என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    விவசாயிகள் வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற உழவன் செயலியில் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.
    புதுக்கோட்டை:

    இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    வேளாண் பொறியியல் துறையின் மூலம் வேளாண்மையை எந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ், நடப்பு 2018-19-ம் நிதி ஆண்டில் மானிய விலையில் வேளாண்மை எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல் மற்றும் வேளாண் எந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்களை மானிய விலையில் அமைத்தல் முதலான திட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தில் அதிக சக்தி கொண்ட டிராக்டர்கள், பவர் டிரில்லர், நெல்நடவு எந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, கதிர் அறுக்கும் எந்திரம், சுழல் கலப்பை, விசை களையெடுப்பான், விதைக்கும் கருவி, வரப்பு அமைக்கும் கருவி, நிலம் சமன் செய்யும் கருவி, தட்டை வெட்டும் கருவி, விசை தெளிப்பான், டிராக்டரால் இயங்கும் தெளிப்பான், டிராக்டரால் இயங்கும் துகளாக்கும் கருவி மற்றும் மனித சக்தியால் இயக்கப்படும் கருவிகள் முதலான வேளாண் எந்திரங்களையும், கருவிகளையும் விவசாயிகள் மானிய உதவியுடன் வாங்கலாம்.

    இதற்கு மத்திய அரசின் வேளாண் எந்திரமயமாக்கும் துணை இயக்க வழிகாட்டி நெறிமுறைகளின்படி மானியம் வழங்கப்படும். சிறு, குறு, ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையும், இதர விவசாயிகளுக்கு 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானிய தொகை இவற்றில் எது குறைவோ? அந்த தொகை மானியமாக வழங்கப்படுகிறது. உயர் தொழில்நுட்ப, அதிக விலை உள்ள எந்திரங்களை வாங்கிட அதிக பட்சமாக ரூ.2 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

    வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற விவசாயிகள் உழவன் செயலியில் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான agrimachinery.nic.in&™ இணைக்கப்படும். விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளையும் மற்றும் ஒப்புதல் வழங்கப்பட்ட முகவரையும் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். விவசாயிகள் முகவரின் விற்பனை விலையை பேச்சு வார்த்தை மூலம் பேரம் பேசி குறைத்திடலாம். குறைக்கப்பட்ட விலைக்குரிய மானியம் இணைய தளத்திலேயே கணக்கிடப்படும்.

    விவசாயிகள் முகவரை ஒருமுறை தேர்வு செய்தபின், வேறு முகவரை தேர்வு செய்ய இயலாது. ஒரு நிதியாண்டில் தனக்கு தேவைப்படும் எதாவது 2 வேளாண் எந்திரங்கள் அல்லது கருவிகளை மட்டுமே மானிய விலையில் விவசாயிகள் வாங்க இயலும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின்னர்தான் அதே வகையான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய விலையில் வாங்க இயலும். வழங்கப்பட்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட விவசாயி மற்றும் ஆய்வு அலுவலர் ஆகியோருடன் கூடிய புகைப்படத்தினை இணைய தளத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் ஆய்வு அலுவலரால் பதிவேற்றம் செய்யப்படும். பின்னர் ஆய்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர் இறுதியாக விவசாயியின் வங்கி கணக்கில் உரிய மானியமானது ஆய்வு முடிந்த 10 நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    கிள்ளுக்கோட்டையில் பள்ளிக்கூடம், கோவிலுக்கு அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை இட மாற்றம் செய்யகோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கீரனூர்:

    கீரனூர் அருகே உள்ள கிள்ளுக்கோட்டையில் பள்ளிக்கூடம், கோவிலுக்கு அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை இட மாற்றம் செய்யகோரி கீரனூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    பின்னர் குளத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் மதுபானகடையை இடம் மாற்றுவதாக உறுதியளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அக்கட்சியின்மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் நடராசன் தலைமையில் குன்றாண்டார் கோவில் ஒன்றிய செயலா ளர் சண்முகம், துணை செயலாளர் ஏழுமலை உட்பட 100-க்கும் மேற்பட்டோர் மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் விரிவுரையாளர்களை நியமிக்க வலியுறுத்தி, மாணவ, மாணவியர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அறந்தாங்கி:

    ஆவுடையார்கோவில் அருகே உள்ள பெருநாவலூரில் அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி உறுப்புக்கல்லூரி இயங்கி வருகிறது. 

