என் மலர்
நீலகிரி
திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் உள்ளன. இங்கு வடமாநிலம் மற்றும் தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டதால் வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் வேலை இழந்து வருமானம் இன்றி தவித்தனர்.
இதையடுத்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 27 ரெயில்கள் மூலம் 42 ஆயிரத்து 400 பேரும், பஸ், கார் மூலமாக 10, 600 பேர் என மொத்தம் 53 ஆயிரம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
இன்று திருப்பூரில் இருந்து வடமாநிலங்களுக்கு 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி பகல் 12 மணிக்கு பீகாருக்கும், 2 மணிக்கு மேற்கு வங்காளத்துக்கும், மாலை 6 மணிக்கு உத்தரபிரதேசத்துக்கும், இரவு 10 மணியளவில் ஒடிசாவுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில்களில் தலா 1,600 பேர் வீதம் மொத்தம் 6 ஆயிரத்து 400 பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
இதற்காக திருப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் தங்கி வேலை பார்த்த வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் ஜெய்வாய்பாய் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் 8-ந் தேதி முதல் வடமாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இயக்கப்பட்ட 32 ரெயில்கள் மூலம் 44 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதற்கிடையே இன்று மதியம் 2 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதில் ஊட்டியில் தங்கி வேலை பார்த்து வரும் 300 பேர், கோவையை சேர்ந்த 300 பேர் என 600 பேர் பயணிக்கின்றனர். முன்னதாக அவர்கள் அனைவரும் பஸ் மூலம் ரெயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் ரெயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1908-ம் ஆண்டு ஊட்டி மலை ரெயில் இயக்கம் தொடங்கியது. ஊட்டி முதல் மேட்டுப்பாளையம் வரை ரெயில் பாதை 46.61 கிலோ மீட்டர் தூரம் ஆகும். நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி மலை ரெயில் மற்றும் ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களை கடந்த 2015-ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய சின்னமாக அறிவித்து பெருமை சேர்த்தது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் மலை ரெயிலில் பயணம் செய்வதை விரும்புவார்கள்.
ஊட்டி அருகே கேத்தி ரெயில் நிலையம் பழமையானது. ஆங்கிலேயர்கள் கட்டிய கட்டிடத்தில் தற்போதும் செயல்பட்டு வருகிறது. இந்த ரெயில் நிலையத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி இணைந்து நடித்த மூன்றாம் பிறை திரைப்படம் எடுக்கப்பட்ட பின்னர், மிகவும் பிரபலம் அடைந்தது. இதற்கிடையே சமீபத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 2 மரங்கள் முறிந்து ரெயில் நிலைய மேற்கூரை மீது விழுந்தது. இதில் மேற்கூரை சேதம் அடைந்ததோடு, குறுக்காக அமைக்கப்பட்ட இரும்பு கம்பிகள் வளைந்தன.
இதனால் அழகாக இருந்த ரெயில் நிலையம் அலங்கோலமாக காட்சி அளித்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். இந்த நிலையில் கேத்தி ரெயில் நிலையத்தில் சேதம் அடைந்த மேற்கூரையை அகற்றி புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பழைய மேற்கூரைகள், இரும்பு கம்பிகள் பிரித்து அப்புறப்படுத்தப்படுகிறது. அதேபோல் நடைபாதையில் பதிக்கப்பட்ட கற்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
ஊரடங்கு உத்தரவால் மலை ரெயில் இயக்கம் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் நடைபாதையில் மரத்தில் இருந்து இலைகள் உதிர்ந்து கிடக்கின்றன. ஊரடங்கு காலத்தில் கேத்தி ரெயில் நிலையத்தில் டிக்கெட் பெறும் இடம், அலுவலகம் மற்றும் பயணிகள் காத்திருக்கும் இடத்தை புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நடைபாதையில் மழைநீர் தேங்காத வகையிலும், சுற்றுலா பயணிகள் கால் இடறாமல் இருக்கவும் அதற்கேற்ப கற்கள் பதிக்கப்பட உள்ளது.
தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்கள் இணையும் இடத்தில் இருக்கும் முதுமலை, நீலகிரியின் அடர்ந்த வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. 1940 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதுமலை வனவிலங்கு சரணாலயம் மிகவும் புகழ்வாய்ந்தது. தென்னிந்தியாவில் வனவிலங்குகள் அதிகம் வாழும் இடம் என்கிற பெருமை இதற்கு உண்டு,
சிறுத்தை, காட்டெருமை, பல வகை மான்கள், காட்டு யானைகள், காட்டுப்பன்றிகள், குள்ளநரி போன்றவை இங்கு வாழ்கின்றன. கபினி ஆற்றின் பல துணை ஓடைகளும் அவற்றை ஒட்டியுள்ள மேய்ச்சல் நிலங்களும் இந்த காட்டில் வசிக்கும் விலங்குகளுக்கான உணவுக்கேந்திரமாக விளங்குகின்றன. சில அரிய வகை பறவைகளான கரிச்சான் குருவிகள், காட்டுக்கோழிகள், கவுதாரி, மயில், மயிற்கோழி மற்றும் புறாக்களுடன் பருந்து, வல்லூறு, போன்றவையும் இங்கு காணப்படுகின்றன.
தாவர வகைகளில் சந்தன மரம் , கருங்காலி மரம் மற்றும் தேக்கு மரங்கள் இந்த வனப்பகுதியில் மிகுதியாக காணப்படுகின்றன. பெரிய மரங்களும் புதர்க்காடுகளும் நிறைந்து காணப்படும் இந்த வனப்பகுதி இங்குள்ள விலங்குகளுக்கு இயற்கையான வாழ்விடமாய் அமைந்துள்ளது. ஊர்வன விலங்குகளில் கரு நாகம், விரியன், சாரை, கட்டு விரியன் மற்றும் பலவிதமான பல்லி வகைகள், பச்சோந்திகள் முதுமலை வனப்பகுதியில் பெருமளவில் வசிக்கின்றன.
கூடலூர் மற்றும் முதுமலை பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கடுமையாக வெயில் அடித்தது. இதனால் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வறட்சி நிலவியது. இங்கு காட்டுயானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் நீர்நிலைகள் வறண்டுவிட்டதால் தீவனம் மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் ஊருக்குள் படையெடுக்க தொடங்கின.
இதற்கிடையில் வனத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் லாரிகள் மூலம் வனத்துறையினர் தண்ணீர் ஊற்றி வனவிலங்குகளின் தாகத்தை தணித்து வந்தனர். எனினும் தீவன தட்டுப்பாட்டால் வனவிலங்குகள் இடம் பெயர்ந்து சென்றன. இதனால் முதுமலையில் வனவிலங்குகளின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. இது தவிர காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் முதுமலை புலிகள் காப்பக எல்லையில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்று அட்டகாசம் செய்தன. மேலும் குடியிருப்புகளையும் சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். ஏற்கனவே ஊரடங்கு உத்தரவால் வருமானமின்றி அவதிப்பட்ட அவர்களுக்கு, இது மேலும் பெரிய தலைவலியாக அமைந்தது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கூடலூர் மற்றும் முதுமலை பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் பலத்த மழையும் கொட்டுகிறது. இதன் காரணமாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வனப்பகுதி பசுமைக்கு திரும்பி உள்ளது.
இதைத்தொடர்ந்து இடம்பெயர்ந்து சென்ற வனவிலங்குகள் மீண்டும் முதுமலை வனப்பகுதிக்கு வர தொடங்கி உள்ளன. இதன் காரணமாக அங்குள்ள சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதை காண முடிகிறது.
