search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானை
    X
    யானை

    தொரப்பள்ளியில் வீட்டை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம்

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தொரப்பள்ளியில் வீட்டை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம் செய்தது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தொரப்பள்ளியில் உள்ள அள்ளூர்வயல் பகுதிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் காட்டுயானை புகுந்தது. அதன்பின்னர் வள்ளி என்பவரது வீட்டை முற்றுகையிட்டது. தொடர்ந்து பின்பக்க சுவரை இடித்து, அட்டகாசத்தில் ஈடுபட்டது. அப்போது வீட்டுக்குள் இருந்த வள்ளி பயத்தில் அலறினார். உடனே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். தொடர்ந்து கூச்சலிட்டு காட்டுயானையை விரட்டியடித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் நேரில் வந்து, காட்டுயானை சேதப்படுத்திய வீட்டை பார்வையிட்டனர். அப்போது, வீட்டை சீரமைக்க உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று வள்ளி கோரிக்கை விடுத்தார். மேலும் கோரிக்கை மனுவும் அளித்தார்.

    இதேபோன்று பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தங்கமலை ஆதிவாசி காலனியை சேர்ந்த மாதன் மற்றும் அவரது மனைவி ருக்குமணி ஆகியோர் தங்களது வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டை காட்டுயானைகள் முற்றுகையிட்டு சேதப்படுத்தின. பின்னர் ஆதிவாசி மக்கள் திரண்டு வந்து, காட்டுயானைகளை விரட்டியடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ், தேவாலா வனக்காப்பாளர் லூயிஸ் மற்றும் வனத்துறையினர், சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டனர். பின்னர் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    மேலும் குன்னூர் அருகே ரன்னிமேடு பகுதியில் உள்ள சுப்பிரமணியர் கோவிலின் கம்பிவேலியை காட்டுயானைகள் உடைத்தன. பின்னர் அருகில் உள்ள எஸ்டேட்டில் விவசாய பயிர்களை சேதப்படுத்திவிட்டு, வனப்பகுதிக்குள் சென்றன. அந்த காட்டுயானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
    Next Story
    ×