என் மலர்tooltip icon

    நீலகிரி

    ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டதால், ஊட்டியில் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவாமல் இருக்கும் வகையில் மார்க்கெட்டுகள் மூடப்பட்டு, பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த திறந்தவெளி சந்தைகள் அமைக்கப்பட்டன. தமிழகத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர பிற பகுதிகளில் 34 வகையான கடைகளை திறக்கலாம் என்று கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அரசு செய்தது.

    ஊட்டியில் நேற்று முன்தினம் அரசு அனுமதித்த கடைகளை வியாபாரிகள் திறந்தபோது, காலையிலும், மதியம் 2 மணிக்கு பின்னரும் போலீசார் அடைக்க கூறியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக இருந்ததால், கடைகள் அடைக்கப்பட்டன.

    இந்த நிலையில் நேற்று முதல் நீலகிரியில் 34 வகையான கடைகள் ஆங்காங்கே பல நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. ஊட்டியில் முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிகளவில் வந்தனர். இரவு 7 மணி வரை கடைகள் திறந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டாலும், காலையில் ஒரே நேரத்தில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஊட்டி சேரிங்கிராஸ், ஏ.டி.சி., மணிக் கூண்டு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் பொதுமக்கள் பலர் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு பொருட்களை வாங்க சென்றனர். இதனால் ஊரடங்கு உத்தரவால் பல நாட்களாக வெறிச்சோடி இருந்த சாலைகளை வாகனங்கள் ஆக்கிரமித்து இருந்தது. ஊட்டி கமர்சியல் சாலையில் இருசக்கர வாகனங்களை முறையாக நிறுத்த தடுப்புகள் வைத்து கயிறு கட்டப்பட்டது. கடைகளில் கூட்டம் கூடுவதை தடுக்க நகராட்சி சார்பில் ஆட்டோ மூலம் ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊட்டியில் வழக்கம்போல் மக்கள் நடமாட்டம் இருந்தது. ஆனால் மக்களை விட வாகன போக்குவரத்து அதிகரித்து இருந்ததை காண முடிந்தது.
    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் டாக்டர்கள், செவிலியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 14 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 5 பேர், கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர் வசித்து வந்த பகுதிகளில் வீடு, வீடாக டாக்டர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் சென்று யாருக்காவது காய்ச்சல் உள்ளதா? என்று ஆய்வு நடத்தினர்.

    இதுபோன்று கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இரவு, பகல் பாராமல் உயிரை பணயம் வைத்து பணிபுரிந்து வரும் டாக்டர்கள், செவிலியர்களை கவுரவிக்க வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

    அதன்படி ஊட்டியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், செவிலியர்கள் அரசு தாவரவியல் பூங்காவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை நுழைவுவாயிலில் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதா கிருஷ்ணன் தலைமையில் பணியாளர்கள் கைதட்டி வரவேற்றனர். மேலும் அவர்களது சேவையை பாராட்டி மலர்களை வழங்கி கவுரவித்தனர். பின்னர் அவர்கள் மலர் மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்ட பூந்தொட்டிகளில் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் மலர்களை கண்டு ரசித்தனர்.

    மேலும் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய மலர்களை பார்வையிட்டனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் இருந்தனர். முடிவில் அவர்களுக்கு டீ வழங்கப்பட்டது. இதன்காரணமாக மன அழுத்தம் நீங்கியதாக டாக்டர்கள், செவிலியர்கள் தெரிவித்தனர்.
    வெளியூர்களில் இருந்து நீலகிரிக்கு ரேஷன் பொருட்கள் ஏற்றி வரும் லாரிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 71 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு கடந்த 4-ந் தேதி முதல் மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் விலையின்றி வழங்கப்பட்டு வருகிறது. 402 ரேஷன் கடைகள் மூலம் ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டு, தினமும் 100 பேருக்கு பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. தடையின்றி வழங்க கூடுதலாக அத்தியாவசிய பொருட்கள் குடோன்களுக்கு வரவழைக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, பந்தலூர், கூடலூர் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மொத்த விற்பனை கிடங்குகளில்(குடோன்) இருப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மண்டல அலுவலகம் மற்றும் குடோன் ஊட்டி கூட்ஷெட் சாலையில் உள்ளது. சென்னையில் இருந்து பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, கோவையில் இருந்து அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்கள் தினமும் 15 டன் லாரிகளில் குடோன்களுக்கு கொண்டு வரப்படுகிறது.

    தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்தவர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பரவலை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் வெளியூர்களில் இருந்து நீலகிரிக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் சோதனைச்சாவடிகளில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுகிறது.

    அங்கு சுகாதாரத்துறையினர் லாரி டிரைவர், கிளனர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்கின்றனர். குறிப்பிட்ட வெப்பநிலைக்கு கீழ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். ஊட்டியில் நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு ரேஷன் பொருட்களை ஏற்றி வரும் லாரிகளுக்கு தினமும் நகராட்சி மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. லாரிகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்த பின்னரே ரேஷன் பொருட்களை தொழிலாளர்கள் இறக்கி குடோன்களில் அடுக்கி வைக்கின்றனர்.

    லாரி டிரைவர்கள், கிளனர்கள் வெளியிடங்களுக்கு அடிக்கடி சென்று வருவதால், அவர்கள் முறையாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் மேற்கண்ட குடோனுக்கு வந்த 2 டிரைவர்கள் வெளியூர்களில் இருந்து வந்ததால், கொரோனா அச்சத்தால் சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது. முடிவில் இருவருக்கும் பாதிப்பு இல்லை என்ற பின்னர் அரசு ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் ரூ.4 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.
    ஊட்டி:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பல நாட்களாக அடைக்கப்பட்டு இருந்த மதுக்கடைகள் நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டன.

    கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட 7 பகுதிகளை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சேர்த்து மொத்தம் 63 மதுக்கடைகள் திறந்து செயல்பட்டது. ஊரடங்கால் மதுபானங்களை வாங்க முடியாமல் திக்கு முக்காடிய மதுபிரியர்கள் மதுக்கடைகளுக்கு படையெடுத்தனர். ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நீலகிரியில் நேற்று 2-வது நாளாக மதுக்கடைகள் திறந்து இருந்தன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டோக்கன் வழங்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று முன்தினத்தை விட நேற்று மதுக்கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. முதல் நாளில் தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி சென்றதால், கூட்டம் குறைந்து விட்டதாக பணியாளர்கள் தெரிவித்தனர். ஊட்டியில் உள்ள மதுக்கடைகளில் அதிகபட்சம் 6 அல்லது 8 பேர் வரிசையில் நின்று வாங்கியதை காண முடிந்தது.

    கூட்டம் குறைந்தாலும், பணியாளர்கள் மதுக்கடைக்கு வெளியே நின்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ரூ.2 கோடியே 88 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை ஆனது. நேற்று ரூ.1 கோடியே 30 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை ஆனது. கடந்த 2 நாட்களில் ரூ.4 கோடியே 18 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    பந்தலூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.
    பந்தலூர்:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள எருமாடு திருமங்கலம் ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் பாபு (வயது 38) மற்றும் பேபி. இவர்கள் 2 பேரும் நேற்று அந்தப்பகுதியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றனர். பின்னர் அவர்கள் 2 பேரும் மதுவாங்கி குடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென 2 பேருக்கும் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனை கவனித்த அதேப்பகுதியை சேர்ந்த விஜயன் (40) என்ற தொழிலாளி அங்கு வந்து, சண்டைபோட்ட 2 பேரையும் சமாதானப்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள்  கீழே கிடந்த கட்டையை எடுத்து, விஜயன் தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயம் அடைந்த விஜயன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து எருமாடு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், அடித்து கொலை செய்யப்பட்ட விஜயனின் உடலை கைப்பற்றி பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிறிது நேரத்தில் தலைமறைவான பாபுவை போலீசார் சுற்றி வளைத்தனர். அவருக்கு காயம் இருந்ததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மின்சாரம் தாக்கியதில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள குன்னக்கொம்பை கோடேரி பகுதியை சேர்ந்தவர் அமாவாசை. இவரது மகள் மங்கம்மாள்(வயது19). பிளஸ்-2 முடித்து விட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார். தற்போது வேலை இல்லாததால் வீட்டில் இருந்தார். நேற்று பகல் 12 மணியளவில் துணியை துவைத்து விட்டு காய போடுவதற்காக மொட்டை மாடிக்கு சென்றார். அங்குள்ள கம்பியில் துணிகளை மங்கம்மாள் காய போட்டு கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மங்களம்மாள் கை அந்த வழியாக சென்ற மின்கம்பி மீது பட்டது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரது சத்தம் கேட்ட மங்கம்மாளின் தம்பி திருப்பதி(14), அருகே வசித்து வரும் சரண்யா ஆகியோர் விரைந்து வந்து மங்கம்மாளை காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த மங்கம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மற்ற 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்த திருப்பதி, சரண்யா ஆகிய 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் 2 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    குன்னூரில் நேற்று இடியுடன் பலத்த மழை பெய்ததால் மண்சரிவு ஏற்பட்டது. இதில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று காலை முதல் ஆலங்கட்டி மழை பெய்தது. பிற்பகல் 3 மணியளவில் பலத்த இடியுடன் மழை கொட்டி தீர்த்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழை காரணமாக முக்கிய சாலைகளான குன்னூர் பஸ் நிலைய சாலை, குன்னூர்- கோத்தகிரி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர் மழைக்கு குன்னூர் கன்னி மாரியம்மன் கோவில் பகுதி அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நிறுத்தப்படும் டெப்போவின் பின்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக 2 பேர் நடந்து சென்றனர். சத்தம் கேட்டு சுதாரித்து கொண்டதால் அவர்கள் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள், வாகனங்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் கனமழை பெய்தது. பனிக்கட்டிகளுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் ரோடுகளில் ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

