என் மலர்tooltip icon

    நீலகிரி

    • லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.மோகன் பேட்டி
    • ஐ.நா.வின் அமைதிப்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    குன்னூர் :

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு இந்தியா மட்டுமின்றி நட்பு நாடுகளை சேர்ந்த வீரர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த கல்லூரியின் முதல்வராக லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.மோகன் பணியாற்றி வருகிறார். இவர் தற்போது ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை தளபதியாக தெற்கு சூடானில் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.மோகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புகழ் பெற்ற வெலிங்டன் ராணுவ கல்லூரியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 700 முப்படை அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த கல்லூரிக்கு எனது பணிக்காலத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய பாதுகாப்பு துைற மந்திரி, தமிழ்நாடு முதல்-அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோர் வந்துள்ளனர்.

    உலக அமைதிக்கு இந்தியாவின் பங்களிப்பு அபரிமிதமானது. ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையில் பணியாற்றிய 160 இந்தியர்கள் உயிரிழந்து உள்ளனர். இந்த எண்ணிக்கையில் இந்தியா தான் முதலிடம் வகிக்கிறது.

    தற்போது ஐக்கிய நாடுகள் சார்பில் தெற்கு சூடானில் அமைதிப்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டு உள்ளேன்.

    இந்த படைக்கு தலைமை ஏற்க கிடைத்த வாய்ப்பு எனக்கும், நாட்டுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. உலக அமைதிக்கு இந்தியா அளிக்கும் பங்களிப்பில் நானும் பங்களிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய, மாநில அரசுகள் எல்லாவித உதவிகளையும் செய்து வருகிறார்கள். எங்களுக்கு எந்தவிதமான உதவிகள் தேவைப்பட்டால் தமிழக அரசு முன்வந்து செய்து தருகிறார்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டு எந்த உதவி ஆனாலும் மத்திய மாநில அரசுகள் செய்து தருகிறார்கள்.

    • கையுன்னி அருகே போத்துகொல்லி, மங்கரை உள்பட பல ஆதிவாசி காலனிகள் உள்ளன.
    • முகாமில் ஆதிவாசி மக்களுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கூடலூர்:

    பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கையுன்னி அருகே போத்துகொல்லி, மங்கரை உள்பட பல ஆதிவாசி காலனிகள் உள்ளன.

    இங்கு கூடலூர் கோட்ட வன அலுவலர் ஓம்கார் உத்தரவுபடி சேரம்பாடி வனத்துறையினரும், சுகாதாரத்துறையினரும் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தினர். இதற்கு உதவி வனபாதுகாவலர் ஷர்மிலி தலைமை தாங்கினார். வனவர் ஆனந்த், வனகாப்பாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் கலந்துகொண்ட ஆதிவாசி மக்களுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் வேட்டை தடுப்பு காவலர்களும் கலந்துகொண்டனர்.

    • விநாயகன் என்று அழைக்கப்படும் காட்டு யானைதான் தினமும் ஊருக்குள் வருகிறது.
    • கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கூடலூர்:

    கூடலூர் தாலுகா பகுதியில் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட மச்சிக்கொல்லி, பேபி நகர், மட்டம், ஒற்ற வயல், செட்டியங்காடி உள்பட பல்வேறு கிராமங்களுக்குள் காட்டு யானை ஒன்று தினமும் வருகிறது. மேலும் அங்கு பயிரிட்டு பராமரித்து வரும் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது.

    இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில சமயங்களில் எதிரே வரும் பொதுமக்களை காட்டு யானை விரட்டும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் கிராமப்புற மக்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு வருகிறது. அலறியடித்து ஓட்டம் இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு மச்சிகொல்லி கிராமத்துக்குள் காட்டு யானை புகுந்தது. தொடர்ந்து முக்கிய சாலையில் நடந்து சென்றது.

