என் மலர்tooltip icon

    நீலகிரி

    ஊட்டியில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த மக்கள், நகைகளை அடகு வைக்க கடைகளில் குவிந்து வருகின்றனர்.
    ஊட்டி:

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஊரடங்கால் நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு கிடக்கிறது. மேலும் சுற்றுலா தொழிலை நம்பி இருந்தவர்கள், வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், ஆட்டோ டிரைவர்கள், நடைபாதை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் தங்களது வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களைக்கூட வாங்க முடியாமல் திணறி வருகின்றனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டாலும், சுற்றுலா தலங்களை திறக்க அனுமதி அளிக்கவில்லை. மேலும் சுற்றுலா பயணிகள் வர தடை நீடிப்பதால் இயல்புநிலை திரும்பவில்லை. இதனால் பலர் வருமானமின்றி தவித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்தவர்கள் தங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு வீட்டில் இருக்கும் தங்க நகைகளை அடமானம் வைத்து பணம் வாங்கி வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் நகைக்கடைகளை தேடி குவிந்து வருகின்றனர். நேற்று ஊட்டி மெயின் பஜாரில் உள்ள 2 நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால், கொரோனா தொற்று பரவும் அபாயம் இருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சென்று உடனடியாக மக்கள் கூட்டத்தை வெளியேற்றினர். இரும்பு ஷட்டரை பாதியாக அடைத்து வைக்கவும், ஒருவர் உள்ளே வந்து சென்ற பின்னர் அடுத்த நபரை உள்ளே அனுமதிக்குமாறும் அறிவுறுத்தியதோடு, சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    நகைக்கடைகளில் நகை வாங்க வந்தவர்களை விட அடமானம் வைக்க வந்தவர்கள் அதிகமாக இருந்தனர். அரசு பஸ் இயக்கப்படுவதால், ஊட்டி சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பெண்கள் தங்களது குழந்தைகளுடன் வந்திருந்ததை காண முடிந்தது. இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதித்து அன்றாட வாழ்க்கையை நகர்த்த முடியாமல் உள்ளோம். சொந்தமான நகைகளை வட்டிக்கு அடமானம் வைத்து பணம் பெற்று குடும்பத்தை நடத்தி வருகிறோம் என்றனர்.
    கொரோனா பீதி எதிரொலியாக கன்டோன்மெண்ட் ஆஸ்பத்திரி மூடப்பட்டு உள்ளது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் செயல்படும் கன்டோன்மெண்ட் 2-வது வார்டுக்கு உட்பட்டது நல்லப்பன் தெரு. இங்கு நேற்று முன்தினம் கரூரில் இருந்து ஆசிரியை ஒருவர் வந்தார். அவரிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள், கன்டோன்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைகளுக்கு சென்று வந்தனர். இதன் காரணமாக கொரோனா பீதி எதிரொலியாகவும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவும் நேற்று மட்டும் ஆஸ்பத்திரி மூடப்பட்டது. மேலும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

    இது தவிர வெலிங்டன் ராணுவ முகாமிற்கு உட்பட்ட சப்ளை டிப்போ பகுதிக்கு வேலூரில் இருந்து வந்த பெண்ணுக்கு சளி மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்தது. உடனடியாக அவர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து அந்த பகுதிக்கு செல்லும் நுழைவு வாயில்கள் மூடப்பட்டு, ராணுவத்தினரின் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும் வெளியில் இருந்து உள்ளேயும், உள்ளே இருந்து வெளியேயும் யாரும் செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    நீலகிரி மாவட்டத்தில் கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    தமிழக துணை முதல் அமைச்சர் சட்ட பேரவையில் கடந்த 2019-20-ம் ஆண்டு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் மானிய கோரிக்கையில் மலையிட பாதுகாப்பு குழும பகுதிகளில் திட்ட அனுமதி விரைவாக வழங்கும் வகையில் ஒப்புதல் அளிக்கும் நடைமுறைகள் எளிமையாக்கப்படும் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி முதன்மை செயலாளர், நகர் ஊரமைப்பு இயக்குனர் ஆகியோரின் கடிதத்தின் அடிப்படையில் நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் ஒப்புதல் பெற்று மலையிட பாதுகாப்பு குழும பகுதிகளில் திட்ட அனுமதி விரைவாக ஒப்புதல் வழங்கும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளது.

