என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொட்டி தீர்க்கும் கனமழை: மாயாற்றில் வெள்ளப்பெருக்கு- தரைப்பாலம் மூழ்கியது
    X

    கொட்டி தீர்க்கும் கனமழை: மாயாற்றில் வெள்ளப்பெருக்கு- தரைப்பாலம் மூழ்கியது

    • கூடலூர் சாலையில் கிளைன்மார்கன் ஜங்ஷன் அருகே பலத்த மழைக்கு சாலையின் ஓரம் நின்றிருந்த பெரிய மரம் முறிந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது.
    • இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டது.

    தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளுக்குமே தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது.

    நேற்றும் மாவட்டத்தில் உள்ள ஊட்டி, மஞ்சூர், குன்னூர், கூடலூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. மழையுடன் குளிரும் வாட்டுவதால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.

    தொடர் மழை மற்றும் கடும் குளிரால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையும் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பல சுற்றுலா தலங்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தின் தெப்பக்காடு பகுதியில் கூடலூா், மைசூா் பகுதியிலிருந்து மசினகுடியை இணைக்கும் தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் வழியாக தான் அந்த பகுதி மக்கள் சென்று வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக கூடலூா் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக முதுமலை அருகே உள்ள மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால், தரைப்பாலம் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மிகவும் சிரமத்துடன் அந்த பாலத்தை கடந்து வருகின்றனர்.

    தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதால் தண்ணீர்வரத்து மேலும் அதிகரித்து, தரைப்பாலம் முழுவதுமாக மூழ்கிவிட்டால் தரைப்பாத்தில் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கூடலூர் சாலையில் கிளைன்மார்கன் ஜங்ஷன் அருகே பலத்த மழைக்கு சாலையின் ஓரம் நின்றிருந்த பெரிய மரம் முறிந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினர்.

    இதேபோல் மழைக்கு ஊட்டி வார்டு எண் 3-ல் டாக்டர் பசுவய்யா நகரில் உள்ள ஒரு வீட்டின் தடுப்பு சுவர் இடிந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்தது. இதில் கார் லேசான சேதம் அடைந்தது.

    Next Story
    ×