என் மலர்
சேலம்
- சேலம் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
- அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசி ரியர்கள் 423 பேருக்கு இணை பேராசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் வருகிற ஜூலை மாதம் 4-ந்தேதி நடைபெற உள்ளது.
சேலம்:
சேலம் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 1000 பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் பதவிகள் காலியாக உள்ளன. இந்த நிலையில் நீதிமன்ற வழக்கு காரணமாக காலி பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் காலி பணியிடங்களை நிரப்ப கவுன்சிலிங் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனால் அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசி ரியர்கள் 423 பேருக்கு இணை பேராசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் வருகிற ஜூலை மாதம் 4-ந்தேதி நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்ற வரும்படி 423 டாக்டர்களுக்கும் மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலிங் முடிந்த பிறகு பேராசிரியர் பணியிடங் களுக்கும் கவுன்சிலிங் நடத்தப்படும் என அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
- வாழப்பாடி மற்றும் மன்னாயக்கன்பட்டி கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவதில் முன்னோர்கள் காலந்தொட்டு பிணைப்பு தொடர்ந்து வருகிறது.
- வாழப்பாடி திரவுபதியம்மன் கோவில் தீ மிதித் திருவிழா 10 ஆண்டுகளுக்கு பின், கடந்த மே மாத இறுதியில் சிறப்பாக நடைபெற்றது.
வாழப்பாடி:
வாழப்பாடி மற்றும் மன்னாயக்கன்பட்டி கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவதில் முன்னோர்கள் காலந்தொட்டு பிணைப்பு தொடர்ந்து வருகிறது. வாழப்பாடியில் திரவுபதி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்தும் போது, மன்னாயக்கன்பட்டி கிராமத்தினரை அழைப்பதும், மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் திருவிழா நடத்தும் போது, வாழப்பாடி கோவில்களிலுள்ள சுவாமி சிலைகளையும், நிர்வாகிகளையும் விருந்துக்கு அழைத்து செல்வதும் இன்றளவும் மரபாக தொடர்ந்து வருகிறது.
வாழப்பாடி திரவுபதியம்மன் கோவில் தீ மிதித் திருவிழா 10 ஆண்டுகளுக்கு பின், கடந்த மே மாத இறுதியில் சிறப்பாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் சக்தி மாரியம்மன் திருவிழா நடத்திட ஊர் பெரியதனக்காரர்கள் முடிவு செய்தனர். முன்னோர்கள் வழக்கப்படி கிராமம் முழுவதும் வீடுகள் தோறும் கோயில் காளை அலங்கரித்து அழைத்துச் சென்று தேர்திருவிழா செலவுக்கு வரி வசூல் செய்தனர்.
இதனையடுத்து நாளை சக்தி மாரியம்மனுக்கு திருக்கல்யாணமும், திருத்தேர் நிலை பெயர்த்தலும், நாளை மற்றும் நாளை மறுதினம் 2 நாட்களும் தேரோட்டம் நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவையொட்டி மாரியம்மன் பிறப்பு குறித்த இசைப்பாட்டு சொற்பொழிவு 2 வாரங்களாக நடந்து வருவதும், வாழப்பாடி திரவுபதி அம்மன் கோவில் இருந்து மரச்சிற்ப சுவாமி சிலைகளை விருந்துக்கு அழைத்துச் சென்று, மன்னாயக்கன்பட்டி மாரியம்மன் கோயிலில் வைத்து தினந்தோறும் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி வருவதும் குறிப்பிடதக்கதாகும்.
- சேலம் சீரகாபாடி பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி இவரது 3-வது கணவர் பிரபல ரவுடி மேட்டூர் ரகு.
- இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி லட்சுமி வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
சேலம்:
சேலம் சீரகாபாடி பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி (வயது 42). இவரது 3-வது கணவர் பிரபல ரவுடி மேட்டூர் ரகு.
இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி லட்சுமி வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், 4 தனிப்படைகளை அமைத்து கொலையாளி களை பிடிக்க உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணையில், ரகு, லட்சுமியிடம் நிலத்தை தனது பெயருக்கு எழுதி கொடுக்குமாறு கூறி மிரட்டியுள்ளார். அவர் மறுத்ததால் ரகு தனது கூட்டாளிகளை அழைத்து வந்து கொடூரமாக லட்சுமியை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
தனிப்படை போலீசார் தீவிரமாக கொலையாளி களை தேடி வந்த நிலையில் பிரபல ரவுடி ரகு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
தொடர்ந்து போலீசார், அவரது கூட்டாளிகள் 3 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடியின் கூட்டாளிகளான தூத்துக்குடி மாவட்டம் ரகமதுல்லாபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த ஷேக்மைதீன் (வயது 29), சேலம் செவ்வாய்ப்பேட்டை லட்சுமி அய்யர் வீதியை சேர்ந்த ஜோசப் என்கிற பாலாஜி (19), மேட்டூர் குஞ்சாண்டியூரை சேர்ந்த ஆனந்த் (28) ஆகிய 3 பேரும் நேற்று பவானி ஜே.எம்.-1 நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
இதையடுத்து நீதிபதி, சரண் அடைந்த இவர்கள் 3 பேரையும் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து 3 பேரும் ெஜயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
ஏற்கனவே சரண் அடைந்த ரகுவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே மேலும் அவரது கூட்டாளிகளையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
போலீசார், இதற்கான ஆவணங்களை கோர்ட்டில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளனர். போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கிடைக்கும் பட்சத்தில் லட்சுமி கொலை வழக்கு தொடர்பாக ரவுடி ரகு உள்பட 4 பேரும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவிப்பார்கள்.
அதன்அடிப்படையில் போலீசார், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
- ஏற்காட்டில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பேரணியை வனச்சரக அலுவலர் முருகன் தொடங்கி வைத்தார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை வனச்சரக அலுவலர் முருகன் தொடங்கி வைத்தார். இதில் 80-க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள், வனவர்கள் தமிழரசன், சஞ்சய், சக்திவேல், காவல் துறையினர் சார்பில் துணை ஆய்வாளர் சபாபதி மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
ஏற்காடு அரசு பள்ளியில் தொடங்கிய பேரணி, சூழல் சுற்றுலா பூங்கா, படகு இல்லம் வழியாக ஒண்டிக்கடை ரவுண்டானா வரை சென்று மீண்டும் சூழல் சுற்றுலா பூங்காவில் நிறைவடைந்தது. அப்போது, போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியவாறும் மாணவர்கள் சென்றனர்.
- சேலம் ஏ.வி.ஆர். கல்யாண மண்டபம் எதிரில் உள்ள ஓட்டல் அருகே கடந்த 19-ந் தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், உடல் நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.
- சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர், கடந்த 22-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சேலம்:
சேலம் ஏ.வி.ஆர். கல்யாண மண்டபம் எதிரில் உள்ள ஓட்டல் அருகே கடந்த 19-ந் தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், உடல் நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.
அவரை அப்பகுதியினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர், கடந்த 22-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து சேலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் நரசிம்மன் மகன் பழனிசாமி (வயது 65) என்பது தெரிய வந்தது. எந்த ஊரை சேர்ந்த வர்? என்பது தெரியவில்லை.
இவரது உடல் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளது. போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
- சாசக விருது 2022-க்கான விண்ணப்பங்களை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சகம் வரவேற்றுள்ளது.
- இதற்கான விண்ணப்பங்கள் https://awards.gov.in என்ற இணையப்பக்கத்தின் மூலம் வருகிற ஜூலை 14 -ந்தேதி வரை வரவேற்கப்படு கின்றன.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்கள், வீராங்கனைகள் உள்ளனர். இதைத்தவிர சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் மாவட்ட, மாநில, தேசிய அளவில் விளையாடி வருகின்றனர். மேலும் பலர் சமூக சேவை புரிந்து வருகின்றனர்.
தேசிய விருது
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சாசகத்துடன் தொடர்புடையவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும், இளைஞர்களிடையே கூட்டாக செயல்படும் உணர்வை மேம்படுத்தவும், சவாலான சூழ்நிலைகளில் விரைந்து செயல்படுவதை ஊக்கப்படுத்தவும், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் டென்சிங் நார்கே தேசிய சாசக விருதினை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக டென்சிங் நார்கே தேசிய சாசக விருது 2022-க்கான விண்ணப்பங்களை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சகம் வரவேற்றுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் https://awards.gov.in என்ற இணையப்பக்கத்தின் மூலம் வருகிற ஜூலை 14 -ந்தேதி வரை வரவேற்கப்படு கின்றன. இந்த விருதுக்கான விதிமுறைகளை இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுக்கள் அமைச்சகத்தின் இணையதளத்தில் அறியலாம்.
