என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    விரைவில் பச்சை மண்டலத்துக்கு மாறும் நீலகிரி மாவட்டம்

    கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு விரைவில் பச்சை மண்டலத்துக்கு நீலகிரி மாவட்டம் மாற வாய்ப்பு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியான 9 பேரும், படிப்படியாக குணமடைந்து, வீடு திரும்பினார்கள். அவர்களுடன் தொடர்பில் இருந்த 28 பேரின் சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

    இதற்கிடையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்து வந்த ஊட்டி காந்தல், குன்னூர் ராஜாஜி நகர், கோத்தகிரி கடைவீதி, எஸ்.கைக்காட்டி ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளில் தனிமைப்படுத்துதல் வருகிற 7-ந் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 19 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. கடைசியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அடுத்த சில தினங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லையெனில் நீலகிரி மாவட்டம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    இதற்காக நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அங்குள்ள அனைத்து சோதனைச்சாவடிகளும் மூடப்பட்டு உள்ளன.

    அவசர தேவைகளுக்காக இ-பாஸ் பெற்று வெளியிடங்களுக்கு சென்று திரும்பிய 1,000 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை தினமும் சுகாதாரத்துறை ஊழியர்கள் தொடர்பு கொண்டு சளி, காய்ச்சல் உள்ளதா? என்று விசாரிக்கின்றனர். இதுபோன்ற தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதால், கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு நீலகிரி மாவட்டம் விரைவில் பச்சை மண்டலத்துக்கு மாற வாய்ப்பு உள்ளது. 
    Next Story
    ×