என் மலர்tooltip icon

    நீலகிரி

    கோத்தகிரியில் முகக்கவசம் அணியாத 13 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    கோத்தகிரி:

    கொரோனா தொற்றை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களை கண்டறிந்து பல்வேறு துறை அரசு அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் கோத்தகிரி திறந்தவெளி மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது முகக்கவசம் அணியாமல் கடைகளில் நின்று வியாபாரம் செய்து கொண்டு இருந்த வியாபாரிகள் உள்பட 13 பேருக்கு தலா ரூ.50 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் அவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்களும் வழங்கப்பட்டன.
    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 105 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    சென்னை காசிமேட்டில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் ஒருவரின் கர்ப்பிணி மனைவி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சோலூர்மட்டம் பகுதிக்கு வந்தார். 30 வயது மதிக்கத்தக்க அந்த 5 மாத கர்ப்பிணியிடம் இருந்து சுகாதாரத்துறையினர் சளி மாதிரி எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதேபோல் சென்னையில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்த ஒருவர், மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டி பாரதியார் நகருக்கு வந்தார். பின்னர் சளி மாதிரி பரிசோதனை நடத்தியதில், அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர்கள் 2 பேரும் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சோலூர்மட்டம், பாரதியார் நகர் ஆகிய 2 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    பாரதியார் நகரில் 60 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு, வெளியாட்கள் உள்ளே செல்லாமல் இருக்க தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது. சோலூர்மட்டத்தில் 65 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    அப்பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தும் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. பாரதியார் நகரில் வியாபாரியுடன் தொடர்பில் இருந்த 45 பேர், சோலூர்மட்டத்தில் கர்ப்பிணியுடன் தொடர்பில் இருந்த 60 பேர் என மொத்தம் 105 பேரிடம் இருந்து பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது. பின்னர் குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டியூட் நிறுவன ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட. முடிவு வந்த பின்னர் மேலும் விவரங்கள் தெரியவரும்.

    இ-பாஸ் பெறாமல் சென்னையில் இருந்து அந்த வியாபாரி லாரியில் கோவைக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து அரசு பஸ்சில் குன்னூர் வழியாக மஞ்சூருக்கு சென்று உள்ளார். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கும், முடிதிருத்தம் செய்ய சலூன் கடைக்கும் சென்று வந்து உள்ளார். நீண்ட நாட்களுக்கு பின்னர் வந்ததால், தனது நண்பர்களுடன் கலந்து பேசியுள்ளார். இதனால் பிறருக்கும் கொரோனா தொற்று பரவி இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. 
    ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் காய்கறி, பழக்கடைகளை தினமும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    ஊட்டி:

    ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1,300 கடைகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கூட்டம் கூடாமல் இருக்க மார்க்கெட் மூடப்பட்டு காய்கறிகள், பழங்கள், மளிகைக்கடைகள் ஊட்டி மத்திய பஸ் நிலையத்துக்கும், குதிரை பந்தய மைதான வாகன நிறுத்துமிடத்துக்கும் மாற்றப்பட்டு திறந்தவெளி சந்தையாக செயல்பட்டது. அரசு பஸ் இயக்கம் தொடங்கியதாலும், நகரில் வாகன போக்குவரத்து அதிகரித்ததாலும் மேற்கண்ட கடைகள் மீண்டும் மார்க்கெட்டுக்கு மாற்றப்பட்டன.

    அங்கு பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க சமூக இடைவெளி விட்டு சுழற்சி முறையில் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் பழங்கள், காய்கறிகள், பூக்கடைகளை திறக்க ஏ,பி என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது.

    அதன்படி, கடைகள் திறந்து செயல்பட்டு வருகின்றன. கடைகள் முன்பு சமூக இடைவெளிக்கான ஏற்பாடுகள், கைகளை சுத்தப்படுத்த தண்ணீர் மற்றும் சோப்பு வைக்கப்பட்டன. இருப்பினும், ஒரு நாள் விட்டு கடைகளை திறப்பதால் உள்புறத்தில் விற்பனை செய்வதற்காக இருப்பு வைக்கப்பட்டு உள்ள காய்கறி, பழங்கள், பூக்கள் சேதமாகி வருகின்றன.

