என் மலர்
நீலகிரி
குன்னூர்:
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெயிலும், மாலை நேரங்களில் சாரல் மழையும் பெய்து வருகிறது.
நேற்று மாலை கவுண்டம்பாளையம், வடவள்ளி, துடியலூர், அன்னூர் உள்ளிட்ட மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
வடவள்ளி பகுதியில் பெய்த பலத்த மழைக்கு பெரியார் நகர் 5-வது வீதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நின்ற மரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டின் சுவர்கள் சேதம் அடைந்தன. மேலும் மின்சார வயர்களிலும் மரம் விழுந்தால் 2 மின்கம்பங்கள் முறிந்து வீடுகளின் மீது விழுந்தது.
இதனால் அந்த பகுதி முழுவதும் மின்வினியோகம் தடை பட்டது. இதேபோல் குனியமுத்தூர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 2 மரங்கள் முறிந்து விழுந்தன.
பெரியநாயக்கன்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாரான 500 வாழைகள் சேதம் அடைந்தன.
அன்னூர் தெற்கு பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இதற்கு கரியம்பாளையம் துணை மின் நிலையத்தின் முன்பு இருந்த 3 மின் கம்பம் முறிந்து விழுந்தது. மேலும் 2 ராட்சத மரங்கள் முறிந்து மின்வாரிய குடியிருப்பு பகுதியில் விழுந்தது. இதில் தெருவில் நிறுத்தியிருந்த கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை சேதம் அடைந்தன. இதேபோல் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து பகல் 1 மணியளவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. 5 மணி நேரம் பெய்த மழை காரணமாக முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. பந்தலூர் பகுதியிலும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழைக்கு நெல்லியாளம் அருகே டேன்டீ சரகம் எண்.3-ல் வசித்து வரும் மலர் செல்வி என்பவர் வீடு சேதம் அடைந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள குந்தா, ரேலியா, காமராஜர் சாகர் அணை உள்பட முக்கிய அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இதேபோல் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழைக்கு ஆங்காங்கே மரங்கள் மற்றும் 8 மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த சின்ன வெங்காயம் தண்ணீரில் முழ்கியது.
ஊட்டி:
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுபிரியர்களை கவர பலர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர். இதுவரையில் தடுக்கப்பட்டிருந்த கள்ளச்சாராயம் முறை தற்போது டாஸ்மாக் இல்லாததால் தலைதூக்கியுள்ளது. இதனால் போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்தியிருந்தாலும் தொடர்ந்து இதுபோன்ற குற்றங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோத்தகிரி அண்ணாநகர் பககுதியில் கள்ளச்சாரயம் காய்ச்சி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவமூர்த்தி (வயது 37), சவுந்திரராஜன் (31), பஞ்சு (37) ஆகிற 3 பேரும் வாகனத்தில் ரகசியமாக கள்ளச்சாராயத்தை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஏ.டி.சி. பகுதியில் உள்ள திறந்தவெளி சந்தையில் தண்ணீர் தேங்கியது. இதனால் வியாபாரிகள் அவதி அடைந்தனர்.
குன்னூரில் நேற்று மாலை பெய்த பலத்த மழையில் கரன்சி-டால்பின் நோஸ் சாலையில் 3 ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இதேபோன்று மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கடும் வெயில் காணப்பட்டது. அதன்பிறகு அவ்வப்போது பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் திடீரென கோடை மழை பெய்தது. மஞ்சூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கீழ்குந்தா, கரியமலை, குந்தா பாலம், எடக்காடு, காந்திதி கண்டி, தங்காடு, கன்னேரி, மணியட்டி, பாலகொலா, எமரால்டு ஆகிய பகுதிகளில் மழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் காய்கறி தோட்டங்களில் ஈரப்பதம் அதிகரித்து, பயிர்கள் நல்ல முறையில் வளர ஏதுவானது. மேலும் தேயிலை தோட்டங்களில் சிவப்பு சிலந்தி தாக்குதல் குறைவதுடன், வெளிர் நிறத்தில் கிடக்கும் தேயிலை இலைகள் பச்சை பசேல் என மாறி மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் தொடர் மழையால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
இது தவிர பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, எருமாடு, தாளூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகி றது. இதற்கிடையில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பலத்த காற்றும் வீசியது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. அப்போது தாளூர் சோதனைச்சாவடியில் பணியில் இருந்த போலீசார், வனத்துறையினர் கடும் அவதி அடைந்தனர். தாளூரில் உள்ள ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பிதிர்காடு, ஏலமன்னா, நெலாக்கோட்டை, அத்திக்குன்னா உள்ளிட்ட இடங்களிலும் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது ஏலமன்னா, அத்திக்குன்னு கே.கே. நகர் பகுதியில் மரம் வேரோடு சாய்ந்து மின்கம்பங்கள் மீது விழுந்தது. இதனால் மின்தடை ஏற்பட்டு, பல்வேறு கிராமங்கள் இருளில் மூழ்கின.
