என் மலர்
ராமநாதபுரம்
- வேளாண் விரிவாக்க பணியாளர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
- இதற்கான ஏற்பாடுகளை விரிவாக்க ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் செய்திருந்தார்.
ராமநாதபுரம்
வேளாண் விரிவாக்க பணியாளர்களுக்கு காலநிலை மாற்றத்திற்கேற்ற சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் வளங்களை சேகரிப்பது மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான பயிற்சி ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடந்தது. வேளாண் இணை இயக்குநர் சரஸ்வதி தலைமை தாங்கினார். காலநிலை மாற்றங்களை எவ்வாறு கணிப்பது? காலநிலை மாற்றங்களை விவசாயிகளுக்கு முன்னறிவிப்பாக அளிக்கும் சேவை,காலநிலை மாற்றங்களால் வேளாண்மையில் ஏற்படக்கூடிய மாறுதல்கள், வேளாண் உற்பத்தியின் பாதிப்பை குறைப்பதற்கான வழிமுறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை வளங்களை பாதுகாத்து கூடுதல் உற்பத்தி பெறுவதற்கான தொழில்நுட்பங்களாகிய எந்திர விதை விதைப்பு,நேரடி நடவு முறை, எந்திர நடவு முறை, நெல்லில் ஊடுபயிர், நெல்லில் சொட்டுநீர் பாசன முறை, கூடுதல் விதைப்பு விதைத்த வயலில் களை எடுக்கும் கருவி மூலம் சரியான பயிர் எண்ணிக்கை பராமரித்தல்,நெல் தரிசில் உளுந்து சாகுபடி மூலம் உற்பத்தியை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன், மாவட்ட வேளாண் வானிலைப்பிரிவு விஞ்ஞானி வெங்கடேசுவரி ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை விரிவாக்க ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் செய்திருந்தார்.
- அரசு மருத்துவமனைக்கு இரும்பு கட்டில் மற்றும் மெத்தை வழங்கப்பட்டது.
- அரசு தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசைன் பெற்றுக்கொண்டார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் மருத்துவச்சேவையும், கல்விச்சேவையும் பொதுநலச்சேவையும், செய்து வருகின்றது.
கீழக்கரை அரசு தாலுகா மருத்துவ மனையில் அவசர காலங்களில் கட்டில் வசதிஇல்லாமல் நோயாளிகள் பெரிதும் அவதி அடைந்து வந்தனர். இது குறித்து தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேன் மற்றும் டாக்டர்கள் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிமை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
விரைவில் கட்டில் மெத்தை வழங்குவதாக பள்ளியின் தாளாளர் உறுதி அளித்தார்.இந்த நிலையில் ரூ.1லட்சம் மதிப்புள்ள இரும்பு கட்டில் மற்றும் மெத்தைகள் இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் சார்பில் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. அரசு தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசைன் பெற்றுக்கொண்டார்.
- தொண்டி பேரூராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
- மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சி வளர்ந்து வரும் நகரமாகவும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இங்கு அனைத்து மதத்தினரும் வாழ்ந்து வருகின்றனர். இதனால் பொது மக்களின் தேவைகளும், கோரிக்கை களும் அதிகம் உள்ளது.
இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற மக்கள் குறை தீர்க்கும் வகையில் மாதத் தின் முதல் வாரம் செவ்வாய் கிழமையும், மாதத்தின் இறுதிவாரம் செவ்வாய் கிழமையும் காலை 11 மணி முதல் மாலை 2 மணி வரை மக்கள் குறைதீர்க்கும் நாளாக அறிவிக்கப்படுகிறது. அப்போது மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தொண்டியில் சேதமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை விடுத்தனர்.
- பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி முதல்நிலை பேரூராட்சியில் பஸ் நிலையம் அருகே காமாட்சி அம்மன் கோவில் சாலை உள்ளது. இந்த சாலை மழை காலங்களில் தண்ணீர் தேங்கி சேதமானது. இந்த சாலையை சீரமைக்க அந்த பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. இந்த சாலையில்தான் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன, அக்ரஹாரம் தெரு, புதுக்குடி, வட்டக்கேணி, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக இது உள்ளது.
