என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    8,348 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிப்பு- அதிகாரிகள் தகவல்

    வெளியிடங்களில் இருந்து நீலகிரிக்கு வந்த 8,348 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக புதியதாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது. இதற்கிடையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வு செய்யப்பட்டதால், வெளியிடங்களில் இருந்து வருபவர்களால் தொற்று பரவுகிறது. குறிப்பாக சென்னையில் இருந்து வருகிறவர்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வெளிமண்டலங்கள், வெளிமாநிலங்களில் இருந்து இ-பாஸ் பெற்று வருகிறவர்களுக்கு பர்லியார், குஞ்சப்பனை சோதனைச்சாவடிகளில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவர்களிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டியூட் நிறுவன ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதேபோன்று நீலகிரிக்கு வரும் சரக்கு வாகன, லாரி டிரைவர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆரம்பத்தில் சோதனைச்சாவடியில் வாகனங்களை நிறுத்தி பரிசோதனை செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு காட்டேரி பூங்கா பகுதியில் மருத்துவ குழுவினர் இ-பாஸ் பெற்று வருகிறவர்களுக்கு சளி மாதிரி எடுத்து வருகின்றனர். இ-பாஸ் இன்றி வருகிறவர்கள் மாவட்ட எல்லையில் தடுக்கப்பட்டு, சளி மாதிரி எடுக்கப்பட்ட பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் வெளியிடங்களில் இருந்து வந்த 8,348 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் 14 நாட்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுவரை கொரோனா அறிகுறி தென்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள், இ-பாஸ் பெற்று வந்தவர்கள், இ-பாஸ் இன்றி வந்தவர்கள் உள்பட மொத்தம் 11,739 பேரிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
    Next Story
    ×