இதுகுறித்து தகவல் அறிந்த பந்தலூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார் தலைமையிலான மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். அதன்பின்னர் நேற்று மாலை மின் வினியோகம் சீரானது. நீலகிரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருவதால், குளுகுளு காலநிலை நிலவுகிறது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட எஸ்.எஸ்.நகர் பகுதியில் 14 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் யாருக்கும் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. அப்பகுதியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் மேற்பார்வையில் வட்டார மருத்துவ அலுவலர், மாவட்ட மலேரியா அலுவலர், 3 சுகாதார மேற்பார்வையாளர்கள், 5 சுகாதார ஆய்வாளர்கள், 20 கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள், 40 நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆகியோர் 4 குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு வீடு, வீடாக சென்று வீட்டை சுற்றி தேவையில்லாத உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள், முட்டை ஓடுகள் உள்பட உபயோகமற்ற தண்ணீர் தேங்கக்கூடிய பொருட்களை அப்புறப்படுத்தி வருகிறார்கள்.
பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து மேற்கண்ட பொருட்களை அப்புறப்படுத்த ஒத்துழைப்பு தர வேண்டும். மற்றொரு குழு மூலம் குடிநீர் ஆதாரங்கள், மேல்நிலை மற்றும் தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு, பிறகு குடிநீருக்கு முறையான குளோரினேசன் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யுமாறு நகராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீரை தேவையில்லாமல் சேமித்து வைக்க வேண்டாம். குடிநீரை காற்று புகாத வகையில் மூடி வைப்பதோடு, நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும்.
மற்றொரு குழு மூலம் கொசு ஒழிப்பு நடவடிக்கையாக குடியிருப்புகளின் உட்புறமும், வெளிபுறமும் புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. 12 கிராம சுகாதார செவிலியர்கள், 22 சுகாதார தன்னார்வலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 4 குழுக்களாக பிரிந்து வீடு, வீடாக சென்று காய்ச்சல் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்பவர்களில் யாருக்காவது சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் அறிகுறிகள் தென்பட்டால், அங்கே செயல்படும் 2 நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். மேலும் கூடலூர் அரசு மருத்துவமனை, அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகலாம். பொதுமக்கள் தன்னிச்சையாக மருந்தகத்திற்கு சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டாம். அப்பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் மருத்துவர், மருந்தாளுநர், ஆய்வக நுட்புனர் அடங்கிய 2 நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் 15 நாட்கள் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதரன். இவர் அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு அகில்(வயது 20), நிகில் ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இந்த நிலையில் அகில், கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் அகில் தனது தம்பி நிகில் மற்றும் உறவினர்களுடன் மரப்பாலத்தில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றார்.
அங்கு அகில் பாறை மீது நின்று செல்பி எடுக்க முயன்றார். அப்போது கால் தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்து சுழலில் சிக்கினார். தொடர்ந்து தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதனை பார்த்த உறவினர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரில் மூழ்கிய அகிலை தேடும் பணியில் ஈடுபட்டனர். வனப்பகுதியில் இருள் சூழ தொடங்கியதாலும், மழை பெய்ததாலும் மீட்பு பணி கைவிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பாறை இடுக்கில் சிக்கி இருந்த அகிலின் உடல் மீட்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் 144 தடை உத்தரவு உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதில்லை. இதன் காரணமாக வனவிலங்குகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியில் வந்து சுற்றி திரிகின்றன.
இந்த நிலையில் தட்டன் எஸ்டேட்டில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர்.
அப்போது அங்கு கருஞ்சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான பொதுமக்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். பின்னர் புலியின் உடலை மீட்டு உடற்கூறாய்வு செய்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இறந்து கிடந்த கருஞ்சிறுத்தைக்கு 4 வயது இருக்கும். அதன் கழுத்தில் காயம் உள்ளது.
