என் மலர்tooltip icon

    சிவகங்கை

    திருப்பத்தூரில் மது குடித்து வந்ததை மனைவி கண்டித்ததால் ஸ்டேசனரி கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 46). இவர் அதே பகுதியில் ஸ்டேசனரி கடை நடத்தி வருகிறார்.

    இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், ஆர்த்தி (18), லட்சுமி (17) என்ற மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    சுப்பிரமணியன் அடிக்கடி மது அருந்தியதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. நேற்றும் சுப்பிரமணியன் மது குடித்து வந்ததால் கலைச்செல்வி கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது

    இதையடுத்து கலைச்செல்வி தனது மகள்கள், மகனுடன் வீட்டின் மேல் மாடியில் உள்ள அறைக்கு தூங்கச்சென்றார்.

    அதன் பிறகு மன வேதனையில் இருந்த சுப்பிரமணியன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நள்ளிரவு நேரத்தில் அவரது மகள் வந்து பார்த்த போது தந்தை தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் திருப்பத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என மானாமதுரையில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டி அளித்தார்.
    மானாமதுரை:

    மானாமதுரையில் தேவேந்திர மக்கள் அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் எச்.ராஜா பேசும்போது, கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி கர்நாடகாவில் 135 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்று பா.ஜனதா ஆட்சி அமைக்கும். 

    பின்னர் நடைபெற்ற முகாமில் 200–க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். 

    முகாமிற்கான ஏற்பாடுகளை தேவேந்திர மக்கள் அறக்கட்டளை நிறுவனர் சிவசங்கரி பரமசிவம், சட்ட ஆலோசகர் சிவகாமி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கவுதம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
    உரிய முறையில் வருத்தம் தெரிவிக்காவிட்டால் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது வழக்கு தொடருவோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #ministersellurraju

    காரைக்குடி:

    ‘ஆச்சி’ குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் கூறியதாவது:-

    தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, ரஜினிகாந்த் ஆட்சியை பிடிக்க முடியாது. காரைக்குடி ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாம் என்று கூறியிருக்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். அமைச்சரின் இந்த கருத்து நகரத்தாரின் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளது.


    பெண்களை இழிவாக பேசிய அமைச்சர் மீது முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். மேலும் காரைக்குடி ஆச்சியை பற்றி நான் சொல்லவில்லை. மனோரமா ஆச்சி பற்றி தான் சொன்னேன் என்று தற்போது கூறுகிறார். மனோரமா பற்றி பேசவும் அவருக்கு எவ்வித உரிமையும் இல்லை.

    அவர் உரிய முறையில் வருத்தம் தெரிவித்திருந்தால் நகரத்தார் சமூகத்தினர் அமைதியாக இருந்திருப்பார்கள். இப்போது அவர் வருத்தம் தெரிவித்த விதம் ஏற்கக்கூடியதாக இல்லை.

    நகரத்தார் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்னிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது வழக்கு தொடர வேண்டும் என்று கூறு கிறார்கள். அமைச்சர் உரிய முறையில் வருத்தம் தெரிவிக்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடர ஆலோசித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #ministersellurraju

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஒருமாத காலம் நடைபெற உள்ள உணவு பாதுகாப்பு கண்காட்சியை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் உணவு பாதுகாப்பு குறித்த கண்காட்சி மாவட்ட கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் கண்காட்சியை தொடங்கி வைத்து விளம்பர பலகையை வணிகர்களுக்கு வழங்கி னார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஸ் சுந்தரபோஸ், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுரேஷ், ரமேஷ், செல்லத்துரை, தியாகராஜன், ராஜேஷ், முத்தமிழ், சாலைப்பாண்டியன், ஜோதிபாஸ், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சசிகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் அமைச்சர் பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:- கோடை காலங்களில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு மாத காலத்திற்கு மாவட்ட கலெக்டர் வளாகத்தில் இந்த விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் பிள்ளையார்பட்டியில் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் 4 வாரங்களுக்கு இந்த சிறப்பு கண்காட்சி அமைக்கப்பட்டுஉள்ளது. பொதுமக்கள் கோடை காலத்தில் அதிகஅளவு நீர்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் தேவையற்ற உணவுகளை வெப்பமான இந்த சூழ்நிலையில் உட்கொள்ளக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    குடியிருப்பு பகுதிக்குள் மின்மயானம் அமைவதை எதிர்த்து கட்டுமான பணிகளுக்கு போடப்பட்ட கொட்டகையை பொது மக்கள் பிரித்து எறிந்தனர்.