    இதை கண்ட பொதுமக்கள், அலறி அடித்தவாறு தங்களது வீடுகளுக்குள் சென்று பதுங்கினர். இதேபோல் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை மையத்துக்கு கொண்டு செல்லும் ஊழியர்கள் காட்டு யானையை கண்டு ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் காட்டு யானை தனியார் தோட்டத்துக்குள் சென்றது. அதன் பின்னரே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, விநாயகன் என்று அழைக்கப்படும் காட்டு யானைதான் தினமும் ஊருக்குள் வருகிறது. இதனால் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • தேயிலைக்கு குறைந்தபட்ச விலை 30 நிர்ணயம் செய்ய வேண்டும்.
    • உண்ணாவிரதப் போராட்டத்திற்கு திரளானவர்களை அழைத்து வர வேண்டும்.

    அரவேணு:

    கோத்தகிரி சிறு விவசாயிகள் நல சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்கத் தலைவர் தும்பூர் போஜன் தலைமையில் நடைபெற்றதது. அப்போது அவர் பேசுகையில், கடந்த ஒரு மாதமாக 5 கட்ட விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இதில் தேயிலைக்கு குறைந்தபட்ச விலை 30 நிர்ணயம் செய்யக்கோரி ஜல்லிக்கட்டுக்கு போராடி வெற்றி பெற்றதை போன்று இதற்கும் அனைவரும் ஒன்றினைந்து பச்சை தேயிலையிக்கு குறைந்த பட்ச விலையை பெற வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மலை மாவட்டம் சிறு, விவசாய சங்கத்தின் பதிவு காலம் முடிவடைந்ததால் மீண்டும் சங்கத்தை புதுப்பித்து கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகளை அங்கீகரிப்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. மேலும் சங்க முன் நின்று நடத்தும் நீலகிரி மாவட்ட சிறு விவசாயிகள் பச்சை தேயிலை கடுமையான விலை வீழ்ச்சி கண்டித்து நமது சங்க குன்னூரில் நடத்த உள்ள மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஒவ்வொரு செயற்குழு உறுப்பினர்களும் தங்கள் ஊர் மற்றும் அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்தவர்களை அழைத்து வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • பச்சை ேதயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.30 நிர்ணயம் செய்ய வேண்டும்.
    • கோத்தகிரி அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும்

    அரவேணு :

    கோத்தகிரி மார்க்கெட் திடலில் நீலகிரி மாவட்ட மரவேலை மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு) சார்பில் தேயிலை விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் மணிமோகன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுந்தரம், செயலாளர் ரமேஷ், பொருளாளர் நவீன் சந்திரன், தோட்ட தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சுரேஷ், செயலாளர் முருகேஷ், பொருளாளர் பொன்னுதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக வளர்த்தும் சில்வர் ஊக் காப்பி, கற்பூர, நகாமரம், சீகை போன்ற மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். தற்போது தேயிலை விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், அதனை ஈடு கட்டும் விதமாக மரங்களை வெட்டுவதனால் விவசாயிகளுக்கு பெரிய உதவியாக இருக்கும்.

    மேலும் பச்சை ேதயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.30 நிர்ணயம் செய்ய வேண்டும்.

    மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். கோத்தகிரி அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பா ட்டத்தில் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    • 3 கால் டன் பான் மசாலா, ரூ.39 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மூட்டையாக இருந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது குட்கா மற்றும் புகையிலை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுதவிர வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்குள் குட்கா, புகையிலை கடத்தி வரப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நீலகிரிக்கு சரக்கு லாரியில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    நாடுகாணி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த லாரியை மறித்து சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது லாரியில் 3 கால் டன் பான் மசாலா, ரூ.39 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மூட்டையாக இருந்தது. இதையடுத்து போலீசார் அதனை கைப்பற்றினர்.

    தொடர்ந்து லாரியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த மன்சூர் அலி(41), நசீர்(33) என்பதும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் புகையிலை பொருட்களை எங்கிருந்து வாங்கி வந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில மாதங்களாக 3 கரடிகளின் நடமாட்டம் இருந்தது.
    • உயிலட்டி செல்லும் சாலையில் அந்த கரடி உலா வந்தது.

