என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • வணிக வளாகங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வலியுறுத்தி துண்டு பிரசுரத்தை பா.ம.க.வினர் வழங்கினர்.
    • இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் அக்கீம் கலந்து கொண்டார்.

    ராமநாதபுரம்

    கொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர் ராமதாசின் ஆணைக்கிணங்க ராமநாதபுரம் நகரம் முழுவதும் நகர செயலாளர் பாலா தலைமையில் வணிக வளாகங்களில் உரிமையாளர்களை சந்தித்து கடையின் பெயர் பலகை மற்றும் விளம்பர பதாகைகளில் தமிழில் பெயர் வைக்கக் கோரி ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் ெசய்தனர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கீம் கலந்து கொண்டார்.

    மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, மாவட்ட தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், மண்டபம் ஒன்றிய செயலாளர் மக்தூம் கான், கீழக்கரை நகர செயலாளர் லோகநாதன், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ், தலைவர் ஷெரீப், அமைப்பாளர் கபில் தேவ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் இப்ராகிம், தலைவர் இமானுவேல், மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சித்திரை திருவிழா 5-ந் தேதி தொடங்குகிறது.
    • பல வர்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    பரமக்குடி

    பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண ஜனங்களுக்குச் சொந்தமான சுந்தரராஜப் பெருமாள் கோவிலின் கோடை திருவிழா சைத்ரோத்ஸவம் 12 நாட்கள் நடைபெறுகிறது. இன்று

    (30-ந் தேதி) கோடை திருவிழா தொடங்கி தொடர்ந்து திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது.

    வருகிற 5-ந் தேதி (வெள்ளி)அதிகாலை 4.50 மணியளவில் கோவில் படித்துறையின் எதிரே உள்ள வைகையாற்றில் வண்ண மலர்களால் சூழப்பட்ட பூப்பல்லக்கில் பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு இறங்குகிறார். சித்ரா பவுர்ணமி நிலா வெளிச் சத்திலும், தீவட்டி ஒளியிலும் வாண வேடிக்கை முழங்க வைகையாற்றில் இறங்கும் கள்ளழகரை கோவிந்தா...கோவிந்தா... என்று கூடி இருக்கும் திரளான பக்தர்கள் விண்ணை முட்டும் அளவுக்கு முழங்கி பக்தி பரவசத்துடன் சுவாமியை வணங்குவார்கள்.

    வைகையாற்றில் இறங்கும் கள்ளழகர் பல மண்டகப் படிகளுக்குச் சென்று விட்டு, மேலச்சத்திரம் பகுதியில் உள்ள தல்லாகுளம் மண்டகப் படியை சென்றடைவார். தொடர்ந்து, அன்று காலை 9.55 மணியளவில் கள்ளழகர் குதிரை வாகனத்தில் வீற்றிருந்து தல்லாகுளம் மண்டகப்படியில் இருந்து வெளியேறுவார். அப்போது விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பீச்சாங்குழல் என்னும் துருத்தி மூலம் மஞ்சள் நீரை கள்ளழகர் மீது பீய்ச்சியடிப்பார்கள்.

    பின்னர் மேலச்சத்திரம், ஓட்டப்பாலம், காட்டு பரமக்குடி, மஞ்சள்பட்டினம் சென்று அங்குள்ள கோவிலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பின்பு, ஆற்றுப் பாலம், நகர் பகுதி வழியாக வந்து அனுமார் கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிப்பார். மாலையில அங்கிருந்து புறப்பட்டு பூக்கடை பஜார், பெரிய கடைவீதி, நகைக்கடை பஜார், காந்தி சிலை சமீபம், பெருமாள் கோவில், எமனேசுவரம் சென்று வண்டியூர் என்னும் காக்காத்தோப்பை சென்றடைந்து அங்குள்ள கருப்பணசுவாமி கோவிலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    இதனிடையே பரமக்குடி ஆற்றுப் பாலம் பகுதியில் இருந்து ஆயிரம் பொன் சப்பரம் வைகையாற்று மணலில் சுமார் 2 கி.மீ.தூரம் இழுத்து செல்லப்பட்டு காக்காத்தோப்பை சென்றடையும். அங்கு சப்பரத்தினுள் கள்ளழகரை கொடுத்து வாங்குவார்கள். இந்த நிகழ்ச்சிகளை பார்க்க பரமக்குடி மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து பகுதிகள், சுற்றுப்புற கிராம மக்கள் பல்லாயிரக்க ணக்கானவர்கள் குழந்தைகள், குடும்பத்தினருடன் திரளாக திரண்டு வந்து வைகையாற்று மணலில் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்தும், நிலா ஒளியில் விளக்கெண்ணெய் தோசை உள்பட பல வகையான உணவு வகைகளை சாப்பிட்டும் மகிழ்வார்கள்.

