என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய தங்களது பெயர்களை பதிவு செய்திடலாம்.
    • கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    விளைபொருளின் விலை குறைந்தபட்ச ஆதார விலைக்கு கீழ் செல்லும் போது, ஆதார விலை திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஆதார விலையில் விளைபொருட்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் மூலம் நேரடி கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைத்திட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

    தற்போது தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில், விலை ஆதரவு திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

    விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து விவசாயிகளை பாதுகாத்து, விவசாயி களின் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்திடும் பொருட்டு விவசாயிகளிடமிருந்து தேங்காய் கொப்பரை எளிதில் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் 75 மெட்ரிக் டன் அரவைக் கொப்பரை ஆதார விலைத் திட்டத்தில் கொள்முதல் செய்திட அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசினால் 2023-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையான கொப்பரைக்கு கிலோ ரூ.108.60 என்ற விலையில் ராமநாதபுரம் ஒழுங்குமுறை அரவைக் விற்பனை கூடத்தில் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கொள்முதல் செய்யப்படும்.

    ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் விற்பனைக்கூட பொறுப்பாளரை அணுகி தங்களது பெயர்களை பதிவு செய்திடலாம். பெயர்களை பதிவு செய்யும் போது, நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    மத்திய அரசின் கொள்முதல் நிறுவனமான நாபெட் நிறுவனம் பரிந்து ரைக்கும் குறைந்தபட்ச தரத்தில் விளைபொருள் இருத்தல் அவசியமாகும். விவசாயிகள் தரத்தினை உறுதி செய்து குறைந்தபட்ச ஆதார விலை பெற்றிடலாம்.

    தமிழகத்தில் கொப்பரை கொள்முதலுக்கு தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம் மாநில முகமையாக செயல்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் தேங்காய் கொப்பரைக்கான தொகையினை விரைவில் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்திட அனைத்து நடவடிக்கை களையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.

    சேமிப்பு கிடங்குகளில் கொப்பரை குவியல்கள் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து 3 நாட்களுக்குள் அதற்குரிய தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • விரைவில் விவசாயிகளை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளேன் என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்க ளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியின் மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான தர்மர் தலைமை தாங்கினார். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதை யொட்டி டி.எஸ்.பி. தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தர்மர் எம்.பி. நிருபர்களிடம் கூறும்போது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவாக்கிய அ.தி.மு.க.வில் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ஜெயலலிதா பெயரை நீக்கிவிட்டு பதவியை அபகரிக்க துடிக்கும் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும், மீன வர்கள், விவசாயிகளுக்கு கடந்த பட்ஜெட்டில் எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. விரைவில் விவசாயிகளை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளேன் என்றார்.

    • ராமேசுவரம் கோவில் சுமார் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.
    • ஆவண அறையில் இருந்து 308 பழமையான ஓலை சுவடிகளை கண்டெடுத்தனர்.

    அகில இந்திய புண்ணியத்தலங்களில் ஒன்றாகவும் இந்தியாவில் உள்ள 12 ஜோதிலிங்கத்தில் ஒன்றாகவும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் விளங்கி வருகின்றது. அதுபோல் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் ஒரு முக்கிய புண்ணிய தலமாகவே ராமேசுவரம் கோவில் இருந்து வருகின்றது.

    இவ்வளவு பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் சுமார் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். அதுபோல் இந்த கோவிலில் ராமநாதபுரம் சீமையை ஆண்ட சேதுபதி மன்னர்களின் பங்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது. அது மட்டுமல்லாமல் கோவில் உருவான காலத்தில் கோவிலின் ஆகம விதிமுறைகள், வரலாறு, பட்டயங்கள் உள்ளிட்ட பலவிதமான தகவல்கள் ஓலை சுவடிகளிலே எழுதி வைக்கப்பட்டு வந்துள்ளது. அவ்வாறு ராமேசுவரம் கோவிலில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வைக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் கோவிலின் ஆவண அறையில் பாதுகாக்கப்பட்டு வந்தன.

