என் மலர்tooltip icon

    நீலகிரி

    வெளியிடங்களில் இருந்து நீலகிரிக்கு வந்த 8,348 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக புதியதாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது. இதற்கிடையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வு செய்யப்பட்டதால், வெளியிடங்களில் இருந்து வருபவர்களால் தொற்று பரவுகிறது. குறிப்பாக சென்னையில் இருந்து வருகிறவர்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வெளிமண்டலங்கள், வெளிமாநிலங்களில் இருந்து இ-பாஸ் பெற்று வருகிறவர்களுக்கு பர்லியார், குஞ்சப்பனை சோதனைச்சாவடிகளில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவர்களிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டியூட் நிறுவன ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதேபோன்று நீலகிரிக்கு வரும் சரக்கு வாகன, லாரி டிரைவர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆரம்பத்தில் சோதனைச்சாவடியில் வாகனங்களை நிறுத்தி பரிசோதனை செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு காட்டேரி பூங்கா பகுதியில் மருத்துவ குழுவினர் இ-பாஸ் பெற்று வருகிறவர்களுக்கு சளி மாதிரி எடுத்து வருகின்றனர். இ-பாஸ் இன்றி வருகிறவர்கள் மாவட்ட எல்லையில் தடுக்கப்பட்டு, சளி மாதிரி எடுக்கப்பட்ட பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் வெளியிடங்களில் இருந்து வந்த 8,348 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் 14 நாட்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுவரை கொரோனா அறிகுறி தென்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள், இ-பாஸ் பெற்று வந்தவர்கள், இ-பாஸ் இன்றி வந்தவர்கள் உள்பட மொத்தம் 11,739 பேரிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
    நீலகிரி மாவட்டத்தில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது.
    ஊட்டி:

    சூரியனை விட மிகவும் சிறிய துணைக்கோளான சந்திரன், பூமிக்கு அருகில் இருப்பதால் நமக்கு பெரியதாக தோன்றுகிறது. முழு சூரிய கிரகணத்தின்போது சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்கிறது. இந்த அபூர்வ சூரிய கிரகணம் நேற்று நிகழ்ந்தது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் காலை 10.22 மணியளவில் சூரிய கிரகண நிகழ்வு தொடங்கியது. சூரியனை நிலவு மறைத்ததால் கொஞ்சம், கொஞ்சமாக வெளிச்சம் குறைந்துகொண்டே வந்தது. சுமார் அரை மணி நேரத்தில் வானத்தை மேகமூட்டம் சூழ்ந்து கொண்டதால், சூரிய கிரகணத்தை காண முடியவில்லை. காலை 11 மணிக்கு மேல் சூரிய கிரகணத்தை தெளிவாக காண முடிந்தது.

    தொடர்ந்து விட்டு, விட்டு மேகமூட்டம் வந்ததால் சூரிய கிரகணத்தை முழுமையாக பார்க்க முடியவில்லை. சந்திரனால் மறைக்கப்பட்ட சூரியன் விடுபட மெல்ல, மெல்ல வெளிச்சம் அதிகரித்துக்கொண்டே வந்தது. இந்த நிகழ்வு நடந்த போது ஊட்டி நகரில் குளிர்ந்த காலநிலை நிலவியது. நிகழ்வை வெறும் கண்களால் நேரடியாக பார்க்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் வீடுகளில் இருந்தபடியே பிரத்தியேக கண்ணாடிகள் மூலம் சூரிய கிரகணத்தை பார்த்தனர். சிலர் வெல்டிங் கடைகளில் பயன்படுத்தப்படும் கண்ணாடி வழியாக ஆர்வத்துடன் பார்த்தனர். இருப்பினும் அவ்வப்போது கடும் மேகமூட்டம் காரணமாக சூரியகிரகணம் தெரியாததால் முழுமையாக பார்க்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    நீலகிரி மாவட்டத்தில் சூரிய கிரகணத்தையொட்டி கோவில்களில் வழக்கம்போல் நடைபெறும் பூஜைகள் நிறுத்தப்பட்டன. ஊரடங்குக்கு மத்தியில் ஆகம விதிகளின்படி கோவிலில் நடந்து வரும் சிறப்பு பூஜைகள் நிறுத்தப்பட்டு, நடை அடைக்கப்பட்டது. ஊட்டி மாரியம்மன் கோவில், சீனிவாச பெருமாள் கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடை அடைக்கப்பட்டது. சூரிய கிரகணம் முடிந்த பின்னர் வழக்கம்போல் பூஜைகள் நடந்தது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கூட்டம் கூடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஊட்டி அருகே முத்தோரையில் உள்ள மத்திய அரசின் ரேடியோ வானியல் மையத்தில் சூரிய கிரகணத்தை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.
    ஊட்டியில் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் வந்தவர்களுக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
    ஊட்டி:

    கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை ஒட்டி உள்ள நீலகிரி மாவட்ட எல்லைகளில் இ-பாஸ் இல்லாதவர்களின் வாகனங்களும் சோதனைச்சாவடிகள் வழியாக அனுமதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் ஊட்டி நகராட்சி பகுதியில் வெளிமாநில வாகனங்கள் அதிகளவு செல்வதை காண முடிகிறது. இதையடுத்து அனைத்து அதிகாரிகளும் ஊட்டி நகராட்சி பகுதியில் இயக்கப்படும் வெளிமாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி ஊட்டியில் நகராட்சி கமிஷனர் சரஸ்வதி தலைமையில் சுகாதார அதிகாரி (பொறுப்பு) பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஊட்டி-குன்னூர் சாலை லவ்டேல் சந்திப்பு, ஊட்டி-கூடலூர் சாலை எச்.பி.எப். இந்து நகர் பகுதி, ஊட்டி-கோத்தகிரி சாலை கோடப்பமந்து ஆகிய 3 இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. வாகனங்களில் வருபவர்கள் உள்ளூர் முகவரியில் வசித்து வருகிறார்களா? என்பதை உறுதி செய்ய ஆதார் அடையாள அட்டையை வாங்கி சரிபார்த்தனர். இருசக்கர, நான்கு சக்கர மற்றும் சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டது.

    வாகனங்களில் பலர் முகக்கவசம் வைத்திருந்தும், ஆனால் அணியாமல் வந்ததும் சோதனையில் தெரியவந்தது. கடந்த 2 நாட்களில் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் வந்தவர்களுக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
    சர்வதேச யோகா தினத்தையொட்டி வெலிங்டனில் ராணுவ வீரர்கள் யோகா பயிற்சி செய்தனர்.
    ஊட்டி:

    ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ முகாமில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது. இதில் 850 ராணுவ வீரர்கள் கலந்துகொண்டு பல்வேறு யோகா பயிற்சிகளை செய்தனர். அனைவரும் சமூக இடைவெளி விட்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையில் நீலகிரி மாவட்டத்தில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் வீடுகளில் இருந்தபடியே யோகா பயிற்சி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையொட்டி ஊட்டி அருகே நஞ்சநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகள் தங்களது வீடுகளில் யோகா பயிற்சி செய்தனர்.

    தரையில் போர்வை விரித்து அதன் மீது அமர்ந்து மூச்சுப்பயிற்சி, சூரிய நமஸ்காரம், பத்மாசனம், புஜங்காசனம், தனுராசனம் வஜ்ராசனம், ஹாலாசனம் போன்ற யோகாசனங்களை மேற்கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் போட்டிக்காக உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    இதேபோன்று ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் ஆன்லைன் மூலம் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். விலங்கியல் துறைத்தலைவர் எபனேசர் வரவேற்றார். கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள் வீடுகளில் இருந்தபடியே பல்வேறு யோகா பயிற்சிகளை செய்தனர். ஆன்லைனில் ஒருவர் யோகாபயிற்சி கொடுக்க அதை பின்பற்றி மாணவ-மாணவிகள் செய்தார்கள்.மேலும் மஞ்சூர் அருகே உள்ள எடக்காடு காந்தி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் உள்பட பலரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கலந்துகொண்டு யோகாபயிற்சி செய்தனர்.
    வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை கண்காணிக்க முள்ளூரில் சோதனைச்சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
    கோத்தகிரி:

    வெளியூர்களில் இருந்து நீலகிரிக்கு வருபவர்களால் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையில் கோத்தகிரி தாலுகாவில் இருந்து வெளியூர்களுக்கு அவசியமின்றி வாகனங்கள் சென்று வருவதாக புகார் எழுந்தது.