எனவே இந்த சாலையை உடடினயாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.
- ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு குடிநீர் திட்ட பணிகளுக்கான திட்டமிடுதல் குறித்து எடுத்துரைத்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட ரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 33 ஊராட்சி தலைவர்க ளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பங்கேற்று பேசியதாவது:-
பொதுமக்களுக்கு தேவை யான குடிநீர், ஆழ்துளை கிணறு, திறந்தவெளி கிணறு மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஒரு பகுதிக்கு முழுமையான அளவு குடிநீர் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து செல்கிறது. ஆனால் கடைக்கோடி பகுதிகளுக்கு முழுமையாக செல்வ தில்லை.
பொதுமக்களுக்கு முழுமையான அளவு தண்ணீர் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறை, ஊரக வளர்ச்சி துறை ஒருங்கி ணைந்து சென்னையில் உள்ள நீர்வள ஆதார ஆராய்ச்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு மாவட்டத்தில் வறட்சி பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு முழுமையான குடிநீர் வழங்கும் வகையில் பணிகள் திட்டமிடப் பட்டுள்ளன. அந்த வகையில் தற்பொழுது மேற்கொள்ள திட்டமிட்ட பணிகளை விரைந்து முடித்து பொது மக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்கும் வகையில் பணிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நிலவரப்படி ஒவ்வொரு ஊராட்சி மன்ற பகுதியில் எந்த அளவிற்கு தண்ணீர் கிடைக்கிறது?, எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்? என்பதை திட்டமிட்டு ஆய்வு அலுவலர்கள் வருகையின் போது தெரிவிக்க வேண்டும். மேலும் அவர்க ளுடன் ஒருங்கி ணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அனைத்து ஊராட்சி மன்றத் தலை வர்களும் மக்களின் தேவையை அறிந்து திட்டங்களை மேற்கொள்ள உறுதுணையாக இருப்பதுடன் அவர்களுக்கு குடிநீர் வடிகால் வாரியத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மின் பகிர்மான கழகத்தினர் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.
திட்டமிட்டபடி பணிகளை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்கள் தொகை அடிப்படை யில் 2054-ம் ஆண்டு வரை பொதுமக்களுக்கு போதிய அளவு தண்ணீர் வழங்கும் வகையில் செயல்பட உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் நீர்வள ஆதார திட்டத்துறையின் விஞ்ஞானிகள் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு குடிநீர் திட்ட பணிகளுக்கான திட்டமிடுதல் குறித்து எடுத்துரைத்தனர்.
இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரமசிவம், நீர்வள ஆதாரத்துறை பொறியாளர் இளங்கோ வன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சண்முகநாதன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுந்தரேசன், திருப்புல்லாணி ஊராட்சி சேர்மன் புல்லாணி,பி.டி.ஓ.க்கள் கணேஷ்பாபு, ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கமுதி அருகே தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
- இந்த கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டி கிராமத்தில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராம லிங்கம் அறிவுறுத்தலின் பேரில் நடந்த இந்த கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், துணைத் தலைவர் சித்ராதேவிஅய்யனார், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர்கள் தங்கமணி, மாரிமுத்து ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து வரவேற்றனர்.
தலைமை கழக பேச்சாளர் நல்ல சேதுபதி பேசினார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ்,அவைத் தலைவர் பொன்னுசாமி, பொருளாளர் விநாயக மூர்த்தி, பிரதிநிதி முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகரத்தினம், அழகர்சாமி, ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பிளஸ்-2 தேர்வில் பரமக்குடி பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்தனர்.
- இந்தப்பள்ளியில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பரமக்குடி
தமிழகம் முழுவதும் வெளியான பிளஸ்-2 தேர்வில் பரமக்குடி பள்ளி மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதன்படி பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் மாணவி தீபிகா முதலிடத்தையும், சவிதா 2-ம் இடத்தையும், கோபிகா 3-ம் இடத்தையும் பெற்றனர்.
