என் மலர்tooltip icon

    நீலகிரி

    ஊட்டி அருகே காந்தல் பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.
    ஊட்டி:

    ஊட்டி அருகே காந்தல் பகுதியில் இரு வாலிபர்கள் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஊட்டி இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது, கஞ்சா விற்ற 2 வாலிபர்களையும் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில், காந்தல் கஸ்தூரி பாய் காலனியை சேர்ந்த அருண்(22), குருசடி காலனியை சேர்ந்த குட்வின் (22) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
    ஊட்டியில் அரசு அலுவலகங்களில் பணிக்கு வந்த ஊழியர்கள் மனஅழுத்தத்தை குறைக்க தாவரவியல் பூங்காவை கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    ஊட்டி:

    கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கவுரவிக்கவும், மனஅழுத்தத்தை போக்கவும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு சென்று பார்வையிட கலெக்டர் அனுமதி அளித்து உள்ளார். அதன்படி, டாக்டர்கள், செவிலியர்கள் கடந்த வாரம் மலர் அலங்காரங்களை கண்டு ரசித்தனர்.

    இந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக அலுவலர்கள், அனைத்துத்துறை ஊழியர்கள் பணிக்கு வந்தனர். ஆனால் அவர்களின் மனஅமைதிக்காகவும், மனஅழுத்தத்தை குறைக்கவும் ஊட்டி தாவரவியல் பூங்காவை சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி அரசு ஊழியர்கள் அனைவரும் தாவரவியல் பூங்காவை பார்வையிட சென்றனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கலெக்டர் உள்பட அரசு ஊழியர்கள் பூங்கா பணியாளர்கள் மலர்கள் வழங்கியும், கைதட்டியும் வரவேற்பு அளித்தனர். மலர் மாடங்களில் பூத்து குலுங்கிய மலர்கள், கண்ணாடி மாளிகை, மலர் அலங்காரங்கள் ஆகியவற்றை கண்டு ரசித்தனர். அவர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அவர்கள் குடும்பத்தினரோடு பூங்காவில் வலம் வந்தனர். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
    கோத்தகிரி பஸ் நிலைய பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் ஆய்வு மேற்கொண்டார்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஸ் நிலைய பகுதியில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாகங்கள் இருக்கின்றன. அந்த வணிக வளாகங்களில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தன. தற்போது ஊரடங்கு காரணமாக கடைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் கோத்தகிரி பஸ் நிலைய பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் நேற்று குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் தலைமையில் கோத்தகிரி தாசில்தார் மோகனா, வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது வணிக வளாகங்களில் உள்ள அனைத்து கடைகளையும் திறக்க சப்-கலெக்டர் அனுமதி வழங்கினார். ஆனால் ஒவ்வொரு கடைக்கு முன்பும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கைகழுவவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தினார்.

    அதன்பின்னர் கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் சப்-கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு அனைத்து கடைகளையும் சுழற்சி முறையில் திறக்க நடவடிக்கை எடுக்கும்படி பேரூராட்சி அதிகாரிகளுக்கு சப்-கலெக்டர் உத்தரவிட்டார். இதற்கு அவருக்கு, வியாபாரிகள் நன்றி கூறினர்.

    அப்போது மார்க்கெட் நுழைவு வாயிலுக்கு வெளியே உள்ள ஒரு மளிகைக்கடையில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நின்று பொருட்கள் வாங்கி கொண்டு இருந்தனர். அதை பார்த்த சப்-கலெக்டர் ரஞ்சித் சிங், அங்கு சென்று சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதற்கு ஏற்பாடு செய்யாவிட்டால் கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று உரிமையாளரை எச்சரித்தார்.

