என் மலர்
நீலகிரி
ஆப்பிரிக்க, அரேபிய நாடுகளைத் தாக்கி அங்கு கடும் உணவு பஞ்சத்தை ஏற்படுத்திய வெட்டுக்கிளிகள் கோடிக்கணக்கில் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளன.
பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பல லட்சம் எக்டேர் விளைநிலங்களை கபளீகரம் செய்து வருகின்றன.

ஆனால் பெரும் அதிர்ச்சி தரும் வகையில் கேரளா மாநிலம் வயநாடு பகுதி வழியாக வந்த வெட்டுக்கிளி ஊட்டி காந்தல் பகுதியில் தென்பட்டது. அதை பாட்டிலில் அடைத்து ஒருவர் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் தெரிவித்தார். அவர் தமிழக வேளாண் பல்கலை விஞ்ஞானிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி நீலகிரியில் தென்பட்டது ஆப்பிரிக்கா வெட்டுக்கிளியா என்பது குறித்து ஆய்வு செய்ய தமிழக வேளாண் பல்கலை குழு விரைவில் ஊட்டி வருகிறது. அவர்கள் ஆய்வு செய்து முடிவை அறிவிப்பார்கள் என்று கலெக்டர் கூறியுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முத்துக்கிருஷ்ணன் கூறியதாவது:-
1957-ம் ஆண்டு பெரம்பலூர், ராமநாதபுரம் பகுதிகளில் வெட்டுக்கிளிகள் புகுந்து சேதப்படுத்தின. ஆனால் தற்போது தமிழகத்தில் ஆப்பிரிக்கா வெட்டுக்கிளி தாக்குதல் இல்லை என்றார்.
இது குறித்து தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் பேராசிரியர்கள் கூறும்போது, தமிழகத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை அரணாக உள்ளது. மலையை கடந்து வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு இல்லை.
இது தவிர சாத்பூரா மலைத்தொடர் குஜராத் மாநிலத்தில் தொடங்கி மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் வழியாக சென்று சத்தீஸ்கர் மாநிலத்தில் முடிவடைகிறது. சாத்பூரா மலையை கடந்து தமிழகம் வர வாய்ப்பு இல்லை என்றும் வேளாண்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இருந்தபோதும் தமிழக வேளாண் பல்கலையில் இருந்து விரைவில் குழு ஊட்டி சென்று ஆய்வு செய்த பின்னர் ஊட்டியில் புகுந்த வெட்டுக்கிளி ஆப்பிரிக்கா வெட்டுக்கிளியா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதனை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மை துறை அதிகாரிகள் கூறினர்.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையடுத்து பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி, தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுக்காகளுக்கு உட்பட்ட இடங்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடியதாக 283 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. அப்பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க பள்ளிகள் மற்றும் சமுதாயக்கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும் உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறை, குடிமைப்பொருள் வழங்கல் துறைகளை சார்ந்த அலுவலர்கள் தயார்படுத்தப்பட்டு உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் பருவமழையின் போது ஏற்படும் புயல், மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பாக தகவல் அளித்தல், உதவிகள் கோருதல் போன்ற காரணங்களுக்காக பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக NeedD என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த செயலியை இணைய இணைப்பின்றி மக்கள் பயன்படுத்தி எதிர்வரும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளை விரைவில் சரிசெய்யவும், மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், உயிர் மற்றும் உடமை சேதங்களை குறைக்கவும் இயலும்.
இதுதவிர மழையால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அதேபோல் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஊட்டி கோட்டத்துக்கு 0423-2445577, குன்னூர் கோட்டத்துக்கு 0423-2206002, கூடலூர் கோட்டத்துக்கு 04262-261295, ஊட்டி வட்டத்துக்கு 0423-2442433, குன்னூர் வட்டத்துக்கு 0423-2206102, கோத்தகிரி வட்டத்துக்கு 04266-271718, குந்தா வட்டத்துக்கு 0423-2508123, கூடலூர் வட்டத்துக்கு 04262-261252, பந்தலூர் வட்டத்துக்கு 04262-220734 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அதன்படி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கோத்தகிரி:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மருள்பட்டியை சேர்ந்தவர் வீரமுத்து(வயது30). இவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று காலை ஆம்புலன்சை பழுது பார்ப்பதற்காக சோலூர் மட்டத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி வந்தார். குயின்சோலை அருகே ஒரு வளைவில் வந்தபோது ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மற்றும் டிரைவரை மீட்டனர். இதில் லேசான காயம் அடைந்த டிரைவர் வீரமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி ராணி. இவர்களுக்கு ராஜாராம் (வயது 21) என்ற மகன் உள்ளார்.
கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான ராஜாராம் அடிக்கடி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று கஞ்சா போதை தலைக்கு ஏறியதும் பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த ராஜாராம் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பெற்றோரை சரமாரியாக வெட்டினார். பலத்த காயத்துடன் பெற்றோர் அலறி சத்தம் போட்டனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டுவெலிங்டன் கண்டோன்மென்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். வெலிங்டன் போலீசார் ராஜாராமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
டெல்லி மாநாட்டுக்கு சென்று நீலகிரி மாவட்டத்துக்கு திரும்பிய 7 பேர், அவர்களுடன் தொடர்பில் இருந்த 2 பேர் என 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர். மேலும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டு சென்று வந்த லாரி டிரைவர்கள் 4 பேர் மற்றும் ஒருவரது சகோதரி என 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதில் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே சென்னையில் இருந்து ஊட்டிக்கு வந்த 8 மாத கர்ப்பிணிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் வசித்து வந்த காந்தலில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள நடைபாதைகள் தடுப்புகள் வைத்து மூடப்பட்டு உள்ளது. போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், வெளியாட்கள் உள்ளே வர அனுமதி இல்லை. தனிமைப்படுத்தப்பட்ட அந்த பகுதியில் 500 வீடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அங்கு ஊட்டி நகராட்சி கமிஷனர் சரஸ்வதி வீடு, வீடாக சென்று அனைத்து குடும்பங்களுக்கும் முகக்கவசம், 250 கிராம் பிளச்சிங் பவுடர், கிருமி நாசினியை வழங்கி சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு, கை கழுவும் முறை குறித்து விளக்கினார். குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர் உள்ளார்களோ அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது. அப்போது சுகாதார அதிகாரி(பொறுப்பு) பாஸ்கர் உடனிருந்தார். பின்னர் கமிஷனர் கிருமிநாசினி தெளிக்கும் பணியை பார்வையிட்டார்.
நகராட்சி மூலம் தினமும் 3 முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், வைட்டமின் சி மற்றும் ஜிங்க் மாத்திரைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்து அரசு துறைகளுக்கு தெரிவிக்கும் வகையில் தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் காய்கறிகள், மளிகை பொருட்கள் வீடு, வீடாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. காந்தலில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் 200 பேரிடம் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் இருக்கிறதா, கர்ப்பிணிகள் எத்தனை பேர் உள்ளனர், சர்க்கரை நோயாளிகள் போன்ற விவரங்களை கேட்டு சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சலூன் கடைகளும் மூடப்பட்டன. இதனால் முடி திருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. சலூன் கடைகளை வைத்து வாழ்க்கையை நடத்தி வரும் அவர்கள் வருமானம் இல்லாமல் தவித்தனர்.
இதனால் சலூன் கடை மற்றும் வீட்டு வாடகை செலுத்த முடியாமல் அவதி அடைந்தனர். இதற்காக கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் ஆண்கள் முடிவெட்ட முடியாமலும், முகச்சவரம் செய்ய இயலாமலும், சிலர் ‘டை’ அடிக்க முடியாமலும் திண்டாடி வந்தனர். இதையடுத்து கடந்த 19-ந் தேதி முதல் ஊரக பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது.
இதனால் தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து சென்னை தவிர மற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
அதனை தொடர்ந்து நேற்று முதல் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள், 11 பேரூராட்சி பகுதிகளில் சலூன் கடைகள் திறந்து செயல்பட்டன. ஊட்டியில் 200-க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் திறக்கப்பட்டது. கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து முகச்சவரம், முடிதிருத்தம் செய்யப்பட்டது. இதற்காக நடுவில் இருந்த இருக்கைகள் காலியாக விடப்பட்டன. கடைகளுக்குள் கூட்டம் கூடாமல் இருக்க 2 முதல் 4 நபர்களே அனுமதிக்கப்பட்டனர்.
மற்றவர்கள் வந்தால் சிறிது நேரம் கழித்து வரவும் அல்லது வெளியே காத்திருக்கவும் கூறினர். சலூன் கடைகளில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் முகக்கவசம் அணிந்து இருந்தனர். அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டதுடன், கடைகளுக்குள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. கொரோனா அறிகுறி தென்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சலூன் கடைகள் திறக்கப்படவில்லை. தற்போது ஊரகம், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சலூன் கடைகள் திறந்து செயல்பட்டு வருவதால், பல நாட்களாக முடி வெட்டாமல் இருந்த ஆண்கள் முடிதிருத்த சலூன் கடைகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் 2020-2021-ம் நிதி ஆண்டில் 4,315 ஹெக்டேர் பரப்பில் ரூ.1285 லட்சம் மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நீரை சிக்கனமாக பயன்படுத்த சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் தெளிப்பு நீர் பாசன கருவிகள் வழங்கப்படவுள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 0.40 ஹெக்டேர் முதல்அதிகபட்சமாக 2 ஹெக்டேர் வரை ஒரு விவசாயி இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் தெளிப்பு நீர் பாசனக்கருவிகள் வழங்கப்பட உள்ளது. எனவே நுண்ணீர்பாசனத்தில் பதிவு செய்யும் விவசாயிகள் துணை நீர் மேலாண்மை சிறப்பு திட்டத்திலும் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே உள்ளது கல்லாறு பழப்பண்ணை. பலா சீசனையொட்டி இங்கு பலாப்பழங்கள் அதிகம் காய்த்துள்ளது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நிலவும் வறட்சியால் குடிநீர் மற்றும் உணவு தேடி காட்டுயானைகள் இடம் பெயர்கின்றன. அப்போது கல்லாறு பழப்பண்ணையில் இருந்து வரும் பலாப்பழா வாசனையால் ஈர்க்கப்பட்டு அதனை தின்பதற்கு யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கின்றன.