வணிகவியல் பாடத்தில் மாணவி கோபிகா, விலங்கியல் பாடத்தில் தீபிகா நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர். 99 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களை பள்ளியின் தாளாளர் சாதிக் அலி, தலைமை ஆசிரியர் அஜ்மல் கான் உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
சவுராஷ்டிரா பள்ளி
சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன் கார்த்திகேயன், 2-ம் இடம் பிடித்த மாணவி பிரித்திகா, 3-ம் இடம் பிடித்த மாணவன் பார்த்த சாரதி ஆகியோரை கல்வி குழு தலைவர் நாகநாதன், உப தலைவர் நாகநாதன், தாளாளர் அமரநாதன், இளநிலை பள்ளி தாளாளர் ராஜன் ஆகியோர் பாராட்டினர். இந்தப் பள்ளியில் 96 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி லக்சிதா ஸ்ரீ முதலிடமும், மாணவர்கள் அதீஸ்வரன் 2-ம் இடமும், பாலாஜி 3-ம் இடமும் பெற்றுள்ளனர். மாணவிகள் தனுஸ்ரீ, துர்கா கணிப்பொறியியல் பாடத்திலும் 100 மதிப்பெண்களும், இந்திரஜித் என்ற மாணவன் தாவரவியல், பிரியா என்ற வணிகவியல் பாடத்திலும் 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
மாணவ - மாணவிகளை பள்ளியின் கல்வி குழு தலைவர் ராசி போஸ், இணைத்தலைவர் பாலுச்சாமி, பள்ளியின் தாளாளர் லெனின் குமார், ஆயிர சபை செயலாளர் செல்வராஜ், கௌரவ செயலாளர் வக்கீல் செந்தில்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜஸ்டின் ஞானசேகர், உதவி தலைமை ஆசிரியை சுமதி, கல்வி குழு உறுப்பினர்கள் சுதர்சன், பூபாலன் உள்பட ஆசிரியர்கள்பாராட்டினர்.
இந்தப் பள்ளியில் 95 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுப கீர்த்தி முதலிடமும், கீர்த்திகா இரண்டாம் இடமும், அர்ஜுன் மூன்றாம் இடம் பெற்றனர். இவர்களை பள்ளியின் தாளாளர் முருகானந்தம், இணைச்செயலாளர் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர். இந்தப் பள்ளியில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிளஸ்-2 தேர்வில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை படைத்தது.
- லுப்னா சுலைஹா 577 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்று உள்ளார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் உள்ள இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவிகள் பிளஸ்-2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அதன்படி இந்த பள்ளியில் படித்த மாணவி லுப்னா சுலைஹா 577 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்று உள்ளார். மாணவி அல் அப்ரா 575 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், நுபிரா பாத்திமா 573 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தையும் பெற்று உள்ளனர்.
அதற்கு அடுத்து மாணவி ருஷ்தா பாத்திமா 572 மதிப்பெண்ணும், ஹதீஜா பாத்திமா 571 மதிப்பெண்ணும், பாத்திமா பரா, ஐனுல் ஹீதா 571 மதிப்ெபண்கள் பெற்று அடுத்தடுத்து இடத்தை பிடித்து உள்ளனர்.
பிளஸ்-2 தேர்வில் 9 மாணவிகள் கணக்கு பதிவியல், வணிகவியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளனர். இதேபோல் 20 மாணவிகள் 550 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்த்து உள்ளனர்.
அதிக மதிப் பெண் பெற்று சாதனை படைத்த மாணவிகளுக்கு இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இபுராஹீம், முதல்வர் நேபிள் ஜெஸ்டஸ், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பாராட்டினர்.
- கடலாடி அருகே ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கருங்குளம் கிராமத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஐசக் நியூட்டன் வரவேற்றார். மாவட்ட தலைவர் நாகேந்திரன், செயலாளர் முருகன், பொருளாளர் செந்தில் பொன் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், நிர்வாகி ஜெயபால் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நியமனம் செய்ய வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15-ந் தேதி சென்னையில் நடைபெறும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மண்டல பொறுப்பாளர் சக்தி முருகன் நன்றி கூறினார்.
