search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்பயர் பகுதியில் உள்ள தோட்டத்தில் கேரட்டுகளை அறுவடை செய்யும் விவசாயிகள்
    X
    பட்பயர் பகுதியில் உள்ள தோட்டத்தில் கேரட்டுகளை அறுவடை செய்யும் விவசாயிகள்

    ஊட்டியில் பரவலாக மழை- காய்கறிகளை முன்கூட்டியே அறுவடை செய்யும் விவசாயிகள்

    ஊட்டியில் பரவலாக மழை பெய்து வருவதால், காய்கறிகளை முன்கூட்டியே விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.
    ஊட்டி:

    மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலை விவசாயத்துக்கு அடுத்தபடியாக காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், முள்ளங்கி, பீன்ஸ், டர்னீப், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

    ஆனால் ஊரடங்கு உத்தரவால் வெளியிடங்களுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுவது குறைந்து உள்ளது. மேலும் உள்ளூர் மார்க்கெட்டுகளிலும் குறைந்த அளவே விற்பனையாகிறது. மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றாலும், போதிய விலை கிடைப்பது இல்லை.

    ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதன்படி கடந்த சில நாட்களாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இவ்வாறு தொடர்ந்து மழை பெய்தால் காய்கறிகள் அழுகும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் காய்கறிகளை முன்கூட்டியே அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    ஊட்டி அருகே பட்பயர் பகுதியில் கேரட், பீட்ரூட் காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் சமூக இடைவெளி விட்டு முகக்கவசம் அணிந்து காய்கறிகளை அறுவடை செய்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ஊட்டியில் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் காய்கறிகளை முன்கூட்டியே அறுவடை செய்து வருகிறோம். ஒரு கிலோ கேரட் ரூ.10 முதல் ரூ.15 வரை விலை போகிறது. போதிய விலை கிடைக்காததால் நாங்கள் நஷ்டம் அடைந்து உள்ளோம். 3 மாத கால பயிர் பராமரிப்பு, உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட செலவினங்களுக்கு கூட வருமானம் இல்லை. என்றனர். 
    Next Story
    ×