    ஊரடங்கால் தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க மாற்று ஏற்பாடாக நீலகிரி மாவட்டத்தில் கட்டுமான தொழிலில் கழுதைகள் ஈடுபடுத்தப்படுகிறது.
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை, காய்கறி விவசாயம் ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது தவிர கட்டுமானம் மற்றும் சுற்றுலா தொழிலும் கூலித்தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் உள்ளூர் தொழிலாளர்கள் தவிர வடமாநிலத்தை சேர்ந்தவர்களும் அதிக அளவில் உள்ளனர்.

    இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 1 மாதத்துக்கும் மேல் ஊரடங்குஅமலில் உள்ளதால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானமின்றி தவிக்கிறார்கள். மேலும் வேலை இழந்த ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலும் தேயிலை தோட்டங்களில் விவசாய பணிக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் கட்டுமான பணியும் குறைந்த தொழிலாளர்களை கொண்டு எந்திரத்தின் உதவியுடன் நடைபெறுகிறது. இதனால் எந்திர பயன்பாடுகள் தவிர்க்க முடியாததாகி வருகிறது.

    இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து கட்டுமானம் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு தளர்வு அளித்தது. இதனால் படிப்படியாக கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஆனால் போதிய தொழிலாளர்கள் இல்லை. மஞ்சூர் அருகே எடக்காடு கிராமத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் மலைப்பாங்கான இடத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. பிக்கட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அந்த கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. ஆனால் பற்றாக்குறையால் சாலை பணிக்கு தேவையான தொழிலாளர்கள் கிடைக்கவில்லை.

    இதன் காரணமாக லாரிகளில் கொண்டு வரப்பட்ட ஜல்லி கற்கள், சிமெண்டு உள்ளிட்ட கட்டுமான பொருட்களை மலைப்பாங்கான மேடான இடத்துக்கு கொண்டு செல்ல முடியாமல் போனது. போதிய தொழிலாளர்கள் இல்லாததால் கட்டுமான பொருட்களை மேடான இடத்துக்கு விரைவாக கொண்டு செல்ல கழுதைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் செலவினமும் குறைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்று பல்வேறு இடங்களில் தொழிலாளர் பற்றாக்குறையால் கட்டுமான தொழிலில் மாற்று ஏற்பாடாக கழுதைகள் பயன்படுத்தப்படுவது அதிகரித்து உள்ளது.
    ஊட்டி தாவரவியல் பூங்கா அருகில் காலில் காயத்துடன் நடக்க முடியாமல் சிறுத்தைப்புலி தவித்தது. அதனை மீட்டு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மேல்பகுதியில் ராஜ்பவன், போலீஸ் சூப்பிரண்டு வீடு, பூங்கா பணியாளர்கள் குடியிருப்பு, கார்டன் மந்து ஆகியவை உள்ளது. இப்பகுதியை சுற்றிலும் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் காட்டெருமை, சிறுத்தைப்புலி, கடாமன், கரடி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று காலையில் பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் சிறுத்தைப்புலி ஒன்று காலில் காயத்துடன் படுத்து கிடந்தது. மேலும் நடந்து செல்ல முடியாமல் தவித்தது.

    இதுகுறித்த தகவலின் பேரில் நீலகிரி வன அதிகாரி குருசாமி, உதவி வன பாதுகாவலர் சரவணன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சிறுத்தைப்புலியை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் கூறும்போது, காயத்துடன் கிடக்கும் ஆண் சிறுத்தைப்புலிக்கு 6 வயது முதல் 7 வயது வரை இருக்கும். மற்ற வனவிலங்குகளை வேட்டையாடும் போது ஏற்பட்ட மோதலில் காயம் அடைந்து இருக்கலாம். அல்லது மேடான பகுதியில் இருந்து பள்ளமான பகுதிக்கு தாவி குதிக்கும் போது காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்றனர்.