    இந்தநிலையில் ராமேசுவரம் கோவிலில் மூன்றாம் பிரகாரத்தில் ஆவண அறையிலுள்ள ஓலைச்சுவடிகளை சரிபார்க்கும் பணியானது கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் ஆவண அறையில் இருந்து 308 பழமையான ஓலை சுவடிகளை கண்டெடுத்தனர். இந்த ஓலைச்சுவடிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து துணி ஒன்றில் அடுக்கி வைத்து கட்டி ஆவண அறையில் உள்ள பீரோ ஒன்றில் மீண்டும் பாதுகாத்து வைத்துள்ளனர்.

    இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறும் போது, ராமேசுவரம் கோவிலில் ஆவண அறையில் 308 ஓலைச்சுவடிகள் சரிபார்க்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. ராமேசுவரம் கோவிலில் கணக்கு வழக்குகள் அனைத்தும் தற்போது கம்ப்யூட்டரிலும், இதற்கு முன் நோட்டுகளிலும் எழுதி அது பராமரிக்கப்பட்டு வருகிறது. இதே போல் பழைய காலங்களில் ஓலைச்சுவடிகளில் தான் கோவிலின் அனைத்து கணக்கு வழக்குகள், நிலங்கள் மற்றும் வருவாய்கள், கோவில் திருவிழாக்கள், வரலாறுகள் போன்ற அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கலாம். ஆகவே ராமேசுவரம் கோவிலில் ஆவண அறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள் அனைத்தையும் சரியாக படித்து அதனை அனைவருக்கும் புரியும்படி மக்களின் பார்வைக்கு வைக்க இந்து சமய அறநிலையத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் அந்த ஓலை சுவடிகளில் எழுதப்பட்டுள்ள அனைத்து விதமான தகவல்களையும் இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இதன் மூலம் ஓலைச்சுவடிகளில் இடம் பெற்றுள்ள தகவல்களை பக்தர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் பட்சத்தில் ராமேசுவரம் கோவிலின் சிறப்பு இன்னும் அதிகமாகும். அதனால் உடனடியாக ராமேசுவரம் கோவிலில் உள்ள அனைத்து விதமான ஓலைச்சுவடிகளையும் பக்தர்கள் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து ராமேசுவரத்தைச் சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிக்குமார் கூறும் போது, ராமேசுவரம் கோவிலில் பழமையான 308 ஓலைச்சுவடிகள் ஆவண அறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓலைச்சுவடிகளில் இடம் பெற்றுள்ள எழுத்துக்களை இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் தொல்லியல் துறை வரலாற்று ஆய்வாளர்களைக் கொண்டு சரி பார்த்து படித்து ஓலைச்சுவடிகளில் இடம்பெற்றுள்ள தகவல்களை பக்தர்களுக்கும் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். அதுபோல் இந்த ஓலைச்சுவடிகளை பக்தர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராமேசுவரம் கோவிலில் ஆவண அறையில் பாதுகாக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடிகளை அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடலுக்குள் விழுந்தது குறித்து கடலோர காவல்படை போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.
    • நாட்டு படகு மற்றும் விசைப்படகுகளில் சென்று மீனவர்கள் தேடி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி பகுதியை சேர்ந்த மீனவர் பாண்டி(வயது30). இவர் நேற்று முன்தினம் (20-ந் தேதி) மீன்பிடி வலை, டீசல் உள்ளிட்ட மீன்பிடி சாத னங்களை சிறிய நாட்டு படகில் ஏற்றிக்கொண்டு கடலுக்கு சென்றார்.

    பின்பு நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளில் மீன்பிடி சாதனங்களை ஏற்றி கொண்டிருந்தார். அப்போது பாண்டி எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கடலுக்குள் விழுந்தார். இதனை பார்த்த சக மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கடலுக்குள் குதித்து மீனவர் பாண்டியை தேடினர்.