    இதனால் வியாபாரிகள் சேதமான பொருட்களை அப்புறப்படுத்தி விட்டு, நல்லவற்றை எடுத்து விற்பனை செய்கிறார்கள். பூக்களை ஒரு நாளுக்கு மேல் வைத்து விற்பனை செய்ய முடியாது. பொருட்கள் அழுகி வீணாவதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதனால் அவர்கள் கடைகள் தினமும் திறந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:- ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள் என 200 கடைகள் உள்ளன. மளிகை, துணிக்கடைகள் போன்றவை சுழற்சி முறையில் திறந்தாலும், பொருட்கள் பாதிக்கப்படுவது இல்லை. ஆனால் காய்கறி, பழங்களை பெட்டிகள் அல்லது மூட்டைகளில் வைத்து விட்டு ஒருநாள் விட்டு மறுநாள் கடைகளை திறந்தால் அழுகியும், வெடித்தும் சேதமடைகின்றன. ஏற்கனவே ஊரடங்கு உத்தரவால் வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே பொருட்கள் வீணாவதை தடுக்க தினமும் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    நீலகிரி மாவட்டத்தில் சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத 157 கடைக்காரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
    ஊட்டி:

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆரம்பத்தில் நீலகிரி மாவட்டத்தில் காய்கறி, பழம், மளிகை, மருந்து, இறைச்சி போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் செயல்பட்டன. அதன்பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அனைத்து தனிக்கடைகளும் திறந்து செயல்பட்டு வருகிறது. கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க கோடுகள் அல்லது வட்டங்களை குறிப்பிட்ட இடைவெளியில் தரையில் வரைய வேண்டும், வாடிக்கையாளர்கள் கைகளை கழுவ தண்ணீர், சோப்பு வைக்க வேண்டும் என்பன போன்ற ஏற்பாடுகளை கடைக்காரர்கள் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    நீலகிரியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு பறக்கும் படையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏற்பாடு செய்யாத கடைக்காரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் இதுவரை சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத 157 கடைக்காரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சம்பந்தப்பட்ட கடைகளை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 
    ஊட்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் குதிரைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
    ஊட்டி:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அத்தியாவசிய கடைகள் மட்டுமின்றி அனைத்து தனிக்கடைகளும் திறந்து செயல்பட்டு வருகிறது. வீடுகளில் முடங்கி இருந்த பொதுமக்கள் அதிகம் பேர் வெளியே வந்து செல்கின்றனர். இதனால் ஊட்டி நகரில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சாலையோரங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வழக்கம்போல் நிறுத்தப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே ஊட்டி கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, புளுமவுண்டன் சாலை, தாவரவியல் பூங்கா சாலை, கலெக்டர் அலுவலக சாலை உள்ளிட்ட சாலைகளில் மாடுகள், குதிரைகள் போன்றவை சுதந்திரமாக சுற்றித்திரிந்து வருகின்றன. அவை சாலை நடுவே நீண்ட நேரம் நின்றபடி ஓய்வெடுப்பதை காண முடிகிறது. மேலும் அசுத்தம் செய்வதால் வாகன ஓட்டிகள் முகம் சுளிக்கின்றனர்.

    சமீபகாலமாக குதிரைகள் எண்ணிக்கை அதிகரித்து சாலையில் உலா வந்து கொண்டு இருக்கின்றன. இவை குட்டிகளுடன் சாலைகளில் சுற்றுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. ஒரே இடத்தில் நிற்பதாலும், படுத்துக்கொள்வதாலும் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

    வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பியும் வழி விடாததால் அவதி அடைகின்றனர். மேலும் குதிரைகள் ஒன்றுக்கு ஒன்று சண்டையிட்டு கொண்டு அங்கும், இங்கும் ஓடுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சிலர் சிறு காயங்களுடன் தப்பி செல்கின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    சுற்றுலா நகரமான ஊட்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக குதிரைகள் சுற்றுவது வாடிக்கையாகி விட்டது. சாலையில் சுற்றித்திரிய விடாமல் இருக்க நகராட்சி, கால்நடை பராமரிப்புத்துறை, போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இருப்பினும், தொடர் நடவடிக்கை இல்லாததால் குதிரைகள் சுற்றுவது அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக குதிரைகளை சாலைகளில் சுற்றித்திரிய விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
    தொரப்பள்ளி அருகே ஆதிவாசி மக்களுக்கு வீடுகள் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதனை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட புத்தூர்வயல் அருகில் தேன்வயல் கிராமம் உள்ளது. இங்கு 16 ஆதிவாசி குடும்பத்தினர் வசித்து வந்தனர். ஆண்டுதோறும் பருவமழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கின்போது, கிராமத்தை தண்ணீர் சூழ்ந்து வந்தது. இதனால் ஆதிவாசி மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் மாற்று இடம் வழங்கி, வீடுகள் கட்டி தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி தொரப்பள்ளி அருகே அம்பூர்வயலில் உள்ள 1 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 16 குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் செலவில் தொகுப்பு வீடுகள் கட்டும் பணி தொடங்கியது. அந்த பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வீடுகளில் ஆதிவாசி மக்கள் பயன்படுத்தும் வகையில் சமையல் அறைகளை வெளிப்புறமாக கட்டும்படி உத்தரவிட்டார். மேலும் குடிநீர் கிணறு, சாலை அமைக்கும் பணியை தொடங்கும்படி நகராட்சி ஆணையாளர் பாஸ்கரனிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பாலப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் 13 ஆதிவாசி குடும்பங்களுக்கு கட்டி முடிக்கப்பட்ட தொகுப்பு வீடுகளை கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து வீடுகளுக்கான சாவிகளை பயனாளிகளிடம் வழங்கினார். மேலும் தெப்பக்காடு அருகே லைட்பாடி கிராமத்தில் 18 ஆதிவாசி குடும்பங்களுக்கு ரூ.62 லட்சம் செலவில் தொகுப்பு வீடுகள் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். மேலும் மழைநீர் கால்வாய், சாலை, நீர்தேக்க தொட்டி கட்டும் பணியை தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமாலினி, ஆர்.டி.ஓ. ராஜ்குமார், தாசில்தார் சங்கீதாராணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
    ஊட்டியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
    ஊட்டி:

    சென்னை வேளச்சேரி, மணலி ஆகிய பகுதிகளில் தங்கி பணிபுரிந்து வந்த 2 பேர், நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தனர். அவர்களிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில், 2 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்று பாதித்த 2 பேர், ஊட்டியில் வசித்த ராஜ்பவன் குடியிருப்பு, நொண்டிமேடு ஆகிய 2 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஊட்டி நகராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட ராஜ்பவன் குடியிருப்பு, நொண்டிமேடு ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தினமும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறதா?, பிளச்சிங் பவுடர் போடப்படுகிறதா? என ஆய்வு செய்தார். மேலும் அங்கு வசிக்கும் மக்களிடம் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறதா?, முகக்கவசங்கள் வழங்கப்பட்டு உள்ளதா? என கேட்டறிந்தார்.

    இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் சுகாதார விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரியில் கொரோனாவால் 14 பேர் பாதிக்கப்பட்டு, உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு குணமடைந்தனர். தற்போது கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக விளங்கி வருகிறது. வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ராஜ்பவன் குடியிருப்பில் 8 வீடுகள், நொண்டிமேடு பகுதியில் 70 வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த பகுதிகளில் சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் வைட்டமின்-சி, ஜிங்க் மாத்திரைகள், கபசுர குடிநீர், ஆர்சானிக் ஆல்பம் போன்றவை வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது ஊட்டி நகராட்சி கமிஷனர் சரஸ்வதி, பொறியாளர் ரவி, வருவாய் ஆய்வாளர் பொதிகைநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
    நீலகிரி மாவட்டத்தில் சுழற்சி முறையில் 400 ஓட்டல்கள் திறக்கப்பட்டன. அங்கு வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.
    ஊட்டி:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் பெரிய, நடுத்தர, சிறிய ஓட்டல்கள், டீக்கடைகள் மூடப்பட்டன. அதனால் உரிமையாளர்கள், வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகளை நம்பி செயல்பட்டு வந்த பெரிய ஓட்டல்கள் மாத வாடகை கட்ட முடியாத நிலைக்கு சென்றது. இதற்கிடையே ஓட்டல்கள், டீக்கடைகளில் கூட்டம் சேராமல் பார்சல் வழங்கி செயல்பட அரசு அனுமதித்தது. இருந்தாலும், ஓட்டல்களில் வியாபாரம் போதுமான அளவு இல்லை. இதனால் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது. எனவே ஓட்டல்களில் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.

    அதனை தொடர்ந்து தமிழகத்தில் ஓட்டல்கள், டீக்கடைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் சுழற்சி முறையில் 400 ஓட்டல்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஊட்டி கமர்சியல் சாலையில் உள்ள ஓட்டல்கள் முன்பு கைகளை தொடாமல் காலால் அழுத்தி கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்த வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதன் பின்னரே வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு வந்தவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே போடப்பட்டு இருந்தது. வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து சாப்பிட்டனர்.

    கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து இருந்தனர். மேஜை, இருக்கைகள் 1 மீட்டர் இடைவெளியில் வரிசையாக அமைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், குறைந்த வாடிக்கையாளர்களே உணவகங்களுக்கு வந்தனர். இதனால் சுற்றுலா பயணிகளை நம்பியே நடக்கும் வியாபாரம் தற்போது மந்தமாக உள்ளது.

    இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் முகமது ஜாபர் கூறும்போது, ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகளாக குறைக்கப்பட்டு உள்ளது. பணிபுரியும் ஊழியர்களும் குறைக்கப்பட்டு உள்ளனர். சாப்பாட்டில் ரசம், கூட்டு, பாயாசம் ஆகியவை சேர்க்கப்படவில்லை. இதனால் ரூ.100-க்கு விற்ற சாப்பாடு ரூ.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உணவு விலை உயர்த்தப்பட வில்லை. நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் வரவில்லை. மேலும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால், வெளியிடங்களில் இருந்து மக்கள் வருவது இல்லை. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஓட்டல்களுக்கு வரி செலுத்துவது போன்றவற்றில் சலுகை வழங்க வேண்டும் என்றார். 
    கன்னேரி முக்கு பகுதியில் உள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சியில் மழை காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    ஊட்டி:

    கேரள மாநிலத்தில் கடந்த 1-ந் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் அந்த மாநிலத்தையொட்டி உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக இதமான கால நிலையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக கூடலூர் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதேபோல் ஆறுகள், குட்டைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    நேற்று ஊட்டி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மதியம் 2 மணியளவில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

    தொடர்ந்து 3 மணி நேரம் பெய்த மழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. அத்தியாவசிய பணிகளுக்கு வெளியில் வந்த மக்கள், தேயிலை தோட்டங்களில் வேலை செய்த விவசாயிகள் அனைவரும் குடை பிடித்தபடியும், கவர் அணிந்து கொண்டும் வேலை பார்த்தனர்.

    இந்த மழை காரணமாக கருகும் நிலையில் இருந்த தேயிலை செடிகள் தற்போது துளிர் விட தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இதேபோல் கோத்திகிரியை சுற்றியுள்ள பகுதிகளான குஞ்சப்பனை, கொடநாடு, கீழ்கோத்தகிரி, கூக்கல்தொரை, கட்டப்பெட்டு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    அந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. தொடர்ந்து பெய்த மழையால் டானிங்டன் பகுதியில் உள்ள கரும்பள்ளம், அலக்கரை உள்ளிட்ட ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் கன்னேரி முக்கு பகுதியில் உள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சியில் மழை காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இந்த மழையால் இன்று காலை கடுங்குளிர் நிலவியது. இதனால் பொதுமக்கள் சொட்டர் அணிந்தபடியும், ஆட்டோ, கார் டிரைவர்கள் ஆங்காங்கே தீ மூட்டியும் குளிர் காய்ந்து வருகின்றனர். தொடர்ந்து மேகமூட்டமாக இருப்பதால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை.

    இதன் காரணமாக சாலைகளில் வரும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வருகின்றனர். அதிகபட்சமாக சோலூர் மட்டம் பகுதியில் 32 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

    குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது.

    பில்லூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. 85 அடி உயரம் கொண்ட பில்லூர் அணைக்கு நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 350 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    ஊட்டி-2, நடுவட்டம்-12, கிளைன்மார்கன்-4, அவலாஞ்சி-2, குன்னூர்- 3, எடப்பள்ளி-3, கூடலூர்-11, தேவாலா-25, அப்பர் கூடலூர்-5, ஓவேலி-20, பந்தலூர்-16, சோலூர்மட்டம்-32, கீழ்கோத்தகிரி-23. நீலகிரி மாவட்டத்தில் 163 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    ஊட்டியில் இருந்து கோவைக்கு செல்லும் அரசு பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
    ஊட்டி:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனினும் தமிழகத்தில் குறைந்த பயணிகளை கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து அரசு பஸ்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி கோவை போக்குவரத்துக்கழக மண்டலத்துக்கு உட்பட்ட நீலகிரி மாவட்டத்தில் 160 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நீலகிரியில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கும், நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதற்கிடையே கோவை மாவட்டத்தில் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்காக செல்கிறோம் என்று கூறி அரசு பஸ்கள் மட்டுமின்றி சொந்த வாகனங்களிலும் நீலகிரிக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பேருக்கு மேல் வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முதல் ஊட்டியில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் கோவைக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் இடம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பஸ்கள் முன்னறிவிப்பு இன்றி நிறுத்தப்பட்டதை அறியாத பயணிகள் ஏராளமானோர் காலை முதலே காத்திருந்து கடும் அவதி அடைந்தனர்.

