என் மலர்
திருச்சிராப்பள்ளி
- வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் வீட்டில் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
- போதிய காவலர்கள் இல்லாத காரணத்தினால் குற்ற சம்பவங்களை தடுக்க இயலாத நிலை இருந்து வருவதாக தெரிகிறது.
கே.கே.நகர்:
திருச்சி கே.கே.நகர் ரிங் ரோடு பிரேம் நகர் பகுதியில் வசித்து வருபவர் செல்லத்துரை. இவரது மனைவி சிந்தமாணி. செல்லத்துரை போலீஸ்காரராக வேலை செய்து கடந்த 6 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார்.
சிந்தாமணி சின்ன சூரியூர் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி சிந்தாமணியின் தந்தை பச்சை மலையில் உயிரிழந்தார்.
இதனை முன்னிட்டு சிந்தாமணி அங்கு சென்றுவிட்டார். இந்த வேளையில் நேற்று இவரது வீடு திறந்து இருப்பதை அறிந்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக சிந்தாமணிக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சிந்தாமணி வந்து வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டு பீரோவில் இருந்த 45 பவுன் நகை காணாமல் போயிருந்தது தெரியவந்தது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் வீட்டில் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து உடனடியாக கே.கே. நகர் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த கே.கே. நகர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடயவியல் நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். திருச்சி கே.கே.நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக நகை பறிப்பு, வீட்டில் பூட்டை உடைத்து திருடுவது என பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. போதிய காவலர்கள் இல்லாத காரணத்தினால் குற்ற சம்பவங்களை தடுக்க இயலாத நிலை இருந்து வருவதாக தெரிகிறது.
எனவே இந்த பகுதியில் கூடுதல் போலீசார் நியமித்தும், ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியும் கொள்ள சம்பவங்களை தடுக்க வேண்டும் என்கின்றனர் மக்கள்.
- ஐப்பசி மாதம் முதல் தேதியன்று தீர்த்தவாரி என்னும் துலாஸ்நானம்.
- துலாஸ்நானத்தின் போது காவிரி ஆற்றில் குளித்தால் பாவங்கள் குறைந்து புண்ணியம் சேரும்.
திருச்சி முக்கொம்பு அருகில் உள்ள திருப்பராய்த்துறையில் பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேசுவரர் கோவில் உள்ளது. மிக தொன்மை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேரோட்டமும், ஐப்பசி மாதம் முதல் தேதியன்று தீர்த்தவாரி என்னும் துலாஸ்நானம் நிகழ்ச்சியும் நடைபெறும். துலாஸ்நானத்தின் போது காவிரி ஆற்றில் குளித்தால் பாவங்கள் குறைந்து புண்ணியம் சேரும் என்றும், கங்கை நதியில் குளித்ததற்கு சமம் என்றும் பழங்காலம் தொட்டு கருதப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இந்த ஆண்டு துலாஸ்நானம் நிகழ்ச்சியானது ஐப்பசி முதல் நாளான நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று காலை வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர் மற்றும் சோமாஸ்கந்தர் பிரியாவிடை அம்மனும், மற்றொரு வெள்ளி வாகனத்தில் அம்மனும் எழுந்தருளினர். பின்னர் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். அதனை தொடர்ந்து இந்தப் பகுதியில் உள்ள அகண்ட காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளினார்கள்.
பின்னர் சிறிய பல்லக்கில் பூஜைகள் செய்து கொண்டு வரப்பட்ட அஸ்திர தேவருக்கு ஆற்றங்கரையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் அஸ்திர தேவர் காவிரி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு, கும்பத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட புனிதநீரை ஊற்றிய பின்னர், அஸ்திர தேவர் அகண்ட காவிரி ஆற்றில் புனித நீராடினார்.
அதனைத்தொடர்ந்து காவிரி ஆற்றில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் நமசிவாயா..., நமசிவாயா... என்ற கோஷத்துடன் புனித நீராடினார்கள். காவிரி ஆற்றில் இருந்து புறப்பட்ட அம்மன், கோவில் வளாகத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளி நேற்று மாலை வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல இடங்களில் அன்னதானம் நடைபெற்றது.