ரூ.15 லட்சம்
இந்த விருது ரூ.15 லட்சம் ரொக்கப்பரிசையும், வெண்கல பதக்கம், சான்றிதழையும் கொண்டது. வழக்கமாக இந்த விருது 4 வகைகளில் வழங்கப்படும். கடந்த 3 ஆண்டுகளாக நிலம், கடல், வான் சாகசங்களுக்கு விருது வழங்கப்படுவதோடு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கதாகும்.
- மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சார்பில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
- அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணிக்கு, மேட்டூர் தாசில்தார் முத்துராஜா தலைமை வகித்தார்.
மேட்டூர்:
மேட்டூரில், மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சார்பில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
மேட்டூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணிக்கு, மேட்டூர் தாசில்தார் முத்துராஜா தலைமை வகித்தார். அரசு கலை கல்லூரி வளாகம் அருகே தொடங்கிய பேரணி, மாதா கோவில், மேட்டூர் நீதிமன்றம், எம்.எல்.ஏ அலுவலகம் வழியாக மீண்டும் கல்லூரி வளாகத்தைச் சென்றடைந்தது. இதில் மேட்டூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் மதுவிலக்கு போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஏர்வாடி கருவேப்பிலாங்காடு, கருங்கரடு பகுதியை சேர்ந்தவர் திருமலை இவருக்கு திருமணம் ஆகி 1 குழந்தை உள்ளது.
- கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி திருமலையை கைது ெசய்து, ெஜயிலில் அடைத்தனர்.
சேலம்:
ஏர்வாடி கருவேப்பிலாங்காடு, கருங்கரடு பகுதியை சேர்ந்தவர் திருமலை (வயது 41). இவருக்கு திருமணம் ஆகி 1 குழந்தை உள்ளது. இவர் சேலம் மாவட்டம் மல்லூர் அருகில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார்.
பாலியல் தொல்லை
இந்த நிலையில் 14 வயது சிறுமிக்கு இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 2 ஆண்டுகள் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இந்த கொடுமை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, உறவினர் ஒருவரின் வீட்டில் தஞ்சம் அடைந்து கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி போலீசார், கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி திருமலையை கைது ெசய்து, ெஜயிலில் அடைத்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், திருமலைக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
- சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
- இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கர், ஒன்றிய குழு துணை தலைவர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
கூட்டத்தில், வி.சி.க கவுன்சிலர் சாமுராய்குரு பேசுகையில், தேர்தலுக்கு முன்பு தனி அதிகாரியாக இருந்தபோது ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு தற்போது பணம் எடுக்கப்படுகிறது.
காடையாம்பட்டி மட்டுமல்ல ஓமலூர், மேச்சேரி என அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் போதுமான நிதி இல்லாத நிலையில், பொது நிதியிலிருந்து தேவையான பணிகளுக்கு தீர்மானங்கள் வைக்கப்படுகின்றன.
பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்படாத நிலையில், அ.தி.மு.க கவுன்சிலர் வெங்கடேசனும் இதே கேள்வியை எழுப்பினார். இதனை தொடர்ந்து தி.மு.க கவுன்சிலர்கள் உள்பட அனைத்து கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.
- கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.
- 3,600 ஏக்கர் நிலம் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகிறது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது. இந்த அணையால், பாப்ப நாயக்கன்பட்டி, பீமன்பாளையம், ஏழுபுளி, தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப் பட்டி ஆகிய கிராமங்களில், 3,600 ஏக்கர் நிலம் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகிறது.
கரியக்கோயில் ஆற்றில் பனைமடல், ஏ.குமார பாளையம், கல்யாணகிரி, கொட்டவாடி கிராமங் களிலுள்ள தடுப்பணைகள் மற்றும் கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர் அபிநவம், புத்திரகவுண்டன் பாளையம் ஏரிகளில் இருந்து ஏறக்குறைய 3 ஆயிரம் ஏக்கர் பழைய ஆயக்கட்டு பாசனம் பெறுகின்றன.
கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் அக்டோபர் மாதம் 25-ந்தேதி அணையின் நீர்மட்டம் 50.52 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி 175.60 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அணைக்கு வந்த தண்ணீர், 2 மாதங்களுக்கு மேலாக ஆற்றில் உபரிநீராக திறக்கப்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து நீர்பிடிப்பு பகுதியிலும், ஆயக்கட்டு பாசன பகுதியிலும் மழை இல்லாததால், புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக சுழற்சி முறையில் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அணையின் நீர்மட்டம் 27.52 அடியாக சரிந்து போனது.
இந்த நிலையில், கடந்த 2 மாதமாக அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதி யான கல்வராயன் மலை பகுதியில் அவ்வப்போது கோடை மழை பெய்ததால், அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து, நேற்று மாலை நிலவரப்படி 31.69 அடியாக உயர்ந்தது.
தற்போது அணையில் 69.87 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கியுள்ளது. இருப்பினும் அணை பாசன கிராமங்களில் எதிர்பார்த்த அளவிற்கு கோடை மழை கைகொடுக்காததால், பருவ மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக் கின்றனர்.
- ஊரகப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 385 கிராம ஊராட்சி களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகளில் 380 ஊராட்சிகளில் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 385 கிராம ஊராட்சி களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகளில் 380 ஊராட்சிகளில் முழுமையாக பணிகள் முடிக்கப் பட்டுள்ளன.
மேலும், மகுடஞ்சாவடி யில் 2 மைதானமும், ஏற்காடு, பனமரத்துப்பட்டி, ஓமலூர் ஆகிய இடங்களில் தலா ஒரு ஊரக விளையாட்டு மைதானமும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஊரக விளையாட்டு மைதானப் பணிகள் 99 சதவிகிதம் முடிவடைந்துள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் துறை, பள்ளி கல்வித்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விளையாட்டு சங்கங்கள் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், அத்தனூர்பட்டி ஊரக விளையாட்டு மைதானத்தினை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-
ஊரக விளையாட்டு மைதானம் தரமுடன் நீண்ட நாட்களுக்கு இளைஞர்கள் பயன்படுத்தும் வகையில் ஆத்தூர், கெங்கவல்லி, எடப்பாடி, கொளத்தூர், மகுடஞ்சாவடி, நங்கவள்ளி, ஓமலூர், சேலம், சங்ககிரி, தலைவாசல், தாரமங்கலம், வாழப்பாடி, வீரபாண்டி மற்றும் ஏற்காடு வட்டாரங்களில் உள்ள ஊரக விளையாட்டு மைதானங்களுக்கு ரூ. 4.66 கோடி மதிப்பீட்டில் பேவர் பிளாக் நடைமேடை, பேவர் பிளாக் நடைபாதை, பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ஓமலூர் மற்றும் வீரபாண்டி வட்டாரங்களில் உள்ள ஊரக விளையாட்டு மைதானங்களில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் மைதானம் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாணவ, மாணவியர் களுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில் அவர்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தினை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அதிகரிக்கச் செய்ய வேண்டும். வகுப்பறையில் விளையாட்டிற்கென ஒதுக்கப்படும் நேரத்தினை மற்ற பாடங்களுக்காக எடுத்துக்கொள்ளாமல் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பாக விளையாட அனுமதிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. விளையாட்டு போட்டிகள் மாணவ, மாணவியர்களிடையே மிகச் சிறந்த ஒழுக்கத்தை கற்றுத்தரும் என்பதாலும், காலை, மாலை இரு வேலையும் விளையாடு வதால் மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, சேலம் வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன், வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், அட்மா குழுத் தலைவர் சக்கரவர்த்தி மற்றும் வட்டார வளர்ச்சி அலு வலர்கள் உள்ளிட்ட அலு வலர்கள் உடனிருந்தனர்.
- காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த 12-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தண்ணீரை திறந்து வைத்தார்.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் 17-வது நாளாக இன்றும் நீர்வரத்து விநாடிக்கு 1000 கன அடியாக நீடிக்கிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 176 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 126 கனஅடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த 12-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தண்ணீரை திறந்து வைத்தார். முதலில் 3 ஆயிரம் கனஅடி வீதம் திறந்துவிடப்பட்ட தண்ணீர், அன்று இரவு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
நேற்று மதியம் வரை விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது, காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, நேற்று மதியம் முதல், அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
தண்ணீர் வரத்தை காட்டிலும், பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 94.10 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி 93.32 அடியாக சரிந்து உள்ளது.