    இதையடுத்து சிறுத்தைப்புலியை மீட்டு, சிகிச்சை அளிக்குமாறு கால்நடை டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் டாக்டர்கள் வரவில்லை. இதனால் காயத்தால் சிறுத்தைப்புலி உயிருக்கு போராடியது. அதனை தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தைப்புலிக்கு மயக்க ஊசி போட்டனர். பின்னர் வலை போட்டு பிடித்து, வாகனத்தில் ஏற்றி ஊட்டி கூட்ஷெட் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் சிறுத்தைப்புலிக்கு சிகிச்சை அளித்தனர். காயம் அடைந்த சிறுத்தைப்புலிக்கு உள்காயம் உள்ளது. மயக்க நிலையில் இருப்பதோடு, நல்ல நிலையில் காணப்படுகிறது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
    ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சுழற்சி முறையில் 65 கடைகள் திறக்கப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1,300 கடைகள் உள்ளன. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி மார்க்கெட் மூடப்பட்டது. அங்குள்ள காய்கறி, மளிகை, பழக்கடைகள் 2 திறந்தவெளி சந்தைகளுக்கு மாற்றப்பட்டன.

    மார்க்கெட்டில் ரேஷன் கடைகள், மொத்த விற்பனை கடைகள், நாட்டு மருந்து கடைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. இதனால் மளிகைக்கடை வியாபாரிகள் அதிக பொருட்களை எடுத்து வெளியே வைத்து விற்பனை செய்ய முடியாமல் இருந்தனர்.

    இதற்கிடையில் எலிகள் நடமாட்டத்தால் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் சேதம் அடைந்தது. ஊட்டியில் நிலவும் சீதோஷ்ண காலநிலையாலும் பொருட்கள் சேதம் அடைய தொடங்கியது. அதனால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து சமூக இடைவெளி விட்டு குறிப்பிட்ட கடைகள் திறந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தினர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மார்க்கெட்டில் சமூக இடைவெளி விட்டு சுழற்சி முறையில் 195 கடைகளை திறந்து காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி கடந்த 48 நாட்களுக்கு பின்னர் நேற்று முதல் மார்க்கெட்டில் உள்ள 65 கடைகள் திறந்து செயல்பட்டது.

    இதற்கிடையில் நேற்று திறக்கப்பட்ட 65 கடைகளுக்கு ஏ குறியீடும், இன்று(சனிக்கிழமை) திறக்கப்படும் 65 கடைகளுக்கு பி குறியீடும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்பட உள்ள 65 கடைகளுக்கு சி குறியீடும் ஒட்டப்பட்டு உள்ளது. அதில் கடையின் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஏ குறியீடு ஒட்டப்பட்ட கடைகள் திறக்கப்படும் நாளில், மற்ற குறியீடு உள்ள கடைகள் திறக்கக்கூடாது. பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க சமூக இடைவெளி விட்டு மளிகை, பேக்கரி, தேயிலைத்தூள் விற்பனை, காலணி, சிறிய உணவகங்கள், துணிக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.

    முன்னதாக வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கடைகள் முன்பு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கை கழுவ தண்ணீர், கிருமிநாசினி அல்லது சோப்பு வைக்க வேண்டும். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க குறிப்பிட்ட இடைவெளியில் கோடுகள் அல்லது வட்டங்கள் தரையில் வரையப்பட வேண்டும். ஒருவர் வாங்கி சென்ற பின்னர் பின்னால் நிற்பவர் சென்று பொருட்கள் வாங்க வேண்டும். கடையில் கூட்டம் கூடக்கூடாது. இந்த நடைமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று வியாபாரிகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
    சென்னையில் இருந்து கோத்தகிரிக்கு வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் உறவினர்களை அவர்களை 14 நாட்கள் தனிமையில் இருக்கவும், விடுதியை விட்டு வெளியில் வர வேண்டாம் எனவும் சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
    கோத்தகிரி:

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அவ்வாறு வருபவர்களை தனிமைப்படுத்தியும், வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டியும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    சென்னை அண்ணாநகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மோகன். இவர் நேற்று முன்தினம் தனது உறவினர்களுடன் சென்னையில் இருந்து கோத்தகிரிக்கு வந்துள்ளார். பின்னர் கேர்கெம்பை என்ற பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