    ஊட்டி

    கோத்தகிரி அருகே உயிலட்டி, குன்னியட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாக 3 கரடிகளின் நடமாட்டம் இருந்தது. அங்கு வனத்துறையினர் வைத்த கூண்டில் 2 கரடிகள் சிக்கின. மற்றொரு கரடி தப்பி ஓடியது.

    மீண்டும் கூண்டு வைக்கப்பட்டாலும், அதில் சிக்காமல் குடியிருப்பு பகுதிகள், சாலைகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் ஆக்ரோஷத்துடன் உலா வருகிறது. சமீபத்தில் குன்னியட்டி கிராமத்தை சேர்ந்த தொழிலாளியை துரத்தியது.

    இந்த நிலையில் நேற்று மாலையில் உயிலட்டி செல்லும் சாலையில் அந்த கரடி உலா வந்தது. இதை கண்ட வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சிறிது தூரம் சாலையின் நடுவே நடந்து சென்ற கரடி, அதன்பின்னர் அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.

    இரவு, பகல் பாராமல் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் கிராம மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன்பு அந்த கரடியின் நடமட்டத்தை கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கட்டுப்பாட்டை இழந்த கார் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம் உள்பட பல்வேறு இடங்களுக்கு வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை கோவையில் இருந்து கல்லூரி மாணவர்கள் 5 பேர் காரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். அதன் பின்னர் அவர்கள் ஊட்டியில் இருந்து பைக்காரா சென்று படகு சவாரி செய்ய திட்டமிட்டனர்.

    இதற்காக அவர்கள் காரில் ஊட்டி-தொட்டபெட்டா சாலையில் பைக்காரா நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காருக்குள் சிக்கிக்கொண்ட மாணவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும் கார் பலத்த சேதம் அடைந்தது.

    இதைத்தொடர்ந்து விபத்தை ேநரில் பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக பைக்காரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறை உதவியுடன் காரை மீட்டனர். மேலும் மாணவர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொண்டு கோவைக்கு திரும்பினர்.

    மாணவர்கள் புகார் எதுவும் கொடுக்காததால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

    • காட்டுயானைகள், கரடிகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது.
    • அப்பகுதியில் நின்றிருந்த காட்டெருமை திடீரென குருஜனை தாக்கியது

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்கரா வனப்பகுதியில் காட்டுயானைகள், கரடிகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது.

    சில சமயங்களில் வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பொதும்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரோந்து சென்ற வன ஊழியர்களை கரடி ஒன்று தாக்கியது.

    இந்த நிலையில் மசினகுடி அருகே நார்தன் ஹே எஸ்டேட் பகுதியை சேர்ந்த ரபீக்சேட் என்பவருக்கு சொந்தமான காபி தோட்டத்தில் ஈரன் மகன் குருஜன் (வயது 57) என்பவர் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் மதியம் உணவு சாப்பிட தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அப்பகுதியில் நின்றிருந்த காட்டெருமை திடீரென குருஜனை தாக்கியது. தீவிர சிகிச்சை இதை சற்றும் எதிர்பாராத அவர் தப்பி ஓட முயன்றும் முடியவில்லை. இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனிடையே சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து காட்டெருமையை விரட்டியடித்தனர். தொடர்ந்து குருஜனை மீட்டு மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி தலைமை அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
    • நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து முடிக்க துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஸ்ரீ மதுரை ஊராட்சி வடவயல் பகுதியில் கடந்த 21.6.2000 அன்று விவசாய நிலத்தில் காட்டு யானை உயிரிழந்து கிடப்பதாக கூடலூர் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது மின்வேலியில் சிக்கி சுமார் 15 வயது ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் (வயது 64), பிரபாகரன் (65), ஹரிதாஸ் (62) ஆகிய 3 விவசாயிகளை கைது செய்து, கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    இந்த வழக்கு விசாரணை 22 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. சிறை தண்டனை இந்த நிலையில் நேற்று கூடலூர் குற்றவியல் நீதிபதி சசின்குமார் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட மாணிக்கம், பிரபாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் ஹரிதாஸ் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    22 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து முடிக்க துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    • ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
    • அனைவருக்கும் கடை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊட்டி

