என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
    X
    கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

    சென்னையில் இருந்து வரும் லாரி டிரைவர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை- கலெக்டர்

    சென்னையில் இருந்து வரும் லாரி டிரைவர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
    ஊட்டி:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும் அதன் கட்டுப்பாடுகளில், தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன.

    மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, அதில் உள்ள மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் பெற தேவையில்லை என்றும், வெளி மண்டலங்களுக்கு செல்ல இ-பாஸ் பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் நீலகிரியில் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிமாவட்டங்களில் இருந்து ஊட்டி வருகிறவர்கள் அவசிய மற்றும் அவசர காரணங்களுக்காக வருவது இல்லை என தெரிகிறது.

    கொரோனா அதிக பாதிப்பு உள்ள சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பலர் இ-பாஸ் பெறாமல் காய்கறிகளை ஏற்றி செல்லும் லாரிகள், சரக்கு வாகனங்களில் ரகசியமாக கோவை மண்டலத்துக்குள் வந்துவிட்டு, அங்கிருந்து அரசு பஸ் மூலம் நீலகிரி வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

    இதன் காரணமாக கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுமட்டுமல்லாமல் பலர் தங்களது சொந்த வாகனங்களில் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் வருகின்றனர். இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

    நீலகிரி அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து பணி நிமித்தமாக நீலகிரி மாவட்டத்துக்கு வந்துசெல்லும் அனைத்து பணியாளர்களும் தினமும் பயணம் மேற்கொள்வதை தவிர்த்து, தலைமையிடத்தில் தங்கி பணியாற்ற வேண்டும். நீலகிரிக்கு தனியார் வாகனங்கள் மற்றும் அரசு பஸ்களில் வருகை புரியும் அனைத்து பயணிகளும் சோதனைச்சாவடிகளில் உள்ளூர்வாசிகள் என்பதை உறுதி செய்ய அடையாள அட்டை காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்காத பட்சத்தில் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

    சென்னை, இதர மண்டலங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று நீலகிரி மாவட்டத்திற்கு திரும்பும் அனைத்து லாரி, சரக்கு வாகன டிரைவர்களுக்கு சோதனைச்சாவடிகளில் கட்டாய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சோதனை முடிவுகள் வரும் வரை மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்துதல் முகாம்களில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், டிரைவர்கள், அரசு பணியாளர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×