    சிவப்பு மண்டலமான சென்னையில் இருந்து எம்.எல்.ஏ. ஒருவர் தனது உறவினர்களுடன் கோத்தகிரிக்கு வந்திருப்பதாக வருவாய் ஆய்வாளர் லதாவுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் வருவாய் ஆய்வாளர் லதா, சுகாதார ஆய்வாளர் சுதாகர் மற்றும் சுகாதார துறையினர் அந்த தனியார் விடுதிக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அந்த விடுதியின் முன்பு தனிமைப்படுத்துவதற்கான ஸ்டிக்கர் ஒட்டினர்.

    மேலும் அவர்களை 14 நாட்கள் தனிமையில் இருக்கவும், விடுதியை விட்டு வெளியில் வர வேண்டாம் எனவும் சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
    ஊட்டியில் கோவில் முன்பு வீசப்பட்ட ஆண் குழந்தையை டாக்டர்கள் இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அப்பகுதியில் பிரசவம் ஆன பெண்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஊட்டி:

    ஊட்டி கொல்லிமலை கிராமத்தில் உள்ளது காந்திபுதூர். இங்குள்ள மதுரைவீரன் கோவில் முன்பு நேற்று குழந்தையின் அழுகுரல் கேட்டது.

    சந்தேகம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் ஓடிச்சென்று பார்த்தனர். அங்கு பிறந்த சில நாட்களே ஆன ஆண் குழந்தை கிடந்தது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து கொலக்கொம்பை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    குளிரால் குழந்தை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கம்பளி ஆடை போர்த்தப்பட்டிருந்தது. போலீசார் குழந்தையை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை டாக்டர்கள் இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த குழந்தை பாதுகாப்பு நல அதிகாரிகள் குழந்தையை வீசி சென்ற தாய் யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சமீபத்தில் குழந்தை வீசப்பட்ட பகுதியில் பிரசவம் ஆன பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கூடலூர் அருகே மளிகை கடையை உடைத்து காட்டு யானை அட்டகாசம் செய்தாதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று, நேற்று அதிகாலை 4 மணியளவில் கூடலூர்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்தது. தொடர்ந்து தொரப்பள்ளி பஜாருக்குள் புகுந்தது. அயூப் என்பவரது மளிகை கடையை உடைத்து மளிகை பொருட்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியது.

    இதைப்பார்த்த பொதுமக்கள் யானையை விரட்டினர். ஆனால் அது செல்லவில்லை. தகவல் தெரிந்ததும் கார்குடி வனச்சரகர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட கடைக்காரருக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஊரடங்கு உத்தரவால் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறும். இதையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். ஊட்டி மலர் கண்காட்சி சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இதனை காண உள்நாடுகள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். நடப்பாண்டில் 124-வது மலர் கண்காட்சி இன்று(வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 19-ந் தேதி வரை 5 நாட்கள் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இதற்காக ஜப்பான், நெதர்லாந்து, அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய வெளிநாடுகளில் இருந்து 50 வகையான செடிகளில் இருந்து 400 ரக விதைகள் பெறப்பட்டு நர்சரியில் வளர்க்கப்பட்டன. பின்னர் நடைபாதை ஓரங்கள், மலர் பாத்திகள் மற்றும் மரங்களை சுற்றிலும் 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது. இந்த செடிகளில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குவதால் பூங்காவே வண்ணமயமாக காட்சி அளிக்கிறது.

    கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் வரவில்லை. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு இருக்கிறது. ஊரடங்கால் ஊட்டியில் 124-வது மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் ஊரடங்கு உத்தரவால் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, ஊட்டியில் ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி ஆகிய 3 கண்காட்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு தேயிலை விலை வீழ்ச்சியையொட்டி சிறு தேயிலை விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை. அதற்கு பிறகு தற்போதுதான் மலர் கண்காட்சி ரத்து செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
    நீலகிரி மாவட்டத்தில் சளி மாதிரி பரிசோதிக்கப்பட்ட 373 கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளை தவிர பிற நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் துணிக்கடைகள் உள்பட அனைத்து தனிக்கடைகளும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. காலை 10.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து இருக்கலாம். ஏ.சி. இல்லாத சிறிய துணிக்கடைகள் அனுமதிக்கப்படுகிறது. வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள் இயங்க அனுமதி இல்லை.

    சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத கடைகளுக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். இதை கண்காணித்து அபராதம் விதிக்க 5 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து இ-பாஸ் பெற்று வருகிறவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் இருந்து நீலகிரி வருகிறவர்களுக்கு சளி மாதிரி பரிசோதிக்கப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வர 813 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

    அரசு கட்டுப்பாட்டு அறையில் அதற்கான அனுமதி பெற்று வரலாம். வெளிமாநில இ-பாஸ் இருப்பதுடன், தமிழக அரசின் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு வந்தால் சளி மாதிரி பரிசோதிக்கப்படுவதுடன், 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் மையத்தில் கட்டாயம் தங்க வைக்கப்படுவார்கள். வடமாநில தொழிலாளர்கள் 1,941 பேர் சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்து உள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து அழைத்ததால் 40 பேர் மிசோரம், மேகாலயா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் எந்தெந்த மாநிலங்களில் இருந்து வந்து உள்ளனர் என்று கண்காணிப்பு அதிகாரிகள் விவரங்கள் சேகரிக்கின்றனர்.

    அம்மாநில அரசுகள் நாங்கள் அவர்களை அழைத்து கொள்கிறோம் என்று அனுமதி தெரிவித்தால், தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். எனவே கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் கூட வேண்டாம். நீலகிரியில் பிரசவிக்கும் தருவாயில் உள்ள கர்ப்பிணிகள் 373 பேருக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. வாழ்வாதாரம் பாதித்த ஆட்டோ டிரைவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா வாகன ஓட்டுனர்களுக்கு கடன்கள் வழங்க புதியதாக 188 சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ஊட்டியில் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கேட்டு கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் வடமாநில தொழிலாளர்கள் முறையிட்டனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கேத்தி பிரகாசபுரத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள், நேற்று ஊட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அலுவலகத்தில் இருந்து காரில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியே புறப்பட்டார். உடனே காரின் அருகில் சென்ற தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கேட்டு முறையிட்டனர். அதற்கு பதிலளித்து பேசிய கலெக்டர், நீங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம். அங்கு சென்றாலும் திரும்பி வர முடியாது. இங்கேயே இருந்து பணிபுரியுங்கள் என்றார். உடனே நாங்கள் சொந்த ஊருக்கு செல்ல தயாராக இருக்கிறோம், எங்களை அனுப்பி வையுங்கள் என்று தொழிலாளர்கள் கூறினர். இதையடுத்து அவர்களது விவரங்களை சேகரிக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, ஊட்டி தாசில்தார் அலுவலகம் மூலம் 1,400 பேர் சொந்த ஊர் செல்ல பதிவு செய்து உள்ளனர். இதனை தெரிந்துகொண்டு வடமாநில தொழிலாளர்கள் ஊருக்கு செல்ல அனுமதி கேட்டு வருகின்றனர். சரியான காரணம் இருந்தால் மட்டுமே அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். சிலர் ரம்ஜான் பண்டிகைக்கு செல்ல வேண்டும் என்கின்றனர். அவர்கள் திரும்பி வரமாட்டோம் என உறுதிமொழி அளித்து விட்டு செல்லலாம் என்றார். தொழிலாளர்கள் இந்தி மொழியில் பேசியபோது, கலெக்டரும் இந்தியில் பேசினார். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×