் புற்றுநோயை வரவழைக்கக் கூடிய அளவுக்கு உணவு பொருட்களில் கலரிங் பயன்படுத்தக் கூடாது. திருச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் ஆரோக்கியமான தீபாவளியை கொண்டாட நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
உற்பத்தி மற்றும் காலாவதி தேதியில்லாத பொருட்களை விற்பனை செய்ய கூடாது. கலப்பட இனிப்பு வகைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் துறை சார்ந்த அதிகாரிகள் யாராவது கையூட்டு கேட்டால் தைரியமாக நீங்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- திருச்சி மாவட்டத்தில் மழை
- 3-வது நாளாக பரவலாக மழை
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.
நேற்று 3-வது நாளாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக துறையூர் தாலுகா தென்பரநாடு பகுதியில் 67 மில்லி மீட்டர், மணப்பாறை தாலுகா பொன்னணியாறு அணைக்கட்டு பகுதியில் 44.6, மருங்காபுரி பகுதியில் 41.6 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது.
மேலும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு வருமாறு;-
கல்லக்குடி 18.2, லால்குடி 2.2, நந்தியாறு அணை 28.2 புள்ளம்பாடி 36, தேவி மங்கலம் 3.2, சமயபுரம் 10.6, சிறுகுடி 16.8, வாத்தலை அணைக்கட்டு 2.4, மணப்பாறை 13.2, கோவில்பட்டி 10.3, முசிறி 11.3, புலிவலம் 8, தாப்பேட்டை 26, நவலூர் கொட்டப்பட்டு 1.5, துவாக்குடி 13, கொப்பம்பட்டி 24, துறையூர் 6, பொன்மலை 2.2, திருச்சி ஏர்போர்ட் 13, திருச்சி ஜங்ஷன் 2.4, திருச்சி டவுன் 1.4 மி.மீ என மொத்தம் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 403.1 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் சராசரியாக 16.8 மழை அளவு பதிவாகி உள்ளது.
தொடர் மழையின் காரணமாக திருச்சி மாநகரில் சாலைகள் அனைத்தும் சேரும் சகதியுமாக மாறி உள்ளது.
- பெண்ணிடம் 2½ பவுன் செயின் பறிப்பு
- எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பரபரப்பு
திருச்சி
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஆர்.எம்.எஸ். காலனி விவேகானந்தர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன்.பைண்டிங் தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 56).
இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு கிப்ட் வாங்குவதற்காக அருகாமையில் உள்ள கடைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து முத்துலட்சுமி எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தூத்துக்குடி ஜெப கூட்டம்
- ஜெப கூட்டத்திற்கு சென்ற தாய்-மகன் மாயம்
திருச்சி,
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் ராஜ். இவரது மனைவி ஜெயராணி (வயது 57). இந்த தம்பதியரின் மகன் அந்தோணி விஜய் (27).
தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு ஜெபக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெயராணி, தனது மகன் ஆண்டனி உடன் சென்றார்.பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து ஜெயராணியின் மூத்த மகன் ஆரோக்கிய பெலிக்ஸ் பாலக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் தாய் மகன் இருவரையும் தேடி வருகின்றனர்
- ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சினை
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
- 100 பேர் கைது
திருச்சி,
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பல ஆண்டு காலமாக அடிமனை பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் வட்டம் வெள்ளி திருமுத்தம் கிராமத்தில் புதிய பெயரில் பத்திரங்கள் பதிய கூடாது என ஸ்ரீரங்கம் சார்பதிவாளார் அலுவ லகத்திலும், மேற்கண்ட பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு கட்டிட அனுமதி, திட்ட அனுமதி, வரைபட அனுமதி, கட்டிட நிறைவு சான்று போன்ற எந்த அனுமதி சான்றுகளும் கொடுக்கக் கூடாது என திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்திலும், புதிய பெயரில் இந்த பகுதிகளில் யாருக்கும் பட்டா வழங்கக்கூடாது என ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்திலும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் தலையிட்டு மேற்கண்ட பணிகளை நிறுத்தி வைத்துள்ளது.