- புதிய தமிழகம் கட்சியினர் இன்று திருச்சி அரசு மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
- போராட்டம் காரணமாக அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
திருச்சி:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவர் மலைக்கோட்டை பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அதிகாரிகளின் அஜாக்கிரதையால் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் உள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மின்வாரிய அதிகாரி ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த நிலையில் ராஜீவ் காந்தியை உரிய பாதுகாப்பு இல்லாமல் பணி செய்ய கூறிய மேலும் சில அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த கேங்மேன் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் இன்று திருச்சி அரசு மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் மருத்துவமனை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் வடக்கு, தெற்கு, மேற்கு மாவட்ட செயலாளர்கள் பிச்சைமுத்து, தினகரன், வக்கீல் இளையராஜா மற்றும் சின்னையன் ஆகியோர் மற்றும் கேங்மேன் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் போலீஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்த போராட்டம் காரணமாக அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
- காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவார்கள்.
- காசியில் வாசம் செய்து பல புண்ணிய செயல்கள் செய்ததற்கு சமம்.
திருச்சி:
துலா மாத பிறப்பை யொட்டி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருமஞ்சனத்திற்காக இன்று காவிரி ஆற்றிலிருந்து தங்க குடத்தில் புனித நீர் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் துலா மாதம் என்றழைக்கப்படும். இந்த மாதத்தில் காவிரி ஆறு புனிதமாகிறது. துலா (ஐப்பசி) மாதத்தில் ஒரு நாள் ஸ்ரீரங்கம் காவிரியில் புனித நீராடி அரங்கனை தரிசனம் செய்தால் காசியில் வாசம் செய்து பல புண்ணிய செயல்கள் செய்ததற்கு சமம் என பெரியவர்கள் கூறுவர். இதையொட்டி காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவார்கள்.
இந்த மாதம் முழுவதும் காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து தினமும் காலை புனித நீர் தங்க குடத்தில் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டு நம்பெருமாள் திருவாராதனம் மற்றும் திருமஞ்சனத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. மற்ற மாதங்களில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தான் கோவிலுக்கு புனிதநீர் கொண்டு செல்ல ப்படுகிறது.
துலா மாத பிறப்பையொட்டி இன்று காலை காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து தங்க குடத்தில் புனிதநீர் எடுக்கப்பட்டு யானை மீது வைத்தும், வெள்ளி குடங்களிலும் புனித நீர் எடுக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையொட்டி நம்பெரு மாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு காலை 10.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். காலை 11.30 மணி முதல் பகல் 1.30 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 3 மணிக்கு சந்தனு மண்டபத்திலிருந்து புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
துலா (ஐப்பசி) மாதத்தில் நம்பெருமாளுக்கு நடைபெறும் அனைத்து திருமஞ்சனங்களும் தங்க பாத்திரத்தில் நடைபெறும். மேலும் மூலவர் பெரிய பெருமாள், உற்சவர் நம்பெருமாள், தாயார் தங்க ஆபரணங்கள் மற்றும் சாலக்கிராம மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
- திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ளது
- ஒலிம்பிக் அகடமிக்கு கூடுதலாக 20 ஏக்கர் நிலம்
- மாநகராட்சியிடம் விளையாட்டு துறை கேட்கிறது
திருச்சி
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2022 டிசம்பர் 29ம் தேதி திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் திருச்சியில் ஒரு ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.
அந்த ஒலிம்பிக் அகாடமி திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் முனையம் அருகாமையில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கு மாநகராட்சிக்கு சொந்தமாக 574 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் இந்த அகாடமிக்கு 30 ஏக்கர் நிலம் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகள் நடத்த உள்ளதால் மேலும் 20 ஏக்கர் நிலம் அதே பகுதியில் ஒலிம்பிக் அகாடமிக்கு ஒதுக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டு கொண்டுள்ளது.
இதற்காக புதிய முன்மொழிவை அனுப்ப உள்ளனர்.