குறிப்பாக யானை மற்றும் மான்கள், மயில்கள் கூட்டம் கூட்டமாக சாலையோரங்களில் உள்ள புல்வெளிகளில் மேய்வதை அதிகமாக காண முடிகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர், கொலக்கம்பை, கோத்தகிரி பகுதியில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது குறிப்பாக குடியிருப்பு பகுதிகளிலும் தேயிலை தோட்டங்களிலும் சர்வசாதாரணமாக குட்டிகளுடன் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கோத்தகிரி நகரப்பகுதியில் உள்ள 'டானிங்டன்' நியாயவிலை கடையில் இரவில் குட்டியுடன் வந்த கரடிகள் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை நாசம் செய்துள்ளது மேலும் அதே பகுதியில் உள்ள பேக்கரி கதவை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கரடிகள் தொடர்ந்து கடைகளை உடைத்து பொருட்களை சேதப்படுத்தி வருவதால் மரங்களில் கதவுகள் வைத்த கடைக்காரர்கள் அச்சத்தில் உள்ளனர். ஆகையால் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும் கரடிகள் மனிதர்களை தாக்கும் முன்பு கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து முதுமலை வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே தமிழக கேரளா எல்லை பகுதியில் அமைந்துள்ளது கிண்ணக்கொரை. இதை சுற்றிலும் கிண்ணக்கொரை ஆடா, ஒசாட்டி, மேலூர், பிக்கட்டி, அப்பட்டி, இந்திராநகர், ஜே.ஜே.நகர், காமராஜ்நகர், தனயகண்டி, இரியசீகை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இதில் தனயகண்டி மற்றும் ஜே.ஜே.நகர் கிராமங்களில் ஆதிவாசி குடும்பங்கள் வசிக்கின்றனர்.
அனைத்தும் குக்கிராமங் களாக உள்ளது. இவர்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்காக கிண்ணக்கொரை பகுதியில் மட்டும் ஓரிரு சிறிய கடைகள் மட்டுமே உள்ளது. இந்த கடைகளிலும் குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே கிடைக்கிறது. பெருமளவு காய்கறி, மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து கடைகளுக்கு சுமார் 30 கி.மீ தொலைவுள்ள மஞ்சூர் பகுதிக்கே சென்று வர வேண்டியுள்ளது. பெரும்பாலான மக்களும் தங்களது போக்குவரத்து வசதிக்கு அரசு பஸ்களையே நம்பியுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கிண்ணக்கொரை கிராமத்திற்கு அரசு பஸ், தனியார் வாகன போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் எல்லையோர கிராமங்களை சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.
இந்நிலையில் ஊரடங்கு கட்டுபாடுகள் தளர்த்தப் பட்டதை தொடர்ந்து நேற்று முதல் கிண்ணக்கொரை கிராமத்திற்கு அரசு பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக போக்குவரத்து வசதி இல்லாததால் வெளியிடங்களுக்கு செல்ல முடி யாமல் கிராமங்களில் முடங்கி கிடந்த பெரும்பாலானோர் அரசு பஸ்களில் முக கவசத் துடன் மஞ்சூர் பகுதிக்கு சென்று வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.
இதேபோல் மஞ்சூரில் இருந்து கெத்தை, முள்ளி, காரமடை வழியாக கோவைக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பஸ், கார், விமானம், ரெயில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் நடந்த பாராளுமன்ற கூட்ட தொடர் முடியும் போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஆ.ராசா எம்.பியால் தமிழகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு பஸ், ரெயில், உள்நாட்டு விமானசேவை தொடங்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை விமானம் மூலம் ஆ.ராசா எம்.பி. கோவை வந்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டது.
இதையடுத்து அவர் காரில் நீலகிரி மாவட்டம் ஊட்டி ஹில்பங்க் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் வெளியூரில் இருந்து வந்ததால் தன்னைத்தானே 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டார். இதற்கிடையே ஆ.ராசா எம்.பி ஊட்டிக்கு வந்த தகவலை அறிந்த சுகாதாரத்துறையினர் ஹில்பங்க் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். பின்னர் அவருக்கு காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்த தெர்மல் மீட்டரை வைத்து சோதனை செய்தனர். மேலும் அவரது வீட்டின் முன்பு தனிமைப்படுத்தப்பட்டதற்கான ஸ்டிக்கரையும் ஒட்டி சென்றனர்.
ஊட்டி:
பொது போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
7 மாவட்டங்களை இணைத்து மண்டலமாக அறிவிக்கபட்டு உள்ளது. இங்கு அத்தியாவசிய தேவைகளுக்கு இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்யலாம்.பஸ் மற்றும் தனியார் வாகனங்களில் வரும் அனைவரின் பெயர்கள் மற்றும் பயணத்திற்கான காரணங்கள் சேகரிக்கப்படும்.