    அவர் கடலுக்குள் விழுந்தது குறித்து கடலோர காவல்படை போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் நவீன ரோந்து படகில் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    கடலில் மூழ்கிய பாண்டியை தேடும் பணி நேற்று 2-வது நாளாக நீடித்தது. கடலோர காவல்படையினருடன் மீனவர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை தேடி பார்த்தும் பாண்டி கிடைக்கவில்லை. இதையடுத்து அவரை தேடும் பணி இன்று 3-வது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நாட்டு படகு மற்றும் விசைப்படகுகளில் சென்று மீனவர்கள் தேடி வருகின்றனர். 3 நாட்களாகியும் பாண்டியை பற்றி எந்த தகவலும் இல்லாததால் அவரது குடும்பத்தினர் மற்றும் மீனவ கிராம மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • படகுகள் காற்றைக் கிழித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன.
    • எல்லை நோக்கி வந்த படகுகளை கடற்கரையில் கூடியிருந்த பொதுமக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

    ஆர்.எஸ்.மங்கலம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கடலூர் ஊராட்சிக்கு உட்பட்ட மோர் பண்ணை மீனவர் கிராமத்தில் தர்ம முனீஸ்வரர் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு பாய்மர படகு போட்டி நடந்தது.

    இந்த போட்டியில் மோர்ப்பண்ணை, தேவிபட்டணம், திருப்பாலைக்குடி, முள்ளிமுனை, தொண்டி புதுக்குடி, கோட்டைப்பட்டினம் புதுக்குடி வரையுள்ள 10-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த 37 மீனவர் படகுகள் கலந்து கொண்டன.

    ஒரு படகுக்கு 6 பேர் வீதம் கடலுக்குள் 5 மைல் தூரம் எல்லையாக நிர்ணயம் செய்யப்பட்டு மோர் பண்ணை கிராமத்தலைவர் சிங்காரம், ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி பாலன், ஒன்றிய கவுன்சிலர் கமலக்கண்ணி, மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் மூர்த்தி, கிராம செயலாளர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் கொடியசைத்து போட்டிகள் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட படகுகள் காற்றைக் கிழித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன.

    பின்னர் எல்லை நோக்கி வந்த படகுகளை கடற்கரையில் கூடியிருந்த பொதுமக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

    இந்த போட்டியில் முதல் பரிசு ரூ. 40 ஆயிரத்தை தொண்டி புதுக்குடியைச் சேர்ந்த கருப்பையா ரத்தினவேல் படகு பெற்றது. 2-ம் பரிசு ரூ. 30 ஆயிரத்தை மோர்ப் பண்ணையைச் சேர்ந்த அய்யாதுரை நற்குணம் சாரதி படகும், 3-ம் பரிசு ரூ.25 ஆயிரத்தை மோர்ப்பண்ணையை சமயக் கண்ணன் யாழினி படகும், 4-ம் பரிசு ரூ. 20 ஆயிரத்தை திருப்பாலைக்குடியைச் சேர்ந்த இளங்கோவன் டி.டி.குரூப்ஸ் படகும், 5-ம் பரிசு ரூ. 15 ஆயிரத்தை தொண்டியை சேர்ந்த சீதாலட்சுமி படகும் பெற்றன.

    போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவிபட்டணம் கடலோர காவல் படையினரும் திருப்பாலைக்குடி போலீசாரும் செய்திருந்தனர். இந்த படகு போட்டியை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.

    • தைராய்டு பரிசோதனை முகாம் நடந்தது.
    • ஜமாத் தலைவர் ஜெய்னுலாபுதீன் முன்னிலை வகித்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் தெற்கு மாவட்டம் வாலிநோக்கம் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தனியார் மருத்துவமனை இணைந்து தைராய்டு பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாமை நடத்தியது. கிளைத் தலைவர் நூர் முகம்மது தலைமை தாங்கினார். ஜமாத் தலைவர் ரஹ்மத்துல்லா, மஸ்ஜித் துல்ஹுதா ஜமாத் தலைவர் ஜெய்னுலாபுதீன் முன்னிலை வகித்தனர்.

    த.மு.மு.க. தலைவர் வாவா ராவுத்தர், செயலாளர் சம்சு கனி, மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். கடலாடி ஒன்றியத் தலைவர் முகமது அலி புட்டோ வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஹுசைன் கனி, ம.ம.க. மாநில பிரதிநிதி- மாநில செயற்குழு உறுப்பினர் முகம்மது முஹிதுல்லா, வாலிநோக்கம் ஊராட்சி தலைவர் பீர்முகம்மது, ஒன்றிய தலைவர் காதர் சுல்தான் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். சமூக நீதி மாணவர் இயக்கத்கின் மாவட்ட செயலாளர் ஹபீப் ரஹ்மான் நன்றி கூறினார்.

    • ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியனில் ரூ.53.85 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி யூனியன் தினைக்குளம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் திடீர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர் தினைக்குளம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8.30 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டும் பணி நடைபெறுவதை பார்வையிட்டு மாணவ- மாணவிகளின் பயன்பாட்டிற்கு ஏற்ப பணிகளை உரிய காலத்தில் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கான காம்பவுண்ட் சுவர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.10.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டதுடன் பள்ளி வளாகத்தை சுற்றி உட்புறப் பகுதியில் காம்பவுண்டு சுவரில் மாணவ- மாணவிகள் பார்த்து பயன்பெறும் வகையில் கல்வி முன்னேற்றத்திற்கான விழிப்பு ணர்வு ஓவியங்கள் வரைந்துள்ளதை பார்வையிட்டு பாராட்டினார்.

    இதே போல் ஒவ்வொரு பள்ளியிலும் காம்பவுண்டு சுவர் உட்புறத்தில் பொது அறிவு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அமைத்து மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    பின்னர் தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடி கல்வித்திறன் குறித்து கேட்டறிந்தார்.தினைக்குளம் ஊராட்சியில் 15-வது நிதி குழு திட்டத்தின் மூலம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தி ற்கான கட்டடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தினார். அதே பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் கிராம சாலையின் பக்கவாட்டுகளில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வாய்க்கால் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின்போது திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன் கணேஷ் பாபு, ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் அருண் பிரசாத், ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கடலாடி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • மாடுகளின் உரிமையாளர்களிடம் நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூர் கிராமத்தில் அரிய நாச்சி அம்மன் கோவில் திரு விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு பந்தயத்திற்கு 12 மைல் தூரமும், சின்ன மாடு பந்தயத்திற்கு 8 மைல் தூரமும் போட்டி நடந்தது. பெரிய மாடு மற்றும் சின்ன மாடு பந்தயத்தில் 33 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

    இதில் பெரிய மாடு பந்தயத்தில் முதல் பரிசை விளாத்திகுளம் வீர ஜோதி என்பவரது மாடும், 2-வது பரிசை மதுரை மாவட்டம் திருப்பாலை விஷால் என்பவரது மாடும், 3-ம் பரிசை கே.வேப்பங்குளம் நல்லதேவர் என்பவரது மாடும், 4-ம் பரிசை சித்திரங்குடி ராமமூர்த்தி என்பவரது மாடும் வென்றது.

    சின்ன மாடு பந்தயத்தில் முதல் பரிசை சுரேஷ்குமார் என்பவரது மாடும், 2-ம் பரிசை ராஜேந்திரன் என்பவரது மாடும், 3-ம் பரிசை பூலாங்கல் மந்திரமூர்த்தி என்பவரது மாடும், 4-ம் பரிசை மேலச் செல்வனூர் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி மாடும் பெற்றன.

    மாடுகளின் உரிமை யாளர்களிடம் நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர். விழா ஏற்பாடு களை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் மிளகாய் பதப்படுத்தும் தொழிற்சாலை உருவாகும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
    • விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக அமையும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் கிராமத்தை சேர்ந்த தமிழக வைகை பாசன சங்கத்தலைவர் பாக்யநாதன் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை விவசாயம் நிறைந்த பூமியாகும். எனது முன்னோர்கள் காலத்திலும் சரி, பல நூற்றாண்டு காலமாக மிளகாய் சாகுபடி செய்வதே இந்த பகுதியில் நிரந்தர விவசாயமாக இருந்து வருகின்றன.

    அதிலும் முண்டு மிளகாய் என்பது இன்று பன்னாட்டு வர்த்தக அளவில் வரவேற்பு பெற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை தரக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது.

    இந்த மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மிளகாய் பயிரிட்டு சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த முண்டு மிளகாய் பொருத்தவரை அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.