இதனால் ஸ்ரீரங்கம் பகுதியில் பல ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் பொதுமக்கள் இடங்களை விற்பதற்கும், வங்கியில் வைத்து கடன் வாங்கு வதற்கு, உயில் எழுத, பழைய வீடுகளை இடித்து புனரமைப்பு செய்ய முடி யாமல் தவித்து வருகின்ற னர். எனவே ஸ்ரீரங்கம் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அடிமனை பிரச்சனையில் தமிழக அரசும், இந்து சமய அறநிலைத்துறையும் தலையிட்டு ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது மக்களுடன் இணைந்து நேற்று ஸ்ரீரங்கத்தில் உண்ணாவிரத போராட்ட த்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர்.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட மத்தியகட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், ரெங்கராஜன், மாவட்ட க்குழு உறுப்பினர் சந்தா னம், கிளைசெயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்க தலைவர் மோகன்ராம், ஸ்ரீரங்கம் அடிமனை ஒருங்கிணைப்புக்குழு வரதராஜன், மாருதி ராமசாமி, பன்னீர்செல்வம், சின்னகண்ணு உள்பட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளனர்.
- ஒரு ஆண்டுக்கு மத்திய அரசு 2. 70 லட்சம் கோடி ரூபாயை 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்க வேண்டும்.
- தமிழக அரசும் தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் பங்கீடு பெறுவதற்கு சட்டரீதியாகவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
திருச்சி:
திருச்சியில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வருகை தந்த துரை வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காவரி நீர் பங்கீட்டில் கர்நாடக அரசு உரிய நீரை வழங்காததால் தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் ஏக்கர் குறுவை பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி உள்ளது. எனவே மத்திய அரசு உரிய இழப்பீட்டை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.
அதேபோல் தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்பது நாளுக்கு நாள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை நம்பி 16 கோடி பெண்கள் பதிவு செய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
ஒரு ஆண்டுக்கு மத்திய அரசு 2. 70 லட்சம் கோடி ரூபாயை இந்த 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு தொடர்ந்து குறைத்துக் கொண்டே வருகிறது.
கடந்த ஆண்டு 72 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு நடப்பாண்டில் 21 சதவீத விழுக்காடு குறைவாக 60 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக அரசும் தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் பங்கீடு பெறுவதற்கு சட்டரீதியாகவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும் அவர்கள் நம்முடைய முயற்சிக்கான எந்த பலனையும் வழங்காமல் இருக்கிறார்கள். எனவே உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசு முன்வந்து கர்நாடக அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் பயிரிடப்பட்டுள்ள குறுவை கருகிய நிலையில் இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு 13 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில அரசு அதை 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தி கொடுக்கும் சீட்டின் அடிப்படையில் எப்போதும் பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் நாங்கள் ஒரே கொள்கையில் இருக்கிறோம். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நோக்கத்திற்காக கூட்டணியில் உள்ள அனைவரும் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
கடந்த 5 ஆண்டுகளில் அ.தி.மு.க சிறுபான்மை மக்களுக்கு எதிராக என்னென்ன செய்தார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது சிறுபான்மை மக்களுக்கு நன்றாக தெரியும்.
இவ்வாறு துரை வைகோ கூறினார்.
- திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
- பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி
திருச்சி,
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் மனுநாள் முகாம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக அளித்து வந்தனர். மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தை முன்னிட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்தின் பிரதான நுழைவாயில், மனுவாங்கும் அரங்கத்தின் நுழைவாயில், பின்புற வாசல் உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கலெக்டர் அலுலக வளாகத்தில் சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திருச்சி எட்டறை பகுதியை சேர்ந்த கஜப்பிரியா திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சட்டென தான் பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணையை உடலின் மேல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார், இதனை தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீரை ஊற்றி தற்கொலை முயற்சியை முறியடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தனது கணவர் கார்த்திக் திருக்காட்டுபள்ளி காவல்நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருவதாகவும், தற்போது தன்னுடன் வாழ மறுப்பதாகவும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் எந்த வித நடவடிக்இகையும் எடுக்கப்படவில்லை என்றும் ெதரிவித்தார்.
