என் மலர்
நீலகிரி
- 100-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் உள்ளன.
- முறையாக டெண்டா் விடப்பட்டு கடைகள் ஒதுக்கப்படும்.
ஊட்டி:
ஊட்டியில் அரசினா் தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் 100-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் உள்ளன. நடைபாதையில் கடைகள் இருப்பதால் அந்த வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி நகராட்சி நிா்வாகம் சாா்பில்கடைகளை காலி செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி போலீஸ் பாதுகாப்புடன், நகராட்சி நிா்வாகத்தினா் பெரும்பாலான கடைகளை கடந்த வாரம் அகற்றினா். இதனால், பாதிக்கப்பட்ட வியாபாரிகள் இது குறித்து வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் மற்றும் மாவட்ட கலெக்டரிடமும் முறையிட்டனா்.
இதையடுத்து, மீதமிருந்த கடைகளை அகற்றும் பணியில் நகராட்சி அலுவலா்கள் ஈடுபட்டனா். இதைக் கண்டித்து ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்கா நுழைவாயிலில் கொட்டும் மழையிலும் குழந்தைகள் உள்பட தங்களது குடும்பத்தினருடன் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, நகராட்சி நிா்வாகத்தினா், வியாபாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்திய தையடுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் நடைபாதையில் வியாபாரம் செய்ய அனுமதி கிடையாது. தற்போது இங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட உள்ளன. அதன் பின்னா் முறையாக டெண்டா் விடப்பட்டு கடைகள் ஒதுக்கப்படும்.
- பொருட்களை வாங்க வந்த பொதுமக்களிடம் வனத்துறை அமைச்சர் நேரில் கேட்டறிந்தார்.
- தரைகள் மிகவும் மோசமாக இருந்ததை பார்த்து ஊழியர்களை அமைச்சர் எச்சரிக்கை செய்தார்
ஊட்டி:
குன்னூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை மற்றும் சிவில்சப்ளை குடோனில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டுறவு பண்டகசாலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் அரிசி எவ்வாறு வழங்கப்படுகிறது. அரிசி நல்ல அரிசியாக வழங்கப்படுகிறதா, பொதுமக்களுக்கு எத்தனை கிலோ அரிசி வழங்கப்படுகிறது,
எத்தனை கிலோ சர்க்கரை வழங்கப்படுகிறது, கோதுமை மற்றும் பருப்பு எத்தனை கிலோ வழங்கப்படுகிறது, எத்தனை கிலோ கடைகளில் இருப்பு உள்ளது, மண்எண்ணை எத்தனை லிட்டர் ஒரு குடும்ப அட்டைக்கு வழங்கப்படுகிறது, எந்த நாளில் மண்எண்ணை வழங்கப்படுகிறது என்று பொருட்களை வாங்க வந்த பொதுமக்களிடம் வனத்துறை அமைச்சர் நேரில் கேட்டறிந்தார்.
கடைகளில் வைக்கப்பட்டிருந்த அரிசியை எடுத்துபார்த்து ஆய்வு செய்தும் பருப்பு மற்றும் கோதுமையையும் ஆய்வுமேற்கொண்டார். சில கடைகளில் தரைகள் மிகவும் மோசமாக இருந்ததை பார்த்து ஊழியர்களை அமைச்சர் எச்சரிக்கை செய்தார்
தமிழக முதல்-அமைச்சர் சிறப்பாக ஆட்சி செய்து வரும் நிலையில ்பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமை ஆகியவற்றை எலிகள் வீணாக்குவதை கூட்டுறவு கடை நடத்தும் கடைக்காரர்கள் அதனை தடுக்காமல் வீண் செய்து வருவதை கண்டித்து எச்சரிக்கை செய்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
நீலகிரி மாவட்ட கலெக்டர்அம்ரித், குன்னூர் சப்-கலெக்டர் தீப விக்னேஷ்வரி, குன்னூர் நகரசபை தலைவர் சீலா கேத்தரின் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- நீலகிரி மாவட்டம் மலை பிரதேசமாக உள்ளதால் குளு குளு சீசன் நிலவி வருகிறது.
