என் மலர்
சிவகங்கை
- சிவகங்கையில் வாக்குப்பதிவு எந்திர அறையை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை
இந்திய தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் பொது அறிவுரையின்படி, வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பறையினை 3 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து, ஆய்வு மேற்கொண்டு, காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
அதனடிப்படையில், இம்மாத காலாண்டு ஆய்வு அறிக்கையை சமர்பிப்ப தற்கு ஏதுவாக, சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள பாதுகாப்பறை யினை, மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில், சம்பந்தப்பட்ட துறை அலுவ லர்களுடன் திறக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
இதில் தேர்தல் வட்டாட்சியர் மாணிக்க வாசகம், சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு, பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் திருமாறன், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் சங்கர், சுமதி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட ஊசு போட்டிகள் நடந்தது.
- பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், மாவட்ட ஊசு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடந்தது. இதில்
100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். தவுல் பாடம், சான்சு பாடம் போன்ற போட்டிகளில் சப்-ஜூனியர், ஜூனியர், யூத் சீனியர் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
இதற்கு சென்னை காளிங்கன், திருவண்ணாமலை பெரியசாமி, சிவகங்கை லதா நடுவராக பணியாற்றினர். இந்த போட்டியில் முதலிடத்தை பெற்ற வீரர்கள் ஜூலை மாதம் வந்தவாசியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
- பூமாயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மணமேல் பட்டி கிராமத்தில் உள்ளது பூமாயி அம்மன் கோவில் வீடு. இந்தக் கோவிலின் கும்பாபிஷேகத்தை ஒட்டி விக்னேஸ்வர பூஜையுடன் யாக சாலை பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து யாகசாலையில் இருந்து மங்கல இசை வாத்தியங்களுடன் கடம் புறம்பாடாகி கோயில் வீட்டை சுற்றி வலம் வந்து பின்பு புனிதநீரை கோபுரத்துக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் பூமாயி அம்மன், ஆண்டி தெய்வம் மற்றும் பரிவார தெய்வங்களான பெரியகருப்பு, ஸ்ரீ சின்னகருப்பு கோவில் வீடு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் மணமேல்பட்டி, திருப்பத்தூர், ஜெயமங்கலம், தம்பிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை மனமேல்பட்டி கிராமத்தார்கள், பூமாயிஅம்மன் கோவில் பங்காளிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- சுமார் 45 பணியாளர்கள் கடுமையாக உழைத்து 1½ டன் எடை கொண்ட பிரமாண்ட வடக்கயிறை உருவாக்கினார்கள்.
- கோவில் தேர்களுக்கு வடக்கயிறு தயாரிக்கும் திருப்பணியில் எங்கள் குடும்பத்தினர் 4 தலைமுறைகளாக ஈடுபட்டு வருகின்றனர்.
சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் தென்னை அதிகளவு பயிரிடப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் கயிறு தயாரிப்பு தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. சாரம் கட்டுவதற்காக கொச்சை கயிறு, விவசாயத்துக்கு தேவைப்படும் நாற்று கட்டும் கயிறு உள்ளிட்ட கயிறுகள் அதிகமாக தயாரிக்கப்படுகின்றன.
மேலும் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு தேர்வடங்களையும் தயாரித்து அனுப்புகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் ராமர் கோவில் தேருக்காக 100 அடி நீளமும், 13 இன்ச் சுற்றளவும் கொண்ட பிரமாண்ட வடக்கயிறு தயாரிக்கும் பணி சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வளாக பகுதியில் தொடங்கி நடைபெற்றது.
சுமார் 45 பணியாளர்கள் கடுமையாக உழைத்து 1½ டன் எடை கொண்ட பிரமாண்ட வடக்கயிறை உருவாக்கினார்கள். சிங்கம்புணரி பகுதியில் தயாரிக்கப்படும் தேர் வடம் தேங்காய் மட்டைகளில் இருந்து நார் உரித்து பக்குவம் செய்து வடக்கயிறாக தயாரிக்கப்படுகிறது.