    இதனால் பொதுமக்கள் அதிக வரவேற்பை பெற்று மிளகாய் விற்பனையில் முன்னனியில் இருந்து வருகிறது. இத்தகைய மிளகாய்க்கு புவிசார் குறியீடு வேண்டி மத்திய, மாநில அரசுகளிடம் விண்ணப்பித்து 100 ஆண்டு கால நினைவை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த மாதம் மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு விவசாயிகளிடம் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    தற்பொழுது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகமாக மிளகாய் விளைச்சல் வரக்கூடிய இந்த மாவட்டத்திற்கு மிளகாய் மண்டலம் அறிவித்ததன் மூலம் 2 சாதனையும் ஒரே நேரத்தில் கிடைத்த பெருமையால் விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிய பயனுள்ளதாக அமையும்.

    இந்த திட்டத்தினால் மாவட்டத்திலேயே மிளகாய் பதப்படுத்தும் தொழிற்சாலை உருவாகும் நிலை மற்றும் மிளகாயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தல் என்ற நிலை உருவாகும். இது மட்டுமின்றி மாவட்டத்திற்கு பன்னாட்டு வணிகம் நிறுவனம் வர தொடங்குவார்கள்.

    இதன் மூலம் விவசாயி களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் காணும். மேலும் விவசாயிகள் மிளகாய் சாகுபடிக்கு அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். இத்தகைய சிறப்பான திட்டத்தை தந்த முதலமைசருக்கு அனைத்து மிளகாய் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கம் சார்பில் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பக்தர்கள் சேது மாதவ தீர்த்த தெப்பக்குளத்திற்கு புனித நீராட அனுமதிக்கப்படவில்லை.
    • பணியாளர்கள் குடங்களில் தண்ணீரை கொண்டு சென்று அதன் மூலம் பக்தர்கள் மீது ஊற்றி வந்தனர்.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலாவதாக அக்னிதீர்த்த கடலில் நீராடி விட்டு அதன் பின்னர் கோவிலில் உள்ள 22 தீர்த்தக் கிணறுகளிலும் நீராடிய பின்னர் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள சேது மாதவ தீர்த்த தெப்பக்குளத்திற்கு பக்தர்கள் புனித நீராட செல்லும் பாதை மிக குறுகலாக இருந்து வந்ததால் விடுமுறை நாட்களில் பக்தர்கள் நெருக்கடிகள் சிக்கித் தவித்து வந்தனர்.

    இந்த நிலையில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவுப்படி ராமேசுவரம் கோவிலில் உள்ள சேது மாதவ தீர்த்த தெப்பக்குளத்திற்கு பக்தர்கள் நீராட செல்லும் பாதையை அகலப்படுத்தும் பணியானது கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாகவே நடைபெற்று வந்தது. இந்த பணியை தொடர்ந்து பக்தர்கள் சேது மாதவ தீர்த்த தெப்பக்குளத்திற்கு புனித நீராட அனுமதிக்கப்படவில்லை.

    அதற்கு பதிலாக யாத்திரை பணியாளர்கள் குடங்களில் தண்ணீரை கொண்டு சென்று அதன் மூலம் பக்தர்கள் மீது ஊற்றி வந்தனர். இதனிடையே சேது மாதவதீர்த்த தெப்பக்குளத்தை அகலப்படுத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று முதல் வழக்கம் போல் பக்தர்கள் சேது மாதவ தீர்த்த தெப்பக்குளம் வரை நடந்து வந்து புனித நீராடி சென்றனர்.

    • அபிராமம் வாரச்சந்தையில் எலக்ட்ரானிக் தராசுகளிலும் எடை மோசடி நடந்துள்ளது.
    • இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பேரூராட்சி பகுதி மற்றும் வாரச் சந்தையில் எடை கற்கள் மற்றும் எலக்ட்ரானிக் தராசு களில் முறைகேடு செய்து எடை குறைவாக பொருட்கள் விற்பனை நடைபெறு வதாக புகார் எழுந்துள்ளது.

    மளிகை, காய்கறி, பழக் கடை உள்பட அனைத்து கடைகளிலும் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொருட்கள் எடைபோட எடைக்கற்கள் பயன்படுத்தப் பட்டது. எடைகற்கள் சரியான எடையில் இருக்கி றதா? என ஆய்வு செய்து முத்திரை யிடப்பட்டு வந்தது.

