search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணை
    X
    முல்லைப்பெரியாறு அணை

    முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்து வரும் நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    கூடலூர்:

    தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. கேரளாவில் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையிலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது.

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்று எதிர்பார்த்த நிலையில், சாரல் மழையே பெய்து வருகிறது. இருப்பினும் நேற்று அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 125 கன அடி நீர்வரத்து இருந்தது. இந்தநிலையில் நேற்று நீர்வரத்து வினாடிக்கு 218 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் நேற்று 112.40 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 1,295 மில்லியன் கன அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 125 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல் சாகுபடிக்காக காத்திருக்கும் விவசாயிகள், அணையில் இருந்து எப்போது தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் அணையின் நீர்மட்டம் 125 அடியை எட்டினால் தான் முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
    Next Story
    ×