இந்நிலையில் யானைகள் சாலைகளிலேயே முகாமிட்டுள்ளதால் வாகனங்களில் செல்வோர் அதிக ஒலி எழுப்பக்கூடாது. வாகனங்களை சாலை யோரத்தில் நிறுத்தக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியே வரவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று முதுமலை மண்டகரை பகுதியில் சுரேஷ் என்பவரின் வீட்டை காட்டு யானை தாக்கி சேதப்படுத்தி அங்கிருந்த அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தின்றது. சேதமடைந்த வீட்டை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாம் பகுதியில் வசித்து வருபவர் கர்னல் ராமகிருஷ்ணன். இவர் ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி கனகலாதா, விஞ்ஞானி ஆவார். இவர்கள் இருவரும் இணைந்து கொரோனா பரவலை தடுக்க எலெக்ட்ரானிக் முகக்கவசத்தை உருவாக்கி உள்ளனர்.
இது ரெஸ்பிரேட்டருடன் கூடிய எலெக்ட்ரானிக் பில்டர்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த முகக்கவசத்தை விமானப்படை, ரெயில்வே போன்ற துறைகளில் உள்ளவர்கள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து கர்னல் ராமகிருஷ்ணன் கூறுகையில், இந்த முகக்கவசத்தை அணிபவர்களுக்கு ஆக்சிஜன் தடையின்றி கிடைக்கும். அதே சமயம் கொரோனா உள்ளிட்ட வைரஸ் கிருமிகள் உயர் மின் அழுத்தத்தில் அழிக்கப்படும் வகையில் இந்த எலெக்ட்ரானிக் முகக்கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் அருகில் இருந்தாலும், எலெக்ட்ரானிக் முகக்கவசத்தை பயன்படுத்தும்போது தொற்று வராமல் தடுக்க முடியும். முகக்கவசம் ஒன்று உருவாக்க ரூ.4 ஆயிரம் தேவைப்படுகிறது. அதிகளவில் உருவாக்கினால் விலை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் இதனை மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள காந்தல் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது25). எலெக்ட்ரீசியன். இவருடைய மனைவி மாயா (20). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாயாவுக்கு, நேற்று முன்தினம் காலையில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு பிரசவத்துக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள பார்வதி மெடிக்கல் சென்டர் என்ற தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு, பெண் டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர். அப்போது அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதற்கிடையில் நள்ளிரவில் திடீரென மாயா இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இது காண்போரை கண் கலங்க செய்தது.
இதையடுத்து மாயாவின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி கணவர் மோகன்ராஜ், ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் உயிரிழந்த மாயாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் மாயாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கூறி அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அந்த தனியார் ஆஸ்பத்திரியில் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு 7 மணி வரை குழந்தையையும், தாயையும் எங்களிடம் காண்பிக்கவில்லை. எனவே மாயாவின் சாவில் மர்மம் இருக்கிறது. இது தொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்ட னர்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தைகள் நல பிரிவு டாக்டர் கள், அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று, மாயாவுக்கு பிறந்த குழந்தை நலமாக இருக்கிறதா? என்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஹாவுக்கல் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வந்த பெண் ஒருவர், தனது மகளின் பிரசவத்துக்காக திருச்சி அருகே உள்ள சிறுகனூருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்றார். அவர் இ-பாஸ் பெற்று விட்டு, அங்கிருந்து கோத்தகிரி ஹாவுக்கல் பகுதிக்கு நேற்று அதிகாலை வந்தார். ஆனால் அந்த பெண்ணை எஸ்டேட் நிர்வாகம் குடியிருப்பில் தங்க அனுமதிக்கவில்லை.
இதனால் எங்கு சென்று தங்குவது என தெரியாமல் அவர் குழப்பம் அடைந்தார். இதற்கிடையில் அவரது குடும்ப நண்பர் ஒருவர், தனக்கு சொந்தமான வீடு கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் உள்ள காளவாய் என்ற இடத்தில் காலியாக உள்ளதாகவும், அந்த வீட்டில் தங்கி கொள்ளுமாறும் கூறினார். இதையடுத்து அந்த பெண், நேற்று காலை 11 மணியளவில் அந்த வீட்டில் தங்குவதற்காக காளவாய் பகுதிக்கு வந்தார். இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து, அந்த வீட்டை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு, அந்த பெண்ணை திரும்ப அனுப்பக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இல்லையென்றால் அவர் ஹாவுக்கல் பகுதியிலோ அல்லது அரசு தனிமைப்படுத்துதல் மையத்திலோ தன்னை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி தாசில்தார் மோகனா மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம், இ-பாஸ்சில் குறிப்பிட்டு உள்ள முகவரிக்கே அந்த பெண்ணை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அதனை தொடர்ந்து திருச்சியில் இருந்து வந்த அந்த பெண்ணை மீண்டும் ஹாவுக்கல் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் குடியிருப்புக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அங்கு சென்று அவர் தன்னை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






