என் மலர்tooltip icon

    சேலம்

    • தனியார் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றன.
    • இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட இளம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமை–களை வெளிப்படுத்தினர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் சேலம் சித்தனூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றன.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட இளம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமை–களை வெளிப்படுத்தினர்.

    இதில் மாணவிகள் பிரிவில் 9 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மேகவர்ஷினி, மித்ராஸ்ரீ ஆகியோர் முதல் 2 இடங்க–ளையும், மாணவர்கள் பிரிவில் சிவப்பிரசன்னா, சுகந்த் ஆகியோர் முதல் 2 இடங்களையும் பிடித்தனர். அதேபோல் 11 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மாணவிகளில் சண்மிதா, பிரதிக்ஷா ஆகியோரும் மாணவர்களில் கவின் சஞ்சய் ஆகியோரும் முதல் இரு இடங்களை பிடித்தனர்.

    17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மாணவிகளில் பிரியதர்ஷினி, கிருத்திகா ஆகியோரும் மாணவர்கள் பிரிவில் பிரகதீஷ் ஸ்ரீராம், விஷ்வா ஆகியோரும் முதல் 2 இடங்களில் வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு சேலம் மாவட்ட சதுரங்கக் கழகத்தின் செயலாளர் அருண் நல்லதம்பி மற்றும் நிர்வாகிகள் தனபால், பால நரசிம்மன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்த–னர். இந்த போட்டியில் நடுவர்களாக தேசிய அளவிலான மூத்த நடுவர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.

    • சேலம் பள்ளப்பட்டி 3 ரோடு பகுதியில் தீ தடுப்பு சாதனங்கள் விற்பனை கடையில் திருட்டு.
    • சம்பவத்தன்று இவரது கடை லாக்கரில் இருந்த ரூ.45 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டி 3 ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலு (வயது 27). இவர் அதே பகுதியில் தீ தடுப்பு சாதனங்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது கடை லாக்கரில் இருந்த ரூ.45 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து பாலு, பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில், அதே கடையில் வேலை பார்க்கும் கருப்பூர் வெள்ளாளப்பட்டி அருகே உள்ள வேலவன் நகர் பகுதியைச் சேர்ந்த ஹரி விக்னேஷ் (வயது 21) என்பவர் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஹரி விக்னேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கடந்த 21 -ம் தேதி வீட்டில் தனியாக இருந்த லட்சுமியிடம் 35 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் அரசு மூலம் மாதம் ரூபாய் 5000 கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
    • அப்போது அந்த இளம்பெண் மூதாட்டிக்கு உதவுவது போல் நடித்து பெட்டியில் இருந்த 5½ பவுன் நகைகளை திருடிக் கொண்டு ஓடிவிட்டார்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை பெரிய கிணறு பகுதி சேர்ந்தவர் லட்சுமி. (வயது 90). இவர் தனது மகள் கலா (56) என்பவருடன் வசித்து வருகிறார்.

    கடந்த 21 -ம் தேதி வீட்டில் தனியாக இருந்த லட்சுமியிடம் 35 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வந்து வங்கி கணக்கு புத்தகம் மற்றும் வீட்டில் கியாஸ் இணைப்பு புத்தகத்தை கொடுத்தால் அரசு மூலம் மாதம் ரூபாய் 5000 கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய லட்சுமி, வீட்டில் இருந்த ஒரு பெட்டியை எடுத்து வந்து அவற்றில் மேற்கண்ட புத்தகங்களை தேடி உள்ளார். அப்போது அந்த இளம்பெண் மூதாட்டிக்கு உதவுவது போல் நடித்து பெட்டியில் இருந்த 5½ பவுன் நகைகளை திருடிக் கொண்டு ஓடிவிட்டார்.

    இது குறித்த புகாரின்பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சன்னியாசிகுண்டு ரைஸ்மில் தெருவில் உள்ள கணவர் வீட்டுக்கு புறப்பட்டார். உடன் அவரது தாய் வசந்தாவும் வந்தார்.
    • வரும் வழியில் 4 ரோடு அண்ணா பூங்கா அருகே திடீரென தாயின் கையை உதறி தள்ளிவிட்டு, லட்சுமி அங்கிருந்து ஓடினார்.