    குன்னூர் அருகே இறைச்சியில் விஷம் வைத்து காட்டுபன்றி, நாய்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் வள்ளுவர் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை ஒட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு ஏராளமான காட்டு விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த விலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    வள்ளுவர் நகர் பகுதியை ஒட்டி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இங்கு குன்னூர் நகர பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

    வள்ளுவர் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஏராளமான வளர்ப்பு நாய்கள், பூனைகள் உள்ளிட்டவை வளர்த்து வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் வளர்க்கப்பட்டு வந்த நாய்கள் ஒன்றன் பின் ஒன்றாக வீடுகள் முன்பு மயங்கி விழுந்து இறந்தன. இதேபோல் அந்த பகுதியில் உள்ள மரங்களில் இருந்த 10-க்கும் மேற்பட்ட காகங்கள், காட்டு பன்றி, பூனைகள் உள்ளிட்டவையும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தன. இதை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வனத்துறையினர், மருத்துவதுறை மண்டல இயக்குனர் வெடியப்பன், கால்நடை டாக்டர் ராஜ் முரளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த வனவிலங்குகளின் உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்வு செய்தனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், குன்னூர் பகுதியில் வளர்ப்பு விலங்குகள், காட்டு விலங்குகள் மர்மமான முறையில் இறந்ததாக தகவல் வந்தது.

    அதன் பேரில் அங்கு வந்து இறந்த விலங்குகள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளோம்.

    அந்த பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்ட கோழி இறைச்சி கழிவுகளில் வி‌ஷம் கலந்திருந்தது தெரியவந்தது. அந்த இறைச்சிகளை தின்ற பின்னர் நாய்கள், பூனைகள், பன்றி, காகங்கள் இறந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து வி‌ஷம் கலந்த இறைச்சியை இங்கு கொட்டியது யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.
    கோயம்பேடு சென்று திரும்பிய நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மலைக் காய்கறிகள் லாரிகள் மூலம் சென்னை உள்பட வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இருந்து கடந்த சில நாட்களாக லாரிகளில் சென்னை கோயம்பேடுக்கு காய்கறிகளை சிலர் ஏற்றிச்சென்றனர்.

    இதற்கிடையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று திரும்பிய சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று திரும்பிய லாரி டிரைவர்கள் உள்பட 33 பேரின் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. அதன் முடிவுகள் வந்தன.

