என் மலர்tooltip icon

    சேலம்

    • நீர் இருப்பு 77.46 டி.எம்.சி.உள்ளது.
    • அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    கர்நாடக-தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 6,233 கன அடியாக இருந்தது. இன்று நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 9,683 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 108 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்மட்டம் 109.33 அடியாக உயர்ந்துள்ளது.

    நீர் இருப்பு 77.46 டி.எம்.சி.உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    • அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6233 கனஅடியாக அதிகரித்து உள்ளது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் தற்போது பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதே போல் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 108.82 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6233 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விடகுறைந்த அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணை விரைவில் 109 அடியை எட்டும் தருவாயில் உள்ளது.

    • மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    குறிப்பாக மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு 10 மணியளவில் தொடங்கிய மழை அதிகாலை 3 மணி வரை சுமார் 5 மணி நேரம் கன மழையாக கொட்டியது. இடைவிடாது பெய்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் சிற்றோடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஏரிகளுக்கும் தண்ணீர் வர தொடங்கி உள்ளது.

    இதே போல சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஆனைமடுவு, ஆத்தூர், தம்மம்பட்டி, கரியகோவில், எடப்பாடி, ஏற்காடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    குறிப்பாக ஏற்காட்டில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவில் கன மழையாக கொட்டியது. தொடர்ந்து இன்று காலை வரை சாரல் மழையாக பெய்து வருகிறது. மழையை தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதால் அங்கு தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்துள்ளனர்.

    சேலம் மாநகரில் நேற்றிரவு 9 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை 1 மணி வரை சாரல் மழையாக பெய்தது. இந்த மழையால் மாநகரில் நெத்திமேடு, அன்னதானப்பட்டி, லைன்மேடு, அம்மாப்பேட்டை ஜோதி தியேட்டர், கிச்சிப்பாளையம் நாராயண நகர், சத்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடியது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    சேலம் மாநகர் மற்றும் புறநகரில் பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இந்த மழை விவசாய பயிர்களுக்கும் உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 100.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 39.4, ஏற்காடு 30, வாழப்பாடி 16.6, ஆனைமடுவு 58, ஆத்தூர் 46, கெங்கவல்லி 29, தம்மம்பட்டி 55, ஏத்தாப்பூர் 20, கரியகோவில் 40, வீரகனூர் 29, நத்தக்கரை 27, சங்ககிரி 4.3, எடப்பாடி 30.6, ஓமலூர் 18, டேனீஸ்பேட்டை 23 மி.மீ. மழையும் மாவட்டம் முழுவதும் 566.5 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான சந்திரசேகரபுரம், குருசாமிபாளையம், புதுப்பட்டி, வடுகம், காக்காவேரி, முத்துக்காளிப்பட்டி, ஆண்டகளூர் கேட், மங்களபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை தொடர்ந்து கன மழையாக கொட்டியது. இந்த தொடர் மழையால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளிக்கிறது. மழையை தொடர்ந்து அந்த பகுதியில் குளிர்ச்சியான சீதோஷ்ன நிலை நிலவி வருகிறது.

    கனமழை காரணமாக வயல்களிலும் பள்ளமான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ராசிபுரம் நகரில் உள்ள சாக்கடை கால்வாய்களிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகள் உள்பட எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தில் அதிகபட்சமாக 12 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    நாமக்கல் நகர பகுதியில் நேற்று மாலை தொடங்கிய மழை அதிகாலை வரை கனமழையாக கொட்டியது. இந்த மழையால் சேலம் சாலை, பரமத்தி சாலை, திருச்செங்கோடு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஒட்டிகள் தவித்தனர்.

    எருமப்பட்டியில் 60 மி.மீ., குமாரபாளையம் 34.2, மங்களபுரம் 18.4, மோகனூர் 29, நாமக்கல் 118, பரமத்தி 7, புதுச்சத்திரம் 82, சேந்தமங்கலம் 51, திருச்செங்கோடு 10, கலெக்டர் அலுவலகம் 39.2, கொல்லி மலை 56 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 624.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆந்திரா போன்ற இடங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
    • போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஏற்காடு போக்குவரத்து போலீசார் 30-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காட்டில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. வருகின்ற 23-ந் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.

    பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் நிலையில் நேற்று இரவு ஏற்காட்டில் நல்ல மழை பெய்து சீதோசன நிலை மிகவும் குளுமையாக மாறி உள்ளது. இந்த சீதோசன நிலையை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற இடங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.


    ஏற்காடு வந்துள்ள இவர்கள் இங்குள்ள முக்கிய சுற்றுலா இடங்களான அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், ஐந்திணை பூங்கா, பக்கோடா பாயிண்ட் லேடீ ஸ் சீட் உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்தனர்.

    குறிப்பாக படகு இல்லத்தில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகு பயணம் செய்தனர். ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் மலைப்பாதையிலும் மற்றும் அண்ணா பூங்கா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஏற்காடு போக்குவரத்து போலீசார் 30-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • சாலையில் இருந்த சிறு குழியால் 2 பேர் பலியான இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார், இவரது மகன் சாரதி (22), தாதகாப்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், இவரது மகள் சாருபிரியா (22) இவர்கள் 2 பேரும் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர்.

    இந்த நிலையில் சாரதி மற்றும் சாருபிரியா ஆகிய 2 பேரும் உடன் பணிபுரியும் நண்பர்கள் சிலருடன் ஏற்காடு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி இன்று அதிகாலை 3 மணியளவில் தாதகாப்பட்டி கேட்டில் இருந்து சாரதி, சாருபிரியா ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் திருவாக்கவுண்டனூர் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது அங்கிருந்த சிறு பள்ளத்தில் தண்ணீர் தேங்கியிருந்ததால் சற்று ஒதுங்கி செல்ல முயன்று மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதில் தலை நசுங்கிய நிலையில் சாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். வயிற்று பகுதியில் காயம் அடைந்த சாருபிரியாவும் சற்று நேரத்தில் பலியானார்.

    பின்னால் வந்தவர்களை காணவில்லையே என்று அவர்களுடன் சென்றவர்கள் திரும்பி வந்து பார்த்த போது விபத்தில் சிக்கி 2 பேரும் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறிய அவர்கள் சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் திரண்ட அவர்களது உறவினர்கள் 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுது புரண்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகமே சோகத்தில் மூழ்கியது.

    இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள். சாலையில் இருந்த சிறு குழியால் 2 பேர் பலியான இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அணையின் நீர்மட்டம் 108.31 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழக, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழை காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை முதல் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,479 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 108.31 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணை பகுதியில் 2.4 மி.மீட்டர் மழை பெய்தது.

    • கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் மாம்பழம் விளைந்து உள்ளதால் விலையும் குறைந்து காணப்படுகிறது.
    • கிளிமூக்கு மாங்காய்களை பொதுமக்கள் ஊறுகாய் போட அதிகளவில் வாங்கி செல்கிறார்கள்.

    சேலம்:

    சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது தித்திக்கும் சுவையான மாம்பழங்கள் தான். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 1-ந் தேதி தொடங்கும் இந்த மாம்பழம் சீசன் தொடர்ந்து ஜூலை மாதம் வரை நீடிக்கும். இந்தக்கால கட்டத்தில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழங்கள் வரத்து அதிகரித்து காணப்படும்.

    சேலம் மாவட்டத்தில் சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, அயோத்தியாப்பட்டணம், கூட்டாத்துப்பட்டி, வரகம்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் சேலம்-பெங்களூரா, இமாம்பசந்த், குண்டு, மல்கோவா, நடுசாலை, பங்கனப்பள்ளி உள்ளிட்ட மாம்பழங்கள் அதிகளவில் காய்த்து தொங்குகிறது. இந்த தோட்டங்களில் இருந்து அறுவடை செய்யப்படும் மாம்பழங்கள் தினமும் சேலத்தில் உள்ள பல்வேறு குடோன்களுக்கு கொண்டு வரப்படுகிறது.

    பின்னர் ஊழியர்கள் மூலம் ரகம் வாரியாக மாம்பழங்கள் பிரிக்கப்படுகிறது. தொடர்ந்து தரமான பெரிய அளவில் உள்ள மாம்பழங்கள் வெளியூர்களுக்கு பார்சல்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர சேலத்தில் உள்ள தெருவோர கடைகள், சிறிய, சிறிய, தள்ளுவண்டி கடைகள், சாலையோர கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடைவீதிகளில் மாம்பழம் வாசம் கமகமவென வீசுகிறது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் மாம்பழம் விளைந்து உள்ளதால் விலையும் குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக சேலத்தில் வசிக்கும் மக்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பார்சல்கள் மூலமும் தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மாம்பழங்களை அனுப்பி வைக்கின்றனர். இதனால் மாம்பழங்கள் தேக்கம் அடையாமல் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுகிறது.

