search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்.

    நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்- அரசுக்கு ரூ.15 கோடி வருவாய் இழப்பு

    நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடி கிடப்பதால், அரசுக்கு ரூ.15 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டிவிட்டது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள், படகு இல்லங்கள் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு இருக்கின்றன. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறும். அப்போது வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை வைத்து, நீலகிரிக்கு ஆண்டுதோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எத்தனை பேர் வந்து செல்கிறார்கள் என்று கணக்கிடப்படுகிறது. கடந்த ஆண்டு கோடை சீசனில் தாவரவியல் பூங்காவுக்கு 10 லட்சம் பேர் வந்து சென்றனர். குறிப்பாக 5 நாட்கள் நடந்த மலர் கண்காட்சியை 1¾ லட்சம் பேர் கண்டு ரசித்தனர்.

    ஆனால் இந்த ஆண்டு சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. கோடை விழா மற்றும் அனைத்து கண்காட்சிகளும் ரத்து செய்யப்பட்டு விட்டன. நீலகிரியில் தோட்டக்கலைத்துறையின் கீழ் குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, ஊட்டி ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, தாவரவியல் பூங்கா ஆகியவை உள்ளன.

    மேலும் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் படகு இல்லங்கள், தமிழ்நாடு ஓட்டல், தொட்டபெட்டா மலைசிகரம் ஆகியவை இருக்கின்றன. இங்கு ஊரடங்கு உத்தரவால் சுற்றுலா பயணிகள் வரவில்லை.

    இதனால் தோட்டக்கலைத்துறைக்கு ரூ.7 கோடி, சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு ரூ.8 கோடி என அரசுக்கு மொத்தம் ரூ.15 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×