    நாளடைவில் பெரும்பா லான கடைகளில் எடைகற்க ளில் முத்திரை இல்லாமல் பயன்படுத்த தொடங்கினர். மேலும் எடைக்கற்கள் தேய்ந்து விடுவதால் கிலோவிற்கு 150 கிராம் முதல் 200 கிராம் எடை வரை குறைவாகி விடுவதும் உண்டு. இதைத் தொடர்ந்து எலக்ட்ரானிக் தராசு மூலம் எடை போடும் முறை பயன்பாட்டுக்கு வந்தது.

    எலக்ட்ரானிக் தராசில் பொருட்களை வைத்ததும் அதன் எடை குறியீடு டிஜிட்டல் முறையில் தெரியும். இதனால் பொருட்களை வாங்குபவர்கள் சரியான எடை இருப்பதாக நம்பி வாங்கி செல்லும் நிலை உள்ளது. சமீப காலமாக வியாபாரிகள் எலக்ட்ரானிக் தராசுகளிலும் எடையை குறைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

    அபிராமம் பேருராட்சியில் சுற்றியுள்ள 90-க்கும் அதிகமான கிராமங்களுக்கு மேல் இருப்பதால் இங்கு வாரத்தில் முதல் நாளான திங்கட்கிழமை வாரச்சந்தை நடபெறுகிறது. இதேபோல வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு தினங்களில் சந்தை நடைபெறும். இந்த சந்தைகளில் காய்கறி, பழங்கள், மீன், தானிய வகைகள் உள்பட 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    வாரச்சந்தைகளில் வாங்கும் பொருட்களுக்கு தராசில் உள்ள டிஜிட்டல் அளவு சரியாக காட்டி னாலும், 200 கிராம் எடை குறைவாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    எடை குறைவாக இருக்கும் வகையில் எலக்ட் ரானினிக் தராசுகளில் வியாபாரிகள் மோசடி செய்துள்ளனர். எடை கற்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டிற்கான முத்திரை யிடப்படுவதில்லை.

    இதுபோன்ற தவறுகள் வாரச்சந்தைகளில் தான் அதிகமாக நடந்துவருகிறது. இதனால் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

    இதுகுறித்து அபிரா மத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கூறுகையில், வாரச்சந்தை கடைகளில் 1 கிலோ பொருட்கள் வாங்கிய தில் மிகவும் குறைவாக இருப்பதாக சந்தேகம் அடைந்தேன். அதை வேறு இடத்தில் எடை போடும்போது ஒரு கிலோவிற்கு 150 கிராம் குறைவாக இருந்தது.

    வாரச்சந்தை கடைகளில் உள்ள கடைகளில் வாங்கும் பொருட்கள் எடை குறைவாக உள்ளன. காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் விலை குறைவாக விற்பதாக கூறி எடையை குறைத்து விடு கின்றனர். எலக்ட்ரானிக் தராசுகளில் இதுபோல் முறைகேடு செய்வது அதிர்ச்சியாக உள்ளது. அபிராமம் பகுதியில் வாரச்சந்தை உள்ளிட்ட அனைத்து கடைகளிலும், தராசுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • கமுதி கோர்ட்டில் ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு செய்தார்.
    • சிவில் வழக்குகள் மிக குறைவாக பதிவாகியுள்ளது ஏன்? என்று வக்கீல்களிடம் கேள்வி எழுப்பினார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி ஆய்வு செய்தார். நீதிமன்ற அலுவலக கோப்புகள் மற்றும் குற்ற வழக்குகள் குறித்தும் விசாரித்தார். சிவில் வழக்குகள் மிக குறைவாக பதிவாகியுள்ளது ஏன்? என்று வக்கீல்களிடம் கேள்வி எழுப்பினார். கோர்ட்டு வளாகத்தில் நீதிபதி ஸ்ரீமதி மரக்கன்று நட்டு, பணியாளர்களிடம் தினமும் இந்த மரக்கன்றுக்கு கண்டிப்பாக தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். கமுதி நீதிமன்றத்திற்கான சொந்த கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கியும், கட்டுமான பணி தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அதனை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் வக்கீல் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் தலைமை நீதிபதி கவிதா, கூடுதல் மாவட்ட நீதிபதி கஜாரர் ஜிஜி, முதுகுளத்தூர் சார்பு நீதிபதி ராஜகுமாரன், பரமக்குடி கூடுதல் மாவட்ட நீதிபதி சாந்தி, உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கமுதி மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி சங்கீதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ×