என் மலர்
நீலகிரி
- மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்பட வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தில் திரண்டனர்.
- 3 மணி நேரம் காத்திருந்த வியாபாரிகள் கலைந்து சென்றனர்.
அரவேணு:
கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் 60 கடைகளை அகற்றிவிட்டு, புதிய உழவர் சந்தை அமைக்க வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோத்தகிரி பேரூராட்சி கூட்டம் நடத்தப்பட்டு, பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் நிலத்தை உழவர் சந்தை அமைக்க வேளாண் வணிகத்துறைக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும், அதை கண்டித்து பேரூராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தகவல் பரவியது.
இதையொட்டி அங்கு முன் எச்சரிக்கையாக ஊட்டி துணை சூப்பிரண்டுகள் செந்தில் குமார், யசோதா ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவணகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், மனோகரன், ரமேஷ் உள்பட 50 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இதையடுத்து மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்பட வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தில் திரண்டனர்.
இதனால் பரபரப்பு நிலவியது. பின்னர் தலைவர், செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதற்கு, வியாபாரிகள் பாதிக்காத வகையில் புதிய உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். பின்னர் மன்ற கூட்டம் தொடங்கியது. ஆனால் கூட்டம் முடியும் வரை அலுவலகம் முன்பு வியாபாரிகள் காத்திருந்தனர்.
தொடர்ந்து கூட்டம் முடிந்து வெளியே வந்த உறுப்பினர்கள் கூறும்போது, உழவர் சந்தைக்கு இடம் வழங்கும் தீர்மானம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, வனத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, அவரது ஆலோசனைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.
இதை ஏற்று சுமார் 3 மணி நேரம் காத்திருந்த வியாபாரிகள் கலைந்து சென்றனர். தொடர் போராட்டம் இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, புதிய உழவர் சந்தை அமைக்கும் முடிவை கைவிடாவிட்டால் தாலுகா சங்கம், மாவட்ட, மாநில சங்கங்களின் ஆதரவுடன் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.
இந்த பகுதியில் உழவர் சந்தை அமைத்தால், அப்பகுதியில் உள்ள தங்களது பூர்வீக கோவிலின் புனித தன்மை கெட்டு விடும் என்பதால், அதை கைவிட வலியுறுத்தி ஏற்கனவே கோத்தர் இன மக்களும் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ர்நிலைகள், வடிகால்கள் சுத்தம் செய்து சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- மண்வாளம் பாதுகாத்தல் குடிநீர் ஆதாயங்களை பாதுகாத்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அரவேணு
கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான முக்கிய குடிநீர் ஆதாரமான தடுப்பணை, நீர்நிலைகள், வடிகால்கள் சுத்தம் செய்து சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பேரூராட்சி இயக்குனர் இப்ராஹிம் ஷா அறிவுறுத்தலின்படி செயல் அலுவலர் சதாசிவம் (பொறுப்பு), துப்புரவு ஆய்வாளர் ரஞ்சித், பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி மற்றும் தூய்மை பணியாளர்கள் இந்த பணியினை செய்து வருகின்றனர்.
கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து நீர்நிலைகளையும் சுத்தப்படுத்துதல் ஆங்காங்கே மரம் நடுதல் மண் சரிவு மற்றும் மலை மண்வாளம் பாதுகாத்தல் குடிநீர் ஆதாயங்களை பாதுகாத்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
- கூடலூர் 2-ம் மைல் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஊட்டி:
ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இதனால் ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் திருவிழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று 2-வது ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கூடலூர் அருகே உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேல் கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். மங்கல பொருட்கள் முன்னதாக கூழ் ஊற்றப்பட்டது. மேலும் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து இரவு 8 மணி வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இது தவிர கூடலூர் 2-ம் மைல் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோன்று ஊட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவிலுக்கு காலை முதல் மாலை வரை ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கற்பூரம் ஏற்றி மனமுருக பிரார்த்தனை செய்தனர்.
சிறப்பு பூஜை அரசு ஆஸ்பத்திரி வீதியில் உள்ள ஓம்சக்தி பத்ர காளியம்மன் கோவில், அக்ரஹாரம் பகுதியில் உள்ள துளிர் காத்த அம்மன் கோவில், காந்தல் மூவுலகரசியம்மன் கோவில், கூடுதல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பிரத்தியங்கரா தேவி கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோத்தகிரி கடைவீதியில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் மற்றும் ஊஞ்சல் வழிபாடு நடைபெற்றது
- மசினகுடி பகுதியில் கடந்த ஆண்டு 4 பேரை புலி அடித்து கொன்றது.
- பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசு விருது கிடைத்து உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி பகுதியில் கடந்த ஆண்டு 4 பேரை புலி அடித்து கொன்றது. அந்த புலியை பிடிக்கக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து புலியை பிடிப்பதற்காக வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 21 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு டி-23 என்று பெயரிடப்பட்ட அந்த ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
அதன்பின்னரே கூடலூர், மசினகுடி பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் மற்றும் அது பதுங்கி இருக்கும் இடத்தை துல்லியமாக கண்காணித்து சிறப்பாக செயல்பட்டதற்காக முதுமலை புலிகள் காப்பக வனக்காப்பாளர் மீன் காலன், வேட்டை தடுப்பு காவலர்கள் மாதன், பொம்மன் ஆகியோருக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது.
அதன்படி மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் வன அகாடமியில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் நடைபெற்ற புலிகள் தின விழாவில் முதுமலை வேட்டை தடுப்பு காவலர்கள் மீன் காலன், மாதன், பொம்மன் ஆகியோருக்கு மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் விருது வழங்கினார். தொடர்ந்து ரூ.1 லட்சம் வழங்கி பாராட்டினார்.விருது பெற்ற வேட்டை தடுப்பு காவலர்கள் கூறும்போது, பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசு விருது கிடைத்து உள்ளது.
இதற்கு காரணமான அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இந்த விருதால் தொடர்ந்து பணியாற்றுவதற்கு ஊக்கம் ஏற்பட்டு உள்ளது என்றனர். முன்னதாக விருது பெற்ற வேட்டை தடுப்பு காவலர்களுக்கு இயக்குனர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.
- எச்.பி.எப். குடியிருப்புப் பகுதி அருகில் உள்ள வனப்பகுதியில் புலி சுற்றித்திரிகிறது
- கரடி கடந்த சில நாள்களாக அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.
ஊட்டி,
ஊட்டி - கூடலூா் சாலையில் எச்.பி.எப்.பகுதியில் வளா்ப்பு எருமைைய கடந்த புதன்கிழமை வனவிலங்கு வேட்டையாடி, மீதமுள்ள உடலை குடியிருப்பை ஒட்டியுள்ள வனப் பகுதியில் விட்டு சென்றது. இதன் பேரில் அங்கு சென்று வனத் துறையினா் ஆய்வு நடத்தினா். பின்னா் கால்நடை மருத்துவா்கள் வரவழைக்கப்பட்டு எருமையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில், எச்.பி.எப். குடியிருப்புப் பகுதி அருகில் உள்ள வனப்பகுதியில் புலி சுற்றித்திரிவதை அந்த பகுதியைச் சோ்ந்த சிலா் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனா். இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் நடமாட பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
மேலும், அப்பகுதியில் வனத் துறையினா் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.
ஊட்டி 27-வது வாா்டு தீட்டுக்கல் பகுதியில் பால் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கரடி புகுந்து கடந்த சில நாள்களாக அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனா்.
- குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் திட்டங்கள் மூலம் 12 நீர் மின்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
- விரைவில் குந்தா அணை முழுமையாக தூர்வாரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் திட்டங்கள் மூலம் 12 நீர் மின்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
குந்தா நீர்மின் திட்டத்தின் கீழ் உள்ள அப்பர்பவானி அணையில் இருந்து அவலாஞ்சி மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் நீர் மின் உற்பத்திக்குபின் அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகளில் தேக்கி வைக்கப்படுகிறது.
பின்னர், ராட்சத குழாய்கள் மூலம் இந்த நீர் குந்தா மின் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு 60 ெமகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, வெளியேற்றப்படும் நீர் குந்தா அணையில் தேக்கி வைக்கப்படுவதுடன் அணையில் அமைந்துள்ள சுரங்கபாதை வழியாக கெத்தை மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கெத்தை மின்நிலையத்தில் இருந்து மின் உற்பத்திக்கு பின் வெளியேற்றப்படும் நீர் மீண்டும் சுரங்கபாதை வழியாக பரளி மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 180 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில், கெத்தை மற்றும் பரளி மின் நிலையங்களின் மின் உற்பத்திக்கு முக்கிய நீராதாரமாக உள்ள குந்தா அணையை தூர் வாராததால் அணையில் பெருமளவு சேறு, சகதிகள் தேங்கியுள்ளன. 50 சதவீதத்திற்கும் மேல் சேறு, சகதியுடன் கழிவுகளும் தேங்கியுள்ளன. குறைந்தபட்ச மழை பெய்தாலே அணை நிரம்பி விடும். மேலும் சேறு, சகதிகளால் அணையில் அமைந்துள்ள சுரங்க பாதையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது.