    அரசின் இசைவு பெற்ற முழுமை திட்டம் உள்ள மலை இடங்களில் மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்க நகர் ஊரமைப்பு துறையின் கூட்டு உள்ளூர் திட்ட குழுமம், புதுநகர் வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர், செயலர்கள், மண்டல துணை இயக்குனர், உதவி இயக்குனர்கள், நகர் ஊரமைப்பு இயக்குனருக்கு மலையிடம் அல்லாத பகுதிகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள அதிகார பகிர்வை போன்றே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது. முழுமை திட்டம் உள்ள மலை இடங்களில் திட்ட அனுமதி வழங்குவதற்கு கனிமவளம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறைகளின் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் மாவட்ட வன அலுவலர், வனத்துறை தலைவரின் இசைவினை பெற்று ஆட்சேபனை இன்மை கடிதம் வழங்கலாம்.

    வனத்துறை தலைவரின் இசைவு ஒரு மாதத்திற்குள் அளிக்கவில்லை எனில், இசைவு அளிக்கப்பட்டதாக கருதி மாவட்ட வன அலுவலர் ஆட்சேபனை இன்மை கடிதம் அளிக்கலாம். வருவாய் கோட்டாட்சியர் ஆட்சேபனை இன்மை கடிதம் பெற்று, அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. முழுமை திட்டம், விரிவு அபிவிருத்தி திட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள நில பயன்பாட்டின் வகைப்பாட்டை மாற்றம் செய்வதற்கான உத்தேசங்களுக்கு மலையிட பாதுகாப்பு குழுமத்தின் முன் அனுமதி பெறவேண்டும். முழுமை திட்டம் இல்லாத மலை இடங்களில் கட்டிடங்களை பொறுத்தமட்டில் நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க வேண்டும். மனைப்பிரிவை பொறுத்தமட்டில் நகர் பகுதி என்றால் ஒரு ஹெக்டேருக்கும், ஊரகப்பகுதி எனில் 2 ஹெக்டேருக்கும் மிகும் உத்தேசங்களுக்கு மலையிட பாதுகாப்பு குழுமத்தின் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.

    முழுமை திட்டம் அல்லாத இடங்களில் திட்ட அனுமதி வழங்குவதற்கு வனம், கனிம வளம் மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய 3 துறைகளின் மாவட்ட அளவிலான அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரின் ஆட்சேபனையின்மை கடிதம் பெற்று அனுமதி வழங்கவேண்டும். பாதுகாப்பு குழும பகுதிகளில் 15 ஆயிரம் சதுர அடிக்கு உட்பட்ட கட்டிடங்கள், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பு வரையிலும், ஊராட்சி பகுதிகளில் 2 ஹெக்டேர் நிலப்பரப்பு வரையிலும் அமையும். மனைப்பிரிவு உத்தேசம் ஆகியவற்றில் மாவட்ட கலெக்டர் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் குழுவின் ஒப்புதல் பெற்று கோவை மண்டல அளவில் ஒப்புதல் வழங்கப்படவுள்ளது. மேற்படி வரம்பிற்கு மேல் பெறப்படும் கட்டிடம், மனைப்பிரிவு உபதேசங்கள், நில பயன் மாற்றம் குறித்த உத்தேச ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஊட்டியில் அரசு கலைக்கல்லூரி செயல்படும் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல் பங்களாவை புதுப்பிக்க ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது பல்வேறு கட்டிடங்களை கட்டினர். கோவை கலெக்டராக இருந்த ஜான் சல்லீவன், நீலகிரியை கண்டறிந்து இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டனைபோல் ஊட்டி இருப்பதை அறிந்தார். பின்னர் இங்கிலாந்து நாட்டில் உள்ளதைபோல் பாரம்பரிய கட்டிடங்களை கட்ட முடிவு செய்தார். 18-ம் நூற்றாண்டில் ஊட்டி சேரிங்கிராஸ் மேல்பகுதியில் கல் பங்களா கட்டப்பட்டது. இயற்கை எழில் மிகுந்த இடத்தில் கட்டிடத்தை சுற்றி ஓக் மரங்களை நடவு செய்தார். அப்போது கோடைகாலத்தில் ஆங்கிலேயர்களின் சென்னை மாகாண தலைமை செயலகம், ஊட்டி கல் பங்களாவில் செயல்பட்டது. இங்கு பணிபுரிந்த ஊழியர்கள் தங்க ஊட்டியில் குடியிருப்புகள் கட்டப்பட்டன. பின்னர் கலெக்டர் பங்களாவாகவும் செயல்பட்டு வந்தது.