    ஊட்டி நகா்மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவா் வாணீஸ்வரி தலைமை தாங்கினாா். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-

    அரசினா் தாவரவியல் பூங்கா பகுதியில் ஆக்கிரமிப்பு எனக் கூறி அகற்றப்பட்ட 178 கடைகளில் தற்போது 55 பேருக்கு மட்டுமே கடை கட்டித் தரப்படுகிறது. இதை மாற்றி அனைவருக்கும் கடை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் கடைகளை ஒதுக்கும்போது உண்மை–யான பயனாளிகளை அடையாளம் கண்டு கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.பெரிய வணிக நிறுவனங்களின் விதி மீறலை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இந்நிலை மாற வேண்டும்.

    அடுத்த மழைக் காலத்துக்குள் காந்தல் கால்வாயை தூா்வாரி சீரமைக்க வேண்டும். மழைக் காலங்களில் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ெரயில்வே பாலத்தின் அடியில் தண்ணீா் தேங்குவதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காந்தல் பகுதியில் பொது கழிப்பறைகளுக்கு தண்ணீா் இணைப்பு இல்லாததால் 5 மாதமாக உபயோகம் இல்லாமல் உள்ளது. மாா்லிமந்து அணை தண்ணீா் மிகவும் கலங்கலாக வருகிறது.கோழிப் பண்ணை, மாா்லிமந்து பகுதிகளில் புலி நடமாட்டம் உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் தெரு விளக்கு எரிவதில்லை.

    இதற்கு பதில் அளித்து ஆணையா் காந்திராஜன் பேசுகையில், இப்பகுதியில் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும். மேலும் அடுத்த மாதம் நடக்க உள்ள நகராட்சி கூட்டத்துக்கு மின்விளக்குப் பணிகள் ஒப்பந்ததாரா் நேரில் வரவ–ழைக்கப்படுவாா் என்றார்.

    இதற்கிைடயே தமிழகத்தில் தி.மு.க அரசு அறிவித்த மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.இதில் கவுன்சிலர்கள் ஜாா்ஜ், கே.ஏ.முஸ்தபா, தம்பி இஸ்மாயில், அபுதாகீா், கீதா, வனிதா, முஸ்தபா, விஷ்ணு, ரகுபதி, ஜெயலட்சுமி, ராஜேஸ்வரி, ரவிக்குமாா் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதுமலையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • வன வளம் ஏற்பட புலிகளை பாதுகாக்க வேண்டும்.

    ஊட்டி

    உலக புலிகள் தினத்தை–யொட்டி முதுமலை புலிகள் காப்பக நிர்வாகம் சார்பில் மசினகுடி, முதுமலையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள மைதானத்தில் புலிகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கு புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா தலைமை தாங்கினார்.

    தொடர்ந்து ஆதிவாசி இளைஞர்களுக்கான கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் தெப்பக்காடு சுற்றுலா பயணிகள் வரவேற்பு மையத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. புலிகள் பாதுகாப்பு, வனங்களின் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விழிப்பு–ணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து ஓவியம் மற்றும் கைப்பந்து உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக புலி பாதுகாப்பு குறித்து புலி முகமூடி அணிந்து வனத்துறையினர் ஆதிவாசி குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்பு–ணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது வனத்துறையினர் கூறும்போது, வன வளம் ஏற்பட புலிகளை பாதுகாக்க வேண்டும். காடுகளை பாதுகாப்பதில் புலிகள் முக்கிய இடத்தை வகிக்கிறது. இதன் மூலம் நிலம், நீர், காற்று மனிதர்களுக்கு கிடைக்கிறது. எனவே காடுகளையும், அதை சார்ந்து வாழக்கூடிய புலிகள் உள்ளிட்ட வன உயிரினங்களையும் நாம் அனைவரும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றனர்.

    இதில் ஊட்டி வன அலுவலர் சச்சின் துக்காராம், முதுமலை வனச்சரகர்கள் விஜய், முரளி, மனோஜ் குமார், பவித்ரா, கணேஷ் மற்றும் வன ஊழியர்கள், மாண–வர்கள் கலந்து கொண்டனர்.

    ×