    தேவகோட்டை:

    தேவகோட்டை ராம்நகர் 5-வது வீதியில் மின்மயானம் அமைக்க நகராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கியது. அவற்றில் முதற்கட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனை அறிந்த அந்தப் பகுதி மக்கள் 150-க்கும் மேற்பட்டோர் மின்மயானம் அமைவதை எதிர்த்து தி.மு.க நகர செயலாளர் பால முருகன், வடக்கு ஒன்றிய செயலாளர் பூபாலசிங்கம் தலைமையில் சார் ஆட்சியாளரிடம் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில், இந்தப் பகுதியில் 600 வீடுகளுக்கு மேல் உள்ளது. மின்மயானம் அமைத்தால் சுற்று சூழல் மாசு அடைந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என கூறியிருந்தனர்.

    மனுவை பெற்ற சார் ஆட்சியாளரின் பதிலில் திருப்தி பெறாத பொது மக்கள் கட்டுமான பணிகளுக்கு போடப்பட்ட கொட்டகையை பிரித்து எறிந்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காணப்பட்டது.

    தற்போது ஒத்தக்கடை ஆற்றுபாலம் அருகில் செயல்பட்டு வரும் மயானத்தில் மின்மயானம் அமைத்தால் அனைத்து மக்களும் பயன் பெறுவ தோடு எந்த வித இடையூறும் இருக்காது. போதிய இட வசதி இருந்தும் மின் மயானம் அந்தப்பகுதியில் அமையா திருக்க காரணம் என்ன என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

    காரைக்குடி அருகே கோவில் விழாவில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் சின்னையா (வயது 60). கூலித்தொழிலாளி. இவரது மகன் சுப்பையா (35).

    நேற்று அந்தப்பகுதியில் பாட்டையா முனியசாமி கோவில் திருவிழா நடந்தது. திருவிழா ஊர்வலத்தின் போது இளைஞர்கள் சிலர் மது அருந்தி ஆட்டம் போட்டுச் சென்றனர். அவர்களை சுப்பையா கண்டித்தார்.

    இதனைத் தொடர்ந்து அங்கு நின்ற மற்றவர்களும், இளைஞர்களை சத்தம் போட்டனர். இதனால் அந்த இளைஞர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    அதன் பிறகு இரவு 9 மணியளவில் 5 இளைஞர்கள் சுப்பையா வீட்டுக்கு வந்தனர். அவர்கள் கதவை தட்டியதும், சின்னையா கதவை திறந்தார்.

    அவரிடம், ‘உனது மகனை வெளியே அனுப்பு, அவனை அடிக்காமல் விட மாட்டோம்’ என வாக்குவாதம் செய்தனர். ‘மகன் இங்கு இல்லை’ என சின்னையா கூறியபோதும் ‘வீட்டு முன்பு மோட்டார் சைக்கிள் நிற்கிறது. எனவே அவன் உள்ளே தான் இருப்பான், அவனை கொலை செய்வோம்’ என இளைஞர்கள் கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த சின்னையா அவர்களிடம் வாக்குவாதம் செய்தார்.

    அப்போது வீட்டு முன்பு கிடந்த இரும்பு பலகையை எடுத்து சின்னையாவை, இளைஞர்கள் தாக்கினர். இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் சின்னையாவை மீட்டு காரைக்குடி மற்றும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை சின்னையா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    வழக்கு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த நாச்சியப்பன் மகன்கள் ராஜா (19), ராஜேஷ் (18), ரவிச்சந்திரன் மகன் பாண்டியராஜன் (18), முத்து மகன் பாலசுப்பிரமணியன், மாரியப்பன் மகன் பழனிக்குமார் ஆகிய 5 பேரை போலீசார் தேடி வந்தனர்.

    இதில் ராஜா, ராஜேஷ், பாண்டியராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    அரசின் திட்டங்களை பெற பெண்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலா தெரிவித்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தின் சார்பில் கிராம சுயாட்சி இயக்க விழா, கலெக்டர் லதா தலைமையிலும், மத்திய அரசின் கிராம சுயாட்சி இயக்க பொறுப்பு அலுவலர்கள் பத்மா கணேசன், மனோஜ் பதக் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. விழாவையொட்டி 13 ஊராட்சிகளில் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட 156 குழுக்களுக்கு ரூ.32½ லட்சம் மதிப்பீட்டில் சுழல்நிதி கடனும், 7 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்தில் சூரியச்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளையும், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் மானிய திட்டத்தில் தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கான ஆணையினையும் வழங்கியதுடன், 13 ஊராட்சிகளில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 537 பேருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு ஆணையினையும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதிநிர்மலா வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மத்திய அரசின் திட்டங்கள் கிராமப்பகுதிகளுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்குடன் கிராம சுயாட்சி இயக்கம் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் 13 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அங்கு சிறப்பு முகாம் அமைத்து மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 7 வகையான திட்டங்கள் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் கிடைத்திடும் வகையில் செயல்படுத்தப்பட்டது.

    இந்த சிறப்பு முகாமில் மத்திய அரசின் திட்டங்கள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிராமப்பகுதியிலுள்ள பெண்கள் அதிக அளவு ஆர்வம் காட்டி அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என்பதே இதுபோன்ற திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து மகளிர் சுயஉதவி குழுவினரைச் சேர்ந்த உறுப்பினர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், சிவகங்கை கோட்டாட்சியர் ராமபிரதீபன், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) விஜயநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 11-ந்தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் வாழ் வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் “வேலை வாய்ப்பு வெள்ளி” என்ற தலைப்பின் கீழ் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்களும் வேலை தேடுபவர்களும் கலந்து கொண்டு - தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதன் அடிப்படையில் வருகிற 11-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்று சுமார் 100க்கும் மேற்பட்ட பணி நாடுனர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நீட் தேர்வுக்கு தன்னை அழைத்துச் சென்று வீடு திரும்பும் போது உயிரிழந்த தந்தையின் கனவை நனவாக்குவதே எனது லட்சியம் என அவரது மகள் தேவி ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    மதுரையில் உள்ள தனியார் கல்லூரிக்கு நீட் தேர்வு எழுத அழைத்து சென்ற மகளை மீண்டும் கூட்டி செல்லும் போது கண்ணன் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

    தந்தையை இழந்து தவிக்கும் தேவிஐஸ்வர்யா கண்ணீர் மல்க கூறியதாவது:-

    என்னை மருத்துவராக்க தந்தை ஆசைப்பட்டார். அவரது கனவை நிச்சயம் நனவாக்குவேன். எனது உயர்கல்விக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.

    குழந்தை பருவம் முதலே நீ டாக்டராக வேண்டும் என தந்தை கூறி வந்ததால் நானும் அதனை மனதில் கொண்டு படித்தேன். ஆனால் எதிர் பாராதவிதமாக எனது தந்தை இறந்து விட்டார். அவரது கனவை நனவாக்குவதே எனது லட்சியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஐரோப்பாவில் நடந்த உலக அளவிலான செஸ் போட்டியில் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி 1-ம் வகுப்பு மாணவி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
    காரைக்குடி:

    ஐரோப்பா கண்டத்தில் உள்ள அல்பேனியா நாட்டின் டூரெஸ் நகரில் பள்ளி குழந்தைகளுக்கான உலக அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 40 நாடுகளை சேர்ந்த 387 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இந்தியாவின் சார்பில் 21 பேர் பங்கேற்றனர். இதில் 7 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் மாணவி லக்‌ஷனா(வயது 6) உள்பட 5 பேர் கலந்துகொண்டனர். இப்போட்டியில் லக்‌ஷனா அபாரமாக விளையாடி 9-8 என்ற புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் தங்கப்பதக்கத்தையும், உலக சாம்பியனுக்கான கோப்பையையும் அவர் பெற்றார்.

    சாதனை படைத்த மாணவி லக்‌ஷனாவையும், சாதனைக்கு உறுதுணையாக இருந்த மாணவியின் பெற்றோர் சுப்பிரமணியன்-கற்பகம் ஆகியோரையும், பயிற்சியாளர் அதுலனையும் பள்ளி சேர்மன் குமரேசன், முதல்வர் ரமேஷ் மற்றும் ஆசிரிய-ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் பாராட்டினர்.