இதனால் வன விலங்குகளுக்குள் ஏற்பட்ட மோதலில் கருஞ்சிறுத்தை உயிரிழந்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் எஸ்.எஸ். நகரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மனைவி பானுமதி(வயது35). இவர் அந்த பகுதியில் உள்ள மருந்துகடையில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் குணமாகி வீடு திரும்பியதும் மீண்டும் காய்ச்சல் வந்து விடுகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து அறிந்த சுகாதார துறையினர் கூடலூர் எஸ்.எஸ்.நகர் பகுதிக்கு விரைந்து வந்து அனைவருக்கும் பரி சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களின் ரத்தம் மாதிரி சேகரிகப்பட்டது. இதில் 48 பேருக்கு ரத்த மாதிரியும், 18 பேருக்கு சளி மாதிரியும் சேகரிக்கப்பட்டு குன்னூரில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவு வந்த பின்னரே எந்த காய்ச்சல் என்பது தெரிய வரும். ஒரு வாரம் இந்த பகுதியை சுகாதார துறையினர் தீவிரமாக கண்காணிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ஆர்.டி.ஓ.ராஜ்குமார், நகராட்சி கமிஷனர் பாஸ்கள் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதி மக்களுக்கு நிலவேம்பு பொட்டலங்களை வீடு, வீடாக சென்று வழங்கினர்.
கொரோனா வைரஸ் பரவி வரும் வேளையில் கூடலூர் எஸ்.எஸ். நகர் பகுதியில் காய்ச்சலுக்கு பெண் இறந்தது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியான 9 பேரும், படிப்படியாக குணமடைந்து, வீடு திரும்பினார்கள். அவர்களுடன் தொடர்பில் இருந்த 28 பேரின் சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
இதற்கிடையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்து வந்த ஊட்டி காந்தல், குன்னூர் ராஜாஜி நகர், கோத்தகிரி கடைவீதி, எஸ்.கைக்காட்டி ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளில் தனிமைப்படுத்துதல் வருகிற 7-ந் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 19 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. கடைசியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அடுத்த சில தினங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லையெனில் நீலகிரி மாவட்டம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்காக நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அங்குள்ள அனைத்து சோதனைச்சாவடிகளும் மூடப்பட்டு உள்ளன.
அவசர தேவைகளுக்காக இ-பாஸ் பெற்று வெளியிடங்களுக்கு சென்று திரும்பிய 1,000 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை தினமும் சுகாதாரத்துறை ஊழியர்கள் தொடர்பு கொண்டு சளி, காய்ச்சல் உள்ளதா? என்று விசாரிக்கின்றனர். இதுபோன்ற தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதால், கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு நீலகிரி மாவட்டம் விரைவில் பச்சை மண்டலத்துக்கு மாற வாய்ப்பு உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் எஸ்.எஸ். நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி பானுமதி(வயது 35). கூடலூர் பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள தனியார் மருந்தகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி பானுமதி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை முடிந்து, வீடு திரும்பினார்.
நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மீண்டும் பானுமதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவரை அதே தனியார் ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பானுமதி கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோன்று அப்பகுதியை சேர்ந்த பலரும் மர்ம காய்ச்சலால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதற்கு சிகிச்சை பெற்றாலும், மீண்டும் காய்ச்சல் ஏற்படுவதால் டெங்கு பாதிப்பாக இருக்குமோ? என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆர்.டி.ஓ. ராஜ்குமார், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், டாக்டர் பிரனேஷ், சுகாதார ஆய்வாளர் சரவணக்குமார் மற்றும் சுகாதாரத்துறையினர் எஸ்.எஸ்.நகரில் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர்.அப்போது தண்ணீர் தேங்கும் வகையில் கிடந்த பிளாஸ்டிக் பொருட் கள், டயர்களை அப்புறப்படுத்தினர். மேலும் திறந்து கிடந்த தண்ணீர் தொட்டிகளை மூடினர். தொடர்ந்து சுகாதாரத்தை பேண பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர்.
அதன்பின்னர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 48-க்கும் மேற்பட்டவர்கள் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வருவது தெரியவந்தது. அவர்களது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. மேலும் சளி மாதிரி எடுக்கப்பட்டு, குன்னூரில் செயல்படும் கொரோனா பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் கூறும்போது, அந்த பெண் உயிரிழப்பதற்கு முன்பு உடலில் வியர்வை நன்கு வெளியாகி உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் சளி, ரத்த மாதிரி பரிசோதனை அறிக்கை வந்த பிறகே எந்த வகையான காய்ச்சல் என்பது தெரியவரும். அடுத்த 1 வாரத்துக்கு அப்பகுதி சுகாதாரத்துறையினரின் நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளது என்றார். இதற்கிடையில் அப்பகுதி மக்களுக்கு நிலவேம்பு கசாய பொடிகளை நகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று வழங்கினர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பர்லியார் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.