    ஊட்டியில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கட்டிடம், அந்த கல் பங்களா ஆகும். இதனை கடந்த 1955-ம் ஆண்டில் தமிழக முதல் அமைச்சராக இருந்த காமராஜர், அரசு கலைக்கல்லூரியாக மாற்றி செயல்பட வைத்தார். அந்த கட்டிடத்தில் கல்லூரி முதல்வர் அலுவலகம், தமிழ், கணிதம் உள்பட 5 பாடப்பிரிவுகளுக்கான வகுப்பறைகள், நூலகம் செயல்பட்டு வருகிறது. மணிகூண்டும் உள்ளது. தற்போதும் அந்த கட்டிடங்கள் பழமை மாறாமல் பொலிவுடன் காட்சியளிக்கிறது. இந்தநிலையில் பாரம்பரியமிக்க கல் பங்களாவை பாதுகாக்கும் வகையில், அதனை பழமை மாறாமல் புதுப்பிக்க தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. சட்டப்பேரவையில் நடந்த உயர்கல்வி மானியக்கோரிக்கையில் அதற்கான நிதியை ஒதுக்கி உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்தார். விரைவில் பொதுப்பணித்துறை மூலம் பணிகள் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:-

    கடந்த 1,820-ம் ஆண்டில் கல் பங்களா கட்டப்பட்டது. காலப்போக்கில் அரசு கலைக்கல்லூரியாக மாற்றப்பட்டு 18 இளங்கலை பாட பிரிவுகளையும், 12 முதுகலை பாட பிரிவுகளையும், ஏழு ஆய்வு பிரிவுகளையும், 8 உயர் ஆய்வு முனைவர் பட்ட பிரிவுகளையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. 200 ஆண்டுகள் பழமையான அந்த பங்களாவை புதுப்பிக்க ரூ.8.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிமெண்டு பயன்படுத்தாமல், சுண்ணாம்பு கலவையை கொண்டு கட்டியதுபோல், பழமை மாறாமல் பங்களா புதுப்பிக்கப்படுகிறது. தற்போது கல்லூரியின் நுழைவுவாயில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கூடலூர், மசினகுடியில் மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கூடலூர்:

    கொரோனாவால் உயிரிழந்த மின்வாரிய ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், சிவப்பு மண்டலங்களில் 33 சதவீத அடிப்படையில் ஊழியர்களை பணிக்கு வர உத்தரவிட வேண்டும், இலவச முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மசினகுடியில் சிங்காரா மின் உற்பத்தி நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். இதில் கண்ணன், ராமகிருஷ்ணன், சாலி உள்பட சி.ஐ.டி.யு. தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதேபோன்று கூடலூர் மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டு ஆராய்ச்சி படிப்பு படிக்க நுழைவுத்தேர்வு எழுதி இருந்த அனுபிரியா, வெற்றி பெற்று தேர்வாகி உள்ளார்.
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள தேனாடு கிராமத்தை சேர்ந்தவர் இந்திரன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருடைய மனைவி லட்சுமி. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. இவர்களுடைய மகள் அனு பிரியா(வயது 22). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டு ஆராய்ச்சி படிப்பு படிக்க நுழைவுத்தேர்வு எழுதி இருந்தார். அதில் அனு பிரியா வெற்றி பெற்று, தேர்வாகி உள்ளார்.
    நீலகிரி மாவட்டத்தில் இருந்து இதுவரை வடமாநில தொழிலாளர்கள் 3,200 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரியில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த வடமாநில தொழிலாளர்கள் 7,255 பேரில், விருப்பம் தெரிவித்தவர்களை சொந்த ஊர்களுக்கு வருவாய்த்துறையினர் அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஓட்டலில் பணிபுரிந்த 4 பேர் மேகாலயா மாநிலத்துக்கு செல்ல வருவாய்த்துறையினர் வழியனுப்பி வைத்தனர். ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் அவர்களது விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, கார் மூலம் ஊட்டியிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து ரெயில் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் இருந்து இதுவரை வடமாநில தொழிலாளர்கள் 3,200 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்று தங்களது சொந்த செலவில் சிறப்பு பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.
    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தொரப்பள்ளியில் வீட்டை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம் செய்தது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தொரப்பள்ளியில் உள்ள அள்ளூர்வயல் பகுதிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் காட்டுயானை புகுந்தது. அதன்பின்னர் வள்ளி என்பவரது வீட்டை முற்றுகையிட்டது. தொடர்ந்து பின்பக்க சுவரை இடித்து, அட்டகாசத்தில் ஈடுபட்டது. அப்போது வீட்டுக்குள் இருந்த வள்ளி பயத்தில் அலறினார். உடனே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். தொடர்ந்து கூச்சலிட்டு காட்டுயானையை விரட்டியடித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் நேரில் வந்து, காட்டுயானை சேதப்படுத்திய வீட்டை பார்வையிட்டனர். அப்போது, வீட்டை சீரமைக்க உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று வள்ளி கோரிக்கை விடுத்தார். மேலும் கோரிக்கை மனுவும் அளித்தார்.