    6-ந்தேதி (சனி) இரவு வாணியர் உறவின்முறை யார்களின் மண்டகப்படியில் தசாவதார காட்சிகள் நடைபெறும். 7-ந் தேதி (ஞாயிறு) மட்டா மண்டகப்படியிலும், 8-ந்தேதி (திங்கள்) சீனிவாசய்யர் சன்ஸ் மண்டகப்படியிலும், 9-ந்தேதி (செவ்வாய்) காலை மண்டகப்படியில் இருந்து கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி வைகையாற்றில் இருந்து புறப்பட்டு கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நகரின் பல முக்கிய வீதிகளில் வலம் வந்து மாலை கோவிலுக்குள் சென்றடைவார்.

    அன்று இரவு பெருமாள் கண்ணாடி எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறும். 10 -ந் தேதி (புதன்) உத்ஸவ சாந்தியும், 11-ந்தேதி (வியாழன்) வாணியர் உறவின்முறையார்கள் சார்பில் பாலாபிஷேகமும் நடைபெறும். இரவு பூப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி விடிய... விடிய.. நாதசுரம் முழங்க நகரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மானேஜிங் டிரஸ்டி துடுகுச்சி டி.ஆர்.நாகநாதன், டிரஸ்டி அன்டு டிரசரர் குச்சேரி கே.ஆர்.பாலமுருகன், டிரஸ்டிகள் சலகவா எஸ்.என்.நாகநாதன், கெட்டி ஜி.என்.கோவிந்தன், பொட்டி பி.கே.முரளிதரன் ஆகியோர் செய்துள்ளனர். திருவிழாவையொட்டி, பெருமாள் கோவில் கோபுரம், நகரில் பல வர்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் பொருட்காட்சியை நகரசபை தலைவர் திறந்து வைத்தார்.
    • ஸ்ரீ சாய்ராம் எண்டர்டெய்ன்மெண்ட் உரிமையாளர் எம்.கே.உதய குமார் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கேணிக்கரை நல்லம்மாள் மைதானத்தில் ஸ்ரீ சாய்ராம் எண்டர்டெய்ன்மெண்ட் நடத்தும் மாபெரும் பொன்னியின் செல்வன் பொருட்காட்சி நேற்று முதல் தொடங்கி 35 நாட்கள் நடக்கிறது. தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி நடை பெறும்.

    இதில் பொன்னியின் செல்வன் அரண்மனை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.பொன்னியின் செல்வன் நட்சத்திரங்கள் கூடிய செல்பி பாயிண்ட் இடம்பெற்றுள்ளது. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை கொண்டாடி மகிழ வித விதமான ராட்டினங்கள், ஜெயன்ட் வீல் ராட்டினம், கொலம்பஸ் ராட்டினம், டிஸ்கோராட்டினம், ஹெலிகாப்டர் ராட்டினம், டிராகன் ராட்டினம்,ஜம்பிங் பலூன், யானை கார், பைக், படகு சவாரி, 3-டி ஷோ திகிலூட்டும் பேய் வீடு, போன்ற எண்ணற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

    சாப்பிட்டு மகிழ வித, விதமான உணவு வகைகள் மற்றும் வீட்டிற்கு தேவை யான பொருட்கள், குழந்தை களுக்கு தேவையான பொம்மை வகைகள், பெண்களுக்கு தேவையான பேன்சி பொருட்கள் விற்பனையாகிறது.

    பொருட்காட்சியை ராமநாதபுரம் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் தலைமை தாங்கி திறந்து வைத்தார். நகரசபை துணைத் தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் டி.ஆர்.செல்வராணி விஸ்வநாதன் குத்து விளக்கு ஏற்றினார்.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சாய்ராம் எண்டர்டெய்ன்மெண்ட் உரிமையாளர் எம்.கே.உதய குமார் செய்திருந்தார்.