    சேலம்:

    சேலம் சன்னியாசிகுண்டு ரைஸ்மில் தெருவில் வசித்து வருபவர் ராஜா. இவருடைய மனைவி லட்சுமி (வயது 40). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    லட்சுமி, சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. கடந்த 16-ந்தேதி மாலை 4 மணி அளவில் லட்சுமி, அரிசிபாளையம் நாராயணசாமி தெருவில் உள்ள தனது தாயார் வசந்தா(65) என்பவரது வீட்டில் இருந்து சன்னியாசிகுண்டு ரைஸ்மில் தெருவில் உள்ள கணவர் வீட்டுக்கு புறப்பட்டார். உடன் அவரது தாய் வசந்தாவும் வந்தார். அப்போது வசந்தா, அவரது கையை பிடித்துக்கொண்டு பத்திரமாக அழைத்து வந்தார். வரும் வழியில் 4 ரோடு அண்ணா பூங்கா அருகே திடீரென தாயின் கையை உதறி தள்ளிவிட்டு, லட்சுமி அங்கிருந்து ஓடினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தா வயது முதிர்வு காரணமாக தன்னால் வேகமாக ஓடி மகளை பிடிக்க முடியவில்லை. அக்கம், பக்கத்தினரை உதவிக்கு அழைப்பதற்குள் லட்சுமி மாயமானார். இருப்பினும் வசந்தா, தனது மகளை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது பற்றி அறிந்ததும் ராஜா மற்றும் அவரது மகள்களும் சம்பவ இடத்திற்கு வந்து தேடினர். ஆனால் அவரை பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    இது குறித்து ராஜா, செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், செவ்வாய்ப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாயமான அன்று லட்சுமி, பச்சை கலர் பூ போட்ட சேலை, பச்சை கலர் ஜாக்கெட் அணிந்திருந்தார். இடது பக்க கழுத்தில் ஒரு கருப்பு மச்சம், இடது கண் புருவத்தில் ஒரு கருப்பு மச்சம் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே அவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால், பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி செவ்வாய்ப்பேட்டை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • பெரிய கருமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் எருதாட்டம் நடைபெறும்.
    • அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழாவையொட்டி நேற்று எருதாட்டம் நடைபெற்றது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கருக்கல்வாடியில் பிரசித்தி பெற்ற பெரிய கருமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் எருதாட்டம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழாவையொட்டி நேற்று எருதாட்டம் நடைபெற்றது.

    கோவில் வளாகத்தில் மாலை 3 மணிக்கு ேகாவில் மாடு அழைத்து வரப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கருக்கல்வாடி, தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, முத்து நாயக்கன்பட்டி, இளம்பிள்ளை, அமரகுந்தி, முனியம்பட்டி, கொல்லப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக களம் இறங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்த காளைகள் 3 முறை கோவிலை வலம் வர செய்து களத்தில் இறக்கி விடப்பட்டன. அந்த மாடுகள் முன்பு துணியால் செய்த பொம்மைகளை காண்பித்து இளைஞர்கள் விளையாட்டு காட்டினர்.

    இந்த எருதாட்டத்தை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்திருந்தனர். அவர்கள் எருதாட்டத்தை கண்டு ரசித்தனர்.

    சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் அதிக அளவில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் 12,523 எம்.டி.எஸ். காலிப்பணியிடங் களுக்கான தேர்வு அறிவிப்பாணை வெளியி–டப்பட்டுள்ளது. தேர்வுக்கு www.ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் 17.02.2023 ஆகும்.

    இத்தேர்விற்கான கல்வித்தகுதி, 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். மேலும், 1.1.2023 அன்று எஸ்.சி. எஸ்.டி பிரிவினர் 30 வயதுக்குள்ளும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 28 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

    தேர்வுக் கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்–பட்–டுள்ளது. இதில் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதி–லிருந்து விலக்கு அளிக்கப்–பட்டுள்ளது. மேலும், இத்தேர்வினை தமிழ் மொழியிலும் எழுத மத்தியப் பணியாளர் தேர்வாணையம் அனுமதித்துள்ளது.

    சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் அதிக அளவில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற 6-ந்தேதி காலை 10 மணிக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. சேலம் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் அதிக அளவில் இத்தேர்விற்கு விண்ணப்பிக்குமாறும், இலவசப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெ–றுமாறும் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • கடந்த 10 வருடத்திற்கு முன்பு விவாகரத்து பெற்ற மீனாட்சி, பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். மேலும் மீனாட்சிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    • இந்த நிலையில் மீனாட்சி நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, மண்ணெண்ணையை எடுத்து மொட்டை மாடிக்குச் சென்றார். பின்னர் உடலில் அதை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவருடைய மனைவி மீனாட்சி (வயது 40). இவர்களுக்கு திருமணமாகி 20 வருடம் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர்.

    கடந்த 10 வருடத்திற்கு முன்பு விவாகரத்து பெற்ற மீனாட்சி, பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். மேலும் மீனாட்சிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மீனாட்சி நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, மண்ணெண்ணையை எடுத்து மொட்டை மாடிக்குச் சென்றார். பின்னர் உடலில் அதை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் வலி தாங்க முடியாமல் அலறித் துடித்தார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் வருவதற்குள், உடல் முழுவதும் தீ பரவி, மீனாட்சி சுருண்டு கீழே விழுந்தார். உடல் முழுவதும் தீக்காயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனாட்சி பரிதமாக இறந்தார். இது குறித்து கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • சேலம் எருமாபாளையம் சுந்தர்மாளிகை தெரு மாரியம்மன் கோவில் எதிரில் வசித்து வந்த வேன் டிரைவர் மாயமானார்.
    • கடந்த 20-ந்தேதி மதியம் கடைக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி சென்றார். அன்று மாலை 5.30 மணி அளவில் அவர் தனது மனைவி சங்கீதா செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் கோவை யில் வாடகைக்கு வண்டி ஓட்ட சென்றுள்ளேன்.

    சேலம்:

    சேலம் எருமாபாளையம் சுந்தர்மாளிகை தெரு மாரியம்மன் கோவில் எதிரில் வசித்து வருபவர் சிவகுமார் (வயது 45). இவருடைய மனைவி சங்கீதா (40). இந்த தம்பதிக்கு பிரகாஷ் (23) என்ற மகனும், பிரதிஷா(21) என்ற மகளும் உள்ளனர்.

    வேன் டிரைவர் சிவகுமார் சன்னியாசி குண்டு அருகில் சொந்தமாக பந்தல் அமைக்கும் கடை வைத்தும், வேன் வைத்தும் டிரைவராக தொழில் செய்து வந்தார். இந்த வேன் வாங்குவதற்கும் பிள்ளை–களை படிக்க வைப்பதற்கும் சில வருடங்களுக்கு முன்பு அவர், வட்டிக்கு பணம் 7 லட்சம் வரை கடன் வாங்கினார். பணம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர்.

    இந்த நிலையில் அந்த பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் சிவகுமார் கவலை அடைந்து புலம்பிக் கொண்டிருந்தார். கடந்த 20-ந்தேதி மதியம் கடைக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி சென்றார். அன்று மாலை 5.30 மணி அளவில் அவர் தனது மனைவி சங்கீதா செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் கோவை யில் வாடகைக்கு வண்டி ஓட்ட சென்றுள்ளேன்.

    நாளை வீட்டிற்கு வந்து விடுகிறேன் என கூறினார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கீதா மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் சிவகுமாரை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார்? என தெரியவில்லை.

    'இது குறித்து சங்கீதா கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான சிவகுமார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே சிவகுமார் கடனுக்கு பயந்து தலைம–றைவாக உள்ளாரா? அல்லது கந்து வட்டி கும்பல், சிவகுமாரை கடத்தினார்களா? என பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் கோவையில் முகாமிட்டு சிவகுமாரை தேடி வருகின்றனர்.