இதுகுறித்து கயிறு தயாரிப்பாளர் நல்லதம்பி கூறியதாவது:-
கோவில் தேர்களுக்கு வடக்கயிறு தயாரிக்கும் திருப்பணியில் எங்கள் குடும்பத்தினர் 4 தலைமுறைகளாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை ஒரு தொண்டாகவே நினைத்து செய்து வருகிறோம். மேலும் கடுமையான விரதம் இருந்து தேர் வடக்கயிறு தயார் செய்யும் பணியில் ஈடுபடுகிறோம். தற்போது சேலம் அயோத்தியாபட்டினம் ராமர் கோவிலுக்கு 1½ டன் எடையுள்ள தேர்வடத்தை 7 நாட்களில் தயாரித்து அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாகிர் உசேன் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு நலப் பணி திட்டம் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- யோகாவின் அவசியம் குறித்து மாணவர்கள் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இளையான்குடி
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு நலப் பணி திட்டம் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாணவ-மாணவிகள் மத்திய அரசின் இணைய தளம் வழியாக உறுதிமொழி சான்றிதழ் பெற்றனர்.
கல்லூரி உடற்கல்வி இயக்குனர் காளிதாசன், மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளித்தார். விழிப்புணர்வு ஓவியப்போட்டியும் நடத்தப்பட்டது. மேலும் யோகா வின் அவசியம் குறித்து மாண வர்கள் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகமது, அப்ரோஸ்,சேக் அப்துல்லா மற்றும் பாத்திமா கனி ஆகியோர் செய்திருந்தனர்.
- கண்ணதாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- கவிதை தொகுப்பை வெளியிட்டு கவிஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிறுகூடல் பட்டியில் கவியரசு கண்ணதாசன் 97-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருப்பத்தூர் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு, பாரதி இலக்கியக் கழகம் இணைந்து 101 கவிஞர்களின் கவிதை தொகுப்பு வெளியீடு நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கவிதை தொகுப்பை வெளியிட்டு கவிஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் சேது பாஸ்கரா கல்வி குழும நிறுவனர் சேது குமணன், பழனியப்பன், பொற்கை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நூல் ஆசிரியர் ஜெயச்சந்திரன் செய்திருந்தார்.
- திருப்பத்தூர் அருகே கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது.
- மீன்கள் கிடைத்தவர்கள் சாக்குப்பைகள், பாத்திரங்கள், தென்னைநாா் பெட்டிகளில் எடுத்து சென்றனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிறுகூடல்பட்டி சென்னல்குடி கண்மாயில் ஊத்தாகூடை மீன்பிடித் திருவிழா நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒரு ஊத்தா கூடைக்கு ரூ.200 கட்டணம் செலுத்தி மீன்பிடிக்க சென்றனர். கண்மாயில் மீன் பிடிக்க அனுமதி கிடைத்தவுடன் போட்டி போட்டுக்கொண்டு கண்மாயில் இறங்கி ஊத்தாகூடைகளில் மீன் பிடித்தனர். இதில் சிலருக்கு நாட்டு மீன்களான கெளுத்தி, கெண்டை, ஜிலேபி, பாப்புலெட், வயித்து கெண்டை உள்ளிட்ட பெரிய மீன்கள் கிடைத்தன.
பலருக்கு மீன்கள் கிடைக்கவில்லை. இருந்தபோதும் ஆர்வத்துடன் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்றனர். மீன்கள் கிடைத்தவர்கள் சாக்குப்பைகள், பாத்திரங்கள், தென்னைநாா் பெட்டிகளில் எடுத்து சென்றனர்.
- “நம்ம சிங்கம்புணரி” செல்பி பாயிண்ட்டை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் ஏற்பாடு செய்திருந்தார்.
- இங்கு ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள் குடும்பத்துடன் ஆர்வமாக செல்பி எடுத்து செல்கின்றனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட மிகவும் பழமை வாய்ந்த சேவுக பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி பிரமோற்சவ திருவிழா பிரசித்தி பெற்றதாகும். ஆனால் இந்த ஆண்டு வைகாசி மாதத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால் ஆனி மாதத்தில் பிரமோற்சவம் நடைபெறுகிறது. இத்திருவிழாவின் முதல்நாளான இன்று கொடியேற்றம் காப்புக்கட்டுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வந்து ஒரே நேரத்தில் தேங்காய் உடைப்பார்கள்.
இந்த திருவிழாவையொட்டி மாவட்டத்திலேயே முதன்முறையாக சிங்கம்புணரி மணியம்மாள் அறக்கட்டளை சார்பில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் ஏற்பாட்டில் "இது நம்ம சிங்கம்புணரி" என்ற பெயரில் அலங்கார விளக்குகளுடன் பிரம்மாண்டமான செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள் குடும்பத்துடன் ஆர்வமாக செல்பி எடுத்து செல்கின்றனர்.
- அழகியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை காட்டப்பட்டது.
மானாமதுரை
திருப்பாச்சேத்தியில் உள்ள அழகியநாயகி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 4-ம் காலபூஜை நிறைவடைந்த நிலையில் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து அழகிய நாயகி அம்மன் மூலவர் விமானக் கலசம், ராஜகோபுரம் விமானக் கலசங்கள், பரிவார தெய்வங்க ளுக்கு புனிதநீர் ஊற்றி குட முழுக்கு நடந்தது.
கோபுரக் கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அழகிய நாயகி அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அபிஷே கங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை காட்டப் பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை விழா குழுத்தலைவர் ராஜாங்கம் பிள்ளை, செயலர் சிதம்பரம் பிள்ளை உள்ளிட்ட நிர்வாகிகள் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.
- கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தனித்தன்மையுடன் கூடிய வீரமான, தைரியமிக்க, எதையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் மிக்க ஒரு பெண்மணிக்கு, அவரது துறை சார்ந்த பணிக்காக அல்லது அவரது நடவ டிக்கைக்காக 'கல்பனா சாவ்லா விருது" ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது. மேற்காணும் விரு திற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் பதிவு செய்யாதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சம்பந்தப்பட்ட இணைப்பு களுடன் மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு நேரில் வந்து கருத்துக்களை 27-ந் தேதிக்குள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
- வாரச்சந்தையில் கெட்டுப்போன 100 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்டதேவி சாலையில் ஞாயிற்றுக் கிழமைகளில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த வாரச்சந்தையை தேவகோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள 100-க் கும் மேற்பட்ட கிராமங் களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இங்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, மதுரை, தேனி மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் இச்சந்தையில் வியாபாரம் செய்து வருகிறார்கள். சமீப காலமாக தரம் குறைந்த மீன்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பிரபாவதி ஆேலாசனையின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேல்முருகன் தலைமையில் மாணிக்கம், நகராட்சி பணியாளர்கள் வாரச்சந்தையில் திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது 100 கிலோ கெட்டுப்போன மீன்கள், 50 கிலோ தரம் குறைந்த கருவாடு, 50 கிலோ அழுகிய மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மீன், கருவாடு, மாம்பழங் களை நகராட்சி பணி யாளர்கள் அழித்தனர்.
மேலும் வியாபாரிகளிடம் உள்ள தராசு, எடைக்கற்கள் ஆகியவற்றையும் அதிகாரி கள் அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நோய்கள் கண்டறியப்படுவோருக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
- காப்பீடு திட்டத்தின் மூலம் உரிய சிகிச்சை அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பத்தூர் வட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் கடந்த வாரம் முதல் அரசின் திட்டங்களின் ஒன்றான "கலைஞரின் வரும்முன் காப்போம்" திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டு, வட்டாரத்திற்கு 3 மருத்துவ முகாம்கள் வீதம் நடப்பாண்டிற்கு 36 மருத்துவ முகாம்களும் நடத்திட திட்டமிடப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
அதனைத்தொடர்ந்து கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 100 மருத்துவ முகாம்கள் நடத்திட அரசால் அறிவுறுத்தப்பட்டு, 3 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, நமது மாவட்டத்தில் காரைக்குடி, செஞ்சை பகுதியில் உள்ள ஆலங்குடியார் உயர்நிலைப்பள்ளியிலும், திருப்பத்தூர் வட்டாரத்தில் உள்ள லிம்ரா மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், திருப்புவனம் வட்டாரத்தில் திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற உள்ளது.
இந்த முகாம்கள் அரசு மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனையை சேர்ந்த சிறப்பு மருத்துவர்களை கொண்டு நடத்தப்பட்டு, தேவைப்படுவோருக்கு தனியார் மருத்துவமனைக்கு நிகராக உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யவும், முதல் -அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் உரிய சிகிச்சை அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் இது போன்று நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இம்முகாமில் 27 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் சஞ்சீவி பெட்டகங்களையும், 4 பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளையும் அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குநர் விஜய்சந்திரன், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலா ராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.