இவரது மகன் அகில்(வயது19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா வைரஸ் நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து அவர் தனது சொந்த ஊருக்கு சென்றார்.
ஊரடங்கு விடுமுறையால் வீட்டில் இருந்த அவர் தனது தம்பி மற்றும் உறவினர்களுடன் குன்னூர் அருகே மரப்பாலத்திற்கு செல்ல முடிவு செய்தார்.
அதன்படி நேற்று காலை தனது தம்பி மற்றும் உறவினர்களான 3 பெண்களுடன் அகில் மோட்டார் சைக்கிள் மூலமாக மரப்பாலத்திற்கு சென்றார்.
அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், விலங்குகள் நடமாட்டம் அதிகம் என்பதாலும் பொதுமக்கள் அங்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. ஆனால் அதனையும் மீறி அகில் உள்பட 5 பேரும் அங்கு சென்றனர். அவர்கள் அந்த பகுதியை சுற்றி பார்த்து வனத்தின் இயற்கை அழகை ரசித்தனர்.
மேலும் அனைவரும் சேர்ந்து செல்பி எடுத்து கொண்டனர். தொடர்ந்து அங்கிருந்த தொங்கு பாலத்திற்கு சென்று அங்கு சிறிது நேரம் சுற்றி பார்த்தனர். தொங்கு பாலத்தில் நின்று அதன் கீழே சென்ற ஆற்றை பார்த்து ரசித்தனர். பின்னர் அகில் அந்த பகுதியில் இருந்த பாறைக்கு சென்று தனது மொபைல் மூலம் செல்பி எடுத்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அகில் கால் இடறி பாறையில் இருந்து ஆற்றுக்குள் விழுந்தார். இதை பார்த்த அவருடன் வந்தவர்கள் சத்தம் போட்டனர். இதற்கிடையே ஆற்றுக்குள் விழுந்த அகில் அங்குள்ள சுழலில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து அகிலின் தம்பி வெலிங்டன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் குன்னூர் தீயணைப்பு அலுவலர் மோகன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினரும் போலீசாருடன் இணைந்து வாலிபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியருப்பதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுகழகத்தின் (தாட்கோ) கீழ் செயல்பட்டு வரும் தூய்மை பணியாளர்கள் நல வாரியம் மூலமாக 2008-ஆம் ஆண்டில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளது.
இந்த அடையாள அட்டை வைத்திருப்போர் தற்போது பணியில் இருந்தாலும் ஓய்வில் இருந்தாலும் அதன் கீழ் வழங்கப்படும் நிவாரண உதவிகளை பெற்று பயன்பெறுவதற்கு மாவட்ட மேலாளருக்கு (தாட்கோ) தெரிவிக்க வேண்டும். நேரில் வராமல் செல்போன் எண் 9445029469 அல்லது மின்னஞ்சல் dmtahdcooty@gmail.com ஆகியவை மூலம் விவரங்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரசால் 9 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 2 பேர் குன்னூரை சேர்ந்தவர்கள். இதையடுத்து நகர பகுதியான ராஜாஜி நகர், உழவர் சந்தை, மாடல் ஹவுஸ், காமராஜபுரம், பழைய ஆஸ்பத்திரி லைன் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு போலீசாரின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டன. அங்குள்ள பொதுமக்கள் யாரும் வெளியில் செல்லவும், வெளியாட்கள் உள்ளே நுழையவும் தடை விதிக்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் யாரும் அத்தியாவிசய பொருட்களையோ வாங்க முடிய வில்லை. மருத்துவ மனைக்கோ செல்ல முடிய வில்லை. ஈம சடங்குகள் மற்றும் மரணம் அடைந்தவர்கள் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. வீட்டிற்கு சமையல் கேஸ்சை கூட வாங்க முடியாமல் அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
நேற்று பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றாக திரண்டு தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்ட பகுதிகளை உடனே திறக்க வேண்டும். எங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் மற்று வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேவையான பொருட்கள் எவ்வித தடையு மின்றி வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.