- வக்பு விதிகளுக்கு எதிராக செயல்படும் ஜமாத் தலைவரை மாற்ற கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
- 3 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்திற்கு உட்பட்ட வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இந்த ஜமாத்திற்கு தேர்தல் நடத்தி 9 வருடங்கள் ஆகியும், தற்போது வரை எந்தவித வரவு-செலவு அறிக்கையும் பள்ளிவாசலில் ஒப்படைக்கவில்லை. இதுவரை பல லட்ச ரூபாய் வசூல் செய்து ஜமாத் தலைவர் தன்னிச்சையாக வைத்துள்ளார். அது பற்றி வக்பு வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. உடனடியாக வக்பு வாரிய தலைவர் தேர்தல் நடத்தி முறையான வரவு-செலவு கணக்கை செயல்படுத்த வேண்டும். வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத்தை நேரடி கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர தேர்தல் நடத்த வேண்டும் என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீசிடம் மனு கொடுத்தனர்.
- போகலூரில் தி.மு.க. 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நடந்தது.
- இந்த கூட்டத்திற்கு போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் குணசேகரன் தலைமை தாங்கினார்.
பரமக்குடி
பரமக்குடி அருகே போகலூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பொட்டிதட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் தி.மு.க ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் குணசேகரன் தலைமை தாங்கினார். பொட்டிதட்டி ஊராட்சி மன்றத்தலைவர் சரவணக்குமார் வரவேற்று பேசினார். அவைத்தலைவர் அப்பாஸ்கனி மற்றும் ரவிச்சந்திரன், கனகராஜ், கலைச்செல்வி, ஒன்றிய பொருளாளர் ஜெகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் ராமகிருஷ்ணன், கார்த்திக் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நெசவாளர் அணி துணைத் தலைவர் ஓ.ஏ.நாகலிங்கம் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு கால சாதனைகள் பற்றி பொதுமக்களிடம் விளக்கிப் பேசினார்.
உதயநிதி மன்றத்தைச் சேர்ந்த துரைமுருகன், போகலூர் ஒன்றிய பெருந்தலைவர் சத்யா குணசேகரன் மற்றும் போகலூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் கே.கே.கதிரவன், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதி மக்களுக்கும் காவிரி குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
- இந்த தகவலை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாத னைக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்று 981 பயனாளி களுக்குரூ.4 கோடியே 17 லட்சத்து 54 ஆயிரத்து 259 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் முன்னேறிய மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதற்கு அடித்த ளமாக இந்தப் பகுதிக்கு முதன்முதலாக காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் அமைத்து பொது மக்க ளுக்கான குடிநீர் தேவையை நிறைவேற்றியவர் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி.
அதனைத் தொடர்ந்து தற்பொழுது ராமநாதபுரம் மாவட்டமக்களின் குடிநீர் தேவையை முழுமையாக நிறைவேற்றித் தருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் முன்வைத்த கோரிக்கை களை ஏற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் கரூர் மாவட்டம், நஞ்சை புகளூர் காவிரி ஆற்றுப் பகுதியில் இருந்து ரூ.2 ஆயிரத்து 400 கோடியில் தனித்திட்டமாக பைப் லைன் பொருத்தப்பட்டு மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதி மக்களுக்கும் குடி தண்ணீர் வழங்கும் வகையில் பணிகள் தொடங்க உள்ளன.
மேலும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 110 சாலைப்பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு தேவையான திட்டங்கள் அவ்வப்போது அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
உங்களின் தேவைகளை எங்களிடம் தெரிவியுங்கள். நாங்கள் நிறைவேற்றி தர தயாராக உள்ளோம். முதல்-அமைச்சர் தெரி விப்பது போல் மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். மக்களுக்காக நம் முதல்வர் செயல்பட்டு வருகிறார். அனைவரும் ஒன்று கூடி முதல்-அமைச்சருக்கு உறுதுணையாக இருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், திருப்புல்லாணி யூனியன் தலைவர் புல்லாணி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், வருவாய் கோட்டாட்சியர் கோபு, தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்பு திட்டம்) மாரிசெல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