    இக்கல்லூரியில் இயற் பியல் மற்றும் கணிதத்துறை பாடங்கள் நடத்த 7 விரிவு ரையாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 2 விரிவுரையாளர்கள் மட் டுமே உள்ளனர். மாணவ, மாணவியருக்கு முறையாக பாடங்கள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவ, மாணவிகளின் படிப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்களுக்கு தேவையான விரிவுரையாளர்களை நியமிக்க பல முறை வலியுறுத்தியும் விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் வீரப்பன், ஆவுடையார்கோவில் போலீஸ்  சப்-இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் உள்ளிட்டோர் மாணவ,மாணவியருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மாணவ, மாணவியர் கலைந்து சென்றனர். 

    கல்லூரி மாணவ, மாணவியகளின் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    அன்னவாசல் அருகே முத்துடையான்பட்டியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை மாவட்டம், வடமலாப்பூரை சேர்ந்தவர் பழனியான்டி. இவரது மகன் முத்துக்குமார் (வயது30). ஆதனக்கோட்டையை சேர்ந்த ஆறுமுகம். இவரது மகன் சின்னத்துரை (35). கட்டிட தொழிலாளிகளான, இருவரும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு வந்து விட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்களுடைய மோட்டார் சைக்கிள் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் முத்துடையான்பட்டி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் திடீரென கீழே விழுந்தனர். இதில் முத்துக்குமார் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சின்னத்துரை படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் வெள்ளனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயமடைந்த சின்னத்துரையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து முத்துகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய துணை தலைவர் இந்திராகாந்தி தலைமை தாங்கினார். 

    இணை செயலாளர் தேவிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்கி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். உணவு மானியத்தொகையை ரூ.5-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 

    சமையலர் மற்றும் உதவியாளர்களை முதல்-அமைச்சரின் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைத்து காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் சக்தி, மாவட்ட துணை தலைவர் ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு அமமுக பலம் அதிமுகவுக்கு புரியும் என்று தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். #thangatamilselvan #admk

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் வரும் செப்டம்பர் 15-ந்தேதி அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    பொதுகூட்டம் நடைபெறும் இடத்தை தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்செல்வன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-

    வருகிற செப்டம்பர் 15-ந் தேதி புதுக்கோட்டையில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை பொது செயலாளர் தினகரன் கலந்து கொள்ள உள்ளார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்தது தவறு என்று உணர்ந்ததால் மன்னிப்பு கேட்டேன்.

    தற்போது 3-வது நீதிபதி முன்பு விசாரணை நடந்து வருகிறது. வழக்கின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும் என்பதில் ஐயமில்லை. வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த பிறகு ஆட்சியை கலைக்காமல் புதிய முதலமைச்சர் நியமனம் செய்யப்பட்டு ஆட்சி தொடரும்.

    திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. தனித்து போட்டியிடும். அ.தி.மு.க., பா.ஜ.க. வோடு கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் அ.ம.மு.க.தான் வெற்றி பெறும். அப்போது அ.ம.மு.க. தான் டாப்பு. அ.தி.மு.க. டூப்பு என்பது தெரியவரும்.

    அதன் பின்னர் ஆட்சியையும் கட்சியையும் எங்களிடம் அவர்கள் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் அ.தி. மு.க. நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்தது. ஆனால் கருணாநிதி இறந்த பிறகு அண்ணா சமாதியில் அவரது உடல் அடக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு அ.தி.மு.க. மேல்முறையீடு செய்யாதது ஏன். இதிலிருந்து தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி அமைத்து செயல்பட்டு வருவது தெரிய வருகிறது. சமீப காலமாக பா.ஜ.க.வோடு தி.மு.க. நெருங்கி வருகிறது

    தி.மு.க. தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளதற்கு முதலில் அவருக்கு வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #admk

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளாக வறட்சியை சந்தித்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், காவிரியில் தற்பொழுது வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைமடைப்பகுதிகளான கறம்பக்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி பகுதிகளில் உள்ள பெரும் பகுதியான வாய்க்கால்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீர் கிடைப்பதை உத்திரவாதம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்தக்தின் கறம்பக்குடி ஒன்றியத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். மாநிலச்செயலாளர் சாமி.நடராஜன் சிறப்புரையாற்றினார்.

