search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    ஊட்டியில் தொடர் மழை எதிரொலி: உயிலட்டி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்

    கன்னேரி முக்கு பகுதியில் உள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சியில் மழை காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    ஊட்டி:

    கேரள மாநிலத்தில் கடந்த 1-ந் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் அந்த மாநிலத்தையொட்டி உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக இதமான கால நிலையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக கூடலூர் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதேபோல் ஆறுகள், குட்டைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    நேற்று ஊட்டி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மதியம் 2 மணியளவில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

    தொடர்ந்து 3 மணி நேரம் பெய்த மழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. அத்தியாவசிய பணிகளுக்கு வெளியில் வந்த மக்கள், தேயிலை தோட்டங்களில் வேலை செய்த விவசாயிகள் அனைவரும் குடை பிடித்தபடியும், கவர் அணிந்து கொண்டும் வேலை பார்த்தனர்.

    இந்த மழை காரணமாக கருகும் நிலையில் இருந்த தேயிலை செடிகள் தற்போது துளிர் விட தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இதேபோல் கோத்திகிரியை சுற்றியுள்ள பகுதிகளான குஞ்சப்பனை, கொடநாடு, கீழ்கோத்தகிரி, கூக்கல்தொரை, கட்டப்பெட்டு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    அந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. தொடர்ந்து பெய்த மழையால் டானிங்டன் பகுதியில் உள்ள கரும்பள்ளம், அலக்கரை உள்ளிட்ட ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் கன்னேரி முக்கு பகுதியில் உள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சியில் மழை காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இந்த மழையால் இன்று காலை கடுங்குளிர் நிலவியது. இதனால் பொதுமக்கள் சொட்டர் அணிந்தபடியும், ஆட்டோ, கார் டிரைவர்கள் ஆங்காங்கே தீ மூட்டியும் குளிர் காய்ந்து வருகின்றனர். தொடர்ந்து மேகமூட்டமாக இருப்பதால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை.

    இதன் காரணமாக சாலைகளில் வரும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வருகின்றனர். அதிகபட்சமாக சோலூர் மட்டம் பகுதியில் 32 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

    குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது.

    பில்லூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. 85 அடி உயரம் கொண்ட பில்லூர் அணைக்கு நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 350 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    ஊட்டி-2, நடுவட்டம்-12, கிளைன்மார்கன்-4, அவலாஞ்சி-2, குன்னூர்- 3, எடப்பள்ளி-3, கூடலூர்-11, தேவாலா-25, அப்பர் கூடலூர்-5, ஓவேலி-20, பந்தலூர்-16, சோலூர்மட்டம்-32, கீழ்கோத்தகிரி-23. நீலகிரி மாவட்டத்தில் 163 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×