என் மலர்tooltip icon

    நீலகிரி

    • ஜெகதளா துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • இளித்தொரை, ஓசஹட்டி, உபதலை, மவுண்ட் பிளசன்ட் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஜெகதளா துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அருவங்காடு, குன்னூர், பர்லியார், வண்டிசோலை, சின்காரா, வெலிங்டன், புரூக்போஸ்ட், ஆடர்லி, பெட்போர்டு, ஓட்டுப்பட்டரை, கரன்சி, பேரட்டி, சிம்ஸ்பார்க், இளித்தொரை, ஓசஹட்டி, உபதலை, எடப்பள்ளி, மவுண்ட் பிளசன்ட் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

    • சீபுரம் பள்ளியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
    • திடக்கழிவு மேலாண்மை, நகரின் தூய்மை, பிளாஸ்டிக் பயன்பாடுகளைத் தவிா்த்தல் குறித்து விவாதம் நடைபெற்றது.

    ஊட்டி:

    கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் திடக்கழிவு மேலாண்மை, நகரின் தூய்மை, பிளாஸ்டிக் பயன்பாடுகளைத் தவிா்த்தல் குறித்து விவாதம் நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பெற்றோா், ஆசிரியா் மற்றும் மாணவா்களுக்கு பொது சுகாதாரம், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைப் பிரித்தல் குறித்து விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    இதையடுத்து, சீபுரம் பள்ளியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பேரூராட்சி மன்றத் தலைவா் சித்ரா தேவி, செயல் அலுவலா் ஹரிதாஸ் உள்பட கலந்து கொண்டனா்.

    • இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.
    • 186 நாடுகளை சோ்ந்த 2,000க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா்.

    ஊட்டி:

    ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விளம்பரம் மற்றும் விழிப்புணா்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பள்ளி பஸ்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தாா்.பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. வருகிற 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 186 நாடுகளை சோ்ந்த 2,000க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா்.

    இதை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் 3 தனியாா் பள்ளி பஸ்களில் செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னத்துடன் 'நம்ம செஸ், நம் பெருமை', 'இது நம்ம சென்னை, நம்ம செஸ்' - 'வணக்கம் செஸ், வணக்கம் தமிழ்நாடு' போன்ற வாசகங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டு பள்ளி மாணவ, மாணவிகளிடம் விளம்பரப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, வட்டார போக்குவரத்து அலுவலா் தியாகராஜன், நகராட்சி ஆணையா் காந்திராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் தாமோதரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் தினேஷ்குமாா், ஊட்டி தாசில்தார் ராஜசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். 

    • யானைகள் வனத்திற்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதியிலேயே சுற்றி திரிந்தது.
    • யானை வீட்டை இடிப்பதை அறிந்து வீட்டில் இருந்தவர்கள், தப்பி அருகில் உள்ள வீட்டுக்கு சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, புளிய ம்பா–றை அடுத்துள்ளது கத்தரித்தோடு கிராமம். இந்த கிராமத்தையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது.

    இதனால் அடிக்கடி வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி அங்குள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காட்டு யானைகள் கூட்டம் வனத்தை விட்டு வெளியேறி கிராம பகுதிகளுக்குள் புகுந்தது. நீண்ட நேரமாக அங்கேயே சுற்றி திரிந்த காட்டு யானை கூட்டம் அந்த பகுதியில் உள்ள தவமணி என்பவரது வீட்டை தாக்கி சேதப்படுத்தியது.

    சத்தம் கேட்டு தவமணி எழுந்து பார்த்தபோது யானை நின்றிருந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் சத்தம் போட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானைகள் வனத்திற்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதியிலேயே சுற்றி திரிந்தது.

    பின்னர் அங்கிருந்து காட்டு யானைகள் வெளி யேறியது. இதையடுத்தே பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதேபோல் அருகே உள்ள அட்டிக்கொல்லி கிராமத்தில் புகுந்த காட்டு யானை தா்மலிங்கம் என்பவரின் வீட்டையும் இடித்து சேதப்படுத்தியது.