    கடந்த 5 நாட்களாக ஊட்டியில் இருந்து கோவைக்கு 20 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று ஒரு மணி நேரத்துக்கு இடையே மேட்டுப்பாளையத்துக்கு மட்டும் அரசு பஸ் இயக்கப்பட்டது. அதில் சமூக இடைவெளி விட்டு குறைந்த பயணிகள் மட்டும் மேட்டுப்பாளையம் சென்றனர். இதனால் மற்ற பயணிகள் பஸ் நிலையத்தின் இருக்கைகளில் அமர்ந்தும், வரிசையில் நின்றும் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் உடைமைகளுடனும், கையில் குழந்தைகளுடனும் கோவைக்கு செல்ல பரிதவிக்கும் நிலை ஏற்பட்டதை காண முடிந்தது. இதேபோன்று நேற்று மதியம் கோத்தகிரியில் இருந்து குன்னூர், ஊட்டி, மேட்டுப்பாளையம், கோவை செல்லும் அரசு பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
    ஊட்டியில் பரவலாக மழை பெய்து வருவதால், காய்கறிகளை முன்கூட்டியே விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.
    ஊட்டி:

    மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலை விவசாயத்துக்கு அடுத்தபடியாக காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், முள்ளங்கி, பீன்ஸ், டர்னீப், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

    ஆனால் ஊரடங்கு உத்தரவால் வெளியிடங்களுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுவது குறைந்து உள்ளது. மேலும் உள்ளூர் மார்க்கெட்டுகளிலும் குறைந்த அளவே விற்பனையாகிறது. மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றாலும், போதிய விலை கிடைப்பது இல்லை.

    ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதன்படி கடந்த சில நாட்களாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இவ்வாறு தொடர்ந்து மழை பெய்தால் காய்கறிகள் அழுகும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் காய்கறிகளை முன்கூட்டியே அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    ஊட்டி அருகே பட்பயர் பகுதியில் கேரட், பீட்ரூட் காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் சமூக இடைவெளி விட்டு முகக்கவசம் அணிந்து காய்கறிகளை அறுவடை செய்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ஊட்டியில் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் காய்கறிகளை முன்கூட்டியே அறுவடை செய்து வருகிறோம். ஒரு கிலோ கேரட் ரூ.10 முதல் ரூ.15 வரை விலை போகிறது. போதிய விலை கிடைக்காததால் நாங்கள் நஷ்டம் அடைந்து உள்ளோம். 3 மாத கால பயிர் பராமரிப்பு, உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட செலவினங்களுக்கு கூட வருமானம் இல்லை. என்றனர். 
    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே காயமடைந்த நிலையில் காணப்பட்ட சிறுத்தைப்புலியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் பணியாளர்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள சாலையோரத்தில் கடந்த மாதம் 16-ந் தேதி சிறுத்தைப்புலி ஒன்று, காலில் காயத்துடன் நடக்க முடியாமல் படுத்து கிடந்தது. அதனை வனத்துறையினர் மீட்டு கூட்ஷெட் சாலையில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அதற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தனி அறையில் உள்ள கூண்டில் அடைத்து வைத்து, அதன் உடல் நிலையை கால்நடை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

    அந்த அறைக்குள் இரவில் கடுங்குளிர் நிலவுவதால், வெப்பநிலையை சீராக வைக்க 2 ஹீட்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கூண்டுக்குள் இன்பிரா ரெட்(அகக்சிவப்பு கதிர்கள்) வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இது தவிர தினமும் ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது.

    சிறுத்தைப்புலிக்கு நடத்தப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனை முடிவில், அதன் தலை மற்றும் வலது காலில் உள்காயங்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, சென்னை கால்நடை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவில் சிறுத்தைப்புலிக்கு காய்ச்சல் சம்பந்தமான நோய் தொற்று எதுவும் இல்லை என்பது உறுதியானது.

    இந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக சிறுத்தைப்புலியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. ஆரம்பத்தில் எதுவும் சாப்பிடாமல் இருந்து வந்ததால், குளுக்கோஸ் மட்டும் ஏற்றப்பட்டது. தற்போது ஆட்டு இறைச்சியை சாப்பிட தொடங்கி உள்ளது. மேலும் படுத்து கிடந்த அந்த சிறுத்தைப்புலி, எழுந்து நடக்க ஆரம்பித்து உள்ளது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, காயத்தால் அவதிப்பட்ட சிறுத்தைப்புலி நடக்க ஆரம்பித்து இருக்கிறது. இதை மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டால் மற்ற வனவிலங்குகள் தாக்கக்கூடும்.

    எனவே அந்த சிறுத்தைப்புலியை சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது” என்றார்.

    ×