இந்த அடைப்பால் கெத்தை மின்நிலையத்திற்கு நீர் கொண்டு செல்வதில் தடங்கல் ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுக்கு முன் உலக வங்கி நிதியுதவியின் மூலம் குந்தா அணையை முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் சேறு, சகதி மற்றும் கழிவுகளை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கொட்டுவதற்கு உரிய இடம் தேர்வாகாததாலும், காலதாமதம் ஏற்பட்டதால் குந்தா அணை தூர்வாரும் நடவடிக்கையிலும் தடங்கல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, தற்போது மின்வாரியம் தரப்பில் குந்தா அணை தூர் வார மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, அணைகள் மறு சீரமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் ரூ.40 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த திட்ட மதிப்பீடானது ஒன்றிய நீர்வளத்துறை மற்றும் உலக வங்கியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட் டுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் விரைவில் குந்தா அணை முழுமையாக தூர்வாரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ரூ.50 ஆயிரம் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நிரந்தர மண்புழு உரக்கூடத்தின் செயல்பாட்டினை ஆய்வு செய்தார்.
- மாணவ, மாணவிகளின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தாா்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம், பொக்காபுரம் பகுதியில் ஒருங்கிணைந்த தோட்ட க்கலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் விவசாயி களுக்கு வழங்கப்பட்டுள்ள தேன்வளா்ப்பு பெட்டியின் பயன்பாடு குறித்தும், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூ.50 ஆயிரம் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நிரந்தர மண்புழு உரக்கூடத்தின் செயல்பாட்டினையும், பாரத பிரதமரின் நுண்ணுயிா்ப் பாசனத் திட்டத்தின்கீழ் 100 சதவீதம் மானியத்துடன் அமைக்கப்பட்டுள்ள நுண்ணு யிா்ப் பாசன கருவியின் செயல்பாடு களையும் விவசாயிகளிடம் கலெக்டர் அம்ரித் கேட்டறிந்தாா்.
முன்னதாக, மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 15-வது நிதிக்குழு திட்டத்தின்கீழ் ரூ.9.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சத்துணவு கூடத்தினை பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டாா். பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகளை பாா்வையிட்டு, மாணவ, மாணவா்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் ஐஸ்வா்யா, தோட்டக்கலை அலுவலா் அரவிந்த்,
உதவி மகளிா் திட்ட அலுலா் ஜெயராணி, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மதிவாணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
- மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
- அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் மனசு என்ற பெயரில் புகார் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது.
அரவேணு:
சமீப காலமாக பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் நிறைய வருகின்றன.
இதையடுத்து பள்ளிக்கூடங்களில் ஒரு குழு அமைக்க பரிந்துரைத்திருந்ததுடன், மாணவர்கள் தங்கள் புகார்களை தெரிவிப்பதற்கு ஒரு புகார் பெட்டியும் வைக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை 31 ஆயிரத்து 214 அரசு இடைநிலை பள்ளிகூடங்களிலும், 6 ஆயிரத்து 177 மேல்நிலை பள்ளிக்கூடங்களிலும் புகார் பெட்டி வைப்பதற்காக ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் ரூ.1000 நிதி ஒதுக்கியிருக்கிறது.
இதுதவிர அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் தலைமை ஆசிரியர் தலைமையில் 2 ஆசிரியர்கள், ஒரு பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், ஒரு ஆசிரியரில்லாத பணியாளர், ஒரு நிர்வாக பணியாளர், ஒரு வெளி உறுப்பினர் ஆகியோர் கொண்ட மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக்குழு கூட்டம் மாதம் ஒருமுறை நடத்தப்படவேண்டும். மேலும், மாணவர்கள் தங்கள் புகார்களை பதிவுசெய்ய அனைத்து அரசுப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கான புகார்பெட்டி வைக்கப்படவேண்டும்.
