search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட செடிகள்
    X
    ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட செடிகள்

    2-வது சீசனுக்கு தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா

    ஊட்டி தாவரவியல் பூங்கா, 2-வது சீசனுக்கு தயாராகி வருகிறது.
    ஊட்டி:

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை, வனத்துறை, சுற்றுலா வளர்ச்சி கழகம் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு உள்ளன. மேலும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளதால், பரபரப்பாக காணப்படும் பகுதிகள் கூட வெறிச்சோடி காணப்படுகின்றன.

    வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நடைபெறும் கோடைவிழா, கண்காட்சிகள் ஆகியவை, இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் அலைமோதும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா களை இழந்த நிலையில் காட்சி அளிக்கிறது.

    இந்த நிலையில் வருகிற செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசன் நடைபெற உள்ளது. ஊரடங்குக்கு மத்தியிலும், 2-வது சீசனுக்கான பராமரிப்பு பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மலர் மாடங்களில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகள், மலர் அலங்காரங்கள் அகற்றப்பட்டு உள்ளன. 2-வது சீசனையொட்டி 10 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.

    முதல் கட்டமாக நீண்ட வாழ் நாட்களை கொண்ட மலர்ச்செடிகள் கவாத்து செய்யப்பட்டு மலர் மாடங்களில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. கோடை சீசனுக்காக வளர்க்கப்பட்ட சால்வியா, டெல் பீனியம், டேலியா, டெய்சி உள்ளிட்ட மலர் செடிகள் நன்றாக வளரும் வகையில் கவாத்து செய்யப்பட்டுள்ளது. 4 ஆயிரம் பூந்தொட்டிகளில் உள்ள செடிகளுக்கு பணியாளர்கள் தண்ணீர் பாய்ச்சி இயற்கை உரமிட்டு பராமரித்து வருகின்றனர்.

    பூங்காவில் உள்ள மலர் செடிகள் மற்றும் அலங்கார செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச தட்டுப்பாடு ஏற்படுவதால் குட்டைகளை தூர்வாரும் பணி நடந்தது. இதனால் ஜப்பான் பூங்காவில் உள்ள செடிகள் அகற்றப்பட்டு, வெட்டாந்தரையாக காட்சி அளித்தது. தற்போது தூர்வாரும் பணி முடிவடைந்து, ஜப்பான் பூங்காவில் மீண்டும் மலர் செடிகளை நடவு செய்து பராமரிக்கும் பணி நடந்து வருகிறது. நடைபாதை ஓரங்களில் ஆக்கிரமிப்பு செடிகள் அகற்றப்பட்டு அலங்கார, மலர் செடிகள் நடவு செய்யப்படுகிறது. பெரணி இல்லத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தொங்கவிடப்பட்டு இருந்த பெரணி செடிகள் மாற்றப்பட்டு வருகின்றன.

    பெரிய புல்வெளி மைதானம் உள்பட புல்வெளிகளை வெட்டி சமப்படுத்தும் பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விதைகள் தரம் பிரிக்கப்பட்டு நர்சரியில் விதைக்கப்பட்டு உள்ளது. அங்கு பணியாளர்கள் குறிப்பிட்ட வெப்பநிலையில் நாற்றுகளை உற்பத்தி செய்து வளர்த்து வருகின்றனர். ஊட்டியில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் அழுகிய செடிகள், பூக்கள் அகற்றப்பட்டு வருகின்றன. குறைந்த பணியாளர்கள் சமூக இடைவெளி விட்டு முகக்கவசம் அணிந்து தாவரவியல் பூங்காவை 2-வது சீசனுக்கு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    Next Story
    ×