    கோரிக்கைகளை விளக்கி மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் ராமையன், உடையப்பன்,  ஸ்ரீதர், துரைச்சந்திரன், அய்யாவு, அன்பழகன்,  பாலசுந்தரமூர்த்தி, தங்கப்பா, மணிவேல், இளவரசு, பிரபாகர், சின்னத்துரை உள்ளிட்டோர் பேசினர்.
    தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இருக்கும் வரை உள்ளாட்சி தேர்தல் வராது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். #CPI #Mutharasan #CivicPolls
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளராக துரைமுருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. மேலும் நேற்று தலைவராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை என்பது வரவேற்கத்தக்கது. அவர் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை எடுக்க போகிறார் என்பதை தெளிவாக அறிவித்துள்ளார். காவி தான் இன்றைக்கு பல பிரச்சனைகளை உருவாக்கி ஏற்படுத்தி வருகிறது.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 3 தமிழக மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றத்தால் அறிவிக்க செய்துள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. அதனை சேமிக்க முடியாமல் 100 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க கடைமடை பகுதிகளுக்கு நீர்வரத்து இல்லாமல் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கு பொதுப்பணித்துறையின் அலட்சியமே காரணம்.

    தூர் வாருவதற்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்திருந்தாலும் முறைகேடுகள் நடந்து பணிகள் நடக்காததால் தான் நீர் கடைமடை பகுதிகளுக்கு சென்றடையவில்லை. மேலும் கொள்ளிடம் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததற்கு மணல் கொள்ளையே காரணம்.


    தமிழக அரசு நீதிமன்ற உத்தரவுப்படி இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறும் கருத்து ஏற்படையது. ஆனால் தகுந்த விழிப்புணர்வு அளித்து கால அவகாசம் அளித்து, அதன் பின்னர் அபராதம் விதிக்க வேண்டும். இப்போதே அதை கட்டாயமாக்க கூடாது.

    தி.மு.க.வில் குடும்ப அரசியலால் தான் ஸ்டாலின் தலைவராக வந்துள்ளார் என்ற அ.தி.மு.க.வின் கருத்து ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. கருணாநிதி 15 வயதில் தான் அரசியலுக்கு வந்தார். ஆனால் ஸ்டாலின் 14 வயது முதலே அரசியலுக்கு வந்து படிப்படியாக பல்வேறு வளர்ச்சியை பெற்றுள்ளார்.

    கேரளாவில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தும் அரசு கேட்ட நிவாரண தொகை ரூ.21 ஆயிரம் கோடியில் 600 கோடிதான் நிதி ஒதுக்கியுள்ளது வேதனைக்குரியது. அரசியல் பாகுபாடு பார்க்காமல் உரிய நிவாரண தொகையை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். மேலும் அரபு நாடுகள் அளிக்கும் நிதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    தற்போதைய அ.தி.மு.க. அரசிற்கு பணம் சம்பாதிப்பது தான் ஒரே குறிக்கோளாகவும் அஜெண்டாவாகவும் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி இருக்கும் வரை உள்ளாட்சி தேர்தல் வராது. தோல்வி பயத்தால் அவர்கள் நடத்த மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #CPI #Mutharasan #CivicPolls #LocalBodyElection
    புதுக்கோட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வீரப்பட்டியை சேர்ந்தவர் நேரு (வயது 28). இவரது மனைவி லாவண்யா (23). இவர்களுக்கு 1½ வயதில் ஒரு கைக்குழந்தை உள்ளது. நேரு சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் லாவண்யா குழந்தையுடன் வீரப்பட்டியில் தனியாக வசித்து வந்தார்.

    இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டில் இருந்து லாவண்யா வெளியே வரவில்லை. குழந்தையின் அழுகை சத்தம் மட்டும் கேட்டது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டிற்குள் லாவண்யா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் இதுகுறித்து உடனடியாக திருமயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட போது வீட்டிற்குள் பல்வேறு பொருட்கள் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் சிதறி கிடந்தது. நகை மற்றும் பணமும் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இதனால் மர்ம நபர்கள் லாவண்யாவை அடித்து கொலை செய்து விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வந்தது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

    மோப்ப நாய் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து கொண்டு சிறிது தூரம் சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதே போல் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    லாவண்யாவின் வீடு அப்பகுதியில் தனியாக உள்ளது. வீட்டை சுற்றி எந்த வீடுகளும் கிடையாது. மேலும் அவரது பெற்றோர் தனியாக வசித்து வந்தனர். இதனால் லாவண்யா மட்டும் குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் நேற்றிரவு அங்கு சென்று கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.