    இதேபோன்று பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தங்கமலை ஆதிவாசி காலனியை சேர்ந்த மாதன் மற்றும் அவரது மனைவி ருக்குமணி ஆகியோர் தங்களது வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டை காட்டுயானைகள் முற்றுகையிட்டு சேதப்படுத்தின. பின்னர் ஆதிவாசி மக்கள் திரண்டு வந்து, காட்டுயானைகளை விரட்டியடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ், தேவாலா வனக்காப்பாளர் லூயிஸ் மற்றும் வனத்துறையினர், சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டனர். பின்னர் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    மேலும் குன்னூர் அருகே ரன்னிமேடு பகுதியில் உள்ள சுப்பிரமணியர் கோவிலின் கம்பிவேலியை காட்டுயானைகள் உடைத்தன. பின்னர் அருகில் உள்ள எஸ்டேட்டில் விவசாய பயிர்களை சேதப்படுத்திவிட்டு, வனப்பகுதிக்குள் சென்றன. அந்த காட்டுயானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காட்டேரி பூங்கா அருகில் பயணிகள் நிழற்குடையில் கொரோனா பரிசோதனை மையம் தொடங்கப்பட்டு உள்ளது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளியூர்களில் இருந்து இ-பாஸ் பெற்று நீலகிரி மாவட்டத்துக்கு வருபவர்களுக்கு பர்லியார் உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இதற்கு உதவியாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காட்டேரி பூங்கா அருகில் பயணிகள் நிழற்குடையில் கொரோனா பரிசோதனை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு வெளியூர்களில் இருந்து வருபவர்களின் பயண விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. மேலும் உடல் வெப்ப பரிசோதனை உள்பட மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இது தவிர சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.
    தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த காட்டெருமைக்கு தொற்று நோய் இல்லை என்றும், மரபணு குறைபாடு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வண்டிசோலையில் வனப்பகுதி காணப்படுகிறது. இங்குள்ள காட்டெருமைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் சுற்றித்திரிவது வழக்கம். கடந்த வாரம் குன்னூர்-கோத்தகிரி சாலையில் பித்தாபூர் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சில காட்டெருமைகள் மேய்ந்து கொண்டு இருந்தன. அதில் ஒரு காட்டெருமையின் உடல் பகுதியில் தோலின் நிறம் வெண்மையாக காணப்பட்டது. இது தொற்று நோய் ஏற்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. இதை சிலர் புகைப்படம் எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். மேலும் தொற்று நோய் ஏற்பட்டு உள்ளதாகவும், அதனை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து வண்டிசோலை பகுதிக்கு சென்று, அந்த காட்டெருமையை வனத்துறையினர் கண்காணித்தனர். அதன்பிறகு வனத்துறையினர் கூறியதாவது:-

    பித்தாபூர் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த காட்டெருமைக்கு தொற்று நோய் இல்லை. குடியிருப்பு பகுதிகளிலும், தேயிலை தோட்டங்களிலும் சுற்றித்திரிவதால் நாட்டு மாடுகளுடன் இணைந்து மரபணு குறைபாடு ஏற்பட்டு உள்ளது. இதேபோன்று வால்பாறை பகுதியிலும் ஒரு காட்டெருமை உள்ளது. இது கால்நடை டாக்டர்களிடம் விசாரித்தபோது, எங்களுக்கு தெரியவந்தது. அந்த காட்டெருமையின் உடல் ஆரோக்கியம் நல்ல நிலையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
    கோத்தகிரியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகாவில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு படிப்படியாக குணம் அடைந்து, அவர்கள் 6 பேரும் வீடு திரும்பினர்.

    இதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. வெளியூர்களில் இருந்து குஞ்சப்பனை சோதனைச்சாவடி வழியாக வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. மேலும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோத்தகிரி தாலுகாவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பேரூராட்சி சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பஸ் நிலையம், பஸ் நிறுத்தங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இது மட்டுமின்றி அனைத்து அரசு அலுவலங்களிலும் ஒருநாள்விட்டு ஒருநாள் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இந்த பணியானது பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெறுகிறது.
    கோத்தகிரியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகாவில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு படிப்படியாக குணம் அடைந்து, அவர்கள் 6 பேரும் வீடு திரும்பினர்.

    இதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. வெளியூர்களில் இருந்து குஞ்சப்பனை சோதனைச்சாவடி வழியாக வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. மேலும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோத்தகிரி தாலுகாவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பேரூராட்சி சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பஸ் நிலையம், பஸ் நிறுத்தங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இது மட்டுமின்றி அனைத்து அரசு அலுவலங்களிலும் ஒருநாள்விட்டு ஒருநாள் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இந்த பணியானது பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெறுகிறது. 
    ×