இதே போல தாயனூர் பகுதியை சேர்ந்த பனையடி என்பவர் கலெக்டர் அலுவலகத்திற்கு மண்எண்ணைய் கேனுடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். கலெக்டர் அலுவலகத்தின் பிரதான வாயிலில் போலீசார் தீவிர சோதனை நடத்திய பின்னரே உள்ளே செல்ல அனுமதிப்பதை கண்டு திடுக்கிட்டுள்ளார். இதனால் கலெக்டர் அலுவலக நுழைவாசலிலேயே மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதனை கண்டு பாய்ந்து சென்று, அவரை மடக்கி பிடித்து, தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தனக்கு சொந்தமான இடத்தின் பாதையை சிலர் ஆக்கிரமித்து கொண்டதாகவும், மீட்டு தர கோரி பலமுறை மனு அளித்தும் பலனில்லை என்பதாலும், தற்கொலைக்கு முயன்றதாக அவர் தெரிவித்தார். இருவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் எத்தனை பாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும், இவ்வாறு தற்கொலை முயற்சிகள் வழக்கமாகி வருவது, போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.
- சமயபுரம் மாரியம்மன் கோவில்
- நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
மண்ணச்ச நல்லூர்
சக்தி தலங்களில் சிறப்பு வாய்ந்த தலங்களில் ஒன்று சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும்.
இத்திருத்தலத்தில் உள்ள மாரியம்மன் தனது சுயம்பு திருமேனியில் நவக்கிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் உள்ளடக்கிய இயந்திர திருமேனி பிரதிஷ்டையில் உள்ளடக்கி சக்தி தலங்களில் ஆதி பீடமாக சுயம்பு வடிவமாக சுதையினால் அஷ்ட புஜங்களுடன் அருள்பாலிக்கிறாள். இத்திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி அமாவாசை, மறுதினம் பிரதமை முதல் நவமி வரை தேவி பாகவதம், அக்னி புராணம், தேவி மஹாத்மியம் ஆகிய புராணக் கூற்றுகளின்படி அசுரனான மகிஷாசுரனை அழிக்க ஊசிமுனையில் துர்க்கை, மகாலெட்சுமி, சரஸ்வதி என முறையே முதல், நடு, கடை 9 நாட்கள் கடும் தவம் புரிந்து 10-வது நாள் விஜயதசமியன்று வெற்றி பெற்ற திருநாளை நவராத்திரி பெருவிழாவாக கொண்டாடுவது இத்திருத்தலத்தின் மரபு.
அதன்படி நவராத்திரி திருவிழா தொடங்கி வருகிற 23-ந் தேதி வரை நவராத்திரி உற்சவமும், சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நாளான 24-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அம்பாள் புறப்பாடாகி வன்னிமரம் அடைந்து அம்பு போடும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
நவராத்திரி உற்சவத்தின்போது தினமும் மாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 6.00 மணிக்கு புறப்பாடாகி கோவில் மேற்கு பிரகார நவராத்திரி மண்டபத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பாள்.
இன்று முதல் நவராத்திரி விழாவானது முதல் நாள் வித விதமான வித்தியாசமாக கொலு பொம்மைகளுடன், குமாரிகா அலங்காரத்தை காண உள்ளூர் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். பின்னர் இரவு 8 மணியளவில் சிறப்பு தீபாராதனையும், ஒவ்வொரு நாளும் அலங்காரம் தரிசனத்துடன் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற உள்ளது. இதேபோல் திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவிலிலும் கொலு பொம்மைகள் வைத்து அம்பாள் அலங்காரத்துடன் காட்சி அளிக்கிறார். நவராத்திரி திருவிழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- திருச்சியில் மாயம்
- 2 கல்லூரி மாணவிகள் உள்பட 4 பேர் மாயம்
திருச்சி
துறையூர் சிங்களாந்தபுரம் முத்துராஜா தெரு பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மகன் சந்துரு (வயது19 ). இவர் கண்ணனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டு சென்ற அந்த மாணவன் மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் இல்லை. அதைத் தொடர்ந்து பெரியண்ணன் துறையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.
உப்பிலியபுரம் கொப்பம்பட்டி ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மகள் நித்யா (19).இவர் துறையூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டுச் சென்ற அவர் மாலை வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நர்சிங் மாணவி
திருச்சி வையம்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காணவில்லை. இவர் வையம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 11-ந் தேதி வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது தாயார் தெக்கம்மாள் வையம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.
