என் மலர்tooltip icon

    செய்திகள்

    நல்லப்பன் தெருவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.
    X
    நல்லப்பன் தெருவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

    குன்னூர் அருகே தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கலெக்டர் ஆய்வு

    குன்னூர் அருகே தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு நடத்தினார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நல்லப்பன் தெருவை சேர்ந்த ஆசிரியை ஒருவர், கரூர் மாவட்டத்துக்கு சென்று வந்தார். அவரிடம் இருந்து சளி மாதிரி எடுத்து பரிசோதித்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் வசித்து வந்த நல்லப்பன் தெரு, தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதி வெலிங்டன் கண்டோன்மெண்ட் போர்டு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது.

    இதனால் சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, தனிமைப்படுத்தப்பட்ட நல்லப்பன் தெரு பகுதிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு பொதுமக்கள் வீடுகளை விட்டு தேவையில்லாத காரணங்களுக்காக வெளியே வராமல் இருக்குமாறும், அரசு தெரிவிக்கும் வழிமுறைகளை கடைப்பிடிக்கவும் கூறினார். அங்கு எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது வெலிங்டன் கண்டோன்மெண்ட் போர்டு தலைமை செயல் அலுவலர் பூஜா, குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

    நல்லப்பன் தெரு பகுதியை சேர்ந்த ஒருவர், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட குளிச்சோலை பகுதியை சேர்ந்த 4 பேர் என 5 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தற்போது நீலகிரியில் 7 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி மாத்திரைகள், கபசுர குடிநீர் போன்றவைகள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வீட்டிற்கே சென்று வழங்கப்படும். அனைத்து துறையை சேர்ந்த குழுவினர் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அரசு தெரிவித்த பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் உணர்ந்து கடைப்பிடித்தால் மட்டுமே நீலகிரி மாவட்டத்தை கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாற்ற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×