என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சிவகங்கை ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    • புதிய ரெயில் சேவையை தொடங்க வேண்டும்.

    சிவகங்கை

    தென்னக ரெயில்ேவ கமிட்டி கூட்டத்தில், மதுரை மண்டல ரெயில்வே கமிட்டி உறுப்பினர் சையது இப்ராகிம் பேசியதாவது:-

    பல்லவன் விரைவு ரெயிலை மானாமதுரை வரை நீட்டிப்பு செய்ய கடந்த 3 வருடங்களாக கோரிக்கை வைத்தோம். ஆனால் ரெயில்வே நிர்வாகம் அதனை ஏற்கவில்லை. மானாமதுரையில் அதற்கு தேவையான புதிய ஏற்பாடுகளை செய்து கொடுத்து பல்லவன் ரெயிலை மானாமதுரை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வாரம் ஒருமுறை இயங்கும் ராமேசுவரம் - கோவை ரெயிலை ராமேசுவரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமையும், கோவையில் இருந்து வெள்ளிக்கிழமையும் இரவு நேர சேவையாக வழங்கினால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும், நாட்டரசன் கோட்டை ரெயில் நிலையத்திற்கு நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தோம். அதற்கு ஆகும் மதிப்பீட்டை இதுவரை வழங்கவில்லை. உடனே அதனை வழங்க வேண்டும்.

    செட்டிநாடு ரெயில் நிலையத்தில் மீண்டும் ரெயில்கள் நிற்பதற்கு பலமுறை கோரிக்கை வைத்தோம். எப்பொழுது ரயில் அங்கு நிற்கும் ?. 2019-ம் ஆண்டில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. கோரிக்கையின் அடிப் டையில் செங்கோட்டை எழும்பூர் ரெயில் சேவை தொடங்கியது. பின்னர் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்பு அந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மானாமதுரை மற்றும் சிவகங்கை ரெயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேசுவரத்தில் இருந்து பெங்களூருவுக்கு சிவகங்கை, காரைக்குடி வழியாக புதிய ரெயில் சேவையை தொடங்க வேண்டும்.

    சிவகங்கை ரெயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரெயில்களும் இரு மார்க்கத்திலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பாம்பன் ரெயில் பாலத்திற்கு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் பெயரை வைக்க வலியுறுத்தி உள்ளோம்.

    எங்களை போன்ற உறுப்பினர்கள் அவசரகால பயண இட ஒதுக்கீடு பெற வாட்ஸ் அப் அல்லது இ-மெயில் முகவரியை வழங்கிட வேண்டும். மேலும் 2019-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே கோட்டயம், செங்கோட்டை, விருதுநகர், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, நாகப்பட்டினம் வழியாக விரைவு தொடர்வண்டி சேவையை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சிவகங்கையை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நகர் மன்ற தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • ஆண்டு வரி வருமானம் ரூ.9.94 கோடியாக உள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கையில் சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினரிடம் சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை நகரம், வரலாற்றுச்சிறப்பு மிக்க நகரமாகும். இந்த நகராட்சியில் 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆண்டு வரி வருமானம் ரூ.9.94 கோடியாக உள்ளது. மாவட்ட தலைநகராக உள்ள சிவகங்கை நகராட்சி தரம் உயர்த்தப்படுவதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளது. எனவே சிவகங்கையை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும்.

    நகராட்சியில் கழிவு நீர் கால்வாய்கள் சேதமடைந்து உள்ளதால் மழைநீர் சாலையில் செல்கிறது. எனவே சுமார் 100 கி.மீ. நீளம் கால்வாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே 50 கி.மீட்டர் நீளத்திற்கு பாதாள சாக்கடை கழிவு நீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது விரிவாக்கப்பகுதிகளிலும் மேலும் 30 கி.மீட்டர் நீளத்திற்கு கழிவு நீர் குழாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நகரின் மைப் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த தெப்பக்குளத்தை பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி குப்பைகளை கொட்டி தரம் பிரிக்க சுமார் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை நகராட்சியை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவ-மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பரமேஸ்வரி தலைமையில் நடந்தது. போக்சோ சட்டம், 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கட்டாய கல்வி மற்றும் போதை பொருள் குறித்து முகாமில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மாவட்ட சமூக நல அலுவலர் அன்புகுளோரியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், காரைக்குடி அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் நிர்மலா நிவேதா, ஆசிரியர் பயிற்றுனர் கல்லல் வட்டார வளமையம் புலவலர் காளிராஜா, சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை வக்கீல் கண்ணன், சமூக நல பாதுகாப்பு அலுவலர் சுதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • மருது சேனை அமைப்பின் தலைவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
    • ஆதிநாராய ணனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்குடி

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான் பட்டியை சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மகன் அறிவழகன் என்ற வினித் (வயது 29). இவர் மீது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போலீஸ் நிலையத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் அறிவ ழகன் குடும்பத்தினருக்கும், மையிட்டான் பட்டியைச் சேர்ந்த மருது சேனை அமைப்பு தலைவர் ஆதி நாராயணன் தரப்பினருக்கும் உள்ளாட்சி தேர்தல் பிரச் சினை மற்றும் விருதுநகர் நகராட்சி மார்க்கெட்டை ஏலம் எடுப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

