என் மலர்
சிவகங்கை
- மானாமதுரை வைகையாற்றில் இறங்கிய வீர அழகர்
- கோவிந்தா கோஷம் முழங்கி பக்தர்கள் பரவசமடைந்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி-சோம நாதர், வீர அழகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 10நாட்கள் சித்திரை திருவிழா நடை பெறும்.
மதுரையில் நடைபெறு வது போல இங்கும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று ஆனந்தவல்லி -சோமநாதர் கோவிலில் வைகையாற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.
வீர அழகர்கோவிலில் உள்ள மண்டகபடியில் கள்ளழகர் திருக்கோலத் துடன் சுந்தரராஜபெருமாள் பூப்பல்லக்கில் எழுந்தரு ளினார். நள்ளிர வில் எதிர்சேவை நிகழ்ச்சி நடை பெற்றது.
இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை தியாக விநோத பெருமாள் கோவிலில் இருந்து வீர அழகர் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு அணிந்து அப்பன் பெருமாள் கோவில் மற்றும் ரதவீதிகளில் வலம் வந்து ஆனந்தவல்லி, சோம நாதர் கோவில் முன்புள்ள வைகையாற்றில் இறங்கினார். அப்போது பக்தர்கள் "கோவிந்தா... கோபாலா..." கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
திருவிழாவை காண வைகையாற்றங்கரை முழுவதும் பக்தர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் திருக்கண் சாத்தி வீர அழகரை வழிபட்டனர். திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வீர அழகர் கோவிலில் வருகிற 10-ந்தேதி வரை சித்திரை திருவிழா நடைபெறுகிறது.
- வேலியில் சிக்கி புள்ளிமான் பலியானது.
- கால்நடை உதவியாளரால் பிரேத பரிசோதனை ெசய்து அதன் பின்னர் புதைத்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தில் 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் இரை தேடி வந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள நாய்கள் துரத்தின. இதனால் பயந்து ஓடிய புள்ளிமான் குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலி முள்ளு கம்பியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானது. இதுகுறித்து தகவல் அறிந்த வனச்சரக அலுவலர்கள் புள்ளிமான் உடலை கைப்பற்றி கால்நடை உதவியாளரால் பிரேத பரிசோதனை ெசய்து அதன் பின்னர் புதைத்தனர்.
- திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் மீண்டும் இன்று மாலை தேரோட்டம் நடந்தது.
- பூப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அப்போது பலத்த மழை பெய்ததால் பாதி வழியிலேயே தேர் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று மாலை நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து தேரோட்டம் நடைபெறுகிறது.கோவிலை சுற்றி 4 ரத வீதிகள் வழியாக தேர் வந்து நிலையை வந்தடைகிறது. நாளை (6-ந்தேதி) இரவு ஸ்ரீதேவி, பூதேவியுடன் மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ மற்றும் கோவில் கண்காணிப்பாளர் சேவற்கொடியான் ஆகியோர் செய்திருந்தனர்.
- தேவகோட்டை அருகே குறைந்த விலைக்கு நகைகள் அடகு வைக்கப்பட்டது.
- அந்த நகைகள் இந்த வழக்கில் தொடர்புடையதா? என்று தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி தாய், மகளை கொலை செய்து 60 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளை யடித்தனர். இவர்களது அருகில் தூங்கிய வேலுமதி மகன் மூவரசன் என்ற 13 வயது சிறுவனின் மண்டையை உடைத்து படுகாயப்படுத்தி விட்டு குற்றவாளிகள் தப்பி விட்டனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த கோரச்சம்பவம் பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரையும் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த வழக்கு சம்பந்தமாக தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில் 8 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையின் போது 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.
இந்த வழக்கில் ெதாடர்புடைய மேலும் சில குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. தற்போது விசாரணை தீவிரமடைந்து முக்கிய நபர்கள் விசாரணை வளையத்தில் சிக்கி இருப்ப தாக தெரிகிறது. எனவே போலீசார் அவர்கள் மீது ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருடப்பட்ட நகைகள் குறித்து தேவகோட்டை நகை கடை பஜாரில் உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் தனிப்படையினர் விசா ரணை நடத்தினர். அதில் இந்த வழக்கில் முக்கிய நபர் மூலமாக நகைக்க டைகளில் பல லட்சம் மதிப்பிலான நகை களை குறைந்த விலைக்கு அடகு வைத்தது தெரியவந்தது. அந்த நகைகள் இந்த வழக்கில் தொடர்புடையதா? என்று தனிப்படையினர் விசாரணை
- தேவகோட்டை அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.
- நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே உள்ள நாஞ்சி வயல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது34), எலனாப்பட்டியை சேர்ந்தவர் நவீன் (22). இவர்கள் இருவரும் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தனர். அவர்கள் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் கிளியூர் அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அந்தப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயபால் வரும் வழியில் இறந்து விட்டார். நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- சிவகங்கையில் குளியல் தொட்டியை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி கட்டப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சி 11-வது வார்டு மன்னர் மேல்நிலைப்பள்ளி பின்புறம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி கட்டப்பட்டது. அதை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதில் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், ஆணையாளர் (பொறுப்பு) பாண்டிசுவரி, கவுன்சிலர்கள் ராஜா, ஆயுப்கான், மகேஷ், ராபர்ட், தாமு, கார்த்திகேயன், ராமதாஸ், கிருஷ்ணகுமார், ஒப்பந்ததாரர் முருகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அருள்ஸ்டிபன், அவைத் தலைவர் பாண்டி, நகரதுணைசெயலாளர் மோகன்,சேதுபதி, சரவணன், முருகன்,சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வக புதிய இயக்குநராக ரமேஷா பதவியேற்றார்.
- வேதிவினைகள் எவ்வாறு அடுக்கு எதிர்மின் வாயின் மின்தேக்கு திறனை பாதிக்கிறது என்பதை முதன் முதலில் நிலைநாட்டினார்.
காரைக்குடி
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (சி.எஸ்.ஐ.ஆர்-சிக்ரி) புதிய இயக்குநராக ரமேஷா பதவியேற்றார். இவர் இந்திய அறிவியல் நிறுவனத்தில் சிறந்த முனைவர் ஆய்வறிக்கைக்கான கெ. பி.ஆபிரகாம் பதக்கத்தை பெற்றவர். இவர் கார்னெட் எனும் திடமின்பகுபொருள் கொண்டு உருவாக்கப்பட்ட திண்ம-நிலை லித்தியம் அயனி மின்கலன் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். மேலும், மீளக்கூடிய எதிர்மின்ம ஒடுக்க ஏற்ற வேதிவினைகள் எவ்வாறு அடுக்கு எதிர்மின் வாயின் மின்தேக்கு திறனை பாதிக்கிறது என்பதை முதன் முதலில் நிலைநாட்டினார்.
- காளையார்கோவிலில் அறிவியல் இயக்க கொண்டாட்டம் நடந்தது.
- செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர் துரை நன்றி கூறினார்.
காளையார்கோவில்
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஆயிரம், ஆயிரம் அறிவியல் திருவிழா நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த திருவிழா மண்டல, ஒன்றிய அளவில் மாவட்டங்கள் தோறும் நடைபெறுகிறது.
ஒன்றிய அளவில் வானவில் மன்ற ஸ்டெம் கருத்தாளர்களுக்கும், தன்னார்வலர் களுக்கும், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கும் இது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் 350 இடங்களில் இது நடைபெற உள்ளது.
அதன் தொடக்கமாக சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் உத்தரவின் பேரில் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் சேவல் புஞ்சை நடுநிலைப்பள்ளியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பீட்டர்லெமாயூ தலைமையில் ஸ்டெம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன், வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) கஸ்தூரிபாய் முன்னிலையில் நடந்தது.
அறிவியல் ஆசிரியர் ஆரோக்கிய பாஸ்கர் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் ஆரோக்கியசாமி. ஆயிரம் ஆயிரம் அறிவியல் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கினார். இதில் அந்த பகுதி பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர் துரை நன்றி கூறினார்.
- மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 55 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் சம்பளத்துடன் கூடிய மாற்று விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
சிவகங்கை
சென்னை முதன்மை செயலாளர்-தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் உத்தரவின்படி சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டத்தின்படி தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
மேற்படி தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் சம்பளத்துடன் கூடிய மாற்று விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு VA என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு IVEE என்ற படிவத்திலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு XIIA என்ற படிவத்திலும் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தன்று 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த சட்டவிதிகளை அனுசரிக்காமல் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவ னங்களின் மீது சிவகங்கை மாவட்ட த்தில் 55 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.
சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- மானாமதுரையில் கொட்டும் மழையில் ஆனந்தவல்லி-சோமநாதரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- 5-ந்தேதி காலை 7மணி முதல் 7.25மணிக்குள் வைகை ஆற்றில் வீர அழகர் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லியம்மன்-சோமநாதர், வீரஅழகர் கோவில் உள்ளது.
சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி தினமும் அம்மன்-சுவாமி சிம்மம், அன்ன பறவை, கிளி, இரட்டை குதிரை, இரண்டு ரிஷபம், காமதேனு வாகனங்களில் ரத வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நேற்று காலை திருக்கல்யாண நிகழ்ச்சி கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இதைதொடர்ந்து இரவு பூ பல்லக்கு அலங்கரிக்கப்பட்டு அம்மன் பூபல்லக்கிலும், சோமநாதசுவாமி பிரியாவிடையுடன் யானை வாகனத்திலும் கோவிலில் இருந்து புறப்பட்டு திருக்கல்யாண கோலத்துடன் வீதிகளில் வலம் வந்தனர்.
அப்போது திடீரென மழை பெய்தது. கொட்டும் மழையில் பக்தர்கள் நனைந்தபடி ஓம்நமச்சிவாயா கோஷம் மற்றும் சங்குநாதம் எழுப்பியும் வழிபட்டனர்.
இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் மானாமதுரை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் தலை மையில் ஏராளமான போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவில் வருகிற 5-ந்தேதி காலை 7மணி முதல் 7.25மணிக்குள் வைகை ஆற்றில் வீர அழகர் இறங்கும் நிகழ்ச்சியும், 6-ந்தேதி வைகை ஆற்றில் நிலாச்சோறு உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
- சிங்கம்புணரி அருகே மகா மாரியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா நடந்தது.
- திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கட்டுக்குடிப்பட்டியில் செல்வ விநாயகர், மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காப்பு கட்டு தலுடன் சித்திரை பொங்கல் திருவிழா தொடங்கியது.
ேநற்று மாமன்- மச்சான்கள் உறவு நீடிக்க வேண்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள்,பெண்கள் கலர் பொடி தூவியும், பூசியும், முட்டைகளை தலையில் உடைத்தும் மகிழ்ச்சியை பகிர்ந்தனர்.
வெள்ளையம்மாள் சின்னக்கருப்பர் ஆலயத்தின் முன்பு பெண்கள் கும்மி யடித்தும், நேர்த்திகடன் வைத்த பக்தர்கள் பல்வேறு தெய்வங்கள் வேடமிட்டு சாமியாட்டம் ஆடினர். இங்கிருந்து இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் செல்வ விநாயகர், மகா மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு பெண்கள் கும்மியடித்து வழிபாடுகளை நிறை வேற்றினர்.
அதைத்தொடர்ந்து செல்வ விநாயகர், மகா மாரியம்மன் கோவிலுக்கு பேத்தப்பன் வேடமிட்டவர் தலையில் கோழி இறகுகளை சொருகிய வாப்பெட்டி தலையில் கவிழ்த்தும், கோழி இறகு மீசையுடன் கையில் உலக்கையோடு அழைத்து வரப்பட்டார்.
இந்த விநோத திருவிழா நிகழ்வால் திருஷ்டி கழியும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
- மானாமதுரை சித்திரை திருவிழாவில் ராட்டினங்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
- வைகை ஆற்று பரப்பு முழுவதும் ஜொலிக்கும்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரைக்கு அடுத்தபடியாக மானாமதுரை சித்திரை திருவிழாவை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
மானாமதுரையில் 10 நாட்கள் திருவிழாவும் வைகைஆற்றில் நடைபெறு வதால் வைகை ஆற்று பகுதி களைகட்டிவிடும். ஆற்றில் எங்கு பார்த்தாலும் பொது மக்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
பொதுமக்கள் கூடுவதை முன்னிட்டு ஆற்றில் பொழுதுபோக்குக்காக ஜெயன்ட் வீல், டோரா டோரா, குட்டி ரெயில், பட்டர் பிளை ராட்சத பலூன், ராட்டினங்கள், கப் ராட்டிணங்கள் என ஏராள மான அம்சங்கள் இடம் பெறும். ராட்டிணங்கள் அமைப்பாளர்களால் அமைக்கபட்ட அலங்கார மின்விளக்குகளால் வைகை ஆற்று பரப்பு முழுவதும் ஜொலிக்கும்.
இந்நிலையில் இந்தாண்டு திருவிழாவில் ஒருசில ராட்டினங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. தொட்டி ராட்டிணம் இயக்கப்படாததால் பொதுமக்களும், குழந்தைகளும் ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே போதிய பாதுகாப்பு அம்சங்களுடன் அனைத்து வகை ராட்டினங்களையும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர். இந்த தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு திருவிழாவில் ராட்டிணங்களை அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.