    யானை வீட்டை இடிப்பதை அறிந்து வீட்டில் இருந்தவர்கள், தப்பி அருகில் உள்ள வீட்டுக்கு சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 3 வாரங்களாக அவ்வப்போது மிதமானது முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
    • தொடர் மழையால் மேரக்காய் விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது. விவசாயிகளும் மேரக்காயை பறித்து விற்பனை செய்து வருகின்றனர்

    அரவேணு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெடுகுளா, உயிலட்டி, கேர்க்கம்பை, காக்கா சோலை, மிளிதேன் உள்ளிட்ட பகுதிகளில் மேரக்காய் விவசாயம் நடந்து வருகிறது.

    இங்கு பயிரிடும் மேரக்காய்கள் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுதவிர வியாபாரிகளும் நேரடியாக வந்து கொள்முதல் செய்தும் செல்கின்றனர்.

    தற்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த 3 வாரங்களாக அவ்வப்போது மிதமானது முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

    தொடர் மழையால் மேரக்காய் விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது. விவசாயிகளும் மேரக்காயை பறித்து விற்பனை செய்து வருகின்றனர். விளைச்சல் இருக்கும் அதே வேளையில், மேரக்காயுக்கு குறைந்த விலையே கிடைப்பது விவசாயிகளுக்கு கவலை அளித்துள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    தற்போது மேரக்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனை பறித்து கோத்தகிரி, ஊட்டி மற்றும் கோவையில் உள்ள சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கிறோம். ஆனால் விலை குறைந்து காணப்படுகிறது. முன்பு சந்தைகளில் மேரக்காய் கிலோ ஒன்றிற்கு ரூ.20 முதல் ரூ.25 விலை கிடைத்த நிலையில் தற்போது மேரக்காய் ரூ.10 முதல் ரூ.13 வரை மட்டுமே விற்பனையாகிறது.

    இது எங்களுக்கு கவலையாக உள்ளது. மிகக் குறைந்த விலை கிடைப்பதால், விவ சாயிகள் வண்டி வாடகை, பணியாட்கள் கூலி,முதலீடு ஆகியவைகளை ஈடுகட்ட முடிவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கூடலூர் பழைய ஆர்.டி.ஓ. அலுவலக சாலையையொட்டி மங்குழி ஆறு ஓடுகிறது.
    • கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக மங்குழி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழைக்கு ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.

    கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் பெய்து வந்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டு உள்ளது.

    விடிய, விடிய கொட்டி தீர்த்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதுடன், சாலைகளிலும் தண்ணீர் ஆறாக ஓடியது. இன்று காலையும் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்து வருகிறது.

    கூடலூர் பழைய ஆர்.டி.ஓ. அலுவலக சாலையையொட்டி மங்குழி ஆறு ஓடுகிறது. ஆற்றையொட்டி உள்ள பகுதி மக்கள் கடப்பதற்கு வசதியாக அந்த பகுதியில் பாலம் ஒன்று உள்ளது. இதனை மங்குழி பாலம் என்று அழைத்து வருகின்றனர்.

    கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக மங்குழி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய பெய்த கனமழையால் இன்று காலை மங்குழி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றுப்பாலம் திடீரென உடைந்து கீழே விழுந்தது.

    அப்போது அந்த வழியாக 45 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் பாலம் உடைந்து விழுந்ததால் ஆற்று வெள்ளத்தில் சிக்கி கொண்டு தத்தளித்தார். சிறிது நேரத்தில் நீந்தி வந்து பாலத்தின் ஒருமுனையில் பிடித்து காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் என அபயகுரல் எழுப்பினார்.

    இந்த சத்தம் கேட்டதும் அந்த பகுதி மக்கள் அனைவரும் அங்கு திரண்டனர். அவர்கள் ஆற்றில் விழுந்து உயிருக்கு போராடியவரை மீட்க முயற்சித்தனர்.

