என் மலர்
புதுக்கோட்டை
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த தேன்கணியூர் அருகே உள்ளது கடைக்கான்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 44). இவரது பெரியப்பா மகன் சின்னையா (65). இவர்கள் விவசாய தொழில் செய்து வந்தனர்.
இவர்கள் இருவருக்கும் சொந்தமான கிணறு அதே பகுதியில் அமைந்துள்ளது. சமீபத்தில் இந்த கிணறு தூர் வாரப்பட்டு அதில் தோண்டப்பட்ட மண் அங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இதனை அள்ளுவதில் அவர்களுக்கிடையே கருத்து வேறு பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் மணிவேல் நேற்று சின்னையாவுக்கு தெரியாமல் வாகனத்தில் மண்ணை அள்ளிச் சென்றுள்ளார். இதனை அறிந்த சின்னையா மணிவேலிடம் கேட்டபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக நேற்று இரவு மீண்டும் மணிவேலுக்கும், சின்னையாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக கைகளாளும், கட்டையாலும் தாக்கிக் கொண்டனர்.
இதில் சின்னையா கட்டையை எடுத்து மணிவேலின் நெற்றியில் அடித்ததில் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார். உடனே அவரது உறவினர்கள் மணிவேலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர், மணிவேல் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவேலை அடித்துக்கொன்ற சின்னையாவை கைது செய்தனர். கொலையுண்ட மணிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கிணற்று மண்ணை அள்ளிய தகராறில் உறவினரை அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சகுந்தலா (வயது 61). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர் உடல் நலக்குறைவால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இவருக்கு அவசியம் ரத்தம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையறிந்த தன்னார்வலர் அமைப்பினர் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டனர். இதையடுத்து கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியான செம்பட்டூர் அரசுப்பள்ளியின் ஆசிரியர் சிவா ரத்தம் அளிக்க முன்வந்தார். அவரது நண்பர் வீரமாமுனிவர் உதவியுடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்த சிவா ரத்தம் வழங்கினார். சிவாவுக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி ரத்த தான சான்றிதழை வழங்கி பாராட்டினார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான விசைப்படகு, நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். சமீபத்தில் உருவான புரெவி புயல் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன்பேரில், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
தற்போது நிலைமை சீரடைந்து உள்ளதால் கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் 273 விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த சைமன் மகன் கான்ஸ்டன் (வயது 42) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரும், அதே ஊரை சேர்ந்த கருப்பையா மகன் ரமேஷ் (38), பாண்டு (50), மோகன் (44) ஆகிய 4 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறை பிடித்தனர்.
மேலும், அவர்களது விசைப்படகை கயிறு மூலம் கட்டி இலங்கைக்கு இழுத்து சென்றனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன் ராணுவ முகாமில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேர் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