தேவையில்லாத பயணங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும் சுற்றுலா தலங்கள் விடுதிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. தேவையில்லாமல் சுற்றுலா போல் மாவட்டத்திற்குள் வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். வழக்குப்பதிவு செய்யப்படும். தனியார் வாகனங்களில் டிரைவரையும் சேர்த்து 4 பேர் பயணம் செய்யலாம். அதை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாகன போக்கு வரத்து தொடங்கி உள்ளதால் வாகன நெரிசல் ஏற்பட்டால் பர்லியார் சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்படும் பொது மக்கள் தேவையில்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊரடங்கு உத்தரவால் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலா பயணிகளை நம்பி சுற்றுலா தொழிலில் ஈடுபட்டு வந்த நடைபாதை வியாபாரிகள், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் உள்பட பலர் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். தங்கும் விடுதிகள் மூடப்பட்டதால், அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் வேலையிழந்து வருமானம் இல்லாமல் அவதி அடைந்தனர். இதை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் 6 மாத தவணைகளை வங்கிகள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிதி நிறுவனங்கள் பிடித்தம் செய்யக்கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதற்கிடையே ஊட்டியில் தனியார் நிதி நிறுவனங்கள் மக்கள், தொழிலாளர்கள் வாங்கிய கடனை உடனடியாக செலுத்த வேண்டும் என்று வீடுகளுக்கே சென்று வற்புறுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஊட்டி வேலிவியூ பகுதியில் வசித்து வரும் பெண்கள், கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நாங்கள் ஒவ்வொருவரும் தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் தலா 5 முறை கடன் வாங்கினோம். ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாததால், வீட்டில் இருந்து வருகிறோம். இதனால் தற்போது கடன் தொகையை செலுத்த முடியவில்லை. நாங்கள் வீட்டு வேலை மற்றும் தங்கும் விடுதிகளில் பணிபுரிந்து வந்தோம். ஊரடங்கு உத்தரவால் வேலையிழந்து வருவாய் இன்றி தவித்து வருகிறோம். இந்த சூழ்நிலையில் தனியார் நிதி நிறுவனத்தினர் வட்டியுடன் கடனை திருப்பி செலுத்துமாறு வற்புறுத்தி வருகின்றனர்.
வீட்டு வாடகையை கட்ட முடியாமலும், அத்தியாவசிய பொருட்களை வாங்க இயலாமலும் சிரமப்பட்டு வருகிறோம். இதற்கிடையே பிள்ளைகளின் கல்வி, மருத்துவ செலவு போன்றவற்றை கவனிக்க வேண்டி உள்ளது. எனவே நாங்கள் கடன் தொகையை கட்ட 3 மாதம் கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து பெண்களிடம் கலெக்டர் பேசும்போது, மகளிர்கள் குழுவாக இணைந்து மகளிர் திட்டம் மூலம் விண்ணப்பித்தால் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அரசு பஸ் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 68 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் அரசு பஸ் போக்குவரத்து தொடங்கும் என்று அரசு அறிவித்தது.
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்று அரசு பஸ் போக்குவரத்து தொடங்கியது. கூடலூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் மொத்தம் 46 பஸ்கள் தயார் நிலையில் இருந்தன. ஆனால் நேற்று 18 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது.
கூடலூரில் இருந்து கோவை, ஈரோடு, ஊட்டிக்கு குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுடன் அரசு பஸ்கள் புறப்பட்டு சென்றன. மேலும் கூடலூரில் இருந்து மசினகுடி, ஓவேலி, பந்தலூர் பகுதிகளுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. முன்னதாக பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பயணிகளுக்கும் கை கழுவ கிருமி நாசினி வழங்கப்பட்டது. அதன்பின்னரே பஸ்களுக்குள் அமர அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் கூடலூரில் இருந்து ஓவேலிக்கு புறப்பட்ட அரசு பஸ் மதியம் 12.30 மணியளவில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முன்பு நடுவழியில் பஞ்சராகி நின்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். அதன்பின்னர் டயர் மாற்றப்பட்டு, பஸ் அங்கிருந்து இயக்கி செல்லப்பட்டது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதால், நீலகிரி மாவட்டத்துக்குள் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு உள்ளன. உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் தேவையின்றி சுற்றுலா தலங்கள் மற்றும் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் தனியாகவும், குடும்பத்தினருடன் சுற்றுவது கண்டறியப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவ்வாறு சுற்றுவது குறித்து 1077 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம்.