    இதுகுறித்து பள்ளி சேர்மன் குமரேசன் கூறுகையில், மாணவி லக்‌ஷனா சிறுவயதில் உலக சாம்பியன் பட்டம் வென்றதை கவுரவிக்கும் வகையில் லக்‌ஷனா உருவப்படம் பொறித்த அடையாள அட்டைகளையே செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவ-மாணவிகள் அணிவார்கள். லக்‌ஷனாவின் ஆர்வம், வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கம், நேர்மறையான எண்ணங்கள் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பு ஆகியவை அவரது சாதனைக்கு துணை நிற்கின்றன. லக்‌ஷனாவின் மூத்த சகோதரி இந்திரா பிரியதர்ஷினி ஏற்கனவே தேசிய அளவில் செஸ் போட்டியில் சாதனை புரிந்துள்ளார் என்றார். 
    சிவகங்கை மாவட்டத்தில் புதிய தொழில் துவங்க இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க கடனுதவி வழங்கப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளனர்.
    சிவகங்கை:

    தமிழக முதல்வர் ஒவ்வொரு இளைஞரையும் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு புதிய தொழில் துவங்க, முதல் தலைமுறை இளைஞர்களுக்கான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தினை அறிவித்து சிவகங்கை மாவட்டத் தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் தொழில் தொடங்கிட ரூ.5 லட்சம் முதல் ஒரு கோடி வரை திட்ட மதிப்பில் வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று தமிழக அரசின் மானியமாக 25% அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் பெறலாம். மேலும் வட்டி மானியமாக வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் 3% வட்டி மானியமாகவும் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தின் கீழ் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வரையறுக்கப்பட்ட வங்கிகள், காரைக்குடியில் செயல்படும் தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் மற்றும் பாண்டியன் கிராம வங்கிகள் மூலமாகவும் கடனுதவி வழங்கப்படுகிறது.

    முதல்வரின் சிறப்புத் திட்டமான இந்த திட்டத்தில் வங்கிகளில் கடனுதவி பெறவும், மின் இணைப்பு பெறவும் மற்றும் பல்வேறு உரிமங்கள் விரைவில் கிடைத்திடவும் வழிவகை செய்யப்படும்.

    மகளிர்களுக்கு 50% ஒதுக்கீடும், ஆதி திராவிடர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அரசு மூலம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதலில் வரும் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கி கடனுதவி வழங்கப்படும்.

    இந்த திட்டம் குறித்த சிறப்பு வழிகாட்டுதல் கூட்டம் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    திட்டத்தின் மூலம் கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழில்நுட்பம் பயிற்சி இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 35 வயதுக்குள்ளும் பெண்கள், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    ஏற்கனவே மத்திய, மாநில அரசின் கீழ் மானியத்துடன் கடன் பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கடனுதவி பெற இயலாது. விவசாயம், வாகனம், மாசினை ஏற்படுத்தும் தொழில்கள் போன்ற ஒருசில தொழில்கள் தவிர்த்து, உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விபரத்திற்கு சிவகங்கை மாவட்டத் தொழில் மையத்தை நேரிலோ அல்லது 04575-240257 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையுமாறு சிவகங்கை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன் தெரிவித்துள்ளார். #tamilnews
    காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தருவோம் என்று முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் கூறினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம், சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் மற்றும் போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கண்ணப்பன் பேசியதாவது:-

    1972-ம் ஆண்டு அ.தி.மு.க. உருவானபோது இருந்த அதே உற்சாகமும், எழுச்சியும் இன்றும் தொண்டர்கள் மத்தியில் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்காக என்றுமே பாடுபடும். 1979-ம் ஆண்டு கருணாநிதி காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் விட்டதால் தான் இன்று காவிரி தண்ணீரை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அ.தி.மு.க. காவிரி தண்ணீருக்கு உயிர் கொடுத்த இயக்கமாகும்.

    காவிரி நீருக்காக ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டு சென்று உரிமையை பெற்று, அதை அரசிதழிலும் வெளியிட்டார். அ.தி.மு.க. ஆட்சியை கலைத்துவிட்டு எப்படியாவது பதவிக்கு வந்துவிடலாம் என்று தி.மு.க. எண்ணுகிறது. ஜெயலலிதா ஏற்படுத்திதந்த ஆட்சியை 5 ஆண்டுகள் கண்டிப்பாக நடத்துவோம்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்துக்கு சேர வேண்டிய காவிரிநீரை பெற்றுத்தருவோம். மத்திய அரசுடன், மாநில அரசு இணக்கமாக செல்வதாக சிலர் கூறுகின்றனர். மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கும்போது மத்திய அரசுடன் இணக்கமாக செல்வது தவறு கிடையாது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் காளிதாஸ், பேச்சாளர் வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகானந்தம், கற்பகம், குணசேகரன், சந்திரன், மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜா, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கோபி, மருத்துவ அணி செயலாளர் கோட்டையன், நகர செயலாளர் ஆனந்தன், தேவகோட்டை ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×