- அரசு தோட்டக்கலைத்துறையின் கீழ் உள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப் பண்ணையில் பேரிக்காய், பிளம்ஸ், பீச் உட்பட பழமரங்கள் உள்ளன.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் மலை பிரதேசமாக உள்ளதால் குளு குளு சீசன் நிலவி வருகிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது நீலகிரி மாவட்டம் இங்கிலாந்தின் சீதோஷ்ண நிலையை ஒத்து இருந்ததால் அங்கு விளையக்கூடிய பிளம்ஸ், பேரி, பீச் உட்பட பல்வேறு வகை பழ வகைகளை பயிரிட்டு விளைவித்தனர்.
அவ்வப்போது நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப பழங்கள் மகசூல் கொடுத்தன. தற்போது மாவட்டத்தில் பேரிக்காய் சீசன் நிலவி வருகிறது. இதனை விவசாயிகள் ஊடுபயிராகவும் தனியாகவும் பயிரிட்டு மகசூல் எடுத்து வருகின்றனர். அரசு தோட்டக்கலைத்துறையின் கீழ் உள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப் பண்ணையில் பேரிக்காய், பிளம்ஸ், பீச் உட்பட பழமரங்கள் உள்ளன.
ஜாம் தயாரிக்கும் பணி சீசனுக்கு ஏற்ப பழங்கள் பழப் பண்ணையிலிருந்து பழவியல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு நிலையத்தில் ஜாம், ஸ்குவாஸ், ஊறுகாய் உள்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது குன்னுார் பகுதிகளில் பேரிக்காய் சீசன் களைகட்டியுள்ளதால் அரசுப்பழப் பண்ணையில் விளைந்த பேரிக்காய் கொண்டு வரப்பட்டு ஒரு டன் அளவிலான பேரிக்காயை கொண்டு ஜாம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளில் தோட்டக்கலைத்துறையின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் பேரிக்காய் ஜாம் தயாரிக்கும் பணி முழுமையாக முடித்து தோட்டக்கலைக்கு சொந்தமான விற்பனை நிலையங்களுக்கு அனுப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாத பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- கரடிகளின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து அதனை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கடந்த ஒரு மாத காலமாக கரடிகள் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.
அரவேணு:
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக கரடிகள் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.
நாவல் பழம் சீசன் என்பதால் பழங்களை உண்ண வரும் கரடிகள் சாலைகளில் நடமாடி வருவதுடன் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தேயிலைத் தோட்டப் பகுதிகளிலும் சுற்றி வருகிறது.இதனால் பொதுமக்கள் குடியிருப்புவாசிகள் தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.
இந்நிலையில், கோத்தகிரி அரவேனு பகுதியில் வனத்தை விட்டு வெளியே வந்த கரடி ஒன்று வெகுநேரமாக தோட்டங்களிலேயே சுற்றி திரிந்தது. அப்போது அங்கு இருந்த நாவல் பழ மரத்தை பார்த்ததும் கரடி உற்சாகத்துடன் மரத்தின் மீது ஏறியது. பின்னர் அங்கிருந்த நாவல் பழத்தை பறித்து சாப்பிட்டது.
ஆட்கள் வரும் சத்தம் கேட்டதும், கரடி அங்கிருந்து தப்பித்து தேயிலை தோட்டம் வழியாக வனப்பகுதிக்கு ஒடியது. இப்பகுதியில் அடிக்கடி சுற்றித் திரியும் கரடிகளால் பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் கரடிகளின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து அதனை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- காட்டு யானைகள் தொழிலாளர்கள் குடியிருப்புகளை உடைத்தும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் தொழிலாளர் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.
- யானைகள் நீண்ட நேரம் அப்பகுதியில் முகாமிட்டன. அதன்பின் தொழிலாளர்கள் யானையை விரட்டினர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா அருகே அரசு தேயிலைத் தோட்ட கழகத்தையொட்டிய பாண்டியாறு 4பி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.