    அதில் லாரி டிரைவர்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவர்கள் அனைவருக்கும் 20 முதல் 42 வயது வரை இருக்கும். கொரோனா தொற்று உறுதியான 4 பேரும் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு உடனடியாக மாற்றப்பட்டனர். அவர்கள் அங்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தவிர சளி மாதிரி எடுக்கப்பட்ட மற்றவர்களின் முடிவுகள் இன்னும் வரவில்லை.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 நாட்களாக புதியதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தது. இதனால் பச்சை மண்டலத்தை நோக்கி சென்றது. தற்போது ஒரே நாளில் 4 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த நஞ்சநாடு அருகே உள்ள கோழிக்கரை, கக்கன்ஜி காலனி, சேலாஸ் அருகே உள்ள நேரு நகர் ஆகிய 3 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் வகையில் அனைத்து துறை ஊழியர்களை கொண்டு குழு அமைக்கப்பட உள்ளது. மேலும் சுகாதார பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதன்படி நேற்று முன்தினம் வரை 146 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 135 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள். மீதி 11 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் திருப்பூரை சேர்ந்த 2 பேர் உள்பட 3 பேர் நேற்று மாலை ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். மேலும் கொரோனா தொற்று சந்தேகத்துடன் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 19 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 7 பேரும் ஆக மொத்தம் 26 பேர் ஆஸ்பத்திரிகளில் நேற்று சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஆண்கள் 8 பேர், பெண்கள் 17 பேர். சிறுமி ஒருவர் ஆவார். 
    கூடலூரில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதையொட்டி சுகாதார பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் எஸ்.எஸ்.நகரில் சமீபத்தில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியானார்.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது பலருக்கும் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் மருத்துவ முகாம் தொடங்கப்பட்டது. அதில் பொதுமக்களின் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

    கூடலூர் எஸ்.எஸ்.நகரில் டெங்கு காய்ச்சலால் 5 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் குணம் அடைந்து விடுவார்கள். அந்த பகுதியில் பிறருக்கு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து கூடலூரில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து சுகாதார பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். வீடு, வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்று பொதுமக்களிடம் விசாரிக்கின்றனர். மேலும் மருத்துவ பரிசோதனை செய்கின்றனர். கொசு மருந்து அடிக்கும் பணி மும்முரமாம நடந்து வருகிறது.

    இது தவிர அங்குள்ள அனைத்து கட்டிடங்களிலும் தண்ணீர் தொட்டிகள் திறந்து வைக்கப்பட்டு உள்ளதா?, மழைநீர் தேங்கும் வகையில் டயர்கள் உள்ளிட்ட பொருட்கள் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு நடத்துகின்றனர்.

    மேலும் அங்குள்ள ஒரு கடையின் பின்புறம் மலைபோல குவித்து வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி 2-வது நாளாக நடந்து வருகிறது.
    முதுமலை வனப்பகுதியில் புலிதாக்கி குட்டி யானை ஒன்று பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது.
    ஊட்டி:

    முதுமலை, தெப்பக்காடு வனச்சரகம், இமரல்லா பீட், கஞ்சிகட்டி வேட்டை தடுப்பு முகாம் அருகே வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு யானைகள் கூட்டமாக நின்றிருந்தன. இதையடுத்து வனத்துறையினர் அருகில் சென்று பார்த்தனர். அப்போது அங்கு குட்டி யானை ஒன்று பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறை ஊழியர்கள் வன அதிகரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்த வனத்துறை துணை இயக்குனர் செண்பகபிரியா, வனச்சரகர் ராஜேந்திரன் மற்றும் வன ஊழியர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் மசினகுடி அரசு கால்நடை டாக்டர் கோசலன் முன்னிலையில் குட்டி யானையின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இறந்த ஆண் குட்டி யானை, பிறந்து மூன்று மாதம் இருக்கும். சில தினங்களுக்கு முன்பு புலி தாக்கியதில் காயமடைந்து, அதன் காரணமாக உயிரிழந்துள்ளது,’ என்றனர்.
    கோயம்பேடு சென்று குன்னூருக்கு திரும்பிய டிரைவர்கள், கிளினர்கள் உள்பட 11 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது.
    குன்னூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்தவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

    இதையடுத்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றி, இறக்கி வரும் வாகனங்கள் மாவட்ட எல்லைகளில் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இருப்பினும், வெளிமாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் வாகனங்கள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார் சோதனைச்சாவடியில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று குன்னூர் லெவல் கிராசிங்கில் தாசில்தார் குப்புராஜ் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து குன்னூர் பொது வினியோகத்துறைக்கு அரிசி ஏற்றி லாரி வந்து இருப்பதாகவும், அதனை இறக்கி கொண்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் வருவாய்த்துறையினர், போலீசார் அந்த இடத்துக்கு சென்று லாரி டிரைவரை ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டது. மேலும் சென்னை கோயம்பேட்டில் இருந்து குன்னூருக்கு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த 7 லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. அந்த லாரிகள் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. உடனடியாக அதன் டிரைவர்கள், கிளினர்கள் உள்பட 11 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்த பிறகு லாரிகள் விடுவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×