சென்னை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் இருந்து இ-பாஸ் பெற்று வெளிமாவட்டங்களுக்கு வருகிறவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளாமல் நீலகிரிக்கு வருவது தெரியவந்து உள்ளது. இதனால் மாவட்ட எல்லையில் உள்ள குஞ்சப்பனை, பர்லியார் சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரிக்குள் வருகிறவர்களின் பெயர், எதற்காக வருகிறார்கள் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. தேவையில்லாமல் வருவது கண்டறியப்பட்டால் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.
சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில், தேவைக்கேற்ப ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம், ஊட்டி-கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும். அத்தியாவசிய தேவையின்றி சுற்றுலா காரணங்களுக்காகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ நீலகிரிக்குள் வர யாருக்கும் அனுமதி இல்லை. அரசு பஸ்களில் முகக்கவசம் அணியாமல் வருகிறவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
தங்கும் விடுதிகளில் வெளிநபர்கள் யாரேனும் தங்கியிருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட விடுதி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், விடுதிக்கு சீல் வைக்கப்படும். இதை ஆய்வு செய்ய அனைத்து பகுதிகளிலும் வருவாய்த்துறையினர் அடங்கிய தனி பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இதை மீறுபவர்கள் மற்றும் கடைக்காரர்களை பறக்கும் படையினர் கண்காணித்து அபராதம் விதித்து வருகின்றனர். இதுவரை ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலாகி உள்ளது. மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் மண்டிகளில் ஏலம் விடும் நேரத்தை நீட்டிப்பது குறித்து கோவை கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து பேச உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஊட்டி:
கூடலூர், விமலகிரி பகுதியில் சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குற்ற தடுப்பு பிரிவு எஸ்.எஸ்.ஐ., ராஜன் மற்றும் போலீசார் விமலகிரி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த சரவணன் (48), என்பவர், வீட்டின் அருகே, 35 லிட்டர் சாராய ஊறல் தயார் செய்து பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டிவிட்டது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள், படகு இல்லங்கள் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு இருக்கின்றன. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறும். அப்போது வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை வைத்து, நீலகிரிக்கு ஆண்டுதோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எத்தனை பேர் வந்து செல்கிறார்கள் என்று கணக்கிடப்படுகிறது. கடந்த ஆண்டு கோடை சீசனில் தாவரவியல் பூங்காவுக்கு 10 லட்சம் பேர் வந்து சென்றனர். குறிப்பாக 5 நாட்கள் நடந்த மலர் கண்காட்சியை 1¾ லட்சம் பேர் கண்டு ரசித்தனர்.
ஆனால் இந்த ஆண்டு சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. கோடை விழா மற்றும் அனைத்து கண்காட்சிகளும் ரத்து செய்யப்பட்டு விட்டன. நீலகிரியில் தோட்டக்கலைத்துறையின் கீழ் குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, ஊட்டி ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, தாவரவியல் பூங்கா ஆகியவை உள்ளன.
மேலும் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் படகு இல்லங்கள், தமிழ்நாடு ஓட்டல், தொட்டபெட்டா மலைசிகரம் ஆகியவை இருக்கின்றன. இங்கு ஊரடங்கு உத்தரவால் சுற்றுலா பயணிகள் வரவில்லை.
இதனால் தோட்டக்கலைத்துறைக்கு ரூ.7 கோடி, சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு ரூ.8 கோடி என அரசுக்கு மொத்தம் ரூ.15 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.






