search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் புதியர் உழவர் சந்தைக்கு எதிர்ப்பு-பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்ட வியாபாரிகள்
    X

    கோத்தகிரியில் புதியர் உழவர் சந்தைக்கு எதிர்ப்பு-பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்ட வியாபாரிகள்

    • மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்பட வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தில் திரண்டனர்.
    • 3 மணி நேரம் காத்திருந்த வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

    அரவேணு:

    கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் 60 கடைகளை அகற்றிவிட்டு, புதிய உழவர் சந்தை அமைக்க வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கோத்தகிரி பேரூராட்சி கூட்டம் நடத்தப்பட்டு, பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் நிலத்தை உழவர் சந்தை அமைக்க வேளாண் வணிகத்துறைக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும், அதை கண்டித்து பேரூராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தகவல் பரவியது.

    இதையொட்டி அங்கு முன் எச்சரிக்கையாக ஊட்டி துணை சூப்பிரண்டுகள் செந்தில் குமார், யசோதா ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவணகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், மனோகரன், ரமேஷ் உள்பட 50 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இதையடுத்து மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்பட வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தில் திரண்டனர்.

    இதனால் பரபரப்பு நிலவியது. பின்னர் தலைவர், செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதற்கு, வியாபாரிகள் பாதிக்காத வகையில் புதிய உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். பின்னர் மன்ற கூட்டம் தொடங்கியது. ஆனால் கூட்டம் முடியும் வரை அலுவலகம் முன்பு வியாபாரிகள் காத்திருந்தனர்.

    தொடர்ந்து கூட்டம் முடிந்து வெளியே வந்த உறுப்பினர்கள் கூறும்போது, உழவர் சந்தைக்கு இடம் வழங்கும் தீர்மானம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, வனத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, அவரது ஆலோசனைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

    இதை ஏற்று சுமார் 3 மணி நேரம் காத்திருந்த வியாபாரிகள் கலைந்து சென்றனர். தொடர் போராட்டம் இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, புதிய உழவர் சந்தை அமைக்கும் முடிவை கைவிடாவிட்டால் தாலுகா சங்கம், மாவட்ட, மாநில சங்கங்களின் ஆதரவுடன் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    இந்த பகுதியில் உழவர் சந்தை அமைத்தால், அப்பகுதியில் உள்ள தங்களது பூர்வீக கோவிலின் புனித தன்மை கெட்டு விடும் என்பதால், அதை கைவிட வலியுறுத்தி ஏற்கனவே கோத்தர் இன மக்களும் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×