என் மலர்
செய்திகள்

குன்னூரில் பலத்த மழையால் மண்சரிவு- 2 பேர் உயிர் தப்பினர்
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று காலை முதல் ஆலங்கட்டி மழை பெய்தது. பிற்பகல் 3 மணியளவில் பலத்த இடியுடன் மழை கொட்டி தீர்த்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழை காரணமாக முக்கிய சாலைகளான குன்னூர் பஸ் நிலைய சாலை, குன்னூர்- கோத்தகிரி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர் மழைக்கு குன்னூர் கன்னி மாரியம்மன் கோவில் பகுதி அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நிறுத்தப்படும் டெப்போவின் பின்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக 2 பேர் நடந்து சென்றனர். சத்தம் கேட்டு சுதாரித்து கொண்டதால் அவர்கள் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள், வாகனங்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் கனமழை பெய்தது. பனிக்கட்டிகளுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் ரோடுகளில் ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.