    கயிறு கட்டி இழுத்து, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அவரை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த பகுதியில் உள்ள பாலம் முழுமையாக இடிந்து ஆற்றில் விழுந்து விட்டதால் அந்த பகுதி முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து பாலத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து அந்த வழியாக வாகனங்கள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டது.

    • விடிய விடிய பெய்த கனமழைக்கு கூடலூர் நாடுகாணி சாலையில், கோழிப்பாலம் கல்லூரி அருகே நின்றிருந்த ராட்சத மரம் முறிந்து விழுந்தது.
    • ஊட்டியில் இருந்து கேரளா மற்றும் பெங்களூரு செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று நீலகிரி மாவட்டத்தில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    நேற்று காலை முதலே மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூர், ஊட்டி, குந்தா உள்பட பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. மழையுடன் காற்றும் வீசியதால் ஆங்காங்கே சாலையோரம் நின்றிருந்த மரங்களும் முறிந்து விழுந்தன.

    கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளான சேரம்பாடி, கூடலூர் பஜார், பாடந்தொரை, மேல் கூடலூர், தேவாலா, சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளிலும் காலையில் தொடங்கி இன்று காலை வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    விடிய விடிய பெய்த மழையால் நகரில் உள்ள அனைத்து சாலைகளிலுமே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் , அங்குள்ள வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். வீடுகளில் தேங்கிய தண்ணீரை மக்கள் வாளிகளை கொண்டு வெளியேற்றனர். விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்தது. இதேபோல் ஆறுகள், கால்வாய்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    விடிய விடிய பெய்த கனமழைக்கு கூடலூர் நாடுகாணி சாலையில், கோழிப்பாலம் கல்லூரி அருகே நின்றிருந்த ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் நீண்ட போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதேபோல் கூடலூர் ஹவுசிங் போர்டு அருகே மர்த்தோமா நகர் பகுதியில் சாலையோரமாக நின்றிருந்த மூங்கில் கூட்டம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் பெங்களூரு-ஊட்டி சாலை, பெங்களூரு-கேரளா செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனால் ஊட்டியில் இருந்து கேரளா மற்றும் பெங்களூரு செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது.

    இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்னர்.

    இதேபோல் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அதனை தீயணைப்பு படையினர் வெட்டி அகற்றினர். இதேபோல் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. தொடர் மழையால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 6 இடங்களில் 10 செ.மீக்கு அதிகமாக மழை பெய்துள்ளது. கூடலூர் பஜார்-18 செ.மீ, மேல் கூடலூர்-16, தேவாலா-15, மேல்பவானி-13, அவலாஞ்சி-12, பந்தலூர்-10 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    கனமழை காரணமாக இன்று ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா உள்ளிட்ட 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

    • ஊட்டி, மஞ்சூர், அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
    • அப்பர்பவானி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தினமும் சராசரியாக 5 சென்டி மீட்டர் மழை பெய்து வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. ஊட்டி, மஞ்சூர், அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அப்பர்பவானி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தினமும் சராசரியாக 5 சென்டி மீட்டர் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம், கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

    • சேலம் போலீசாரின் விசாரணை நிறைவடைந்தது
    • ஆதாரங்களை அழித்ததாக கைது

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கோடநாடு வழக்கில் கைதான 10 பேரும், ஜாமீனில் உள்ளனர்.

    இதற்கிடையில் ஆதாரங்களை அழித்ததாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்படி வாரந்தோறும் திங்கட்கிழமை மட்டும் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். தொடர்ந்து அவர்கள் கோத்தகிரியில் தங்கியிருந்து போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர்.

