என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    கோவை, நீலகிரியில் சூறாவளி காற்றுடன் மழை

    கோவை மற்றும் நீலகிரியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    குன்னூர்:

    கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெயிலும், மாலை நேரங்களில் சாரல் மழையும் பெய்து வருகிறது.

    நேற்று மாலை கவுண்டம்பாளையம், வடவள்ளி, துடியலூர், அன்னூர் உள்ளிட்ட மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    வடவள்ளி பகுதியில் பெய்த பலத்த மழைக்கு பெரியார் நகர் 5-வது வீதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நின்ற மரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டின் சுவர்கள் சேதம் அடைந்தன. மேலும் மின்சார வயர்களிலும் மரம் விழுந்தால் 2 மின்கம்பங்கள் முறிந்து வீடுகளின் மீது விழுந்தது.

    இதனால் அந்த பகுதி முழுவதும் மின்வினியோகம் தடை பட்டது. இதேபோல் குனியமுத்தூர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 2 மரங்கள் முறிந்து விழுந்தன.

    பெரியநாயக்கன்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாரான 500 வாழைகள் சேதம் அடைந்தன.

    அன்னூர் தெற்கு பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

    இதற்கு கரியம்பாளையம் துணை மின் நிலையத்தின் முன்பு இருந்த 3 மின் கம்பம் முறிந்து விழுந்தது. மேலும் 2 ராட்சத மரங்கள் முறிந்து மின்வாரிய குடியிருப்பு பகுதியில் விழுந்தது. இதில் தெருவில் நிறுத்தியிருந்த கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை சேதம் அடைந்தன. இதேபோல் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து பகல் 1 மணியளவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. 5 மணி நேரம் பெய்த மழை காரணமாக முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    இதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. பந்தலூர் பகுதியிலும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழைக்கு நெல்லியாளம் அருகே டேன்டீ சரகம் எண்.3-ல் வசித்து வரும் மலர் செல்வி என்பவர் வீடு சேதம் அடைந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள குந்தா, ரேலியா, காமராஜர் சாகர் அணை உள்பட முக்கிய அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    இதேபோல் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழைக்கு ஆங்காங்கே மரங்கள் மற்றும் 8 மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த சின்ன வெங்காயம் தண்ணீரில் முழ்கியது.

    Next Story
    ×