ஒலிம்பிக்கில் பாஸ்கெட் பால், வாலிபால், சைக்கிளிங், ஆக்கி, ஃபுட்பால்,டென்னிஸ் ஸ்விம்மிங் என மொத்தம் 168 அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகள் உள்ளன. ஆகவே அனைத்து விளையாட்டுகளையும் நடத்துவதற்கு விசாலமான இடவசதி மற்றும் கட்டமைப்புகள் தேவைப்படுகிறது.
இதற்கிடையே அந்த பகுதியில் நவீன கிரிக்கெட் பயிற்சி மைதானம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரி ஒருவர் கூறும் போது,
ஒலிம்பிக் அகாடமிக்கு 30 ஏக்கர் போதுமானதாக இருக்காது. ஆகவே மேலும் 20 ஏக்கர் நிலம் ஒதுக்க மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டிருக்கிறோம். இதனை மாநகராட்சி நிர்வாகம் பரிசீலிக்கும் என நம்புகிறோம் என்றார்.
- உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முத்தரசன்
- சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
திருச்சி,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கடந்த 4-ந்தேதி நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநாட்டில் பங்கேற்பதற்காக திருச்சி வந்தார். அப்போது அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக 4-ந்தேதி மாலை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் காய்ச்சல் இருப்பதும், சுவாச பாதை மற்றும் நுரையீரல் பகுதியில் தொற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் பூரண குணமடைந்த நிலையில் 8 நாள் தொடர் சிகிச்சைக்குப் பின்பு இன்று காலை அவர் வீடு திரும்பினார்.
- மணச்சநல்லூர் ஸ்ரீ சவுந்தர்ராஜ பெருமாள் கோவில்
- புரட்டாசி சிறப்பு இசை விழா
திருச்சி,
திருச்சி சரஸ்வதி வித்யாலயம் மற்றும் ஸ்ரீ ரங்கா நுண்கலை மையம் இணைந்து நடத்திய நாத ஸூதா ரஸம் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு இசை நிகழ்ச்சி திருச்சி மணச்சநல்லூர் வட்டம் அழகிய மணவாளன் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சவுந்தர்ராஜ பெருமாள் கோவில் பஜனை மடத்தில் நடைபெற்றது.
இதில் ரமா நாராயணன் சிஷ்யை அனன்யா கணீர் குரலில் பாட வயலின் வித்வான் வேங்கட சுப்ரமணியன், மிருதங்க வித்வான் கம்பரசம்பேட்டை சுவாமிநாதன் ஆகியோர் இசை விருந்து அளித்தனர். இந்த புரட்டாசி சிறப்பு இசை நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் வெகு நேரம் அமர்ந்து இளம் கலைஞர்களின் இசையை மெய் மறந்து ரசித்தனர். இசை விழா நிறைவு பெற்ற பின்னரே பக்தர்கள் கலைந்து சென்றனர்.
இந்த தகவலை ஸ்ரீரங்கம் நகர நலச் சங்க மக்கள் செய்தி தொடர்பாளர் ரொட்டேரியன் கே. சீனிவாசன் தெரிவித்தார்.
- வெவ்வேறு சம்பவம்
- திருச்சியில் 2 பெண்கள் உள்பட 3 பேர் மாயம்
- போலீசார் விசாரணை
திருச்சி,
திருச்சி சுப்பிரமணியபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய அமல்தாஸ். இவரது மனைவி இந்திரா பிரியதர்ஷினி (வயது 34) இவர் கருரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி திருச்சி மத்திய பேருந்து சென்றவர் கரூர் போய் சேரவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து ஆரோக்கிய அமல்தாஸ் கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்திரா பிரியதர்ஷினியை தேடி வருகின்றனர்.
இதே போன்று ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் சேர்ந்தவர் ரெங்கன் இவரது மகள் பூமாதேவி ( 14) இவர் ஸ்ரீரங்கம்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் . சம்பவத்தன்று அவரது தாய் மாரியாயி வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது மகள் பூமாதேவி காணவில்லை.
பல இடங்களில் தேடிப் பார்த்தோம் இன்னும் கிடைக்கவில்லை. இது குறித்து மாரியாயி ஸ்ரீரங்கம் அரசு போலீசில் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பூமாதேவியை கேடி வருகின்றனர்.