    இதையொட்டி வெளியூரில் இருந்து வரும் வாகனங்களை கண்காணிக்க கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள முள்ளூரில் சோதனைச்சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

    கோத்தகிரியில் இருந்து வெளியூர்களுக்கு அவசிய தேவையின்றி வாகனங்கள் சென்று வருவதாக தெரிகிறது. இதை கண்காணிக்க முள்ளூரில் சோதனைச்சாவடி அமைக்கப்பட உள்ளது. அங்கு வருவாய், சுகாதாரம், காவல் ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணி, உதவியாளர் அறிவாகரன் ஆகியோர் ஆய்வு நடத்தினர். வாகனங்களை சோதனை செய்ததோடு, அரசு பஸ்களில் வந்த பயணிகளிடம் உள்ளூர் அடையாள அட்டை உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தனர்.
    நீலகிரி மாவட்டத்தில் பெண் குழந்தை உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிப்பு 30 ஆக உயர்ந்து இருக்கிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 14 பேர் பாதிக்கப்பட்டு, கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அதன்பிறகு பெங்களூருவுக்கு சென்று திரும்பிய ஊட்டியை சேர்ந்த லாரி டிரைவர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் 4 பேர், கோவை மாவட்டத்துக்கு சென்று திரும்பிய 2 பேர், கரூர் மாவட்டத்துக்கு சென்று திரும்பிய ஆசிரியை என 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

    இதையடுத்து நேற்று முன்தினம் சென்னையில் இருந்து குன்னூருக்கு வந்த 2 பேர் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி நீலகிரியில் இருந்து அனுப்பப்பட்ட மொத்தம் 12 பேர், கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இதற்கிடையே குன்னூருக்கு வந்த 2 பேர், சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால், அந்த மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதன்படி நீலகிரியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 என அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 5 வயது பெண் குழந்தை உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதாவது ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட குளிச்சோலை பகுதியை சேர்ந்த 5 வயது பெண் குழந்தை, 16 வயது சிறுமி என 2 பேருக்கு தொற்று உறுதியானது.

    மேலும் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து ஊட்டி அருகே உள்ள காந்தல் கீழ் போகி தெருவுக்கு வந்த 22 வயது இளம்பெண்ணுக்கு தொற்று உறுதியானது. அவருடன் தொடர்பில் இருந்த 20 வயது இளம்பெண், 47 வயது பெண், 55 வயது ஆண் என 3 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. ஒரே பகுதியில் 4 பேருக்கு தொற்று ஏற்பட்டதால், 3-வது முறையாக காந்தல் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டது. இதற்கிடையில் நீலகிரியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்து இருக்கிறது.
    சென்னையில் இருந்து வரும் லாரி டிரைவர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
    ஊட்டி:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும் அதன் கட்டுப்பாடுகளில், தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன.

    மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, அதில் உள்ள மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் பெற தேவையில்லை என்றும், வெளி மண்டலங்களுக்கு செல்ல இ-பாஸ் பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் நீலகிரியில் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிமாவட்டங்களில் இருந்து ஊட்டி வருகிறவர்கள் அவசிய மற்றும் அவசர காரணங்களுக்காக வருவது இல்லை என தெரிகிறது.

    கொரோனா அதிக பாதிப்பு உள்ள சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பலர் இ-பாஸ் பெறாமல் காய்கறிகளை ஏற்றி செல்லும் லாரிகள், சரக்கு வாகனங்களில் ரகசியமாக கோவை மண்டலத்துக்குள் வந்துவிட்டு, அங்கிருந்து அரசு பஸ் மூலம் நீலகிரி வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

    இதன் காரணமாக கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுமட்டுமல்லாமல் பலர் தங்களது சொந்த வாகனங்களில் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் வருகின்றனர். இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

    நீலகிரி அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து பணி நிமித்தமாக நீலகிரி மாவட்டத்துக்கு வந்துசெல்லும் அனைத்து பணியாளர்களும் தினமும் பயணம் மேற்கொள்வதை தவிர்த்து, தலைமையிடத்தில் தங்கி பணியாற்ற வேண்டும். நீலகிரிக்கு தனியார் வாகனங்கள் மற்றும் அரசு பஸ்களில் வருகை புரியும் அனைத்து பயணிகளும் சோதனைச்சாவடிகளில் உள்ளூர்வாசிகள் என்பதை உறுதி செய்ய அடையாள அட்டை காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்காத பட்சத்தில் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

    சென்னை, இதர மண்டலங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று நீலகிரி மாவட்டத்திற்கு திரும்பும் அனைத்து லாரி, சரக்கு வாகன டிரைவர்களுக்கு சோதனைச்சாவடிகளில் கட்டாய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சோதனை முடிவுகள் வரும் வரை மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்துதல் முகாம்களில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், டிரைவர்கள், அரசு பணியாளர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சென்னையில் இருந்து வரும் லாரி டிரைவர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
    ஊட்டி:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும் அதன் கட்டுப்பாடுகளில், தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன.

    மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, அதில் உள்ள மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் பெற தேவையில்லை என்றும், வெளி மண்டலங்களுக்கு செல்ல இ-பாஸ் பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் நீலகிரியில் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிமாவட்டங்களில் இருந்து ஊட்டி வருகிறவர்கள் அவசிய மற்றும் அவசர காரணங்களுக்காக வருவது இல்லை என தெரிகிறது.

    கொரோனா அதிக பாதிப்பு உள்ள சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பலர் இ-பாஸ் பெறாமல் காய்கறிகளை ஏற்றி செல்லும் லாரிகள், சரக்கு வாகனங்களில் ரகசியமாக கோவை மண்டலத்துக்குள் வந்துவிட்டு, அங்கிருந்து அரசு பஸ் மூலம் நீலகிரி வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

    இதன் காரணமாக கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுமட்டுமல்லாமல் பலர் தங்களது சொந்த வாகனங்களில் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் வருகின்றனர். இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

    நீலகிரி அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து பணி நிமித்தமாக நீலகிரி மாவட்டத்துக்கு வந்துசெல்லும் அனைத்து பணியாளர்களும் தினமும் பயணம் மேற்கொள்வதை தவிர்த்து, தலைமையிடத்தில் தங்கி பணியாற்ற வேண்டும். நீலகிரிக்கு தனியார் வாகனங்கள் மற்றும் அரசு பஸ்களில் வருகை புரியும் அனைத்து பயணிகளும் சோதனைச்சாவடிகளில் உள்ளூர்வாசிகள் என்பதை உறுதி செய்ய அடையாள அட்டை காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்காத பட்சத்தில் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

    சென்னை, இதர மண்டலங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று நீலகிரி மாவட்டத்திற்கு திரும்பும் அனைத்து லாரி, சரக்கு வாகன டிரைவர்களுக்கு சோதனைச்சாவடிகளில் கட்டாய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சோதனை முடிவுகள் வரும் வரை மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்துதல் முகாம்களில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், டிரைவர்கள், அரசு பணியாளர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஊட்டி தாவரவியல் பூங்கா, 2-வது சீசனுக்கு தயாராகி வருகிறது.
    ஊட்டி:

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை, வனத்துறை, சுற்றுலா வளர்ச்சி கழகம் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு உள்ளன. மேலும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளதால், பரபரப்பாக காணப்படும் பகுதிகள் கூட வெறிச்சோடி காணப்படுகின்றன.

    வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நடைபெறும் கோடைவிழா, கண்காட்சிகள் ஆகியவை, இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் அலைமோதும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா களை இழந்த நிலையில் காட்சி அளிக்கிறது.

    இந்த நிலையில் வருகிற செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசன் நடைபெற உள்ளது. ஊரடங்குக்கு மத்தியிலும், 2-வது சீசனுக்கான பராமரிப்பு பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மலர் மாடங்களில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகள், மலர் அலங்காரங்கள் அகற்றப்பட்டு உள்ளன. 2-வது சீசனையொட்டி 10 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.

    முதல் கட்டமாக நீண்ட வாழ் நாட்களை கொண்ட மலர்ச்செடிகள் கவாத்து செய்யப்பட்டு மலர் மாடங்களில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. கோடை சீசனுக்காக வளர்க்கப்பட்ட சால்வியா, டெல் பீனியம், டேலியா, டெய்சி உள்ளிட்ட மலர் செடிகள் நன்றாக வளரும் வகையில் கவாத்து செய்யப்பட்டுள்ளது. 4 ஆயிரம் பூந்தொட்டிகளில் உள்ள செடிகளுக்கு பணியாளர்கள் தண்ணீர் பாய்ச்சி இயற்கை உரமிட்டு பராமரித்து வருகின்றனர்.

    பூங்காவில் உள்ள மலர் செடிகள் மற்றும் அலங்கார செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச தட்டுப்பாடு ஏற்படுவதால் குட்டைகளை தூர்வாரும் பணி நடந்தது. இதனால் ஜப்பான் பூங்காவில் உள்ள செடிகள் அகற்றப்பட்டு, வெட்டாந்தரையாக காட்சி அளித்தது. தற்போது தூர்வாரும் பணி முடிவடைந்து, ஜப்பான் பூங்காவில் மீண்டும் மலர் செடிகளை நடவு செய்து பராமரிக்கும் பணி நடந்து வருகிறது. நடைபாதை ஓரங்களில் ஆக்கிரமிப்பு செடிகள் அகற்றப்பட்டு அலங்கார, மலர் செடிகள் நடவு செய்யப்படுகிறது. பெரணி இல்லத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தொங்கவிடப்பட்டு இருந்த பெரணி செடிகள் மாற்றப்பட்டு வருகின்றன.