அப்படி வரும் காட்டு யானைகள் தொழிலாளர்கள் குடியிருப்புகளை உடைத்தும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் தொழிலாளர் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக தேவாலா அட்டி பகுதியில் குடியிருப்புகளை உடைத்து சேதம் செய்த காட்டு யானைகள் நேற்று முன்தினம் இரவு அரசு தேயிலைத் தோட்டம் பாண்டியாறு எண். 4பி பகுதியில் நுழைந்தன.
பின்னர் தொழிலாளி புவனேஸ்வரி என்பவரின் வீட்டை உடைத்து சேதம் செய்தது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் பயத்தில் கூச்சலிட்டுள்ளனர். யானைகள் நீண்ட நேரம் அப்பகுதியில் முகாமிட்டன. அதன்பின் தொழிலாளர்கள் யானையை விரட்டினர். சம்பவம் குறித்து தொழிலாளர்கள் டேன்டீ நிறுவாகத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
தொடர்ந்து காட்டு யானைகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டி பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குன்னூர் அரசு லாரி மருத்துவமனை பகுதிகளில் அமைச்சர் ராமச்சந்திரன் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
- மருந்து வழங்கும் பிரிவுக்கு சென்று அங்கு மருந்துகளின் தேதி சரியாக உள்ளதா? நோயாளிகளுக்கு சரியாக மருந்துகள் வழங்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார்.
குன்னூர்:
குன்னூர் பகுதிகளான இன்கோசர்வ், குன்னூர் நகர மன்ற அலுவலகம் மற்றும் குன்னூர் அரசு லாரி மருத்துவமனை பகுதிகளில் அமைச்சர் ராமச்சந்திரன் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த மருந்து வழங்கும் பிரிவுக்கு சென்று அங்கு மருந்துகளின் தேதி சரியாக உள்ளதா? நோயாளிகளுக்கு சரியாக மருந்துகள் வழங்கப்படுகிறதா? எத்தனை மருத்துவர்கள் உள்ளார்கள் எனவும் ஆய்வு செய்து, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசுகையில், குன்னூர் அரசு லாரி மருத்துவமனையை மிகவும் சுத்தமாகவும், அழகாகவும் தனியார் மருத்துவமனைக்கு இணை–யாக வைத்துள்ளார்கள்.
மாவட்டத்தில் மருத்துவர்கள் குறைவாக உள்ளனர். சம்பந்தப்பட்ட சுகாதா–ரத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளோம். விரைவில் மாவட்டம் முழுவதும் மருத்துவர்களுக்கு புதிதாக தங்கும் குடியிருப்புகள் கட்டி ஒதுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது அவருடன் மாவட்ட கலெக்டர் அம்ரித், குன்னூர் சப்-கலெக்டர் தீப விக்னேஷ்வரி, குன்னூர் நகர மன்ற தலைவர் ஷீலா கேத்ரின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பவானிசாகர் அணையின் முழு காட்சியையும், தெங்குமரஹடா கிராமத்தின் பச்சை வயல்வெளிகளையும் சுற்றுலா பயணிகள் கண்டு கழித்தனர்.
- ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களிலும் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
ஊட்டி:
நீலகிரி சுற்றுலா தலங்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கும் கோடை விழாக்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருப்பது வழக்கம்.
இதே போல 2-வது சீசனான செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை விழாக்கால விடுமுறையை கழிக்க நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள்.
தற்போது மழை மற்றும் கடும் குளிர் நிலவுவதால் வார இறுதி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக உள்ளது.
இந்த நிலையில் கோத்தகிரியில் உள்ள மிக முக்கிய சுற்றுலா தலமான கொடநாடு காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவிலா சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
அவர்கள் காட்சி முனையில் இருந்து இயற்கை சூழலையும், பவானிசாகர் அணையின் முழு காட்சியையும், தெங்குமரஹடா கிராமத்தின் பச்சை வயல்வெளிகளையும், மேக கூட்டங்களை கண்டு கழித்தனர்.
