search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெட்டுக்கிளி
    X
    வெட்டுக்கிளி

    வெட்டுக்கிளி ஊடுருவல்?- ஊட்டியில் வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு ஆய்வு

    ஊட்டியில் புகுந்த வெட்டுக்கிளி ஆப்பிரிக்கா வெட்டுக்கிளியா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதனை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மை துறை அதிகாரிகள் கூறினர்.
    ஊட்டி:

    ஆப்பிரிக்க, அரேபிய நாடுகளைத் தாக்கி அங்கு கடும் உணவு பஞ்சத்தை ஏற்படுத்திய வெட்டுக்கிளிகள் கோடிக்கணக்கில் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளன.

    பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பல லட்சம் எக்டேர் விளைநிலங்களை கபளீகரம் செய்து வருகின்றன.

    இதனால் இந்தியாவிலும் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக பகுதியில் ஆப்பிரிக்கா வெட்டுக்கிளிகள் நுழையாது என்று வேளாண் துறை நம்பிக்கை அளித்தது.

    கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

    ஆனால் பெரும் அதிர்ச்சி தரும் வகையில் கேரளா மாநிலம் வயநாடு பகுதி வழியாக வந்த வெட்டுக்கிளி ஊட்டி காந்தல் பகுதியில் தென்பட்டது. அதை பாட்டிலில் அடைத்து ஒருவர் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் தெரிவித்தார். அவர் தமிழக வேளாண் பல்கலை விஞ்ஞானிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி நீலகிரியில் தென்பட்டது ஆப்பிரிக்கா வெட்டுக்கிளியா என்பது குறித்து ஆய்வு செய்ய தமிழக வேளாண் பல்கலை குழு விரைவில் ஊட்டி வருகிறது. அவர்கள் ஆய்வு செய்து முடிவை அறிவிப்பார்கள் என்று கலெக்டர் கூறியுள்ளார்.

    இது குறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முத்துக்கிருஷ்ணன் கூறியதாவது:-

    1957-ம் ஆண்டு பெரம்பலூர், ராமநாதபுரம் பகுதிகளில் வெட்டுக்கிளிகள் புகுந்து சேதப்படுத்தின. ஆனால் தற்போது தமிழகத்தில் ஆப்பிரிக்கா வெட்டுக்கிளி தாக்குதல் இல்லை என்றார்.

    இது குறித்து தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் பேராசிரியர்கள் கூறும்போது, தமிழகத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை அரணாக உள்ளது. மலையை கடந்து வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு இல்லை.

    இது தவிர சாத்பூரா மலைத்தொடர் குஜராத் மாநிலத்தில் தொடங்கி மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் வழியாக சென்று சத்தீஸ்கர் மாநிலத்தில் முடிவடைகிறது. சாத்பூரா மலையை கடந்து தமிழகம் வர வாய்ப்பு இல்லை என்றும் வேளாண்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    இருந்தபோதும் தமிழக வேளாண் பல்கலையில் இருந்து விரைவில் குழு ஊட்டி சென்று ஆய்வு செய்த பின்னர் ஊட்டியில் புகுந்த வெட்டுக்கிளி ஆப்பிரிக்கா வெட்டுக்கிளியா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதனை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மை துறை அதிகாரிகள் கூறினர்.

    Next Story
    ×