    • அடிப்படை வசதி செய்து கொடுக்காததால் பயனாளிகளால் புறக்கணிக்கப்பட்ட சுனாமி வீடுகள் சமூக விரோதிகள் கூடாரமாக மாறி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
    • சீமை கருவேல மர காடுகளுக்குள் வீடு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட மக்களை சுனாமி பேரலை பாதிப்பிலிருந்து பாதுகாக்க திட்டம் வகுத்து கோடிகளை கொட்டி 144 கான்கிரீட் வீடுகளை கட்டி மணல் குடியில் ரம்மியமான கிராமம் அமைக்கப்பட்டது. அங்கு அடிப்படை வசதிகளோ வாழ்வாதார முன்னேற்பாடுகளோ செய்து கொடுக்கப் படாததால் குடியிருப்பு காலியாகி கருவேலமரம் மண்டிக்கிடக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி சுனாமி தாக்கியதில் தமிழகத்தில் மட்டும் 2,758 பேர், புதுவையில் 377 பேர். தென்னிந்தியாவின் மொத்த பொருளாதார இழப்பில் 50 விழுக்காட்டை(சுமார் ரூ.4,700 கோடி) அளவுக்கு, தமிழகம் சந்தித்தது. இதனால் திரும்பும் திசையெங்கும் மரண ஓலம் பசி பட்டினியில் வாடிய மக்களை மீள் கட்டமைப்பு செய்வதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதிலும் குறிப்பாக வீடுகளை இழந்து தவிக்கும் பாதுகாப்பாற்ற மீனவ மக்களுக்கு இயற்கை இடர்பாடுகளிலிருந்து தங்களை கவலையின்றி பாதுகாத்துக்கொள்ள ஏதுவாக பாதுகாப்பான கான்கிரீட் வீடுகளை மத்திய அரசின் நிதி உதவியோடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ராஜீவ்காந்தி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் மத்திய மாநில அரசுகளின் நிதி பங்களிப்போடு பாதுகாப்பான இடங்களில் வீடுகள் கட்டப்பட்டது.

    அதனை பேரலை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளின் போது பாதிக்கப்பட்ட மக்களை தேர்வு செய்து கடந்த 2009-10-ம் நிதியாண்டில் வழங்கப்பட்டது.

    இந்தமாதிரியான மீனவ குடியிருப்புகள் பாம்பன், தங்கச்சிமடம் மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதியில் கட்டப் பட்டுள்ளதை போல் ராமநாதபுரம் மாவட்டம் மணக் குடியில் அமைந்துள்ளது.

    மணக்குடி ஆற்றுநீர் கடலில் கலக்கும் ரம்மியமான முகத்துவாரம் பகுதி இயற்கையின் பசுமை மாறாது மண்மணக்கும் இடமாக இருக்கும் இந்த மணக்குடியில் க ழிவறை, படுக்கை அறை, வரவேற்பறை என அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட 144 கான்கிரீட் சுனாமி வீடுகள் ரூ.425.40 லட்சம் செலவில் கட்டப்பட்டு ஆழிப் பேரலையில் பாதிக்கப்பட்டு பகுதியில் வாழ்ந்துவந்த மீனவ மக்களுக்கு வழங்கப்பட்டது.

    மீனவ கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு வாழ்வாதாரமே மீன்பிடி தொழில்தான். தற்போது மீனவ கிராமங்களிலிருந்து மீள்குடியேற்றம் என்ற பெயரில் வேளாண் பகுதியில் அவர்களை குடியேற்றியதால் வாழ்வாதாரத்திற்கு அவர்களால் என்ன செய்ய இயலும்?.

    இந்த கிராம மக்கள் போக்குவரத்து, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் வாழ தகுதியற்று தனித்து விடப்பட்டதை போல இருந்ததால் பேரெழுதி பூஜை போட்டு மகிழ்வோடு குடியேறினர். மக்கள் ஒரு சில மாதங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் ஒருவர் பின் ஒருவராக வீட்டை காலி செய்ய தொடங்கி ஒட்டுமொத்த கிராமமே காலியானது.

    வசிக்க மக்கள் இல்லாததால் மெல்ல மெல்ல சமூக விரோதிகளின் கூடாரமாகி சீமை கருவேலமரம் வளரவே வீட்டை சுற்றி காடு என்ற நிலை மாறி இப்போது சீமை கருவேலமர காடுகளுக்குள் வீடு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக மது, மாது என ஊருக்கு ஒதுக்குபுறமாக எந்த தொந்தரவும் இல்லாத ரிசார்ட்டாக மாறியுள்ள மணக்குடி சுனாமி வீடுகள் இப்போது சமூக விரோதி களின் கூடாரமாக மாறி வருகிறது.

