என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலம் விமான நிலையத்தில் ஓடுதள உராய்வு அளவீடு சோதனை 2 நாட்கள் பயிற்சி நேற்று தொடங்கியது.
    • அதில் விமானத்தை தரை யிறக்கும்போது, சக்கரம் உராய்ந்து ஓடுதளத்தின் தன்மை எப்படி மாறுகிறது, அவற்றை எவ்வாறு அளவீடு செய்து புதுப்பிக்க வேண்டும் என பயிற்சி அளிக்கப்பட்டது.

    சேலம்:

    இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில் சேலம் விமான நிலையத்தில் ஓடுதள உராய்வு அளவீடு சோதனை 2 நாட்கள் பயிற்சி நேற்று தொடங்கியது. அதில் விமானத்தை தரை யிறக்கும்போது, சக்கரம் உராய்ந்து ஓடுதளத்தின் தன்மை எப்படி மாறுகிறது, அவற்றை எவ்வாறு அளவீடு செய்து புதுப்பிக்க வேண்டும் என பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதற்கென சென்னையில் இருந்து அதிநவீன வசதிகளுடன் கூடிய ஓடுதள உராய்வு சோதனை கார் சேலம் விமான நிலையத்துக்கு வந்துள்ளது. அதன் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. விஜயவாடா, ைஹதராபாத், திருப்பதி, மதுரை, திருச்சி, சென்னை, சேலம் விமான நிலையங்களில் இருந்து 17 ஊழியர்கள் பங்கேற்றனர்.

    நேற்று முன்தினம் விமான நிலையத்தில் ஓமலூர் தாசில்தார் வள்ளி முனியப்பன் தலைமையில் விமான நிலைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூட்டம் நடந்தது. அதில், பறவைகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க குப்பை, இறைச்சி கழிவை விமான நிலையத்தை சுற்றி கொட்டப்படாமல் பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டது.

    • எங்கள் பகுதியில் அத்தியாவசிய தேவைகளான குடியிருப்பு, பாதை வசதி, குடிநீர் வசதி, மருத்துவமனை வசதி ஆகியவற்றை ஊர் மக்களாகிய நாங்கள் போராடி வாங்கினோம்.
    • இந்த கற்களை தொடர்ந்து இரவில் சேலம் மாநகராட்சி 47-வது கோட்ட கவுன்சிலர் புனிதாவின் கணவர் சுதந்திரம் என்பவர் திருடி செல்கின்றார். இதை தட்டிக்கேட்டபோது ஊர் மக்களையும் திட்டி மிரட்டினர். எனவே அரசு கட்டுமான பொருளை திருடிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    சேலம்:

    சேலம் குகையில் உள்ள ஆண்டிப்பட்டி ஏரி கார்கில் நகரில் சுமார் 3000 பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த நவமணி மற்றும் ஊர் மக்கள் சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

    அதில், எங்கள் பகுதியில் அத்தியாவசிய தேவைகளான குடியிருப்பு, பாதை வசதி, குடிநீர் வசதி, மருத்துவமனை வசதி ஆகியவற்றை ஊர் மக்களாகிய நாங்கள் போராடி வாங்கினோம்.

    இந்த நிலையில் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த தியாகிகளின் நினைவாக தமிழ்நாடு அரசு குடிசை மாற்றுவாரியத்தின் எல்ஐ.ஜி அடுக்குமாடி பகுதிக்கு கார்கில் நகர் என பெயர் சூட்டியுள்ளோம். அந்த பெயரில் தான் மத்திய அரசின் தபால் தொடர்புகளும் உள்ளன.

    இது குறித்து, கார்கில் நகர் பகுதி என அறிமுகப்படுத்தும் 4 பெயர் பலகையும் நிறுவினோம். இதற்கு தேவையான ஜல்லி கற்கள் அந்த பகுதியில் புதிதாக கட்டப்படும் மருத்துவமனை அருகில் குடிசைமாற்று வாரியத்தின் ஒப்பந்ததாரர் குவித்து வைத்திருந்தார்.

    இந்த கற்களை தொடர்ந்து இரவில் சேலம் மாநகராட்சி 47-வது கோட்ட கவுன்சிலர் புனிதாவின் கணவர் சுதந்திரம் என்பவர் திருடி செல்கின்றார். இதற்கு உடந்தையாக கவுன்சிலர் புனிதா மற்றும் அதே பகுதியை சேர்ந்த வி.எம்.துரை, இவரது தங்கை தாமரைச்செல்வி ஆகியோர் இருக்கின்றனர். இதை தட்டிக்கேட்டபோது என்னையும், ஊர் மக்களையும் திட்டி மிரட்டினர். எனவே அரசு கட்டுமான பொருளை திருடிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    கவுன்சிலர் மீது வழக்கு

    இது தொடர்பாக செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் விசாரணை நடத்தி, சுதந்திரம், கவுன்சிலர் புனிதா, வி.எம்.துரை, தாமரைச்செல்வி உள்ளிட்டோர் மீது 294 (பி), 506(1), ஐ.பி.சி.379 போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏ.வி.எஸ்.கல்லூரியில் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 2-வது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.
    • இப்போட்டியில் 5 வயது முதல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம்.

    சேலம்:

    சாய் சோட்டாகான் கராத்தே மற்றும் கோபுடோ அசோசியேசன் சார்பில் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள ஏ.வி.எஸ்.கல்லூரியில் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 2-வது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.

    இப்போட்டியில் 5 வயது முதல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம். கலர் பெல்ட், பிளாக் பெல்ட் அடிப்படையில் போட்டி நடத்தப்படும். நுழைவு கட்டணம் தனிநபர் அளவில் பங்கேற்க ரூ.800-ம், குழுவாக கலந்து கொள்ளும் போட்டியில் ஒவ்வொரு நபரும் தலா ரூ.800-ம் செலுத்த வேண்டும். இந்த பதிவு காலை 8 மணி முதல் காலை 9 மணி வரை நடைபெறும். காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கி மாலை 5 மணி அளவில் முடிவடையும்.

    இப்போட்–டிக்கான ஏற்பாடுகளை சேலம் சாய் சோட்டோகான் கராத்தே மற்றும் கோபுடோ அசோசியேஷன் தலைவர் ஷிகான் சங்கரன் முன்னின்று செய்து வருகிறார். இதில் உறுப்பினர்களாக அகில இந்திய காரத்தே மாஸ்டர்ஸ் அசோசியேஷன், தமிழ்நாடு கராத்தே மாஸ்டர்ஸ் அசோசியேஷன் ஆகியவை பங்கேற்கின்றன. மேலும் விபரங்களுக்கு சேலம் சாய் சோட்டோகான் கராத்தே மற்றும் கோபுடோ அசோசியேஷனை தொடர்பு கொள்ளுமாறு அதன் தலைவர் ஷிகான் சங்கரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • நீர்நிலைகளில் இருந்து அனுமதி பெறாமல் மணல் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • சம்பா நகர் வடக்கு காடு பகுதியில், நேற்று அதிகாலை அனுமதியின்றி டிராக்டரில் மணல் ஏற்றிச்செல்வதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    வாழப்பாடி:

    ஆறு, ஓடை உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து அனுமதி பெறாமல் மணல் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்–பாளையம் சம்பா நகர் வடக்கு காடு பகுதியில், நேற்று அதிகாலை அனுமதியின்றி டிராக்டரில் மணல் ஏற்றிச்செல்வதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா உத்தரவின் பேரில், பெத்தநாயக்கன் பாளையம் வட்டாட்சியர் அன்பு–செழியன் தலைமையிலான வருவாயத்துறையினர் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். இதில் மணல் கடத்திச் சென்ற ராமநாயக்கன்பாளையம் ஊத்துமேடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது டிராக்–டரை பறிமுதல் செய்து, ஏத்தாப்பூர் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, டிராக்டர் உரிமையாளர் சுப்பிர–மணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சேலம் மாவட்டத்தில் நாளை முதல் வருகிற 15-ந் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்வு, 14 கல்லூரிகளில் கணினி மூலம் நடைபெற உள்ளது.
    • தேர்வுகள் காலை தேர்வுக்கு 7:30 மணிக்கு, பிற்பகல் தேர்வுக்கு 12:30 மணிக்கு தேர்வு மையத்துக்கு வருகை புரிய வேண்டும்.

    சேலம்:

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2, இணையவழி தேர்வு தொடர்பாக மாவட்ட தேர்வு கண்காணிப்பு குழு கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது,

    சேலம் மாவட்டத்தில் நாளை முதல் வருகிற 15-ந் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்வு, 14 கல்லூரிகளில் கணினி மூலம் நடைபெற உள்ளது. காலை மற்றும் மாலை வேளை என இரு வேளைகளிலும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

    இந்த தேர்தலை 36 ஆயிரத்து 113 தேர்வர்கள் எழுத உள்ளனர். தேர்வுகள் காலை தேர்வுக்கு 7:30 மணிக்கு, பிற்பகல் தேர்வுக்கு 12:30 மணிக்கு தேர்வு மையத்துக்கு வருகை புரிய வேண்டும். இத்தேர்வுக்காக மாவட்ட தேர்வு கண்காணிப்பு குழு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்வுகளை கண்காணிக்கும் போது கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் தலைமையில் 4 தேர்வு மையங்களுக்கு ஒரு பறக்கும் படைகுழு செயல்பட ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வுகள் நடைபெறும் 14 தேர்வு மையங்களிலும் காவல்துறை போதிய பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ளவும், மாதிரி தேர்வுகள் மற்றும் தேர்வு நாட்களில் தேவையான தொழில்நுட்ப உதவிகளை தேசிய தகவல் அலுவலர் வழங்கிடவும், அவசர மருத்துவ உதவிக்கு மருத்துவ குழுக்கள் அமைத்து தேர்வு மையங்களில் நோய் தடுப்பு முன்னேற்பாடு பணிகளை கண்காணித்து வழிநடத்திட சுகாதாரத் துறைக்கும், தேர்வு நாள்களில் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு சென்றடையும் வகையில் போக்குவரத்து வசதிகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மேற்கொள்ளவும், தடை இல்லாமல் மின்சாரம் மற்றும் தேர்வுகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் தேர்வு மைய பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆசிரியர் தகுதி தேர்வு தாள் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படுவதை அனைத்து பொறுப்பு அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் வருவாய் அதிகாரி மேனகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், கோட்டாட்சியர் விஷ்ணு வர்த்தினி, மேட்டூர் கோட்டாட்சியர் தணிகாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • கடையில் ஆளில்லாத–தால் பொருட்கள் வழங்க முடியாதென ரகுபதி தெரி–வித்ததாக கூறப்படுகிறது.
    • கண்ணையன், பிரபு ஆகிய இருவரையும் சாதியின் பெயரை சொல்லி திட்டியதுடன், அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ரகுபதி (வயது 23).

    இவரது மளிகைக் கடைக்கு நேற்று முன்தினம் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கண்ணையன்(46), இவரது உறவினர் பிரபு(42) ஆகியோர் பொருட்கள் கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.

    தகராறு

    கடையில் ஆளில்லாத–தால் பொருட்கள் வழங்க முடியாதென ரகுபதி தெரி–வித்ததாக கூறப்படுகிறது.

    இதில் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ரகுபதியும், அவரது உறவினர் வெங்கடேஷ்(32) ஆகியோர் சேர்ந்து, கண்ணையன், பிரபு ஆகிய இருவரையும் சாதியின் பெயரை சொல்லி திட்டியதுடன், அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் காயமடைந்த கண்ணையன், பிரபு ஆகியோர் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வன்கொடுமை சட்டம் பாய்ந்தது

    இதுகுறித்து, கண்ணையன் கொடுத்த புகாரின் பேரில், ரகுபதி, வெங்கடேஷ் ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி ஹரிசங்கரி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே தன்னையும், உறவினர் வெங்கடேசையும், கண்ணையன், பிரபு ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ரகுபதி, வாழப்பாடி போலீசில் புகார் செய்துள்ளார்.