    • குழந்தைவேல் புதிதாக வீடு கட்ட உள்ளார்.
    • சின்னசாமி தரப்பினர், குழந்தைவேலுவுடன் தகராறில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் மல்லுார் அருகே பாரப்பட்டி தொட்டியங்காட்டை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 55). இவர் அரசு பஸ் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (62).

    குழந்தைவேல் மற்றும் சின்னசாமியின் தந்தைகள் அண்ணன் தம்பிகள். இவர்களுக்கு தலா 1.50 ஏக்கர் நிலம் உள்ளது. இதனால், குழந்தைவேல், சின்னசாமி இடையே வழித்தட பிரச்சனையால் முன் விரோதம் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் குழந்தைவேல் புதிதாக வீடு கட்ட உள்ளார். இதற்காக ஏற்கனவே இருந்த மின் வழித்தடத்தை மாற்றி அமைக்க, நேற்று மாலை மின் கம்பத்துக்கு குழி தோண்டினார். அப்போது அங்கு வந்த சின்னசாமி தரப்பினர், குழந்தைவேலுவுடன் தகராறில் ஈடுபட்டனர்.

    தகராறு முற்றியதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது, ஆத்திரம் அடைந்த சின்னசாமியின் தம்பி ராஜா, மண்வெட்டியால் குழந்தைவேலுவின் தலையில் வெட்டினர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் குழந்தைவேல் சரிந்து விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தைவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக மல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, பாரப்பட்டி தொட்டியங்காடு பகுதியை சேர்ந்த குழந்தைவேல் உறவினர்களான ராஜா (48), சின்னசாமி (62), கணேசன் (36), தினேஷ் (28), சுரேஷ் (31) ஆகியோரை 5 பேரை கைது செய்தனர்.

    வழித்தடப் பிரச்சினையில் அரசு பஸ் டிரைவர் மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • நேற்று 103.72 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 103.71 அடியாக உள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 1,072 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,154 கன அடியாக அதிகரித்துள்ளது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று 103.72 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.71 அடியாக உள்ளது.

    • மாணிக்கம், வாலிபரை சாதி பெயரை சொல்லி ஆபாசமாக பேசியுள்ளார்
    • வாலிபர், இரும்பாலை போலீஸ் நிலையத்தில் மாணிக்கம் உள்பட 10 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள திருமலைகிரியில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் நடப்பு வாரம் பண்டிகை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த 26-ந் தேதி இரவு 8.30 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த பட்டியலின வாலிபர் ஒருவர் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் நீ ஏன் கோவிலுக்குள் சென்றாய்? என வாலிபரை கண்டித்துள்ளனர்.

    மறுநாள் திருமலைகிரி பஞ்சாயத்து தலைவரும், தி.மு.க. ஒன்றிய செயலாளருமான மாணிக்கம் (வயது 55), அந்த வாலிபரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். அதன்படி அவரை 10 பேர் கோவிலுக்கு அழைத்து வந்துள்ளனர்.

    அப்போது மாணிக்கம், வாலிபரை சாதி பெயரை சொல்லி ஆபாசமாக பேசியுள்ளார். இனிமேல் கோவிலுக்குள் வரக்கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளார்.

    இந்த நிலையில் வாலிபரை, மாணிக்கம் மிரட்டும் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் நேற்று வேகமாக பரவியது. இதையடுத்து பஞ்சாயத்து தலைவர் மாணிக்கத்தை, ஒன்றிய செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்தார்.

    இந்நிலையில், நேற்று அந்த வாலிபர், இரும்பாலை போலீஸ் நிலையத்தில் மாணிக்கம் உள்பட 10 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார், உதவி கமிஷனர் ஆனந்தி ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் மாணிக்கம் மீது வன்கொடுமை, தகாத வார்த்தையால் பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது என 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள், மாணிக்கத்தை கைது செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்தனர். இதனால் போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

    மாணிக்கத்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை ஜெயலில் அடைக்க நீதிபதி உத்திரவிட்டார். இதையடுத்து இன்று காலை, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்து, அவரை சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • புருசெல்லோசிஸ் எனும் கன்று வீச்சு நோய் பாக்டீரியா கிருமிகளால் கால்நடைகளுக்கு ஏற்படும் ஒரு நோயாகும்.
    • இந்நோய் மாடு, ஆடு போன்ற பிராணிகள், நாய், குதிரைகளிலும் ஏற்படும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புருசெல்லோசிஸ் எனும் கன்று வீச்சு நோய் பாக்டீரியா கிருமிகளால் கால்நடைகளுக்கு ஏற்படும் ஒரு நோயாகும். இந்நோய் மாடு, ஆடு போன்ற பிராணிகள், நாய், குதிரைகளிலும் ஏற்படும். இறந்த நிலையில் கன்று அல்லது குட்டி பிறத்தல், நலிந்த கன்றுகள், நச்சுக்கொடி விழாமல் தங்குதல், பால்உற்பத்தி குறைதல் போன்ற அறிகுறிகள் ஏற்படுத்தும்.

    காளைகள் மற்றும் ஆட்டுக்கிடாக்களில் விரைவீக்கம், மூட்டு அழற்சி மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும். நாய்களிலும் கருச்சிதைவு, மூட்டு அழற்சி ஏற்படுத்தும்.நாட்டின மாடுகளில் கருச்சிதைவு ஏற்பட்டு விரைந்து தொற்றும் தன்மை கொண்டது.இந்நோய் கால்நடைகளிலிருந்து மனிதர்களுக்கும் தொற்றும் நோயாகும். கால்நடைகளோடு நெருங்கி பழகும் விவசாயிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் துறைப்பணியாளர்கள், இறைச்சி கடைகளில் பணிபுரிவோர், ஆராய்ச்சி பணியாளர்கள் மற்றும் கால்நடைகள் மூலம் கிடைக்கும் பால் மற்றும் இறைச்சி நுகர்வோர்களை தாக்கும் அபாயம் உள்ளது.

    இந்நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் சுத்திகரிக்கப்படாத பால் மற்றும் இறைச்சி பொருட்களை உட்கொள்வதாலும், நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் சுரப்புகள் மற்றும் உயிர்கழிவுகளோடு தொடர்பு ஏற்படும் போது நோய் பரவிடும் வாய்ப்பு உள்ளது.

    இந்நோய் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு குறைவு. மனிதர்களில் இந்நோய் எலும்பு மற்றும் மூட்டு அழற்சி, தண்டுவட எலும்புகளில் அழற்சி, கல்லீரல் நோய், வயிறு மற்றும் குடல்களில் அழற்சி, இனப்பெருக்க உறுப்புகளில் அழற்சியை ஏற்படுத்தும். சில நேரங்களில் இந்நோய் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு, கண்கள் மற்றும் இதயத்திலும் பாதிப்பு ஏற்படுத்தும். சில நேரங்களில் இறப்பும் ஏற்படும்.

    கால்நடைகளில் இந்நோய் தடுப்பதற்காக மருந்துகள் 1,80,000 டோஸ்கள் வரப்பெற்று சேலம் கால்நடை பராமரிப்புத்துறையில் இருப்பில் உள்ளது. சேலம் மாவட்டத்தில் 01.02.2023 முதல் 28.02.2023 முடிய தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளது.

    இதில் 4 மாத வயது முதல் 8 மாத வயது முடியவுள்ள கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி போடப்படுகின்றது. தடுப்பூசி போடப்படும் கிடேரி கன்றுகளுக்கு அடையாள காதுவில்லைகள் பொருத்தப்படும். இந்த தடுப்பூசி ஒருமுறை போடப்பட்டால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்புத்திறன் வெளிப்படுத்தும்.

    எனவே, கால்நடை வளர்ப்போர் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி தங்களிடம் உள்ள 4 முதல் 8 மாத வயதுள்ள கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டு தங்கள் மாடுகளை நோயிலிருந்து பாதுகாத்து கொள்வதுடன் மனிதர்களுக்கு இந்நோய் ஏற்படாமல் தடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

    ×