    லாவண்யா நகைகளை கொடுக்க மறுத்து போராடவே ஆத்திரத்தில் மர்ம நபர்கள் அவரை அடித்து கொன்று விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கற்பழிப்பு முயற்சியில் இந்த கொலை சம்பவம் நடந்ததா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    புதுக்கோட்டை அருகே மொபட் மீது அரசு பஸ் மோதியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே மொபட் மீது அரசு பஸ் மோதியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அரசு பஸ்சை கண்டித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை அருகே உள்ள வடக்குப்பட்டியை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 60). நேற்று இவர் தனது பேரன் அரவிந்துடன்(11) வீட்டிற்கு தேவையான பூக்களை வாங்குவதற்காக மொபட்டில் புதுக்கோட்டைக்கு வந்தார். பின்னர் பூக்களை வாங்கி கொண்டு அதே மொபட்டில் வீட்டிற்கு புதுக்கோட்டை-மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தார். மொபட் புதுக்கோட்டை அருகே உள்ள மறவப்பட்டி பகுதியில் சென்றபோது, ராமேஸ்வரத்தில் இருந்து புதுக்கோட்டை வழியாக கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர் பாராத விதமாக மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயமடைந்த சின்னதம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அரவிந்த் படுகாயமடைந்தார். இந்த விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் அரவிந்தை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு, நிற்காமல் சென்ற அரசு பஸ்சை கண்டித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் புதுக்கோட்டை-மதுரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த திருக்கோகர்ணம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் அரசு பஸ் டிரைவர் விபத்து நடைபெற்ற இடத்தில் பஸ்சை நிறுத்த அச்சப்பட்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பஸ்சை நிறுத்தியதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் புதுக்கோட்டை-மதுரை சாலையில் உள்ள மறவப்பட்டியில் நேற்று சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் இறந்த சின்னதம்பியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    புதுக்கோட்டையில் அரசு பொருட்காட்சி நடைபெறவுள்ள தற்காலிக பேருந்து நிலைய மைதானத்தில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை தற்காலிக பேருந்து நிலைய மைதானத்தில் வருகிற 10ந்தேதி அன்று செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப் பொருட்காட்சி 45 நாட்கள் நடைபெறவுள்ளது.

    இந்த அரசு பொருட்காட்சியில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சாதனைகள் தொடர்பாக பல்வேறு அரசுத்துறைகளின் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுவதுடன், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய மாபெரும் பொருட்காட்சி நடைபெறவுள்ளது.

    இந்தநிலையில் பொருட்காட்சி நடைபெறவுள்ள தற்காலிக பேருந்து நிலைய மைதானத்தில் நடைபெற்று வரும் மேற்கூரை அமைத்தல், அரங்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்த தகவல்களை கேட்டறிந்ததுடன், அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்து அரசுப் பொருட்காட்சி சிறப்பாக நடைபெற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், மத்திய தொலை தொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

    புதுக்கோட்டை அருகே இன்று பட்டப்பகலில் பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஒக்கூரை சேர்ந்தவர் ராஜா முகமது. இவரது மனைவி யாசினி (வயது 27). கடந்த 2 மாதத்திற்கு முன்பு வேலைக்காக ராஜா முகமது வெளிநாடு சென்று விட்டார். இதனால் யாசினி ஒக்கூரில் உறவினர்கள் ஆதரவுடன் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் யாசினிக்கும் அவரது உறவினரான சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையை சேர்ந்த சிராஜூதீனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இன்று மதியம் யாசினி வீட்டிற்கு வந்த சிராஜூதீன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் ஆத்திரத்தில் யாசினியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதையடுத்து அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள், சிராஜூதீனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் அவர் மயங்கி விழுந்தார்.

    இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் கரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் யாசினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சிராஜூதீனை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சிராஜூதீன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சிவகங்கை மாவட்ட துணை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யாசினி கொலைக்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×