இதேபோல், ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களிலும் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் கொட்டும் மழையிலும் நனைந்தபடி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.
- நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது.
- ஊட்டி நகர் பகுதியில் பெய்த மழைக்கு பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் ஊட்டி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
ஊட்டி நகர் பகுதியில் பெய்த மழைக்கு பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. ஊட்டி-கூடலூர் சாலையில் காமராஜர் சாகர் அணை அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் கிளன்மார்கன் சாலை, பார்சன்ஸ் வேலி சாலைகளிலும் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. ஊட்டி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களிலும் பலத்த மழை கொட்டியது. மழைக்கு கூடலூர்-ஊட்டி செல்லும் சாலையில் பைக்காரா பகுதியில் மரம் சரிந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுல்தான் பத்தேரியில் 4 மைல் பகுதியில் சாைலயோரம் நின்றிருந்த மூங்கில்கள் சாலையில் விழுந்தன. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் 1 1/2 மணி நேரம் போராடி மரங்களை அகற்றினர்.
கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் அருகே உள்ள ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதில் பள்ளிக்கூட கட்டிட சுவரும் இடிந்து விழுந்தது. மேலும் மின்வினியோகம் தடை பட்டதால் மக்கள் பாதிப்படைந்தனர்.
பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு, அய்யன்கொல்லி அருகே மினிமோகண்ணன் என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள மண்சுவர் இடிந்து விழுந்தது. எருமாடு அருகே ஓனிமூலாவில் ராஜேந்திரன் மற்றும் சேரம்பாடி அருகே கோரஞ்சால் அண்ணா நகரில் ஆராய்வீரையா என்பவர்களின் வீடுகளும் இடிந்து விழுந்தது.
பந்தலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக சாலைகளிலும், கால்வாய்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
பாடந்தொரை பகுதியில் சாலையோரம் ஏற்பட்ட மண் சரிவால் மூங்கில் புதா்கள் உள்பட மரங்கள் சாலையில் சாய்ந்தன.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் இடிபாடுகளை அகற்றி சாலையை சீரமைத்தனா்.
- கூடலூர் சாலையில் கிளைன்மார்கன் ஜங்ஷன் அருகே பலத்த மழைக்கு சாலையின் ஓரம் நின்றிருந்த பெரிய மரம் முறிந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது.
- இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டது.
தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளுக்குமே தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது.
நேற்றும் மாவட்டத்தில் உள்ள ஊட்டி, மஞ்சூர், குன்னூர், கூடலூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. மழையுடன் குளிரும் வாட்டுவதால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.
தொடர் மழை மற்றும் கடும் குளிரால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையும் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பல சுற்றுலா தலங்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தின் தெப்பக்காடு பகுதியில் கூடலூா், மைசூா் பகுதியிலிருந்து மசினகுடியை இணைக்கும் தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் வழியாக தான் அந்த பகுதி மக்கள் சென்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கூடலூா் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக முதுமலை அருகே உள்ள மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், தரைப்பாலம் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மிகவும் சிரமத்துடன் அந்த பாலத்தை கடந்து வருகின்றனர்.
தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதால் தண்ணீர்வரத்து மேலும் அதிகரித்து, தரைப்பாலம் முழுவதுமாக மூழ்கிவிட்டால் தரைப்பாத்தில் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூடலூர் சாலையில் கிளைன்மார்கன் ஜங்ஷன் அருகே பலத்த மழைக்கு சாலையின் ஓரம் நின்றிருந்த பெரிய மரம் முறிந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினர்.
இதேபோல் மழைக்கு ஊட்டி வார்டு எண் 3-ல் டாக்டர் பசுவய்யா நகரில் உள்ள ஒரு வீட்டின் தடுப்பு சுவர் இடிந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்தது. இதில் கார் லேசான சேதம் அடைந்தது.