    சேலம் மாவட்டத்தின் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும் மாம்பழங்கள் குவித்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக சித்திரை மாதம் 1-ந் தேதி முதல் சீசன் தொடங்கினாலும் இன்று முதல் 45 நாட்களுக்கு மாம்பழ சீசன் உச்சத்தில் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    சேலம் மாவட்டம் மட்டுமின்றி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் மாம்பழங்கள் அதிகளவில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கிளிமூக்கு மாங்காய்களை பொதுமக்கள் ஊறுகாய் போட அதிகளவில் வாங்கி செல்கிறார்கள். சீசன் களை கட்டியுள்ளதால் விலையும் குறைந்த அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் மாம்பழங்களை வாங்கி செல்கிறார்கள். சேலம் நகரின் அனைத்து தெருக்களிலும் மாம்பழங்கள் குவித்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • தேசிய சுகாதார இயக்கத்தின் மாநில அளவிலான 2 நாள் கருத்தரங்கம் தொடங்குகிறது.
    • மருத்துவ வசதிகள் குறித்தும் கிராம மக்களிடம் கேட்டறிந்தார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று தேசிய சுகாதார இயக்கத்தின் மாநில அளவிலான 2 நாள் கருத்தரங்கம் தொடங்குகிறது. இந்த கருத்தரங்கை தொடங்கி வைக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஏற்காடு வருகை தந்தார்.

    இந்த நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை ஏற்காடு மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மாரமங்கலம் கிராமத்தில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து இல்லம் தேடி மருத்துவம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் மருத்துவ வசதிகள் குறித்தும் கிராம மக்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து நடைபயிற்சியாக சென்று மக்களை சந்தித்து பேசினார்.

    • சங்ககிரியில் நேற்று மாலை 3 மணி நேரத்திற்கு மேல் கொட்டிய கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • மழையை தொடர்ந்து சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் மதிய நேரங்களில் சாலைகளில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த நிலையில் நேற்றும் பகல் முழுவதும் வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக 101.4 டிகிரி வெயில் பதிவானது. அதன் தொடர்ச்சியாக மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென கருமேகங்கள் திரண்டன. தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது.

    குறிப்பாக சங்ககிரியில் நேற்று மாலை 3 மணி நேரத்திற்கு மேல் கொட்டிய கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது.

    இதே போல ஓமலூரை அடுத்த பூசாரிப்பட்டி பகுதியில் இடி, மின்னலுடன் லேசான சாரல் மழை பெய்தது. அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் இருந்த தென்னை மரத்தில் இடி விழுந்தது. இதில் மரம் கொழுந்து விட்டு எரிந்தது.

    ஏற்காட்டில் நேற்றிரவு 9 மணியளவில் தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் இடி மின்னலுடன் கன மழையாக கொட்டியது. மழையை தொடர்ந்து அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் அங்கு தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    சேலம் மாநகரில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் திரண்டது. தொடர்ந்து கனமழை பெய்யும் என்று மக்கள் கருதிய நிலையில் லேசான தூறலுடன் மழை நின்று போனது. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த மழையை தொடர்ந்து சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்கினர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்ககிரியில் 46.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகரில் 0.7, ஏற்காடு 8.6, ஆனைமடுவு 1, ஆத்தூர் 7, ஏத்தாப்பூர் 10, கரியகோவில் 1, மேட்டூர் 14 மி.மீ., டேனீஸ்பேட்டை 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 91.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • இளைஞர்களை அத்துமீறு என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன் என்று அன்புமணி பேசினார்.
    • அத்துமீறு என்ற சொல்லுக்குள் பல அரசியல் உள்ளது என்று திருமாவளவன் தெரிவித்தார்.

    பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "இளைஞர்களை அத்துமீறு என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். படித்து வேலைக்கு போ அதன் பிறகு கட்சிக்கு வா. முதலில் குடும்பத்தை பார், என்னுடைய தம்பிகள் ஒரு வழக்கு கூட வாங்க கூடாது. ஐயா உங்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்துள்ளார் அதை பயன்படுத்தி படித்து வேலைக்கு செல்லுங்கள்" என்று பேசினார்.

