search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயத்தால் அவதிப்பட்ட சிறுத்தைப்புலி எழுந்து நடப்பதை படத்தில் காணலாம்.
    X
    காயத்தால் அவதிப்பட்ட சிறுத்தைப்புலி எழுந்து நடப்பதை படத்தில் காணலாம்.

    காயமடைந்த சிறுத்தைப்புலியின் உடல் நிலையில் முன்னேற்றம்

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே காயமடைந்த நிலையில் காணப்பட்ட சிறுத்தைப்புலியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் பணியாளர்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள சாலையோரத்தில் கடந்த மாதம் 16-ந் தேதி சிறுத்தைப்புலி ஒன்று, காலில் காயத்துடன் நடக்க முடியாமல் படுத்து கிடந்தது. அதனை வனத்துறையினர் மீட்டு கூட்ஷெட் சாலையில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அதற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தனி அறையில் உள்ள கூண்டில் அடைத்து வைத்து, அதன் உடல் நிலையை கால்நடை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

    அந்த அறைக்குள் இரவில் கடுங்குளிர் நிலவுவதால், வெப்பநிலையை சீராக வைக்க 2 ஹீட்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கூண்டுக்குள் இன்பிரா ரெட்(அகக்சிவப்பு கதிர்கள்) வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இது தவிர தினமும் ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது.

    சிறுத்தைப்புலிக்கு நடத்தப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனை முடிவில், அதன் தலை மற்றும் வலது காலில் உள்காயங்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, சென்னை கால்நடை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவில் சிறுத்தைப்புலிக்கு காய்ச்சல் சம்பந்தமான நோய் தொற்று எதுவும் இல்லை என்பது உறுதியானது.

    இந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக சிறுத்தைப்புலியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. ஆரம்பத்தில் எதுவும் சாப்பிடாமல் இருந்து வந்ததால், குளுக்கோஸ் மட்டும் ஏற்றப்பட்டது. தற்போது ஆட்டு இறைச்சியை சாப்பிட தொடங்கி உள்ளது. மேலும் படுத்து கிடந்த அந்த சிறுத்தைப்புலி, எழுந்து நடக்க ஆரம்பித்து உள்ளது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, காயத்தால் அவதிப்பட்ட சிறுத்தைப்புலி நடக்க ஆரம்பித்து இருக்கிறது. இதை மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டால் மற்ற வனவிலங்குகள் தாக்கக்கூடும்.

    எனவே அந்த சிறுத்தைப்புலியை சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது” என்றார்.

    Next Story
    ×