    விருதுநகர் நகராட்சி மார்க்கெட்டை ஏலம் எடுக்கக் கூடாது என ஆதிநாராயணன் தரப்பினர் தொடர்ந்து அறிவழகன் குடும்பத்தினரை மிரட்டி வந்துள்ளனர். மேலும் மார்க்கெட்டை ஏலம் எடுத்தால் கொலை விழும் என்றும் மிரட்டியதாக தெரிகிறது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அறிவ ழகன் குடும்பத்தினர் ஏலம் எடுக்கும் முயற்சியை மேற்கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த எதிர் தரப்பினர் அறிவழகனை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

    கடந்த 18-ந் தேதி ஒரு வழக்கில் நிபந்தனை ஜாமீனுக்காக காரைக்குடி போலீஸ் நிலையத்தில் அறிவழகன் கையெழுத்திட நடந்து சென்றார். அப்போது காரில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்க ளுடன் அறிவழகனை ஓட ஓட விரட்டி கொலை செய்தது.பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மருது சேனை அமைப்பின் தலைவர் நாராயணன் கூலிப்படை வைத்து அறிவழகனை கொலை செய்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலை செய்த ஆதிநாரா யணனின் மைத்துனர் மதுரை மேலமாசி வீதியை சேர்ந்த தனசேகரன் (33) மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (23), சேதுபதி (25), சரவ ணக்குமார் (24), தினேஷ் குமார் (26), செல்வகுமார் (23), நவீன் குமார் (24), அஜித்குமார் (27), ஸ்ரீதர் (19) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    முக்கிய குற்றவாளியான தலைமுறைவாக இருந்த மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை தனிப்படை போலீ சார் அவரை கைது செய்த னர். காரைக்குடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட ஆதிநாராய ணனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பஸ்- லாரி மோதல்; 32 பயணிகள் உயிர் தப்பினர்.
    • எஸ்.எஸ்.கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே திருப்பத்தூர்-மதுரை நெடுஞ்சாலையில் அதிகாலை 5.30 மணி அளவில் தஞ்சாவூரில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டி ருந்தது. இதில் 32 பயணிகள் இருந்தனர்.

    எதிர்திசையில் மதுரை யில் இருந்து தேவ கோட்டை நோக்கி சரக்கு லாரி அதி வேகமாக வந்தது. எஸ்.எஸ்.கோட்டை சிவல்பட்டி பிரிவு அருகே வந்தபோது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் மீது மோதியது.

    இருப்பினும் அரசு பஸ் டிரைவர் சேகர் சுதாரித்துக் கொண்டு சாதுரியமாக செயல்பட்டதால் சாலையோர தடுப்பில் மோதி பஸ் நின்றது. இதனால் பஸ்சில் பயணம் செய்த 32 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். விபத்தில் சிக்கிய லாரியின் முன்பகுதி நொறுங்கியது. சரக்கு லாரியின் டிரைவர் லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் விபத்து நடந்த இடத்தின் வழியாக அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் காரில் தனது ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். அவர் விபத்து நடந்திருப்பதை பார்த்தவுடன், தனது காரில் இருந்து இறங்கிச்சென்று அரசு பஸ்சின் டிரைவர் சேகர் மற்றும் கண்டக்டரிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார். இந்த விபத்து குறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சொர்ணமூர்த்தீசுவரர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • புதிய தேர் செய்யப்பட்டு தேரோட்டம் நடைபெற உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி கிராமத்தில் பழமை சொர்ண மூர்த்தீசுவரர் கோவில் உள்ளது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இந்த கோவிலில் வருடம் தோறும் ஆனி திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    திருவிழாவையொட்டி கேட்டை நட்சத்திரம் அன்று நடைபெறும் தேர் திருவிழா பிரிசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான ஆனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இன்று மாலை காப்பு கட்டுதலுடன் தொடங்கி 10 நாட்கள் விழா நடைபெறும்.

    தினமும் காலை, இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் திருவீதி உலா நடைபெறும். அம்பாளுக்கு 5-ம் நாள் அன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் நாள் நடைபெறும். இக்கோவிலின் தேர் பழுதானதால் தேரோட்டம் பல ஆண்டு களாக நடைபெறாமல் இருந்தது. தற்பொழுது புதிய தேர் செய்யப்பட்டு தேரோட்டம் நடைபெற உள்ளது.

    • திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் 3 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற்றது.
    • நகர் மன்ற தலைவருமான மாரியப்பன் கென்னடி, தி.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட திட்டக்குழு 12 உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் 9 பதவிகளுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் 3 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. தி.மு.க. சார்பில் 3 வேட்பாளர்களும், ஒரு அ.ம.மு.க. வேட்பாளரும் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராமநாதன், பாலமுருகன், சித்ரா தேவி ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றனர். இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் ஒட்டுமொத்த 12 உறுப்பினர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

    இந்த திட்டக்குழு உறுப்பினர்களுக்கு தலைவராக மாவட்ட சேர்மனும், துனை தலைவராக கலெக்டரும் தொடர்வார்கள். தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், நகர் மன்ற தலைவர் துரைஆனந்த், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நகர் மன்ற தலைவருமான மாரியப்பன் கென்னடி, தி.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
    • ஹரிணி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    மானாமதுரை நகராட்சி வளமீட்பு பூங்காவில் நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி உத்தரவின்பேரில் ஆணையாளர் கண்ணன் அறிவுறுத்தலின்படி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மக்கும் குப்பைகள் உரமாக்குவது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சுரைக்காய், பூசணிக்காய், பலாப்பழம் ஆகியவை மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் பூங்காவில் தேக்கு மரக்கன்றுகளை நட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம், மேற்பார்வையாளர் கார்த்திக், ஹரிணி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் படைவீரர்களுக்கான கருத்தரங்கு-குறைதீர் கூட்டம் நடந்தது.
    • இரட்டைப்பிரதிகளில் வழங்கி குறைகளை நிவர்த்தி செய்து பயனடையலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம் வருகிற 30-ந்தேதி (வெள்ளிக் கிழமை) பிற்பகல் 4.30 மணிக்கு நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 5.30 மணிக்கு முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கும் கருத்தரங்கு-குறைதீர்க்கும் கூட்டத்திற்கு கலெக்டர் தலைமை தாங்குகிறார்.

    முன்னதாக நடக்கும் கருத்தரங்கில் சுயதொழில்களுக்கு வாய்ப்புகள் குறித்து, பல்வேறு துறை அலு வலர்கள் உரையாற்ற வுள்ளார்கள். எனவே, சிறுதொழில் செய்து முன்னேற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    அதனைத்தொடர்ந்து, நடைபெற உள்ள முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர், சார்ந்தோர் தற்போது ராணுவத்தில் பணிபுரியும் படைவீரரின் குடும்பத்தி னர்கள் தங்களது குறைக ளுக்கான மனுக்களை இரட்டைப்பிரதிகளில் வழங்கி குறைகளை நிவர்த்தி செய்து பயனடையலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    • கற்பக விநாயகர் ஆலையத்தில் 108 சங்காபிஷேக பூஜை நடந்தது.
    • இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாடார் பேட்டை உறவின் முறையினர் செய்திருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிங்கம்புணரி நாடார் பேட்டை நந்தவனத்தில் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து 48-வது நாளையொட்டி மண்டலபிஷேகம் நடத்த உறவின் முறையால் முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றது. 108 சங்குகள் அலங்கரிக்கப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டு நெல் மணிகளில் அடுக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    பூர்ணகுதியுடன் யாக வேள்விகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து சங்குகளில் ஊற்றப்பட்ட புனித நீரை கொண்டு சிவாச்சாரியார்கள் கோவிலை வலம் வந்து கற்பக விநாயக பெருமாளுக்கு மகா அபிஷேம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாடார் பேட்டை உறவின் முறையினர் செய்திருந்தனர்.

    • திருப்பத்தூர் ஒன்றியத்தில் அரசு பள்ளிகளில் மருத்துவ முகாம் நடந்தது.
    • முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கண் மற்றும் தோல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெற்குப்பை கோட்டையிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நெற்குப்பை ஆரம்ப சுகாதார மையத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

    இந்த முகாமில் 404 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கண் மற்றும் தோல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    ரத்த சோகை கண்டறியப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டது. இதில் டாக்டர் ேஹமலதா, கண் மருத்துவர் ராதிகா, தோல் மருத்துவர் முத்துசாமி, உதவியாளர் வெற்றிவேல், ஆய்வக நிபுணர் கவுதமன், வள்ளிக் கண்ணு, கற்பகவல்லி, வள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளியில் யோகா தின விழா நடந்தது.
    • புது முயற்சியாக 300 பேர் இணைந்து யோக முத்திரை வடிவில் அமர்ந்து யோகாசனம் செய்தனர்.

    காரைக்குடி

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளியில் யோகா தினவிழா நடந்தது. பள்ளி தாளாளர் சத்யன் தொடங்கி வைத்தார்.

    நிர்வாக இயக்குநர் சங்கீதா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை தலைமை அதிகாரி சங்கர்குமார் ஜா கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசுகையில், ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை மேம்படுத்த யோகா உதவுகிறது. உலகெங்கிலும் யோகா தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

    தொடர்ந்து விழாவில் மாணவர்கள் பல்வேறு ஆசனங்களை செய்து தனி திறமைகளை வெளிப்படுத்தினர். புது முயற்சியாக 300 பேர் இணைந்து யோக முத்திரை வடிவில் அமர்ந்து யோகாசனம் செய்தனர்.

    விழாவை பள்ளியின் கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி ஒருங்கிணைத்தார். முதல்வர் தேவராஜூலு நன்றி கூறினார்.

    ×