search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hunting prevention guards"

    • மசினகுடி பகுதியில் கடந்த ஆண்டு 4 பேரை புலி அடித்து கொன்றது.
    • பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசு விருது கிடைத்து உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி பகுதியில் கடந்த ஆண்டு 4 பேரை புலி அடித்து கொன்றது. அந்த புலியை பிடிக்கக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து புலியை பிடிப்பதற்காக வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 21 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு டி-23 என்று பெயரிடப்பட்ட அந்த ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    அதன்பின்னரே கூடலூர், மசினகுடி பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் மற்றும் அது பதுங்கி இருக்கும் இடத்தை துல்லியமாக கண்காணித்து சிறப்பாக செயல்பட்டதற்காக முதுமலை புலிகள் காப்பக வனக்காப்பாளர் மீன் காலன், வேட்டை தடுப்பு காவலர்கள் மாதன், பொம்மன் ஆகியோருக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது.

    அதன்படி மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் வன அகாடமியில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் நடைபெற்ற புலிகள் தின விழாவில் முதுமலை வேட்டை தடுப்பு காவலர்கள் மீன் காலன், மாதன், பொம்மன் ஆகியோருக்கு மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் விருது வழங்கினார். தொடர்ந்து ரூ.1 லட்சம் வழங்கி பாராட்டினார்.விருது பெற்ற வேட்டை தடுப்பு காவலர்கள் கூறும்போது, பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசு விருது கிடைத்து உள்ளது.

    இதற்கு காரணமான அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இந்த விருதால் தொடர்ந்து பணியாற்றுவதற்கு ஊக்கம் ஏற்பட்டு உள்ளது என்றனர். முன்னதாக விருது பெற்ற வேட்டை தடுப்பு காவலர்களுக்கு இயக்குனர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

    ×