    இது தொடர்பாக கருப்பன் குடும்பன் பச்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் சதீஷ்குமார் கூறுகையில், அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தகுதி வாய்ந்த சரியான பயனாளிகள் தேர்வு செய்யப்படாமல் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டிய நபர்களுக்கு வீடு ஒதுக்கியதால் இங்கு குடியேற மக்கள் முன்வர வில்லை. மணக்குடி சுனாமி குடியிருப்பில் குடிநீர், போக்குவரத்து, மின்சாரம், சாலை, மருத்துவம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப் படாததால் புலம்பெயர்ந்து சென்று விட்டனர். இது தொடர்பாக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என பாதிக்கப்பட்ட பயனாளிகள் கூறுகின்றனர் என்றார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நடமாடும் நூலகம் செயல்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
    • ஒவ்வொருவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட் டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவி கள் மற்றும் பொதுமக்களிடம் புத்தகம் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் நடமாடும் நூலகம் வாகனம் மூலம் கிராமப் பகுதிகளுக்கு நாளை முதல் (2-ந் தேதி) முதல் செல்ல உள்ளன.

    இதன் மூலம் போட்டி தேர்வுகளில் பங்கேற்பதற்கு ஏதுவாக புத்தகங்கள் படிப்பதற்கும் மேலும் மாணவ, மாணவிகள் பொது அறிவுகள் குறித்து தெரிந்து கொள்ளவும், தொழில் துறை தொடர்பான வழிகாட்டி கையேடுகளை படித்து தெரிந்து கொள்ள வும் முடியும்

    பழம்பெருமையையும், பண்பாட்டையும் அறிந்து கொள்ளும் வகையில் வரலாற்று சிறப்புகளை தெரிந்து கொள்ளவும், பெண்களின் சுய முன் னேற்றத்திற்கு தன்னம்பிக்கை வளர்க்கவும், தேவையான நூல்களைப் படித்து அறிந்து கொள்ளவும் மற்றும் கவிதை தொகுப்புகள் கவிதை கட்டுரைகள் போன்ற சிறப்பு வாய்ந்த புத்தகங்கள் இந்த நடமாடும் நூலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

    அதேபோல் நடமாடும் நூலகம் செல்லும் பகுதிகளில் மாணவ, மாணவிகள் வாகனத்தி லேயே அமர்ந்து படிக்கும் வகையிலும் குழுவாக மாணவ, மாணவிகள் கருந்துரையாடல் மேற்கொள்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வாகனத்தில் 2500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. கோடைகாலத்தில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் நடமாடும் நூலகம் உங்களைத் தேடி வருகிறது. நீங்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி அறிவுத்திறனை மேம்படுத்தவும் புத்தகம் வாசிப்பை மேம்படுத்தவும் பயனுள்ள வகையில் ஒவ்வொருவரும் பயன் படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளராக வி.கே.சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
    • துரை வைகோவுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க. புதிய மாவட்ட பொறுப்பாளர்களுக்கான தேர்தல், ஒழுங்கு நடவ டிக்கை குழு உறுப்பினர் மகப்பூப்ஜான் தலைமையில் நடந்தது. நிர்வாகிகளாக தேர்வு பெற்றவர்களை முன்னாள் மாவட்ட செயலாளர் பேட்ரிக் முன்னிலையில் அறிவித்தனர்.

    மாவட்ட அவைத் தலைவராக பிரகாசம், மாவட்ட செயலாளராக வி.கே.சுரேஷ், பொரு ளாளராக ராஜ்குமார், மாவட்ட துணைச் செயலா ளர்கள் மங்களேசுவரி, சரவணன், பிச்சை, குகநாதன், பாஸ்கரன், மாவட்ட தலைமை உறுப்பி னர்களான சுபாஷ், செந்தில், நித்தியானந்தம், சத்தியேந்திரன், மனோகரன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இவர்களை ஒருமனதாக தேர்வு செய்த தொண்டர்க ளுக்கும், நிர்வாகிகளுக்கும் ம.தி.மு.க. தலைவர் வைகோவுக்கும், தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    • மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.
    • முருகானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    பரமக்குடி புதுநகர் டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. பள்ளி தலைவர் முகைதீன் முசாபர் அலி, முருகேசன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, குரு ஏழுமலை, தேசிய தலைவர், அகத்திய ஞானம் நிறுவன பொதுச் செயலாளர் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

    பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் பரமக்குடி நகர் மன்ற கவுன்சிலர் அப்துல் மாலிக், முருகானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    போட்டியை அப்துல்கலாம் பள்ளி குழுவினர் மற்றும் பாரதி விளையாட்டு சங்க தலைவர் அசான் சண்முகவேல் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

    • ஜீவா நகரில் உள்ள பெட்டிக்கடை முன்பு கனகராஜ் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
    • நண்பர்கள் கனகராஜூடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம் பட்டேல் தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது35). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று இரவு ஜீவா நகரில் உள்ள பெட்டிக்கடை முன்பு கனகராஜ் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த பர்மா காலனியை சேர்ந்த துரைமுருகன் (22) மற்றும் அவரது நண்பர்கள் கனகராஜூடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இந்த மோதலில் துரைமுருகன் ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கனகராஜுவை சரமாரியாக குத்திவிட்டு தப்பினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கனகராஜ் பரிதாபமாக இறந்தார்.

    தகவலறிந்த எமனேசுவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து துரைமுருகனை கைது செய்தனர்.

    பரமக்குடியில் நடந்த இந்த கொலை சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • தொடர் விடுமுறையையொட்டி ராமேசுவரத்தில் இன்று குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    • புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    ராமேசுவரம்

    ெதன்தமிழகத்தின் பிர சித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்ேதாறும் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இங்குள்ள அக்னி தீர்த்தகடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.

    இதன் காரணமாக ராமே சுவரத்தில் நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் காணப் படும். குறிப்பாக அமா வாசை, விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகரித்து காணப்படும்.

    இந்த நிலையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமையான இன்று வழக்கத்தைவிட பக்தர்கள், சுற்றுலா பயணி களின் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

    அதிகாலை முதலே அக்னி தீர்த்தகடலில் பெண்கள் உள்பட ஏராள மானோர் புனித நீராடி பின்னர் கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    அதேபோல் ராமேசு வரத்தில் உள்ள தனுஷ் கோடி, அரிச்சல் முனை, அப்துல்கலாம் நினைவு மண்டபம் போன்ற பகுதி களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

    • சாயல்குடி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • புதிய பைப் லைன்கள் அமைத்து தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் மாரியப்பன் தலைமையில் நடந்தது. துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், செயல் அலுவலர் சேகர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முத்து ராமலிங்கம் வரவேற்றார்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    துணை சேர்மன்: சாயல்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகில் உள்ள இடத்தை சுத்தம் செய்து அந்த பகுதியில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் காமராஜ்: 14-வது வார்டில் உள்ள குடிநீர் பைப் லைன்கள் 40 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டவை. அவை சேதமடைந்துஅந்த பகுதியில் பொதுமக்கள் குடிநீர் பெற முடியாமல் உள்ளனர். புதிய பைப் லைன்கள் அமைத்து தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.

    சாயல்குடி வி.வி.ஆர். நகர், நொண்டி பெருமாள் ஊரணி பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்க பலமுறை வலியுறுத்தியும் பூங்கா அமைக்கவில்லை. விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் அழகர் வேல் பாண்டியன்: சாயல்குடி பொது மயானத்தை மின்சார மயானமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் மாணிக்கவேல்: 15-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பேவர் பிளாக் மற்றும் தார் சாலை அமைக்க வேண்டும்.

    கவுன்சிலர் குமரையா: சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இருந்து அண்ணாநகர் வழியாக இரு வேலி பகுதிக்கு தார்சாலை அமைக்க வேண்டும்.

    கவுன்சிலர்ச ண்முகத்தாய் சுப்பிரமணியன்: சாயல்குடி சிவன் கோவில் ஊரணியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாயல்குடி பெரிய கண்மாயில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக குளியல் தொட்டி அமைக்க வேண்டும்..