    இவரது புகாரின் பேரிலும், கண்ணையன், பிரபு ஆகியோர் மீது வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு கிராமத்தில் இரு தரப்பை சேர்ந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதால், சமூக மோதலை தடுக்க அந்த கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் அப்படியே நீடிக்கிறது.
    • இனிவரும் நாட்களில் நீர்வரத்து அதிகரித்தால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்புள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 1154 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 1304 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரியில் ஆயிரம் கன அடி கண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் அப்படியே நீடிக்கிறது.

    நேற்று 103.7 1அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்றும் அதே அளவில் உள்ளது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து அதிகரித்தால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்புள்ளது.

    • எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வேட்பாளர் தென்னரசு வாழ்த்து பெற்றார்.
    • தேர்தல் குறித்து வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர்.

    சேலம்:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

    தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவன் போட்டியிடுகிறார். தே.மு.தி.க சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, அ.ம.மு.க சார்பில் சிவபிரசாத் ஆகியோர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளராக ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தென்னரசு அறிவிக்கப்பட்டார்.

    இதை அடுத்து நேற்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக அவர் சேலம் வந்தார். அப்போது ஈரோடு தொகுதி அ.தி.மு.க தேர்தல் பணி பொறுப்பாளரான செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர்கள் கருப்பண்ணன், கே.வி.ராமலிங்கம், தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் யுவராஜா, பொதுச்செயலாளர் விடியல் சேகர் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகளும் உடன் வந்தனர்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வேட்பாளர் தென்னரசு வாழ்த்து பெற்றார். தொடர்ந்து 30 நிமிட நேரம் தேர்தல் குறித்து வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர்.

    அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கான வியூகம் குறித்தும், தேர்தல் களப்பணி குறித்தும் விரிவாக இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. செங்கோட்டையன் கூறிய கருத்துக்களை கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வேலைகளை தீவிரபடுத்தும்படி அறிவுரை வழங்கினார். மேலும் அ.தி.மு.க வெற்றியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்த ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.

    தொடர்ந்து வேட்பாளர் தென்னரசு நிருபர்களிடம் கூறுகையில், தனக்கு வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது. இதனால் வெற்றி பெறுவது உறுதி என்று கூறியபடியே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    • பூ மார்க்கெட்டில் சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் தினமும் பூக்கள் வாங்கி செல்கின்றனர்.
    • சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருமணங்கள் நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை முதல் பூக்கள் வாங்க பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் திரண்டனர்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.உ.சி. பூ மார்க்கெட் உள்ளது.

    பூ மார்க்கெட்

    இதைத்தவிர பழைய பஸ் நிலையத்தை யொட்டி விசாலமாக மேலும் ஒரு பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுகளுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்த பூ மார்க்கெட்டில் சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் தினமும் பூக்கள் வாங்கி செல்கின்றனர்.

    மல்லிகை பூ கிலோவுக்கு ரூ.1400

    இன்று சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருமணங்கள் நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை முதல் பூக்கள் வாங்க பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் திரண்டனர்.

    இதனால் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாக இன்று ஒரு கிலோ மல்லிகை பூ கிலோ ரூ.1400-க்கு விற்கப்பட்டது.

    இதுபோல் ஜாதி மல்லிகை ரூ.1000-க்கும், காக்கட்டான் ரூ.400-க்கும், கலர் காக்காட்டான் ரூ.400, மலை காக்கட்டான் - ரூ.320, அரளி -ரூ.140, வெள்ளை அரளி ரூ.140, மஞ்சள் அரளி- ரூ140, செவ்வரளி ரூ.180, நந்தியாவட்டம் ரூ.120, சி.நந்தியாவட்டம் ரூ.400, சம்பங்கி ரூ.30, சாதா சம்மங்கி ரூ.50 என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    • தமிழ்நாடு மீன்வள சார்நிலை பணியில் அடங்கிய 64 மீன்துறை ஆய்வாளர் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிட்டது.
    • தேர்வு எழுத அனுமதிக்கப் பட்ட விண்ணப்ப தாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) கடந்த வருடம் அக்டோபர் மாதம் 14-ந்தேதி தமிழ்நாடு மீன்வள சார்நிலை பணியில் அடங்கிய 64 மீன்துறை ஆய்வாளர் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிட்டது.

    இதனை தொடர்ந்து சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும், பி.எப்.சி., எம்.எஸ்.சி. விலங்கியல், மற்றும் அது சம்பந்தமாக படித்த இளநிலை , முதுநிலை பட்டதாரிகள் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான தேர்வர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    சேலம்

    இந்த நிலையில் மீன்துறை ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு வருகிற 8-ந்தேதி காலை மற்றும் மதியம் என 2 ஷிப்டுகளாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

    தேர்வு எழுத அனுமதிக்கப் பட்ட விண்ணப்ப தாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியும். இந்த தகவலை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜயயாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • வீடு கட்டும்போது எடுத்த மண்ணை இளங்கோவன் வீட்டு அருகே கொட்டினாராம்.
    • இது தொடர்பாக இளங்கோ ரமேசிடம் தகராறு செய்தார்.

    சேலம்:

    சேலம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் இளங்கோவன். இவர்கள் இருவரும் உறவினர்கள். இந்த நிலையில் ரமேஷ் அந்த பகுதியில் வீடு கட்டி வருகிறார்.

    வீடு கட்டும்போது எடுத்த மண்ணை இளங்கோவன் வீட்டு அருகே கொட்டினாராம். இது தொடர்பாக இளங்கோ ரமேசிடம் தகராறு செய்தார். இதில் இளங்கோவுக்கு ஆதரவாக இடங்கனசாலை நகராட்சி தி.மு.க. கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவர் குமார் மற்றும் அன்பு ஆகியோர்சென்று ரமேஷின் வீடுபுகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ரமேஷ் விரல்கள் முறிந்து, தலையில் காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யபப்ட்டது. போலீசார் குமார், இளங்கோ, அன்பு ஆகிய 3 பேர் மீதும் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதனிடையே இளங்கோ தக்கப்படுவது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றன.
    • இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட இளம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமை–களை வெளிப்படுத்தினர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் சேலம் சித்தனூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றன.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட இளம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமை–களை வெளிப்படுத்தினர்.

    இதில் மாணவிகள் பிரிவில் 9 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மேகவர்ஷினி, மித்ராஸ்ரீ ஆகியோர் முதல் 2 இடங்க–ளையும், மாணவர்கள் பிரிவில் சிவப்பிரசன்னா, சுகந்த் ஆகியோர் முதல் 2 இடங்களையும் பிடித்தனர். அதேபோல் 11 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மாணவிகளில் சண்மிதா, பிரதிக்ஷா ஆகியோரும் மாணவர்களில் கவின் சஞ்சய் ஆகியோரும் முதல் இரு இடங்களை பிடித்தனர்.

    17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மாணவிகளில் பிரியதர்ஷினி, கிருத்திகா ஆகியோரும் மாணவர்கள் பிரிவில் பிரகதீஷ் ஸ்ரீராம், விஷ்வா ஆகியோரும் முதல் 2 இடங்களில் வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு சேலம் மாவட்ட சதுரங்கக் கழகத்தின் செயலாளர் அருண் நல்லதம்பி மற்றும் நிர்வாகிகள் தனபால், பால நரசிம்மன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்த–னர். இந்த போட்டியில் நடுவர்களாக தேசிய அளவிலான மூத்த நடுவர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.

    ×