இதனை போல மணச்சநல்லூர் திருப்பட்டூர் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மகள் அபிப்பிரியா (19).
இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் படித்து வந்தார். பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற அபிப்பிரியா மாயமானார். இது குறித்து அவரது சகோதரர் கண்ணன் சிறுகனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைய நடத்தி வருகிறார்கள்.
- கஞ்சா,லாட்டரி, சூதாட்டம் :
- திருச்சியில் 12 பேர் அதிரடி கைது
திருச்சி
திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சின்ன கொத்தமங்கலம் பகுதியில் கஞ்சா விற்ற ஆறுமுகம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் கோட்டை, தில்லை நகர் பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்றதாக ஜெயக்குமார், அன்வர் பாஷா ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் திருச்சி கண்டோன்மெண்ட், கே.கே.நகர்,தில்லை நகர் ஆகிய பகுதிகளில் சூதாட்டம் நடைபெற்ற இடங்களில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினர். இந்த அதிரடி வேட்டையில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கேட்பாரற்று கடந்த 5 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
- அரிவாளை காட்டி மிரட்டி வியாபாரியிடம் பணம் பறித்த ரவுடிகள்
- திருச்சியில் கைது
- அரிவாள்,கார் பறிமுதல்
திருச்சி,
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 39 ). வெங்காய வியாபாரி. இவர் சென்னை பைபாஸ் சாலையில் அப்போலோ ஹாஸ்பிடல் எதிர் புறத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது காரில் வந்த மர்ம நபர் இவரிடம் அரிவாள் முனையில் பணத்தை பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த பிரவீன் என்கிற அருண்பால்( 37) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து அரிவாள், பணம் ,கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் திருச்சி பாலக்கரை காஜா பேட்டை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்கிற விக்னேஷ் ராஜா என்வரிடம் கத்தி முனையில் பணத்தை பறித்ததாக பாலக்கரை காஜா பேட்டையைச் சேர்ந்த சந்துரு, மதன் ,அசோக் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சந்துரு, மதன் ஆகிய 2 பேரும் ரவுடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடந்து வரும் காரணத்தினால் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு கிடக்கிறது.
- மழையால் பெரும்பாலான சாலைகள் சேரும் சகதியுமாக மாறி உள்ளது.
திருச்சி:
வெப்ப சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 61.2 சென்டி மீட்டர் மழை பதிவானது. நேற்று மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டியது. திருச்சி மாநகரில் நேற்று இரவு இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை பெய்தது.
ஏற்கனவே மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடந்து வரும் காரணத்தினால் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு கிடக்கிறது. இந்த நிலையில் பெய்த மழையால் பெரும்பாலான சாலைகள் சேரும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.
மாவட்டத்தில் அதிகபட்ச மாக திருச்சி டவுன் பகுதியில் 58.3 மில்லி மீட்டர், திருச்சி ஜங்ஷன் பகுதியில் 42, ஏர்போர்ட் பகுதியில் 19.6,பொன்மலையில் 39.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கிராமப்புறங்களில் குறைந்த அளவே மழை பெய்துள்ளது. மணச்சநல்லூர் தாலுகாவில் வாத்தலை அணைக்கட்டு பகுதியில் 11.2 மில்லி மீட்டர், மணப்பாறையில் 7.6, முசிறியில் 20 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளது. மேலும் நவலூர் கொட்டப்பட்டு பகுதியில் 9.5, துவாக்குடி 5.1,துறையூர் தென்பர நாடு பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கரூர் மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது. இன்று காலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
அதைத் தொடர்ந்து கரூர் மாவட்ட நிர்வாகம் மாணவ மாணவிகளின் நலன் கருதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது.
கடந்த 2 நாட்களில் இங்கு 500 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, கந்தர்வகோட்டை பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோன்று பெரம்பலூர் மாவட்டத்திலும் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது.
ஏற்கனவே மானாவாரி நிலங்களில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச கிணறுகளீல் நீர் இருப்பு குறைவாக இருந்தது.
தற்போது பெய்த மழையால் பயிர்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் காவிரி பாசன பகுதியிலும் மழை பெய்துள்ளதால் சம்பா பயிர்களுக்கு இதமாக அமையும் என விவசாயிகள் தெரிவித்தனர்.