அந்த பெட்டியில் 'மாணவர் மனசு' என்று எழுதப்பட்டு, பள்ளி தலைமை ஆசிரியர்களின் அறைக்கு முன்பாக அனைத்து மாணவர்களும் பார்க்கக்கூடிய வகையில், அனைவரும் எளிதில் அணுகக்கூடிய வகையில் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் மனசு என்ற பெயரில் புகார் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு விழிப்புணர்வு பதாகைகளும், மாணவ, மாணவிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பள்ளியின் தலைமைஆசிரியர் கூறுகையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் உத்தரவு படி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதாக அமைந்துள்ளது. 15 நாட்களுக்கு ஒருமுறை புகார்பெட்டியை மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் திறந்து, அதில் இருக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
- காமராஜர் சதுக்கம் செல்லும் சாலை எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும்.
- காட்டெருமைகள் மெதுவாக சென்று நேரு பூங்காவிற்குள் நுழைந்தது.
குன்னூர்:
கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து காமராஜர் சதுக்கம் செல்லும் சாலை எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த நிலையில் அந்த சாலையில் காட்டெருமைகள் உலா வருகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சில நேரங்களில் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை காட்டெருமைகள் அச்சுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சாலையில் நேற்று முன்தினம் இரவு காட்டெருமைகள் உலா வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் இந்த காட்டெருமைகள் மெதுவாக சென்று நேரு பூங்காவிற்குள் நுழைந்தது. காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வராத வண்ணம் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன.
- லையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வந்தது. இதனால் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன.
கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் சற்று மழை குறைந்திருந்தது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில் நேற்று மாலை குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அதனை தொடர்ந்து நள்ளிரவு 2 மணிக்கு பலத்த மழை கொட்டி தீர்த்தது. அருவங்காடு, வண்டிச்சோலை, ரெயில்நிலையம், வண்ணாரபேட்டை, பெட்போர்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.
இந்த மழைக்கு இன்று காலை குன்னூரில் இருந்து டால்பினோஸ் செல்லும் வழியில் சாலையோரம் நின்றிருந்த ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புதுறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர். மேலும் மழை காரணமாக கடும் குளிரும் நிலவி வருகிறது.
கூடலூர், பந்தலூர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சேரம்படி நாயகன்சோலையில் உள்ள பள்ளிக்கூடத்தின் மதில் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்க ப்பட்டது.
- கொடநாடு வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.
- தனிப்படை போலீசார் இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவம் குறித்து 5 தனிப்படை அமைத்து விசாரணை நடந்து வருகிறது. தனிப்படை போலீசார் இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று ஊட்டி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சயான், வாளையார் மனோஜ், ஜித்தின்ஜாய், சம்சீர் அலி ஆகியோர் ஆஜராகி இருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கொடநாடு கொள்ளை வழக்கை அடுத்த மாதம் 26-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
- மசினகுடி பெட்ரோல் பங்க் முதல் வனச்சோதனை சாவடி வரை நடைபெற்றது.
- தமிழ் நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புற நடமான புலியாட்டம் ஆடப்பட்டது.
குன்னூர்:
உலக புலிகள் தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் புலிகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த பேரணி நடைபெற்றது.
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் டி.வெங்கடேஷ், துணை இயக்குனர் அருண்குமார் ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர்.
பேரணியானது மசினகுடி பெட்ரோல் பங்க் முதல் வனச்சோதனை சாவடி வரை நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள், வனப்பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காடுகள் மற்றும் புலிகள் பாதுகாப்பு குறித்து ஓவியம், கட்டுரை, பேச்சு பேட்டிகளும் நடத்தப்பட்டது.
வெற்றி பெற்றவர்களுக்கு தெப்பக்காடு யானைகள் பயிற்சி முகாம் மையத்தில் நடந்த விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதேபோல் குன்னூர் பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில் வண்டிச்சோலை, சிம்ஸ்பூங்கா, டெ்போர்ட், குன்னூர் மார்க்கெட், குன்னூர் ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மாணவிகள் விழிப்புணர்வு வீதி நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சி நடத்தினர்.
இதை தொடர்ந்து தமிழ் நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புற நடமான புலியாட்டம் ஆடப்பட்டது. இதில் கல்லூரி மாணவிகள் புலி வேடமிட்டு நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அழிவு நிலையில் உள்ள புலிகளை காக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி நாடகமும் நடித்து காட்டப்பட்டது.
நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை அதிகாரி சிந்தியா ஜார்ஜ், சர்வதேச புலிகள் தினத்தின் தலைமை கூற்றாகிய புலிகள் பாதுகாப்பு மனிதர் கையில் எனும் கருத்தை கொண்டு இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தார்.