    விசிக தலைவர் திருமாவளவனின் முழக்கமான அத்துமீறு என்பதை குறிப்பிட்டு அன்புமணி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அத்துமீறு என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பது புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர் என்று அன்புமணிக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

    சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "அமைப்பாவதால் மட்டும் தான் அத்துமீற முடியும். அத்துமீறலால் மட்டுமே அடக்குமுறைகள் உடையும் என்று 1991-92 காலகட்டத்தில் நான் முழக்கம் எழுதினேன். தனியாளாக அத்துமீற முடியாது. அமைப்பாக இருந்தால் தான் அத்துமீற முடியும். தனியாளாக கோவிலுக்குள் நுழைய முற்பட்டால் விட மாட்டார்கள். ஆனால் அமைப்பாக திரண்டு சென்றால் அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது.

    இந்த அத்துமீறலுக்கு என்ன பொருள் என்பது புரியாமல் அத்துமீறி என்று சொல்ல மாட்டேன் என்று சிலர் கலாய்க்கின்றனர். அத்துமீறு என்ற சொல்லுக்குள் பல அரசியல் உள்ளது. அது ஒரு தொலைநோக்கு பார்வை, 2000 ஆண்டுகால அடிமைத்தளையை உடைத்தெறியக்கூடியது அது. இந்த முழக்கம் ஒரு சாதிக்கு மட்டும் உரியது கிடையாது. 

    நடக்கக்கூடாது என்றால் நடப்போம். பேச கூடாது என்று பேசுவோம். இந்த இடத்தில நுழையக்கூடாது என்றால் நுழைவோம். எங்களுக்கும் அனைவருக்குமான உரிமைகள் உள்ளது என்பதற்கான குரலுக்கு பெயர் தான் அத்துமீறு" என்று தெரிவித்தார். 

    • சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண மலர்கள் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்படவுள்ளது.
    • கோடைவிழா நடைபெறும் அனைத்து நாள்களிலும் இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.

    சேலம்:

    ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் பிருந்தாதேவி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் ராஜேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடைவிழா மற்றும் மலர்க்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு 48-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்காட்சி வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந்தேதி (வியாழக்கிழமை) வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது.

    சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் இக்கோடை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோடை விழா மலர் கண்காட்சி தொடக்க விழாவில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

    கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் 1.50 லட்சம் மலர்களை கொண்டு மலர்க்காட்சி, பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகளும் அமைக்கப்பட உள்ளது. வன விலங்குகளின் வடிவமைப்புகள், மேட்டூர் அணை உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் வண்ண மலர்களைக் கொண்டு அமைக்கப்பட உள்ளது.

    சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண மலர்கள் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்படவுள்ளது. அதேபோன்று, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட வுள்ளன.

    இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

    கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்ல பிராணிகள் (நாய்கள்) கண்காட்சி, கலைப்பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஒருங்கிணைந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.

    கோடைவிழா நடைபெறும் அனைத்து நாள்களிலும் இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. இளைஞர்களுக்கான கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், கபடி, கயிறு இழுத்தல், மாரத்தான் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதேபோன்று, ஏற்காடு கோடை விழாவையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்புப் பஸ்கள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டபடி அங்கிருந்து தப்பித்து ஓடினார்.
    • விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் சேலத்தில் தங்கி இருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ படிப்பு சம்பந்தமான பயிற்சிக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.

    நேற்று இரவு பயிற்சி முடிந்ததும் வள்ளுவர் சிலை அருகே உள்ள அவர் தங்கி இருக்கும் விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இரவு 9.30 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மொபட்டில் பின்னால் வந்த ஒரு நபர் திடீரென அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டபடி அங்கிருந்து தப்பித்து ஓடினார். இதனை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    தொடர்ந்து டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற டவுன் போலீசார் அவரை பிடித்து டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த சண்முகநாதன் (வயது 44) என்பதும் சேலம் டவுன் பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருவதும், மேலும் தள்ளு வண்டியில் வைத்து துணி வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது.

    தொடர்ந்து அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

    ×