திருச்சி பொன்மலை சீதாபுரத்தை சேர்ந்தவர் ஜோசப் ( 69) சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற ஜோசப் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மகன் ஆரோக்கியசாமி, பொன்மலை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
- முதியவரிடம் செல்போன் பறித்த சிறுவன்
- செல்போன் பறித்த சிறுவன் கைது
திருச்சி
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை நாகம்மை வீதி பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 71). இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஒட்டலில் மேற்பார்வையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கலியமூர்த்தி திருச்சி மன்னார்புரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த சிறுவன் உள்ளிட்ட உள்ளிட்ட 2 வாலிபர்கள் கலியமூர்த்தியை மிரட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.இது குறித்து கலியமூர்த்தி கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி ஆயில் மில் பகுதியை சேர்ந்த அருண் (19) திடீர்நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- ஜவகர் ஆதரவாளர்களான காங்கிரஸ் நிர்வாகிகளின் ஒரு பிரிவினர் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டம் மாவட்ட துணைத் தலைவர் சிக்கல் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி:
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஜவகர் திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மாநகராட்சி கவுன்சிலர் எல் ரெக்ஸ் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் திருச்சி மாநகர், மாவட்ட காங்கிரஸ் தலைவர் மாற்றத்தை கண்டித்து, திருச்சி காங்கிரஸ் அருணாச்சலம் மன்றத்தில் ஜவகர் ஆதரவாளர்களான காங்கிரஸ் நிர்வாகிகளின் ஒரு பிரிவினர் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட துணைத் தலைவர் சிக்கல் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் புத்தூர் சார்லஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மலைக்கோட்டை கோட்டத் தலைவர் ரவி , பொன்மலை கோட்ட தலைவர் செல்வகுமார், முன்னாள் கோட்ட மாவட்ட தலைவர்கள் கள்ளத்தெரு குமார், அப்துல் குத்தூஸ், ஜெகதீஸ்வரி, கலைசெல்வி, அண்ணா சிலை விக்டர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் போராட்டக்காரர் திடீரென்று காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தின் கதவை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு, திருச்சி பாரளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரை கண்டித்து கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
- திருச்சி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்தில் இதுவரை 86 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இந்த வருடத்தில் மட்டும் 463 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்சி:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. அதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 3பேரும், கிராமப்புற பகுதியைச் சேர்ந்த 5 பேரும் உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்தில் இதுவரை 86 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் மட்டும் 463 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கவர்ச்சிகரமான அறிவிப்பை நம்பி பலரும் ரூ.5 லட்சம் முதல் 1 கோடி வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
- கடந்த 2 மாதமாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வட்டிக்கான காசோலைகள் பணமில்லாத காரணத்தால் திரும்பி வந்தது.
திருச்சி:
திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, நாகர் கோவில், மதுரை, கும்பகோணம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 7 இடங்களில் பிரபல ஜுவல்லரி செயல்பட்டு வந்தது. இங்கு ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் 2 சதவீத வட்டி வீதம் என மாதம் தோறும் ரூ.10 ஆயிரமும், 10 மாத முடிவில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்கமும் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டனர்.
இதனை நம்பி பலரும் ரூ.5 லட்சம் முதல் 1 கோடி வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் முதலீடு செய்தவர்களுக்கு வட்டிக்கான காசோலைகள் வழங்கினர். ஆனால் கடந்த 2 மாதமாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வட்டிக்கான காசோலைகள் பணமில்லாத காரணத்தால் திரும்பி வந்தது. இதுகுறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு ஓரிரு வாரங்களில் பணம் கொடுத்து முடிப்பதாக நகை கடை சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் பணம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் திருச்சி கடை தவிர மற்ற கடைகள் அனைத்தும் திடீரென மூடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாடிக்கையாளர்கள் திருச்சி, கரூர் பைபாஸ் சாலையில் செயல்படும் நகை கடை முன்பாக திரண்டனர். பின்னர் நகைகடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த நகை கடையில் ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ள நிலையில் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் மோசடி நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