- கூடலுார் பாண்டியார் அரசு தேயிலை தோட்டம் கோட்ட மேலாளர் பங்களா முன் காட்டு யானை ஒன்று முகாமிட்டிருந்தது
- யானை அங்கிருந்து குட்டியை அழைத்துக்கொண்டு தேயிலை தோட்டம் வழியாக வனத்தை நோக்கி சென்றது.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம், கூடலுார் பாண்டியார் அரசு தேயிலை தோட்டம் கோட்ட மேலாளர் பங்களா முன் காட்டு யானை ஒன்று முகாமிட்டிருந்தது.
நேற்று காலை, 5:45 மணிக்கு யானை சத்தமிட்டது. கோட்ட மேலாளர் ஸ்ரீதர் ஜன்னலை திறந்து பார்த்தபோது, தேயிலை தோட்டத்தில் யானை குட்டி ஈன்றது தெரியவந்தது.
உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனக்காப்பாளர் காலன் தலைமையில், வன ஊழியர்கள் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்
. ஒரு மணி நேரத்துக்கு பின், யானை அங்கிருந்து குட்டியை அழைத்துக்கொண்டு தேயிலை தோட்டம் வழியாக வனத்தை நோக்கி சென்றது. 2 கி.மீ., துாரம் சென்ற யானை தேயிலை தோட்டம் ஒட்டிய வனப்பகுதியில் குட்டியுடன் முகாமிட்டது.
வன ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'யானைக் குட்டி நல்ல நிலையில் உள்ளது. தாய் பால் குடித்து வருகிறது. அதன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இடையூறு ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்களை அப்பகுதிக்குள் அனுமதிப்பதில்லை என்றனர்.
- நீலகிரியில் மழை பெய்து வருவதால் ஆபத்தான வளைவுகளில் வாகனங்கள் சிக்கி அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன.
- சுற்றுலா வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் பயணிக்கும் போது போக்குவரத்து நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டும்.
அரவேணு:
நீலகிரி மாவட்டத்திற்கு வெளியூர் மற்றும் வெளி மாநில, மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிகின்றனர்.
தற்போது நீலகிரியில் மழை பெய்து வருவதால் ஆபத்தான வளைவுகளில் வாகனங்கள் சிக்கி அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் இருக்க போலீசார் தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள்.
இதேபோல கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்சபெக்டர் சரவணக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜான் வாகனங்களை நிறுத்தி தேவையான அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
சுற்றுலா வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் பயணிக்கும் போது போக்குவரத்து நெறிமுறைகளை பின்பற்றிடவும், வாகனத்தை இரண்டாவது கியரில் இயக்கவும், மிகக்குறுகிய வளைவுகளில் ஒலி எழுப்பி வாகனத்தை குறிப்பிட்ட வேகத்தில் இயக்கவும் கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் அறிவுறுத்தினர்.
- தடுப்பூசி முகாம்களில் காலை 7 மணி முதல் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக வந்திருந்தனர்.
- நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 67,989 போ் முதல் தவணை தடுப்பூசியும், 5 லட்சத்து 68,896 போ் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனா்
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைெபற்றது.
மாவட்டத்தில் 1,439 நிலையான கொரோனா தடுப்பூசி முகாம்கள் மற்றும் 60 நடமாடும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த முகாம்களில் காலை 7 மணி முதல் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக வந்திருந்தனர்.அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் இரவு 7 மணி வரை நடக்கிறது.
இன்று நடைபெறும் தடுப்பூசி செலுத்தும் பணியில் 5,996 பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தமான நோயுள்ளவா்கள், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் சம்பந்தமான நோயுள்ளவா்கள், புற்றுநோய் சிகிச்சை பெறுபவா்கள் என அனைவரும் இன்று நடந்த முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 67,989 போ் முதல் தவணை தடுப்பூசியும், 5 லட்சத்து 68,896 போ் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனா்.நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் தங்களது பணியாளா்களைக் கொண்டு வீடு,வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.