    கவுன்சிலர் ஆபிதா அனிபா: அண்ணா, இருவேலி பகுதியில் இருந்து பெரிய கண்மாய் கரை முதல் கூரான் கோட்டை விலக்கு ரோடு வரை கண்மாய் கரையில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

    கவுன்சிலர் இந்திரா செல்லத்துரை: எனது வார்டில் இதுவரை எந்த பணிகளும் செய்து தரவில்லை எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பேவர் பிளாக் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதேபோல் மாணிக்க வள்ளி பால்பாண்டியன், இந்திராணி பானுமதி, அமுதா உள்ளிட்ட கவுன்சிலர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களாக அளித்தனர். இந்த கோரிக்கைகள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிதி பெற்று பணிகள் நடைபெறும் என சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தெரிவித்தார்.

    • மண்டபம் பகுதிகளில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மானாங்குடி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சுழற்சி முறையில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான தண்ணீர் தேவையை தொய்வின்றி நிறைவேற்ற ரூ.612 கோடி மதிப்பில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் 2009-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இருப்பினும் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் காவிரி கூட்டு குடிநீர் முறையாக பொது மக்க ளுக்கு வழங்கப்படு வதில்லை. காவிரி குடிநீர் விநியோகத்திற்காக மாத கட்டணத்தை உள்ளாட்சிகள் தற்போது வரை வசூல் செய்து வருகின்றன.

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சியில் உள்ள 18 வார்டு பொது மக்களுக்கு தினந்தோறும் 13.40 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் இந்த அளவு தண்ணீர் கடந்த ஒரு மாதமாக முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மண்டபம் பேரூராட்சி மக்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் விநியோகிக்க 9 கிணறுகள் உள்ளன. இவற்றில் இருந்து மேல்நிலை தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி 600-க்கும் மேற்பட்ட பொது குழாய்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தது. மேலும் 700-க்கும் மேற்பட்ட வீடு இணைப்பு களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    தற்போது கோடை வெயிலால் பேரூராட்சி கிணறுகள் வறண்டு விட்டதால் பேரூராட்சி நிர்வாகத்தால் முறையாக பொது மக்களுக்கு குடிநீர் வழங்க முடியவில்லை. இதை தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் வறண்ட கிணறுகளை சில நாட்களுக்கு முன் தூர்வாரியது. இதையடுத்து தினமும் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைத்தாலும் கோடை வெயிலின் தாக்கத்தால் கிணற்றின் நீர் மட்டம் குறைந்து கொண்டே போகிறது.

    இதே நிலை நீடித்தால் இந்த ஆண்டு கோடை வெயில் தாக்கத்தால் மண்டபம் மக்களின் குடிநீர் ஆதாரமான கிணறுகள் முழுமையாக வறண்டு போய் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். வெளியூர்களில் இருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி மக்கள் பயன்படுத்தும் நிலை ஏற்படும்.

    எனவே மண்டபம் பேரூராட்சி நிர்வாகம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விநியோகம் செய்ய மானாங்குடி தண்ணீர் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தினர்.

    • கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • துணைவேந்தர், ரவி கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20-வது பட்டமளிப்பு விழா நடந்தது. முகமது சதக் அறக்கட்டளையின் இயக்குநர் பி.ஆர்.எல்.ஹாமீது இப்ராகிம் முன்னிலை வகித்தார். முதல்வர் சதக்கத்துல்லா வரவேற்புரை நிகழ்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர், ரவி கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.

    அப்போது அவர் பேசுகையில், பட்டம் பெறும் பட்டதாரிகள் தாங்கள் கற்ற கல்வியின் மேன்மையையும்,முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொண்டு சமூக சிந்தனையுடன் கூடிய அறிவுத்திறனுடன் செயல்பட வேண்டும். அனைவரும் சமுதாயத்தில் நற்குடிமகன்களாகவும் நமது நாட்டின் பெருமை பண்பாடு சமூக நெறி மற்றும் பாரம்பரியத்தை காக்க உறுதி கொள்ள வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் முகமது சதக் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல்திட்ட அலுவலர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல்வர் சதக்கத்துல்லா பட்டமளிப்பு விழா உறுதிமொழி வாசிக்க பட்டதாரிகள் அதனை பின் மொழிந்தனர்.பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பதக்கங்களும், பட்டங்களும் வழங்கப்பட்டது. இதில் 926 இளங்கலை மாணவ,மாணவிகளுக்கு 70 முதுகலை மாணவ,மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்களும் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களும் செய்திருந்தனர்.விழாவிற்கு முகமது சதக் அறக்கட்டளை தலைவர் மற்றும் தாளாளர் முகமது யூசுப், முகமது சதக் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் செயலாளர் சர்மிளா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×