    போலீஸ் நிலையத்தில் ஆஜர் இந்த நிலையில் சொத்து சம்பந்தமான வேறொரு வழக்கில் விசாரணை நடத்த தனபாலை சேலம் போலீசார் நேற்று அதிகாலை 3 மணிக்கு கோத்தகிரிக்கு வந்து அழைத்து சென்றனர். இதனால் வாரந்தோறும் திங்கட்கிழமை கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டிய நிலையில், இன்று அவர் கையெழுத்திடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. எனினும் சேலம் போலீசார் விசாரணையை முடித்து, அவரை அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இன்று காலையில் கோத்தகிரிக்கு வந்த தனபால், ரமேசுடன் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி வழக்கம்போல் கையெழுத்து போட்டுவிட்டு சென்றார்.

    • கொட்டும் மழையில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக பணியாற்றினர்.
    • பல இடங்களில் 20க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன.


    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 5 நாட்களாக இடைவிடாமல் தொடர்ந்து காற்றுடன் மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் லேசான மழையில் இரவு நேரங்களில் கன மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக கூடலூர், பந்தலூர், மஞ்சூர், எடக்காடு, பார்சன்ஸ் வேலி, நடுவட்டம் போன்ற பகுதிகளில்உள்ள சாலைகளில் பல இடங்களில் 20க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன.

    அவ்வாறு விழுந்த மரங்களை உதகை, கூடலூர் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து இரவோடு இரவாக சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். அதேபோல் அவலாஞ்சி பகுதியில் கொட்டும் மழையில் மரங்கள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மின்வாரிய ஊழியர்கள் குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக பணியாற்றினர்.

    • தீயணைப்புத் துறையினர் எச்சரிக்கை
    • பெண் ஒருவர் நடந்து சென்றார்.


    ஊட்டி :

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 5 நாட்களாக இடைவிடாமல் பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து வருகின்றன. இந்நிலையில் இன்று காலை சுமார் 11 மணி அளவில் கூடலூர் அத்திப்பள்ளி சாலையில் உள்ள ஆற்றின் கரையோரத்தில் பெண் ஒருவர் நடந்து சென்றார். அந்தப் பெண் நடந்து சென்ற ஒரு சில மணி நொடியில் ஆற்றின் தடுப்பு சுவர் இடிந்து ஆற்றில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அந்த பெண் உயிர் பிழைத்தார். தொடர்ந்து லேசான காற்றுடன் கூடலூர், பந்தலூர் பகுதியில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வாகனங்களை மரத்தின்கீழ் நிறுத்த கூடாது என தீயணைப்புத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • காட்டுயானை கூட்டம் விலகி சென்றது.
    • பிறந்து 1 வாரமே ஆன குட்டியானை

    பந்தலூர்

    பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பட்டி அருகே சேலக்குன்னு பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்று உள்ளது. இங்கு குட்டியானை இறந்து கிடப்பதாக பிதிர்காடு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி வனபாதுகாவலர் கிருபாகரன், வனவர்கள் பெலிக்ஸ், ஜார்ஜ், பிரவீன்சன் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்றனர்.

    ஆனால் அங்கு தாய் யானை அடங்கிய காட்டுயானை கூட்டம் முகாமிட்டு இருந்தது. இதனால் வனத்துறையினர் அருகில் செல்ல முடியவில்ைல. சிறிது நேரம் கழித்து காட்டுயானை கூட்டம் அங்கிருந்து விலகி சென்றது. இதையடுத்து வனத்துறையினர் அருகில் சென்று பார்வையிட்டனர்.

    அப்போது இறந்து கிடப்பது பிறந்து 1 வாரமே ஆன குட்டியானை என்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை மீட்டு பிதிர்காடுவனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு குட்டியானையின் உடலை கூடலூர் வன அலுவலர் ஓம்கார், உதவி வன பாதுகாவலர் ஈஸ்வரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார், நெலாக்கோட்டை கால்நடை டாக்டர் சாருண்யா மற்றும் மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். இதில் இறந்தது பெண் குட்டியானை என்பதும், உடல் நலக்குறைவால் இறந்துள்ளதும் தெரியவந்தது.

    ×