    பெரிய புல்வெளி மைதானம் உள்பட புல்வெளிகளை வெட்டி சமப்படுத்தும் பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விதைகள் தரம் பிரிக்கப்பட்டு நர்சரியில் விதைக்கப்பட்டு உள்ளது. அங்கு பணியாளர்கள் குறிப்பிட்ட வெப்பநிலையில் நாற்றுகளை உற்பத்தி செய்து வளர்த்து வருகின்றனர். ஊட்டியில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் அழுகிய செடிகள், பூக்கள் அகற்றப்பட்டு வருகின்றன. குறைந்த பணியாளர்கள் சமூக இடைவெளி விட்டு முகக்கவசம் அணிந்து தாவரவியல் பூங்காவை 2-வது சீசனுக்கு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்து வரும் நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    கூடலூர்:

    தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. கேரளாவில் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையிலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது.

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்று எதிர்பார்த்த நிலையில், சாரல் மழையே பெய்து வருகிறது. இருப்பினும் நேற்று அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 125 கன அடி நீர்வரத்து இருந்தது. இந்தநிலையில் நேற்று நீர்வரத்து வினாடிக்கு 218 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் நேற்று 112.40 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 1,295 மில்லியன் கன அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 125 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல் சாகுபடிக்காக காத்திருக்கும் விவசாயிகள், அணையில் இருந்து எப்போது தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் அணையின் நீர்மட்டம் 125 அடியை எட்டினால் தான் முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
    ஊட்டி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊட்டி:

    ஊட்டி அருகே உள்ள காந்தல் பகுதியை சேர்ந்தவர் நரேஷ்குமார்(வயது 34). விவசாயி. இவர் தேனாடுகம்பையை சேர்ந்த தினேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தார். அந்த நிலத்தில் நேற்று முன்தினம் உழவு பணியை மேற்கொண்டார். அப்போது பக்கத்து தோட்ட விவசாயி செந்தில்குமார் என்பவர், அந்த நிலத்தில் உழவு பணி மேற்கொள்ளக்கூடாது எனக்கூறி தடுத்ததாக தெரிகிறது.

    இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது செந்தில்குமார் பொக்லைன் எந்திரத்தை ஓட்டி வந்து, உடலில் ஏற்றி கொலை செய்து விடுவேன் என்று நரேஷ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நரேஷ்குமார் தேனாடுகம்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குன்னூர் அருகே தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு நடத்தினார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நல்லப்பன் தெருவை சேர்ந்த ஆசிரியை ஒருவர், கரூர் மாவட்டத்துக்கு சென்று வந்தார். அவரிடம் இருந்து சளி மாதிரி எடுத்து பரிசோதித்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் வசித்து வந்த நல்லப்பன் தெரு, தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதி வெலிங்டன் கண்டோன்மெண்ட் போர்டு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது.

    இதனால் சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, தனிமைப்படுத்தப்பட்ட நல்லப்பன் தெரு பகுதிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு பொதுமக்கள் வீடுகளை விட்டு தேவையில்லாத காரணங்களுக்காக வெளியே வராமல் இருக்குமாறும், அரசு தெரிவிக்கும் வழிமுறைகளை கடைப்பிடிக்கவும் கூறினார். அங்கு எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது வெலிங்டன் கண்டோன்மெண்ட் போர்டு தலைமை செயல் அலுவலர் பூஜா, குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

    நல்லப்பன் தெரு பகுதியை சேர்ந்த ஒருவர், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட குளிச்சோலை பகுதியை சேர்ந்த 4 பேர் என 5 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தற்போது நீலகிரியில் 7 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி மாத்திரைகள், கபசுர குடிநீர் போன்றவைகள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வீட்டிற்கே சென்று வழங்கப்படும். அனைத்து துறையை சேர்ந்த குழுவினர் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அரசு தெரிவித்த பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் உணர்ந்து கடைப்பிடித்தால் மட்டுமே நீலகிரி மாவட்டத்தை கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாற்ற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×